Published:Updated:

கைநழுவிய வரலாற்றுச் சாதனை; `பெண்கள் பெரும்பான்மை நாடாளுமன்றம்' என்ற வாய்ப்பை இழந்த ஐஸ்லாந்து!

மொத்தமுள்ள 63 இடங்களில் 33 இடங்களைப் பெண்கள் கைப்பற்றியுள்ளனர் என்றும், அதாவது நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 52 சதவிகிதம் இடத்தைப் பெண்கள் பெற்றுள்ளதாகவும் முடிவுகள் வெளியாகின.

ஐரோப்பிய கண்டத்திலேயே பெண்கள் பெரும்பான்மையாக உள்ள நாடாளுமன்றத்தைக் கொண்டுள்ள முதல் நாடு என்கிற பெருமையை சிறிது நேரம் தக்கவைத்திருந்த ஐஸ்லாந்து நாடு, பின்னர் அதனை இழந்துள்ளது.

ஐஸ்லாந்து நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 25-ம் தேதி நடைபெற்றது. பின்னர் தேர்தல் முடிவுகள் கடந்த ஞாயிறன்று வெளியிடப்பட்டன. அதில் மொத்தமுள்ள 63 இடங்களில் 33 இடங்களைப் பெண்களே கைப்பற்றியுள்ளனர் என்றும், அதாவது நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 52 சதவிகிதம் இடத்தைப் பெண்கள் பெற்றுள்ளதாகவும் முடிவுகள் வெளியாகின.

Iceland
Iceland
AP Photo
`உழைப்பாளிகள் நாங்கள்; தாலிபான்களுக்கு அஞ்சமாட்டோம்!' - குங்குமப்பூ ஏற்றுமதி செய்யும் ஆஃப்கன் பெண்

ஐரோப்பிய கண்டத்தைப் பொறுத்தவரை இதுவரை எந்தவொரு நாட்டிலும் நாடாளுமன்றத்தில் 50 சதவிகிதம், அல்லது அதற்கும் மேலாக பெண் உறுப்பினர்கள் இருந்ததில்லை. அதிகபட்சமாக ஸ்வீடன் நாட்டில் 47 சதவிகிதம் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதே இதுவரை அதிகபட்ச சதகிவிதமாகவும், பெருமையாகவும் பார்க்கப்பட்டுவந்தது. இந்நிலையில் ஐஸ்லாந்து நாட்டின் தேர்தல் முடிவுகள், 52 சதவிகிதம் பெண் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகச் சொன்னதும், ஐரோப்பிய கண்டத்திலேயே பெண்கள் பெரும்பான்மையாக உள்ள நாடாளுமன்றத்தைக் கொண்டுள்ள முதல் நாடு என்கிற பெருமை இந்நாட்டிற்குக் கிடைத்தது.

ஆனால் இந்த அங்கீகாரம் சிறிது நேரம் மட்டுமே நீடித்தது. மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் சரிபார்க்கப்பட்டபோது, மொத்தமுள்ள 63 இடங்களில் 30 இடங்களை மட்டுமே பெண்கள் கைப்பற்றியிருப்பது தெரிய வந்திருக்கிறது. அதாவது மொத்தமாக 47.6 சதவிகித பெண் உறுப்பினர்களே நாடாளுமன்றத்துக்குத் தேர்வாகியுள்ளது தெரிய வந்திருக்கிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் அங்கீகாரம் தங்கள் நாட்டுக்குக் கிடைக்கவிருந்தது கடைசி நேரத்தில் கைநழுவிப்போனது அந்நாட்டு அரசு மற்றும் மக்கள் உட்பட அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Iceland PM Katrín Jakobsdóttir
Iceland PM Katrín Jakobsdóttir
AP Photo
`நீதித் துறையில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு என்பது அவர்களின் உரிமை!' - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

பெண்களுக்கான உரிமைகள் மற்றும் அங்கீகாரங்களில் ஐஸ்லாந்து நாடு எப்போதுமே தனி கவனம் செலுத்தி வருவது பலரும் அறியாத ஒரு செய்தி. உலகிலேயே முதல் பெண் அதிபரைத் தேர்வு செய்த நாடு ஐஸ்லாந்துதான். 1980-ம் ஆண்டு விக்டிஸ் பின்பொகாடோட்டிர் என்பவர் ஐஸ்லாந்து நாட்டின் முதல் பெண் அதிபரானார். ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாக ஊதியம் வழங்கப்படவேண்டும் என்கிற சட்டத்தை இந்த நாடு 1961-ம் ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தி அசத்தியது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தாயைப் போலவே தந்தைக்கும் குழந்தை வளர்ப்பில் சரிசமமான பங்கு இருக்கிறது என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கும் இந்த நாடு தாய்க்கு மட்டுமல்லாமல் தந்தைக்கும் குழந்தை வளர்ப்புக்கான விடுமுறையைத் தொடர்ந்து வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு