Published:Updated:

ராணுவத்தைக் குவித்தால் அமைதி வருமா?

Hong Kong people
பிரீமியம் ஸ்டோரி
News
Hong Kong people

‘ஹாங் காங் எங்கள் நாடு. நாங்கள் ஹாங் காங்கின் குடிமக்கள்‘ என்று உணர்ச்சிபூர்வமாக வீதிகளில் இறங்கி முழக்கமிடுகிறார்கள் ஹாங் காங் மக்கள்.

சீனாவோ சீறுகிறது. ‘உங்களுடைய முழக்கம் அடிப்படையில் தவறானது. ஹாங் காங் ஒரு நாடே அல்ல. நீங்கள் ஹாங் காங்கின் குடிமக்களும் அல்லர். ஹாங் காங் சீனாவின் பிரிக்கமுடியாத ஒரு பகுதி. நீங்கள் அனைவரும் சீனர்கள். மிஞ்சி மிஞ்சிப் போனால் ஹாங் காங்கில் வசிக்கும் சீனர்கள் என்று அழைத்துக்கொள்ளலாம். அதற்கு மேல் எல்லை மீறுவதற்கு அனுமதியில்லை.’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கடந்த மாதம் தொடங்கி ஹாங் காங்கின் வீதிகள் போர்க்களம் போல் காட்சியளிப்பதற்கு இந்த அடிப்படை முரணே காரணம். அனைத்துக்கும் காரணம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சட்ட மசோதா. இந்த மசோதா சட்டமாக மாறினால், சீன அதிகாரிகளால் எவரொருவரையும் ஹாங் காங்கிலிருந்து சீனாவுக்கு வெளியேற்றிவிட முடியும். ‘இது அநியாயம். தங்களுடைய அரசியல் எதிர்ப்பாளர்களையெல்லாம் ஹாங் காங்கிலிருந்து அப்புறப்படுத்துவதே சீனாவின் திட்டம். எதிர்ப்புகளோ சலசலப்புகளோ இல்லாத மௌனிக்கப்பட்ட ஹாங் காங்கை உருவாக்குவதுதான் சீனாவின் நோக்கம். எங்களுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழி மீறப்படுவதை அனுமதிக்கமாட்டோம்’ என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராணுவத்தைக் குவித்தால் அமைதி வருமா?

அதென்ன உறுதிமொழி? 19-ம் நூற்றாண்டின் மத்தியில் சீனாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் ஓப்பியம் போர் மூண்டது. அப்போது பிரிட்டன் உலகப் பேரரசு, சீனாவோ ஒரு கட்டெறும்பு. கட்டெறும்பிடமிருந்து ஹாங் காங் தீவைக் கைப்பற்றுவது பிரிட்டனுக்கு எளிதானதாக இருந்தது. கவனிக்கவும், பிரிட்டன் கைப்பற்றிக்கொண்டது முழுமையான ஹாங் காங் தீவையல்ல, அதன் ஒரு பகுதியைத்தான். மற்றொரு பகுதியை 99 ஆண்டுக் குத்தகைக்கு சீனாவிடமிருந்து பிரிட்டன் பெற்றுக்கொண்டது. அடுத்த நூற்றாண்டில் நிலைமை தலைகீழாக மாறியது. உலகப் பேரரசு கட்டெறும்பாகச் சுருங்கிப்போனது. சீனாவோ மாபெரும் டிராகனாக உயர்ந்து நின்றது.

இந்தப் பின்னணியில் குத்தகைக் காலமும் முடிவுக்கு வந்தது. இனியும் சீனாவின் கையைப் பிடித்து முறுக்குவது சாத்தியமில்லை என்பதை உணர்ந்த பிரிட்டன் ஹாங் காங்கிலிருந்து வெளியேறியது. அவர்கள் வெளியேறிய அடுத்த கணம் சீனா ஹாங் காங்கைத் தன் சிறகுகளுக்குள் அணைத்துக்கொண்டுவிட்டது. பிரிட்டனின் யூனியன் ஜாக் கொடி கீழே இறக்கப்பட்டு சீன தேசியக் கொடி

1 ஜூலை 1997 அன்று ஏற்றி வைக்கப்பட்டது. சீனாவிடமிருந்து அபகரிக்கப்பட்ட தீவு மீண்டும் சீனாவிடமே திரும்பி வந்தது. எனில், வரலாறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்றல்லவா கருதவேண்டும்? நூற்றாண்டுக்கால ஹாங் காங் பிரச்னை அன்றே முடிவுக்கு வந்திருக்க வேண்டும் அல்லவா?

ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. ஒரு நிலப்பரப்பைச் சொந்தமாக்கிக்கொள்ளச் சில கையெழுத்துகள் போதும். ரத்தமும் சதையுமாக இருக்கும் மக்களை ஒருங்கிணைத்துக்கொள்வது எளிதல்ல. இதைச் சீனாவும் உணர்ந்துகொண்டது. எனவே, சமரச முயற்சியாக அப்போதைய சீன அதிபர் ஜியாங் ஜெமின் ஒரு பிரகடனத்தை வெளியிட்டார்.

ராணுவத்தைக் குவித்தால் அமைதி வருமா?

‘அயலுறவுத்துறை, பாதுகாப்பு விவகாரங்கள் போன்ற அத்தியாவசியமானவற்றை மட்டுமே சீனா கவனித்துக்கொள்ளும். மற்றபடி ஹாங் காங் சுதந்திரமான தீவாகத் திகழும். உங்களுடைய நீதிமன்ற அமைப்பு அப்படியே நீடிக்கும். பேச்சுரிமை தொடர்ந்து நிலைநாட்டப்படும். சட்டமன்றம் கலைக்கப்பட மாட்டாது. ‘ஒரு நாடு, இரு அமைப்புகள்’ திட்டத்தின்படி ஹாங் காங்கின் தனித்தன்மைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வோம். ‘நேருவின் இந்தியா காஷ்மீருக்கு அளித்ததைப்போன்ற ஓர் உறுதிமொழிதான் இதுவும். ‘ஹாங் காங்குக்கு வழங்கப்பட்டுள்ள இந்தச் சிறப்புத் தகுதி 50 ஆண்டுகள் நீடிக்கும். அதற்குப் பிறகு நிலைமையைப் பொறுத்துப் பரிசீலனை செய்துகொள்வோம்.’

சீனாவின் கரங்களுக்குள் வந்து சேர்ந்த பிறகு கடந்த 20 ஆண்டுகளில் அடையாளம் தெரியாத அளவுக்குப் பன்மடங்கு வளர்ச்சியைச் சந்தித்துள்ளது ஹாங் காங். வைரக்கற்கள்போல் அதன் நகரங்கள் மின்னுகின்றன. வானுயர்ந்த கட்டடங்கள், மேம்பாலங்கள், வர்த்தக வளாகங்கள் என்று எந்தவொரு மூன்றாமுலக நாட்டையும் ஏங்கச் செய்யும் அபாரமான கட்டுமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உலகளவில் முக்கிய நிதி மையங்களில் ஒன்றாக ஹாங் காங் திகழ்கிறது. முன்னணியில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் எல்லாம் ஹாங் காங்கைத் தங்களுடைய தலைநகரமாகக் கருதுகின்றன. வேறென்ன வேண்டும் உங்களுக்கு என்கிறது சீனா. கட்டுப்பாடற்ற முழுமையான சுதந்திரம் என்கிறார்கள் ஹாங் காங் போராட்டக்காரர்கள்.

ராணுவத்தைக் குவித்தால் அமைதி வருமா?

‘ஆம், சீனாவிடம் திரும்பி வந்த பிறகு நாங்கள் பெருமளவில் வளர்ந்திருக்கிறோம். ஆனால் இந்த வளர்ச்சி சமச்சீரானதாக இல்லை. நீங்கள் உருவாக்கிய பொருளாதாரக் கட்டுமானம் தடுமாறிக்கொண்டிருக்கிறது. வசதியானவர்கள் மட்டும் மேலும் வசதியானவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். எதிர்த்து ஒரு சொல் பேசினால் கைது, சிறை, கண்ணீர்ப்புகை, துப்பாக்கிச் சூடு. பொம்மைபோல் ஓர் அரசு. அந்த அரசையும்கூட நாங்கள் அனைவரும் சேர்ந்து தேர்ந்தெடுக்க முடியாது. இன்னமும் வாக்குரிமை அனைவருக்கும் வழங்கப்படவில்லை. இதெல்லாம் போதாதென்று இப்போது புதிதாக இன்னொரு அநீதியான சட்ட மசோதா. இப்படியே போனால் ஒரு நாள் ஹாங் காங்குக்குக் கொடுக்கப்பட்டுள்ள சிறப்புத் தகுதியையும் விலக்கிக்கொண்டு சீனாவின் மற்றொரு மாகாணமாக எங்களை மாற்றிவிடமாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்?’

உலகின் காதுகளில் இந்தக் குரல் விழுந்துவிடாமல் இருப்பதற்குத் தன்னாலான அனைத்தையும் செய்கிறது சீனா. ஊடகச் செய்திகள் தணிக்கை செய்யப்படுகின்றன. போராடும் ஹாங் காங் மக்களின் கருத்துகள் ஒளிபரப்பப்படுவதில்லை. ‘அங்குமிங்குமாகச் சில கலவரங்கள் நடைபெறுகின்றன; கவலை வேண்டாம், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்று மட்டுமே சொல்கிறது சீனா. ‘இந்தக் கலவரமும்கூட தானாக எழுந்ததல்ல. ஹாங் காங் மக்களைச் சீனாவுக்கு எதிராகத் திருப்பிவிடும் முயற்சியை இன்று நேற்றல்ல, பலகாலமாகவே அமெரிக்காவும் மேற்குலகமும் மேற்கொண்டுவருகின்றன. அதன் ஒரு பகுதிதான் இப்போதைய ஹாங் காங் கலவரம்’ என்கிறது சீனா.

ராணுவத்தைக் குவித்தால் அமைதி வருமா?

‘அது உண்மையல்ல, எங்களுடைய பிரச்னைகளை முன்னிறுத்தியே நாங்கள் போராடுகிறோம்’ என்கிறார்கள் ஹாங் காங் போராட்டக்காரர்கள். அவர்களுடைய கோரிக்கைகள் பின்வருமாறு : சீனாவின் சமீபத்திய சட்ட மசோதா கைவிடப்பட வேண்டும். மசோதாவை எதிர்த்து நடத்திய போராட்டத்தைக் கலவரம் என்று சீனா அழைக்கக்கூடாது. கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை விடுவித்து அவர்கள்மீது தொடுத்த வழக்கைத் திரும்பப் பெறவேண்டும். காவல் துறையின் அடக்குமுறை விசாரிக்கப்பட வேண்டும். அனைவருக்கும் வாக்குரிமையை விரிவுபடுத்த வேண்டும். முழுமையான சுதந்திரம் மலரவேண்டும்.

ஹாங் காங்கின் குரல் வலுவடைய வலுவடைய சீனாவும் ராணுவத்தை அங்கே பலப்படுத்திக்கொண்டே செல்கிறது. சீனாவின் படைபலத்தோடு போட்டியிடும் வல்லமை ஹாங் காங் போராட்டக்காரர்களுக்கு இல்லை. அமெரிக்காவுக்கே சவால் விடும் அளவுக்கு பலமிக்க ஒரு நாடாக இருந்தபோதிலும் ஹாங் காங்கில் அவ்வப்போது எழும் எதிர்ப்பலைகளை சீனாவால் கட்டுப்படுத்த இயலவில்லை. இதன் பொருள், ஹாங் காங் சிக்கல் இப்போதைக்குத் தீரப்போவதில்லை என்பது மட்டும்தான். ராணுவத்தால் சாதிக்கமுடியாதது எதுவுமில்லை என்னும் நம்பிக்கை இருக்கும்வரை ஹாங் காங் மட்டுமல்ல, எந்தவொரு தேசியச் சிக்கலும் தீரப்போவதில்லை என்பதும் உண்மை. ஒரே சமயத்தில் காஷ்மீரிலும் ஹாங் காங்கிலும் ஒலிக்கும் குரல்கள் உணர்த்தும் செய்தி இதுவே.