Published:Updated:

வெள்ளை டி-ஷர்ட் அணிந்தால் ஆபத்தா? ஹாங்காங் இந்தியர்களின் அனுபவம்

Hong Kong protests
Hong Kong protests

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிபோல எப்போதும் சிங்கப்பூருக்குப் போட்டி ஹாங்காங்தான்.

ஹாங்காங். ஏசியாவிலேயே முதன்மை நகரங்களுள் ஒன்று. இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிபோல எப்போதும் சிங்கப்பூருக்குப் போட்டி ஹாங்காங்தான்.

ஹாங்காங் அப்படி என்ன விசேஷம்?

கடந்த 25 வருடங்களாக ஒரு நிமிடம்கூட மின் தடை ஏற்பட்டு பார்த்ததில்லை.

ஒரு நிமிடம்கூட, குடிதண்ணீர் வராமல் பார்த்ததில்லை.பொது மக்கள் ஒரு பைசா கூட யாருக்கும் எதற்காகவும் லஞ்சம் தர வேண்டியதில்லை. தீபாவளி, பொங்கல், சீனப் புத்தாண்டு இனாம் கேட்டு தபால்காரரோ அல்லது அரசு அதிகாரிகளோ நச்சரிப்பதில்லை. யாரும் யார் வம்புக்கும் தும்புக்கும் போவதில்லை.

நடு இரவில் ஒரு மணியானாலும் பெண்கள் நகையணிந்து தனியாகப் பயணம் செய்யலாம். காந்தி சொன்னது போல. மிட் லெவல்ஸ் என்ற மேட்டுப் பகுதி இடத்திற்கு மக்கள் மலையேறுவது சிரமாக இருக்கும் என்று காலையில் வேலைக்குச் செல்லத் தோதாக மின் படிக்கட்டுகள் கீழிறங்கும். அதே படிக்கட்டுகள் மாலை ஆனதும் மலைமேலே ஏறும்.

2019 Hong Kong protests
2019 Hong Kong protests

பார்வையில்லாத ஒருவர் ஹாங்காங்கில் வீட்டிலிருந்து அலுவலகமோ, வேறு எங்குமோ தங்குதடையின்றிச் செல்லும் வகையில், டெக்டைல் பாத் என்று சொல்லப்படும் பிரெய்லி போன்ற வழித்தடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சாலையைக் கடக்கும்போது சிக்னல் கம்பங்களில் ஒலியெழுப்பும் வகையில் கருவிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கட்.. கட்.. கட்.. என்றால் சிகப்பு ஒளிருகிறது என்று அர்த்தம். கட.. கட.. கட.. கட.. என்று சப்தம் வந்தால் பச்சை. ஆக, பார்வையில்லாதவர்கள் எளிதில் கடக்கலாம். காதும் கேட்கவில்லையெனில்? அதற்கும் ஒரு சின்னதாக மஞ்சள்பெட்டி வைத்து, அது அதிர்வதுபோலவும் ஓர் ஏற்பாடு உண்டு. இதுபோக, சக்கர நாற்காலிகள் செல்லும் வகையில்தான் அனைத்துப் பாதசாரிகளின் பாதையும் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், கடற்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் பொதுக் குளியலறைகள், நகரெங்கும் பொதுக் கழிப்பிடங்கள் என்று இன்னமும் பொதுமக்களுக்கான ஒரு நகரமாக ஹாங்காங்கை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இவ்வளவு வசதிகள் செய்துகொடுத்தும் ஹாங்காங் மக்களுக்கு என்ன தேவை?

சுதந்திரம்.

இதற்குத்தான் கடந்த பல வாரங்களாகப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வெளிநாட்டு ஊடகங்கள் தொலைக்காட்சியில் காட்டுவதைப்போல நகர் முழுவதும் பற்றி எரியவில்லை. இருப்பினும், இயல்பு வாழ்க்கை ஒரு சிறுதுளி பாதிக்கப்பட்டாலும் அது ஹாங்காங் இல்லை.

2019 Hong Kong protests
2019 Hong Kong protests

ஏனெனில், ஹாங்காங் கலாசாரம் வேறு. அரசு என்று ஒன்று இருப்பதே தெரியாமல் இருப்பதுதான் ஒரு நல்ல அரசுக்கு அடையாளம். அந்தச் சித்தாந்தம் கலைக்கப்பட்டிருக்கிறது. தேவையில்லாமல் நுழைக்கப்பட்ட ஒரு சட்டத்திருத்தம்; கைதிகள் ஒப்படைப்பில் சீனாவுக்கும் ஹாங்காங்கிற்கும் ஏற்படுத்தப்பட்ட தேவையில்லாத ஒரு விபரீத ஒப்பந்தம். இதுதான் அத்தனை சலசலப்புக்கும் காரணம்.

