Published:Updated:

டீ ரூ.100, சிக்கன் ரூ.1000, கேஸ் ரூ.4,199, வீதியில் மக்கள் - இலங்கை நிதி நெருக்கடி எதனால் ஏற்பட்டது?

இலங்கை மக்கள் போராட்டம் ( Eranga Jayawardena )

ஈழப்போர்க் காலத்தில் இலங்கையில் தமிழர் வாழும் வடக்கு பகுதி இப்படித்தான் இருந்தது. இன்று தலைநகர் கொழும்பு தொடங்கி இலங்கை முழுக்க இதுதான் நிலை. என்ன ஆனது இலங்கைக்கு?

டீ ரூ.100, சிக்கன் ரூ.1000, கேஸ் ரூ.4,199, வீதியில் மக்கள் - இலங்கை நிதி நெருக்கடி எதனால் ஏற்பட்டது?

ஈழப்போர்க் காலத்தில் இலங்கையில் தமிழர் வாழும் வடக்கு பகுதி இப்படித்தான் இருந்தது. இன்று தலைநகர் கொழும்பு தொடங்கி இலங்கை முழுக்க இதுதான் நிலை. என்ன ஆனது இலங்கைக்கு?

Published:Updated:
இலங்கை மக்கள் போராட்டம் ( Eranga Jayawardena )
இன்று என் குழந்தைகளின் பசியைத் தீர்த்துவிட முடியுமா?' என்ற கவலையுடனே இலங்கையில் ஒவ்வொரு அம்மாவுக்கும் அதிகாலை விடிகிறது. தங்கம் கூட எளிதில் வாங்க முடிகிற பொருளாக இருக்கிறது. ஆனால், பால் பவுடருக்கு அவ்வளவு தட்டுப்பாடு. 400 கிராம் பால் பவுடர் பாக்கெட்டின் விலை 250 ரூபாய். அதுவும் அவ்வளவு சாதாரணமாகக் கிடைப்பதில்லை. அரிசி, கோதுமை மாவு, பிரெட் பாக்கெட் என்று எல்லாமே இரண்டு, மூன்று மடங்கு விலை கூடிவிட்டது. தினம் தினம் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. முட்டை முப்பது ரூபாய்க்கு விற்கிறது. சிக்கன் இப்போது கோடீஸ்வரர்களின் உணவாக மாறிவிட்டது. கிலோ ஆயிரம் ரூபாய்!

மலிவு விலையில் ஏதாவது காய்கறிகளை வாங்கிவந்து சமைத்துக் கொடுக்கலாம் என்றால், அதற்கும் வழியில்லை. 12.5 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டரின் விலை இப்போது 4,199 ரூபாய். அதுவும் பல மணி நேரம் க்யூவில் காத்திருந்தால்தான் கிடைக்கிறது. சிலிண்டர் வாங்க வழியில்லை என்று அடுப்பு எரிக்க கெரசின் வாங்கப் போனால், அதற்கும் ஒரு க்யூ. நான்கு மணி நேரம் வரிசையில் நின்றால்தான் கிடைக்கும். கெரசின் என்றில்லை, பெட்ரோல், டீசலுக்கும் இதேபோல நான்கு மணி நேர க்யூ. கடும் வெயிலில் கால் கடுக்க இதற்காக க்யூவில் நின்ற முதியவர்கள் இரண்டு பேர் இறந்தே போயிருக்கிறார்கள்.

இலங்கை மக்கள் போராட்டம்
இலங்கை மக்கள் போராட்டம்
Eranga Jayawardena

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

க்யூவில் நின்று இதையெல்லாம் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து மின்விசிறியின் காற்றில் இளைப்பாறலாம் என்றால், அதற்கும் வழியில்லை. இலங்கை முழுக்க ஏழரை மணி நேர அதிகாரப்பூர்வ மின்வெட்டு அமலில் இருக்கிறது. இதைத் தாண்டியும் சில மணி நேரங்கள் மின்சாரம் இருக்காது. அரசின் மின் நிலையங்கள் பலவும் டீசல் இல்லாததால் முழு வீச்சில் இயங்கவில்லை.

