Published:Updated:

`அவளை மிகவும் நேசித்தார்; கியானாவுக்கு இனி தந்தை இல்லை!’ -கதறியழுத ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் காதலி

ராக்ஸி வாஷிங்டன்
ராக்ஸி வாஷிங்டன் ( Twitter )

``துக்கத்திலிருந்து எழுந்து குழந்தையைக் கைகளில் பெறும் ஜார்ஜின் புகைப்படம் ஒன்று என்னிடம் இன்னும் உள்ளது. ஜார்ஜ் குழந்தையை மிகவும் நேசித்தார். அவர் அவளை மிகவும் நேசித்தார்.”

உலகம் முழுவதும் நிறவெறிக்கு எதிராகப் போராடும் மக்களின் மத்தியில் இன்று ஒலித்துக்கொண்டிருக்கும் பெயர், ஜார்ஜ் ஃப்ளாய்ட். அவரின் மரணத்துக்கு நீதி வேண்டியும் கறுப்பின மக்களுக்கு எதிராக காலம்காலமாக நடந்துவரும் கொடுமைகளுக்கு எதிராகவும் உலகின் பல நாடுகளில் உள்ள மக்களும் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ், ஊரடங்கு, வன்முறைகள் எனப் பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்கள் போராட்டத்தை தீவிரமாக நடத்தி வருவது அம்மக்கள் இவ்வளவு காலம் அடக்கி வைத்திருந்த கோபத்தைக் காட்டுவதோடு ஆட்சியாளர்களுக்குக் கவலையையும் அளித்துள்ளது. இந்தநிலையில், தற்போது ஜார்ஜ் இறந்ததற்குப் பிறகு முதன்முறையாக அவருடைய காதலி பொதுவெளியில் தோன்றி நேற்று பேசியுள்ளார்.

ராக்ஸி வாஷிங்டன்
ராக்ஸி வாஷிங்டன்
Twitter

ஜார்ஜ் ஃப்ளாய்டின் குடும்பத்தினரும் நண்பர்களும் அவரின் சொந்த ஊரான டெக்ஸாஸில் உள்ள ஹூஸ்டன் பகுதியில் உரையாற்றினர். ``அந்தக் காவல்துறை அதிகாரி எவ்வளவு பெரிய இழப்பை எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று கண்ணீருடன் பேசத் தொடங்கினார் ஜார்ஜின் காதலியும் அவருடைய குழந்தை கியானாவின் (Gianna) தாயுமான ராக்ஸி வாஷிங்டன்.

``கியானாவுக்கு அப்பா இனி இல்லை. அவள் வளர்ந்து பட்டம் பெறுவதைப் பார்க்க அவளுடைய அப்பா இல்லை. அவளுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், அப்போது அவளுக்கு அப்பா தேவைப்பட்டால், அவளுடைய அப்பா இனி வரப்போவது இல்லை. எனக்கு நீதி வேண்டும். ஏனென்றால், அவர் நல்ல மனிதர். மிகவும் நல்ல தந்தை” என்று கூறினார்.

`அமெரிக்க போராட்டம் பற்றிய கேள்வி... 21 விநாடிகள் அமைதி’ - ட்ரம்ப்பின் பெயரை தவிர்த்த ட்ரூடோ

ஃப்ளாய்ட் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட வாஷிங்டன், ``கியானா அவருடைய வாழ்க்கையில் வந்ததால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். நான் பிரசவத்துக்குச் சென்றபோது முழு நேரமும் தூங்கிக் கொண்டிருந்தார். ஆனால், குழந்தையின் அழுகையைக் கேட்டவுடன் எழுந்துவிட்டார். துக்கத்திலிருந்து எழுந்து குழந்தையைக் கைகளில் பெறும் ஜார்ஜின் புகைப்படம் ஒன்று என்னிடம் இன்னும் உள்ளது. ஜார்ஜ் குழந்தையை மிகவும் நேசித்தார். அவர் அவளை மிகவும் நேசித்தார்” என்று அழுதுகொண்டே பேசினார். வாஷிங்டன் பேசும்போது கியானா அவரைக் கட்டிப்பிடித்தபடி அருகிலேயே நின்றுகொண்டிருந்தார்.

ஜார்ஜ் ஃபிளாய்டு - டெரெக் சாவின்
ஜார்ஜ் ஃபிளாய்டு - டெரெக் சாவின்

ஃப்ளாய்டின் குடும்ப நண்பரும் முன்னாள் என்பிஏ வீரருமான ஜாக்சன் பேசுகையில், ``டெக்ஸாஸில் இருந்து அவர் மினசோட்டா மாகாணத்துக்குச் செல்வதற்கான காரணமே வேலை செய்ய வேண்டும் என்பதுதான். அப்போதுதான், அவருடைய குடும்பத்தை அவரால் கவனித்துக்கொள்ள முடியும். சிறந்த தந்தையாக வேண்டியதைச் செய்ய முடியும்” என்றார்.

மேலும், கியானாவுக்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறினார். ஃப்ளாய்டின் மரணத்தில் சம்பந்தப்பட்ட மற்ற காவலர்கள் மீது ஏன் குற்றம் சாட்டப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். நீதி கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவதாகவும் அறிவித்தார். ``எங்களுக்கு நீதி வேண்டும். எங்களுடைய கோரிக்கை அதுதான்” என்றார்.

`ட்ரம்ப்புக்கு கவுன்டர் கொடுத்த போலீஸ்; குறிவைக்கப்படும் பத்திரிகையாளர்கள்!’ - திணறும் அமெரிக்கா
அடுத்த கட்டுரைக்கு