இவ்வளவு போராட்டமும் ஏதோ தினமும் நடப்பது அல்ல... சனி ஞாயிற்றுக்கிழமைகளில்தான் பெரும்பாலும் நடக்கிறது. சில வாரங்கள் கோபமும் வன்முறையும் கைமீறிப் போனால் வார நாள்களில் தொடரும்.

பொதுவாக, சீனர் அல்லாதவர்களின் அன்றாட வாழ்க்கை பிரச்னையில்லை என்று சொன்னாலும், வார இறுதிகளில் வீட்டுக்குள் முடங்கியே இருக்கிறார்கள். காரணம் வார இறுதிகளில் போராட்டம் வலுப்பெறுவதுதான். ஹாங்காங் முதன்மை அதிகாரி கேரி லாம் கைதிகள் ஒப்படைப்பு சட்டத்திருத்தத்தை வாபஸ் வாங்கிவிட்டதாகவே அறிவித்துவிட்டார். ஆனாலும், இதுவரை போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை எந்தச் சட்ட நடவடிக்கையும் இல்லாது விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு நிராகரித்துள்ளது. எனவே, ஹாங்காங்கில் போராட்டம் இன்னும் முடிவுபெறவில்லை.

அமைதிக் கடலான ஹாங்காங்கில் வாழ்க்கை இப்போது எப்படி இருக்கிறது என்று ஹாங்காங் வாழ் இந்தியர்களிடம் கேட்டோம். மும்பையில் பிறந்து வளர்ந்த தமிழரும், தொழிலதிபரும், ஹாங்காங்கில் 26 வருடங்களாக வசிப்பவருமான நாராயண்மூர்த்தி, ``எங்களுக்கு இது ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. ஹாங்காங்ல இப்படி ஒரு போராட்டம் வரும்னு கனவுலகூட நினைக்கலை. ஆனா, 97க்கப்புறம் சீனாவின் ஆதிக்கம் வரும்னு எல்லாருக்கும் தெரியும். அது, இப்போ அப்போன்னு வந்திக்கிட்டிருந்தது. போனதடவை 2014-ல் இதே மாதிரி `Occupy Central’னு ஒண்ணு நடந்தது. அதாவது, `ஒத்துழையாமை இயக்கம்’ மாதிரி. அதுவே சிட்டியை ஓர் உலுக்கு உலுக்கிடிச்சு.

இப்ப நடக்கற பிரச்னை சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த மாதிரி. தேவையில்லாம ஒரு புதுச் சட்டத்திருத்தம் கொண்டுவந்து கைதிகளைச் சீனாவுக்கு அனுப்பற மாதிரி... எல்லாருக்கும் தெரியும் சீனாவில என்ன மாதிரி சட்டமும் நீதியும் இருக்கும்னு? இங்க சுதந்திரமா இருந்து பழகின இளைஞர்கள் திடீர்னு இப்படி ஒரு சட்டத் திருத்தம் கொண்டுவந்த உடனே சுதாரிச்சுட்டாங்க. தெருவில இறங்கிப் போராட ஆரம்பிச்சுட்டாங்க.

நாராயண் மூர்த்தி
நாராயண் மூர்த்தி

ஜனங்களுக்கு கஷ்டம்தான். அதிலயும் ரெண்டுநாள் ஏர்போர்ட் மத்தியானத்துக்கு மேல மூடி, யோசிச்சு பாருங்க... குடும்பம் குழைந்த குட்டின்னு பெட்டி படுக்கையோட வர்றவங்களுக்கு எவ்வளவு கஷ்டம்? எத்தனை சப்போர்ட் இருந்ததோ... ஏர்போர்ட்ல போய் உட்கார்ந்ததால போராட்டக்காரங்களுக்கு மவுஸ் போச்சு.

அது மட்டுமல்ல, அவங்களே அதுக்கு மன்னிப்பு கேட்டுட்டாங்க. இந்தப் போராட்டத்தினால இப்போதைக்கு வெளிநாட்டுவாழ் மக்களுக்கு எதுவும் பாதிப்பில்லை. ஆனா, இருக்குமான்னு சொல்ல முடியாது. இது அடுத்தகட்டத்திற்கு எப்படிப் போகும்னு சத்தியமா யாருக்கும் தெரியாது. ஆனா, ஹாங்காங் ஒரு சுதந்திரமான நகரம். அதை அப்படியே வெச்சிருந்தாதான் சீனாவுக்கு நல்லது. இப்போதைக்கு அதை ஒண்ணும் பண்ண மாட்டாங்கன்னுதான் நினைக்கிறேன்" என்றார்.

