Election bannerElection banner
Published:Updated:

`இந்த அவலங்கள் இன்னும் எத்தனை நாள்கள் சுந்தர் பிச்சை?' - கூகுள் பெண் ஊழியர்களின் குரல்

 சுந்தர் பிச்சை | Sundar Pichai
சுந்தர் பிச்சை | Sundar Pichai

`வேண்டுமானால் நீங்கள் மனநல ஆலோசனைக்குச் செல்லுங்கள் அல்லது வீட்டில் இருந்தபடி வேலை செய்யுங்கள் அல்லது விடுப்பில் செல்லுங்கள்' என்று தவறு செய்தவரிடம் கூறாமல் கூகுள் என்னிடம் சொன்னது என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்குச் சம உரிமை, பெண்கள் பாதுகாப்பு, பெண்களின் நலன் என்று பலவற்றைப் பற்றி நிறைய பேசுகிறோம். ஆனால், உண்மை நிலை? இவை பேச்சோடு நின்றுவிடுவதால் எந்த முன்னேற்றமும் ஏற்படுவதில்லை. நம் நாட்டில் மட்டுமல்லாமல் வேறு பல நாடுகளிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. இதற்கு ஓர் உதாரணம் தற்போது கூகுளில் நடக்கும் விஷயம். கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட்டில் வேலை பார்க்கும் 500 ஊழியர்கள் இணைந்து அந்நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சைக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்கள். இந்தக் கடிதம் சிலிக்கான் வேலியில் மீண்டும் அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கிறது.

Google
Google

``கூகுள் நிறுவனம் அங்கு வேலை பார்க்கும் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு ஏற்படும்போது, பிரச்னைக்கு காரணமான நபரை தண்டிப்பதற்கு பதில் அவருக்குப் பாதுகாப்பளிக்கிறது; குற்றவாளிக்கு பதிலாக குற்றம் சாட்டும் நபரே அதிக வேதனைகளை எதிர்கொள்கிறார். புகார் கொடுத்த நபர் வேலையைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படுகிறார்; எனவே, கூகுள் நிறுவனம் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதிசெய்ய வேண்டும்" என்பதே அந்தக் கடிதத்தின் சாராம்சம்.

கூகுளில் வேலைபார்த்து வந்த எமி நீட்ஃபெல்ட் என்பவர் சக பணியாளர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லைகள் தருவதாகச் சொல்லி புகார் அளித்திருக்கிறார். தான் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்களையும் புகார் அளித்தபின் நடந்த சம்பவங்களையும் கடந்த 7-ம் தேதி `தி நியூயார்க் டைம்ஸ்' செய்தித்தாளில், கட்டுரையாகப் பகிர்ந்திருந்தார் எமி. அதில் அவர் கூறியுள்ள விஷயங்கள் கூகுள் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தனது டெக்னிக்கல் லீட் தன்னை, தனக்கு விருப்பம் இல்லை என்று கூறியபின்பும் `பியூட்டிஃபுல்', `கார்ஜியஸ்' என்று அழைத்தார் என்றும், `எனக்கு உன்னைப்போல் ஓர் அழகான பெண் வேண்டும்' என்றும் கூறியதாக எமி புகார் தெரிவித்துள்ளார். தனக்கு பிடிக்கவில்லை என்று கூறிய பிறகும்கூட அவருக்கு அருகிலேயே அமர்ந்து பணிபுரியும் சூழலில்தான் தன்னை அந்நிறுவனம் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஒரு கட்டத்துக்குப் பிறகு, `வேண்டுமானால் நீங்கள் மனநல ஆலோசனைக்குச் செல்லுங்கள் அல்லது வீட்டில் இருந்தபடி வேலை செய்யுங்கள் அல்லது விடுப்பில் செல்லுங்கள்' என்று தவறு செய்தவரிடம் கூறாமல் கூகுள் என்னிடம் சொன்னது என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

இப்படி புகார் அளித்தவருக்கு எதிரான நிலைப்பாடு எடுப்பது கூகுளுக்குப் புதிது அல்ல. இதேபோன்ற சம்பவம் 2018-ம் ஆண்டில் கூட நடைபெற்றுள்ளது. அப்போதுகூட பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கவில்லை என்று எமி குறிப்பிட்டுள்ளார்.

Google.
Google.
AP Photo/Marcio Jose Sanchez, File

2018-ல் நடந்தது என்ன?

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் நிறுவனர் ஆன்டி ரூபின் மீது கூகுள் ஊழியர் ஒருவரால் பாலியல் புகார் அளிக்கப்பட்டு, அதன்மீது விசாரணை நடைபெற்றது. அதில் அந்தக் குற்றச்சாட்டுகள் உண்மை எனவும் தெரியவந்தது. ஆனால், குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்பு, அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்காமல், அவருக்கு 90 மில்லியன் டாலர் பணத்தை செட்டில்மென்ட்டாக அளித்து, அவரை மரியாதையுடன் அனுப்பி வைத்தது கூகுள். இதே போல் அமித் சிங்கல் என்பவர் மீதும் பாலியல் வன்முறை புகார் கூறப்பட்டபோது, 35 மில்லியன் டாலர் பணத்துடன் பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவங்களையும் எமி நீட்ஃபெல்ட் தற்போது சுட்டிக் காட்டியுள்ளார்.

இவ்வாறான தொடர் புகார்களுக்கும் எமி நீட்ஃபெல்ட் குற்றச்சாட்டிற்கும் கடந்த 9-ம் தேதி பதில் அளித்த கூகுள் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர், ``பாலியல் புகார்களைக் கையாளும் வழிமுறைகளிலும் விசாரணை நடத்தும் முறையிலும் நாங்கள் தற்போது சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளோம். இதன் மூலம் எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஆட்களுக்கு, இதுபோன்ற மீண்டும் நிகழாதவாறு பாதுகாப்புடன் இருக்க வழி செய்யப்படும்" என்று கூறியுள்ளார்.

Google
Google

பல பேரின் கனவு நிறுவனமாகப் பார்க்கப்படும் கூகுளிலேயே இப்படித்தான் பெண் ஊழியர்கள் பாரபட்சத்துடனும், நியாயமற்ற முறையிலும் நடத்தப்படுகின்றனர். 2018-ல் பெண் ஊழியர்கள் துயரங்கள் வெளியே வந்ததும்தான் கூகுள் இந்தப் பிரச்னையின் வீரியத்தை உணர்ந்துகொண்டு தன் அணுகுமுறையில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தது.

ஆனால், எமி போல இன்னும் பலர் தினம் தினம் தங்கள் பணியிடத்தில் துன்புறுத்தல்களை எதிர்கொண்டுதான் இருக்கின்றனர். இந்தக் கொடுமைகளைத் தடுக்க இனியேனும் கூகுள் திருந்த வேண்டும் என்பதே அந்நிறுவன ஊழியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது!

- லதா ரகுநாதன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு