Published:Updated:

`ரோந்து வரும் போகாங் பேய் பொம்மைகள்!’ - சமூக இடைவெளியில் அசத்தும் இந்தோனேசிய கிராமம்

போகாங் பேய்போல் வேடமணிந்தவர்கள்
போகாங் பேய்போல் வேடமணிந்தவர்கள்

போகாங் என்று அழைக்கப்படும் பேய் உருவங்கள் பொதுவாக, முகங்களில் அளவுக்கு அதிகமான பவுடருடன் பெரிய கண்களைக் கொண்ட வெள்ளைத் துணியால் மூடிய அச்சமூட்டும் வகையிலான உருவத்தைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

உலகமே கொரோனா அச்சத்தில் உறைந்துகிடக்கிறது. கொரோனா வைரஸ் சமூகப் பரவலாகிவிடக் கூடாது என்பதற்காக உலகின் பெரும்பாலான நாடுகள் தேசிய ஊரடங்கை அறிவித்துள்ளன. இருப்பினும், இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் ஊரடங்கு காலத்திலும், சுகாதார நிறுவனங்கள் வலியுறுத்தும் சமூக விலகல் மக்களால் முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், இந்தோனேசியாவின் ஒரு கிராமத்தில் சமூக விலகலை மக்கள் முறையாகக் கடைப்பிடிப்பதற்காக கையாளப்படும் முறையால், ஊரடங்கு இல்லாமலேயே மக்கள் வீட்டை விட்டு வெளியே வரத் தயங்குகிறார்கள்.

போகாங் பேய்போல் வேடமணிந்தவர்கள்
போகாங் பேய்போல் வேடமணிந்தவர்கள்

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள கெபு என்னும் கிராமத்தில் மர்ம உருவம் ஒன்றை அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் சிலர் பார்த்ததாகவும் அந்த உருவமானது எவ்வித அடையாளங்களையும் வெளிப்படுத்தாதவாறு வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருந்ததாகவும் முழு நிலவு நாள் அன்று தென்பட்டு மறைந்ததாகவும் அங்குள்ள மக்களுக்கு நம்பிக்கை ஒன்று உள்ளது. இந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி, அந்த கிராம மக்களுக்குக் கொரோனா வைரஸ் பரவிவிடக் கூடாது என்பதற்காக, சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் வண்ணம் அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் காவல்துறையினருடன் இணைந்து விநோதமான முயற்சியை மேற்கொண்டுள்ளனர். மக்கள் சில தினங்களுக்கு முன் தென்பட்டதாக கூறிய அந்த மர்ம உருவம் வடிவிலான பொம்மைகளை தெரு முனைகளில் அவர்கள் வைத்துள்ளனர். இதனால், அந்த கிராம மக்கள் அந்த மர்ம உருவத்தை பேய் என நினைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வர மறுக்கிறார்கள்.

கொரோனா சாவைத் தடுக்கும் போராட்டத்தில் பட்டினிச் சாவுகள் நிகழ இடம் கொடுக்கலாமா?

இது குறித்து கருத்துதெரிவித்துள்ள அப்பகுதியின் இளைஞர் மன்றத் தலைவர் அஞ்சர் பங்கனிங்டியாஸ், ``கொரோனா வைரஸ் பரவிவரும் சூழலில், சமூக இடைவெளியை ஊக்குவிப்பதற்காக வித்தியாசமான முறையில் மக்களை அச்சம் கொள்ள வைத்தால், அவர்கள் வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்கலாம் எனக் காவல் துறையினருடன் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். போகாங் என்று அழைக்கப்படும் பேய் உருவங்கள் பொதுவாக, முகங்களில் அளவுக்கு அதிகமான பவுடருடன் பெரிய கண்களைக்கொண்ட வெள்ளைத் துணியால் மூடி அச்சமூட்டும் வகையிலான உருவத்தைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

இந்தோனேசியாவின் கிராமப்புறங்களில் இறந்தவர்களின் உடலைக் குறிக்கும் அமைப்பைக் கொண்டது என்பதால், மக்கள் இவற்றைக் கண்டு பயப்படுகின்றனர். இந்த முயற்சியைத் தொடங்கிய சில நாள்களிலே எதிர்பார்த்ததை விட அதற்கு எதிர்மறையான விளைவையே தந்தது. எனினும், இந்த முயற்சி கிராம மக்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுடன், சமூக விலகலைக் கடைப்பிடிக்க வைக்கும் விதமாகவும் பயன்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளார்.

போகாங் பேய்போல் வேடமணிந்தவர்கள்
போகாங் பேய்போல் வேடமணிந்தவர்கள்

மேலும், கிராம மக்களுக்கு கோவிட்-19 வைரஸ் பரவலிலிருந்து எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வதென விழிப்புணர்வு இல்லை என்றும் மக்கள் வீட்டிற்கு உள்ளேயே இருக்கப் பழகிக் கொள்ளாததால், சாதாரணமாக வாழ விரும்புகிறார்கள் என்றும் அந்த கிராமத்தின் தலைவர் பிரியாடி கூறியுள்ளார்.

இந்நிலையில், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு தேவையில்லை எனக் கூறியுள்ள அதிபர் ஜோகோ விடோடோ, அதற்குப் பதிலாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதோடு நல்ல சுகாதாரத்தைப் பேண வேண்டும் என நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், இந்தோனேசியாவில் தற்போது வரை, 4,241 பேர் கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். இந்த வைரஸ் தொற்றுக்கு 373 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்தோனேசியப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மே மாதத்திற்குள் 1.5 மில்லியல் மக்கள் வைரஸ் தொற்றுக்கு ஆளாவதோடு, 1,40,000 பேர் உயிரிழக்க நேரிடும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

`கொரோனா இவர்களால் பரவுகிறது!’ - ஃபேஸ்புக்கில் வதந்தி பரப்பிய நாமக்கல் எலெக்ட்ரீஷியன்
அடுத்த கட்டுரைக்கு