கடைகளில் விற்கப்படும் உணவுப்பொருள்கள் மற்றும் மருந்துகளில் எவை கெட்டுப் போனவை, எவை தரமானவை என்று யாருக்கும் தெரியாது. மின்சாரம் பல மணி நேரம் இல்லாத நிலையில், ஜெனரேட்டருக்கு டீசல் போட்டு ஃபிரிட்ஜில் இவற்றை பத்திரமாக வைத்திருக்கும் அளவுக்குக் கடைக்காரர்களால் பணம் செலவழிக்க முடியவில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பயணம் என்பது எல்லோருக்குமே ஆடம்பரமாகிவிட்டது. சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் பெட்ரோல் போட வழியின்றி அவற்றை வீட்டில் அலங்காரப் பொருளாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள். டீசல் தட்டுப்பாட்டால் தனியார் பேருந்துகள் முழுமையாக இயங்கவில்லை. ஓரளவு இயங்கும் பேருந்துகளிலும், ஆட்டோக்களிலும் கட்டணம் அதிகரித்துவிட்டது. இன்னமும் கட்டணம் உயராத ரயில்களில் கடுமையான கூட்டம். அந்தக் கட்டணத்தையும் உயர்த்தி வருமானம் பார்க்கும் முடிவில் இருக்கிறது அரசு. பள்ளிப் பேருந்துகளில் கட்டணம் அதிகரித்துவிட்டதால், குழந்தைகள் நடந்தே பள்ளிக்குப் போகிறார்கள். வீட்டின் மூலையில் போட்டு வைத்திருந்த சைக்கிள் பலருக்கு இப்போது கைகொடுக்கிறது.

இலங்கையின் அடையாளம், டீ. அகில இலங்கை கேன்டீன் உரிமையாளர் சங்கம் சமீபத்தில் கூடி, ஒரு டீயின் விலையை 100 ரூபாயாக உயர்த்தியுள்ளது. இலங்கை வரலாற்றிலேயே இப்படி விலைவாசி கூடியதில்லை.
இலங்கை மக்கள் போராட்டம்
இலங்கை மக்கள் போராட்டம்
Eranga Jayawardena

நோயின் வேதனையில் தவிக்கும் பலருக்கும் மருந்துகூட பழையபடி நியாயமான விலையில் கிடைப்பதில்லை. தட்டுப்பாடு காரணமாக அவற்றின் விலை கூடியிருக்கிறது. இறந்தவர்களின் சடலங்களை எரியூட்டுவதற்குக்கூட மயானங்களில் எரிபொருள் தட்டுப்பாடு.

பொதுவாக பொருளாதார நெருக்கடிகள் அடித்தட்டு மக்களை மட்டுமே பாதிக்கும். ஆனால், இலங்கையில் எல்லாத் தரப்பு மக்களும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

ஈழப்போர்க் காலத்தில் இலங்கையில் தமிழர் வாழும் வடக்கு பகுதி இப்படித்தான் இருந்தது. இன்று தலைநகர் கொழும்பு தொடங்கி இலங்கை முழுக்க இதுதான் நிலை. என்ன ஆனது இலங்கைக்கு?

சர்வாதிகார மனநிலையுடன் ஆட்சி செய்யும் அரசு, அதிகாரமட்டத்தில் பெருகிய ஊழல், ஊதாரிச் செலவுகள், தேவைக்கு அதிகமாக வாங்கிய கடன்கள், முட்டாள்தனமான கட்டுப்பாடுகள் என்று எல்லாம் சேர்ந்து உருவாக்கிய விளைவே இந்த நிலைமை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சீனாவின் கடன் வலையில் சிக்கிய நாடுகளில் இலங்கை முக்கியமானது. ஹம்பந்தோடா துறைமுகம் கட்டுவதற்கு சீனா கடன் கொடுத்தது. அந்தத் துறைமுகத்தில் வருமானம் இல்லை. அதே இடத்தில் ராஜபக்‌ஷே சர்வதேச விமான நிலையத்தைக் கட்டினார்கள். உலகின் தனிமையான விமான நிலையம் என்று கூறப்படும் இங்கு விமானங்களே வருவதில்லை. ராஜபக்‌ஷே குடும்பத்தின் செல்வாக்கைக் காட்டுவதற்கு செய்யப்பட்ட இந்தத் திட்டங்கள், குட்டி தேசமான இலங்கையைக் கடனில் மூழ்கடித்தன.

மகிந்த ராஜபக்‌ஷேவின் தம்பி கோத்தபய இலங்கையின் அதிபரானதும் நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. தேர்தல் வெற்றிக்காக ஏராளமான வரிச்சலுகைகளை அறிவித்தார் கோத்தபய. இறக்குமதியாளர்கள் பலர் ஆதாயம் அடைவதற்கே அந்த வரிச்சலுகை உதவியது. மோசடியான வழிகளில் அரசுப்பணம் பலருக்குப் போனது. தேர்தலில் ராஜபக்‌ஷே குடும்பத்துக்கு வெற்றி கிடைத்தது. ஆனால், நோயாளியாக இருந்த இலங்கையின் பொருளாதாரம், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க வேண்டிய அளவுக்கு மோசமானது.

இலங்கை மக்கள் போராட்டம்
இலங்கை மக்கள் போராட்டம்
Eranga Jayawardena
கழுத்தை நெறிக்கும் கடன், அந்தக் கடனுக்கு வட்டி கட்டுவதற்காக புதிய கடன் என்று மாயச்சுழலில் சிக்கியது இலங்கை. இந்த நேரத்தில்தான் பேரிடியாக கொரோனா தாக்கியது.