தெலுங்கு சங்கத் தலைவர் ஜெயா பீசபதி, ``எங்கள் தெலுங்கு மக்கள் 97-லிருந்து ஹாங்காங்கில் இதுபோல ஒரு போராட்டத்தை பார்த்ததே இல்லை. இந்தப் போராட்டம் எதுக்குன்னு உங்க எல்லாருக்கும் தெரியும். நானும் அதைப்பற்றிப் பேச வேண்டாம். அன்றாட வாழ்க்கை இந்தப் போராட்டத்தால் பாதிக்கப்படலை. ஏன்னா, சாயங்காலம்தான் போராட்டத்தைத் தொடங்குறாங்க. அதேமாதிரி, வார இறுதி நாள்கள்லதான் திரும்பவும் போராடுறாங்க. இதுவே நமக்கெல்லாம் புதுசு. போராட்டம் நடக்கற இடத்தில குப்பைகளைப் போடறது இல்ல.

ஜெயா பீசபதி
ஜெயா பீசபதி

ஆம்புலன்ஸ் வந்தா வழி விடுறாங்க. பொதுச் சொத்துக்கு எந்தச் சேதமும் பண்றதில்லை. இதெல்லாம்தான் ஆச்சர்யமான விஷயங்கள். ஆனா, எதிர்பாராத அரசியல் திருப்பங்கள் இவங்க வாழ்க்கையில நெறைய பிரச்னைகளை ஏற்படுத்துமோன்னு பயமா இருக்கு. போராடும் இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியா இருக்குன்னு இவங்களுக்கு வருத்தப்படறதா, இல்லைன்னா ஏசியாவுலயே தலைசிறந்த நகரம் இப்படிப் பிரச்னைல இருக்குன்னு வருத்தப்படறதானு தெரியலை" என்றார்.

ஹாங்காங் மக்கள் போராடுவது எதற்காக? அங்கு நடப்பது என்ன?

மலையாளச் சங்கத் தலைவர் மீனா ராஜீவ், ``நான் 24 வருஷமா ஹாங்காங்ல இருக்கேன். இதுதான் எங்க வீடு. இதுதான் எங்க பாதுகாப்பான கூடு. இங்கிருக்கும் மக்கள் நல்லவங்க. முடிஞ்சவரை நம்மை அனுசரித்துத்தான் போவாங்க. இது ஒண்ணுதான் ஹாங்காங்கை உலகத்திலேயே பாதுகாப்பான பத்து ஊர்களுல ஒண்ணா வெச்சிருக்குது.

ஆனா, சமீபத்திய போராட்டங்கள் உண்மையிலயே ஆச்சர்யமா இருக்கு. இந்த ஊர் இளைஞர்கள் அவங்க இயல்பை மீறி இந்தப் போரட்டத்துல ஈடுபட்டிருப்பதுதான் ஆச்சர்யம்.

மீனா ராஜீவ்  நாயர்.
மீனா ராஜீவ் நாயர்.

எங்களுடைய நித்தியப்படி வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்றாலும், ஒரு சில நாள்கள், ஒரு சில ஏரியாக்கள் வழியே போக நேர்ந்தால் அங்கு போராட்டம் இருந்தால் அது சிரமம்தானே ? அதுபோலவேதான் விமான நிலையம் தடைப்பட்டதும்... இதெல்லாம் ஹாங்காங்கில் நாங்க பார்த்ததேயில்லை. இவ்வளவு இருந்தாலும் இன்னமுமே ஹாங்காங் சுற்றுலாப் பயணிகளுக்குப் பாதுகாப்பான இடம்னுதான் சொல்லுவேன். விரைவில் அரசு ஒரு தீர்வு காணும்" என்றார், நம்பிக்கையுடன்.

தமிழ்ப் பண்பாட்டுக் கழகத் தலைவர் இஸ்மாயில், ``ஹாங்காங் நல்லா இருந்த ஊரு. என்ன நடக்குதுன்னே புரிய மாட்டேங்குது. நான் இப்ப சில வாரங்களா ஹாங்காங்ல இல்லாம இருந்தாலும் என்ன நடக்குதுன்னு பாத்துக்கிட்டுத்தான இருக்கேன். போலீஸ் ஸ்டேஷன்ல கல்லு எரியுறான். எம்.டி.ஆர் டிரெயினைத் தடுக்கறான். ஏர்போர்ட்டுல மறியல் பண்றான். எல்லாம் அந்த பில்லுக்குத்தாம்பா. அதை வாபஸ் வாங்கிட்டா நல்லாருக்கும். இவ்வளவு நடக்குதே... பப்ளிக் யாரையாச்சும் தொந்தரவு பண்றானா, இல்லையே?

Ismail
Ismail

இன்னும் சொல்லப்போனா ஏர்போர்ட்டை மறிச்சதுக்கு மன்னிப்பு கேட்குறான்ப்பா? ஏதாவது பஸ்ஸ எரிச்சோம், இல்ல கடைய உடைச்சோம், உள்ளார புகுந்து திருடுனோம்னு ஏதாச்சும் கேள்விப்பட்டோமா? அதான் ஹாங்காங். அவ்வளவு ஏன்? குப்பைகளைப் போராடுற இடத்தில விட்டுட்டுப் போறதில்ல. கூடிய சீக்கிரம் ஏதாவது நல்ல முடிவு வரணும்" என்றார்.

கன்னடச் சங்கத்தைச் சேர்ந்த சமீர் ப்ரனேஷ், ``இத்தனை ஆண்டுகளில் போராட்டக்காரர்களுக்கும் போலீஸ்காரர்களுக்கும் மோதல் இவ்வளவு உச்சத்தை அடைந்து பார்த்ததில்லை. பெரும்பாலும் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்றாலும், கடந்த இரு வாரங்களாக மிகவும் அமைதியில்லாத சூழல் நிலவுகிறது. ரயில் சேவை ரத்து, விமான நிலைய முற்றுகை, ரயில் நிலையங்களில் தாக்குதல் பயம், சாலை மறியல், போலீஸார் பயன்படுத்தும் புகை குண்டுகள், என இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் பல சம்பவங்கள் நிகழ்கின்றன.

Sameer Praneesh
Sameer Praneesh

கடந்த ஒரு மாதமாகவே வார இறுதிகளில் நாங்கள் கலவரங்களுக்குப் பயந்து ரயில் சேவையைப் பயன்படுத்துவதில்லை. ஆனால், போராட்டம் குறித்த தகவல்கள், போராட்டக்காரர்கள் டெலிகிராப் செயலி மூலம் பகிரப்படுவதால், அதற்கேற்றாற்போல எங்களால் பயணங்களை முன்கூட்டியே மாற்றியமைத்துக்கொள்ள முடிகிறது. ஹாங்காங் எங்கள் ஊர். பல ஆண்டுகளாக இங்கே வாழ்கிறோம். இங்கு விரைவில் அமைதி திரும்ப வேண்டும் என்பதே எங்களது ஆசை" என்றார்.

குறிப்பாக, சுற்றுலாப் பயணிகள் இதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

போராட்டக்காரர்கள் அனைவரும் அணிவது கறுப்பு டீ ஷர்ட்தான். ஆக, சில வாரங்களாக புலம்பெயர்ந்த இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினவர் கறுப்பு டீ ஷர்ட் அணிவதைத் தவிர்க்கிறார்கள். ஒருவேளை, போராட்டம் நடக்கும் இடம் வழியாகச் செல்ல வேண்டியிருந்தால், நம்மையும் போராட்டக்காரர்கள் என்று எண்ணிவிடக்கூடும் என்ற பயம்தான். சரி, வெள்ளை நிறத்துக்கு என்ன கேடு? இந்தப் போராட்டக்காரர்களை எதிர்த்து ஒரு கும்பல் கிளம்பியிருக்கிறது. அவர்கள் அணியும் நிறம் வெள்ளை.

யூன் லாங் என்ற இடத்தில் வெள்ளை டீ ஷர்ட் அணிந்த கும்பல், கறுப்பு டீ ஷர்ட் அணிந்த போராட்டக்காரர்களை தாக்கியது. அன்றிலிருந்து போராட்டம் நடக்கும் இடம் வழியாக யாரேனும் வெள்ளை டீ ஷர்ட் அணிந்துசென்றால் போராட்டக்காரர்களிடமிருந்து தர்ம அடியோ, வசவுகளோ வாங்க வேண்டிவரும். ஆக, வெள்ளையையும் தவிர்க்கிறார்கள் பொதுமக்கள்.

2019 Hong Kong protests
2019 Hong Kong protests

இந்த நிலையில், மீண்டும் விமான நிலையம் செல்லும் பாதைகளை அடைத்து சிக்கல் ஏற்படுத்தப்போவதாக அறிவித்திருக்கின்றனர், போராட்டக்காரர்கள்.

ஹாங்காங்கின் போராட்டம் பொருளாதாரத்தைப் பாதித்திருப்பது உண்மை. ஏர்போர்ட் முடங்கிய இரு நாள்கள் மட்டும் 300 மில்லியன் ஹாங்காங் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பணம் போனால் போகட்டும். இனியாவது ஹாங்காங் மக்களுக்கு விரைவில் நிம்மதி வரட்டும்.

இந்தப் பிரச்னை முடியும்வரை சுற்றுலாப் பயணிகள் ஹாங்காங் பக்கம் எட்டிப்பார்க்காமல் இருப்பது நல்லது.

ராம், ஹாங்காங்

பின் செல்ல