இலங்கைக்கு பெருமளவு வருமானம் ஈட்டித் தரும் தொழிலாக சுற்றுலா இருந்தது. ஈஸ்டர் குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு சுற்றுலா பாதிக்கப்பட்டது. அந்தத் துயரிலிருந்து மீண்டெழும் நேரத்தில் கொரோனா வந்ததால், சுற்றுலா வருமானம் அடியோடு நின்றது. அந்நியச் செலாவணியை ஈட்டித் தந்த முதன்மைத் தொழில் அதுவே! வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை மக்கள் அனுப்பும் பணமும் அந்நியச் செலாவணி இருப்பாகச் சேரும். கொரோனா அதையும் பாதித்தது. வெளிநாடுகளில் வாங்கிய கடனுக்கு அந்நியச் செலாவணியில்தான் வட்டி கட்ட வேண்டும். மருந்து முதல் பெட்ரோல் வரை பெரும்பாலான பொருள்களுக்கு இறக்குமதியையே நம்பியிருக்கும் தேசம் இலங்கை. அதற்கும் அந்நியச் செலாவணி வேண்டும்.

அந்நியச் செலாவணி கையிருப்பு குறையும்போது ஒரு நாட்டின் நிதித்தரம் குறையும். அவர்களுக்குப் புதிதாகக் கடன் கிடைப்பது கடினமாகும். இதைத் தவிர்க்க கோத்தபய ஒரு டெக்னிக்கைக் கையில் எடுத்தார். பல பொருள்களின் இறக்குமதிக்குத் தடை விதித்தார். வெளிநாட்டுக் கார்களின் இறக்குமதிக்குத் தடை விதித்ததுகூட நியாயம். உரங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டதன் விளைவு, இப்போதைய உணவுப்பஞ்சம். சிறு அளவில் தொழில் செய்துவந்த பலரும் இதுபோன்ற தடைகளால் மூலப்பொருள்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். கொரோனாப் பேரழிவு ஒருபுறம் வேலையிழப்பு ஏற்படுத்தியிருக்க, அரசு நிகழ்த்திய இந்தச் செயற்கைப் பேரழிவு பலரை இப்படி பாதித்தது.

ரூபாய் நோட்டுகளை நிறைய அச்சடித்தால் இந்தப் பிரச்னையை சமாளித்துவிடலாம் என்று யாரோ சொல்லியிருப்பார்கள் போல! ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு புது ரூபாய் நோட்டுகளை சமீபகாலத்தில் இலங்கை அச்சிட்டதை, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் துணை கவர்னர் விஜேவர்த்தனா சமீபத்தில் அம்பலப்படுத்தினார். இதனால் பணவீக்கம் அதிகமாகி, எல்லாப் பொரு்ளகளின் விலையும் தாறுமாறாக எகிறியிருக்கிறது.
இலங்கை மக்கள் போராட்டம்
இலங்கை மக்கள் போராட்டம்
Eranga Jayawardena

எப்போதெல்லாம் இலங்கையில் பிரச்னை ஏற்படுகிறதோ, அப்பொதெல்லாம் இந்தியாவிடம் உதவிகேட்டு ஓடிவருவது இலங்கை ஆட்சியாளர்களின் வழக்கம். சீனாவிடம் போதுமான அளவு கடன் வாங்கிவிட்டதால், இம்முறை இந்தியாவிடம் அவசரமாக கடன் உறுதி பெற்றிருக்கிறார்கள். இதுவரை ஐ.எம்.எஃப் நிதி நிறுவனத்திடம் கடன் பெறுவதற்கு இலங்கை தயங்கிவந்தது. அவர்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பார்கள் என்பதே காரணம். இப்போது ஐ.எம்.எஃப் கதவையும் தட்டியிருக்கிறார்கள். இந்தக் கடன்களில் எதுவுமே இலங்கை மக்களின் இப்போதைய பற்றாக்குறை பிரச்னையைத் தீர்க்க உதவாது என்பதுதான் வேதனை. 'எல்லாப் பிரச்னைகளும் தீர பல மாதங்கள் ஆகும்' என்று அரசே சொல்கிறது.

பசியும் அடக்குமுறையும் எளிய மக்களை வீதிக்கு வந்து போராட வைத்தது. அரபு வசந்தம் என்ற புரட்சி ஏற்பட்டு பல அரசுகள் வீழ்ந்ததற்கு அப்படிப்பட்ட போராட்டங்களே காரணம். இலங்கையும் இதுபோன்ற கொந்தளிப்பில்தான் இருக்கிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism