Published:Updated:

குருநானக்கின் 550-வது ஆண்டில் சீக்கியர்களை மகிழ்விக்க கர்தார்பூர் வழித்தட ஒப்பந்தம்!

இந்தியா - பாகிஸ்தான் இடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்தார்பூர் வழித்தட ஒப்பந்தம் இன்று கையொப்பமாகியுள்ளது. இருநாட்டு அதிகாரிகளின் முன்னிலையில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அதிகாரபூர்வமாக இன்று ஒப்பந்தம் கையொப்பமானது. 

கர்தார்பூர் வழித்தடம்
கர்தார்பூர் வழித்தடம் ( Indian Defence Review )

சீக்கியத் தலைவர் குருநானக் அவர்கள் பிறந்த 550வது ஆண்டு இந்த வருடம் கொண்டாடப்படுகிறது. குருநானக்கின் 550-வது ஆண்டைக் கொண்டாட மத்திய அமைச்சரவை ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ’தேரா பாபா நானக்’ சீக்கிய கோயிலிலிருந்து பாகிஸ்தான் கர்தார்பூர் பகுதியில் உள்ள ’தர்பார் சாகிப்’ சீக்கிய கோயிலுக்கு இணைப்பு ஏற்படுத்த வேண்டும் என்பது சீக்கியர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்துவருகிறது.

குருநானக்
குருநானக்
India Today
Vikatan

சீக்கிய மத தலைவர் குருநானக் தன்னுடைய வாழ்நாளில் 17 ஆண்டுகளைத் தற்போது பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் கழித்ததாகச் சொல்லப்படுகிறது. அவர் அங்கு வாழ்ந்த காலத்தில் 1522-ம் ஆண்டு இந்த சீக்கிய கோயில் தோற்றுவிக்கப்பட்டது. பஞ்சாப் பொற்கோயில் போல உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்களின் புனித தளங்களில் ஒன்றாக கர்தார்பூரில் உள்ள தர்பார் சாகிப் விளங்குகிறது. எனினும் இந்தியாவிலிருந்து அங்கு சென்று வருவதற்குப் போக்குவரத்து போன்ற போதிய வசதிகள் இல்லாததால் சீக்கியர்கள் தவித்துவந்தனர்.

குருநானக்கின் 550-வது ஆண்டு தற்போது கொண்டாடப்பட்டு வருவதையொட்டி கர்தார்பூர் வழித்தட கோரிக்கையைச் செயல்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை மீண்டும் எழுந்தன. இதை நிறைவேற்றும் விதமாக இந்திய அரசு பாகிஸ்தானுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து கர்தார்பூர் வழித்தடத்தை உருவாக்க இருநாட்டு அரசுகள் ஒப்புக்கொண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இன்று கையொப்பமாகியுள்ள ஒப்பந்தத்தின் படி கர்தார்பூர் வழித்தட திட்டத்தைச் செயல்படுத்த இருநாட்டு அரசுகளும் அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்டன. நவம்பர் 9-ம் தேதி இந்த வழித்தடம் திறக்கப்படலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

கர்தார்பூர் ஒப்பந்தம் கையொப்பமானது
கர்தார்பூர் ஒப்பந்தம் கையொப்பமானது

இந்தப் புதிய ஒப்பந்தத்தின்படி, இந்தியாவைச் சேர்ந்த அனைவரும் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தலாம். இதற்குத் தனியாக விசா பெற வேண்டிய தேவையில்லை, பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே போதும். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் கர்தார்பூர் செல்ல வேண்டுமென்றால் அவர்கள் நாட்டு பாஸ்போர்ட் உடன் இந்தியப் அரசின் வெளிநாடு வாழ் இந்தியர் (Overseas Citizenship of India - OCI) சான்றும் உடன் வைத்திருக்க வேண்டும். யாத்திரை செல்ல விரும்புபவர்கள் https://prakashpurb550.mha.gov.in/kpr/ என்கிற மத்திய அரசின் தளத்தில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். இந்திய அரசு பயணம் செய்பவர்களின் பட்டியலை 10 நாள்களுக்கு முன்பாக பாகிஸ்தான் அரசிடம் வழங்கிவிடும். பயணம் செய்பவர்களுக்கு நான்கு நாள்களுக்கு முன்பாக உறுதிசெய்யப்பட்ட தகவல் குறுஞ்செய்தி மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கப்படும். இந்த வழித்தடம் வருடத்தில் அனைத்து நாள்களிலும் செயல்படும். யாத்திரை செல்பவர்கள் அதே நாள் மாலைக்குள் இந்தியப் பகுதிக்குத் திரும்பிவிட வேண்டும்.

யாத்திரை வருபவர்களிடம் $20 சேவை கட்டணமாக வசூலிக்கப்படும் என பாகிஸ்தான் அரசு தெரிவித்திருந்தது. அதைக் கைவிடவேண்டும் என இந்திய அரசுத் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. அதற்கு பாகிஸ்தான் அரசு இசைவு கொடுக்காத சூழலில் நேரத்திற்கு வழித்தடம் திறக்கப்பட்டாக வேண்டும் என்கிற காரணத்திற்காக ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதாக இந்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவை கட்டணத்தைத் தவிர்க்க இந்திய அரசுத் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தர்பார் சாகிப், கர்தார்பூர்
தர்பார் சாகிப், கர்தார்பூர்
இதய அறுவைசிகிச்சை... பாகிஸ்தான் சிறுமிக்கு விசா - கம்பீருக்கு குவியும் பாராட்டு!

மேலும் அதில், வழித்தடத்திற்குத் தேவையான இடைக்கால கட்டமைப்பு வசதிகளை இந்திய அரசு செய்துவிட்டது என்றும் பாகிஸ்தான் அரசும் விரைந்து தன்னுடைய பணிகளை முடிப்பதாக நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளது. ஏனைய பணிகளையும் தொடக்க விழாவிற்கு முன்பாக முடிக்கப்பட்டுவிடும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஓராண்டு காலமாகப் பாகிஸ்தானுடன் சுமுகமான அரசியல் சூழல் இல்லாதபோதும் கர்தார்பூர் வழித்தடம் எவ்வித தடையும் இல்லாமல் நிறைவேறியிருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சீக்கியர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறுவதற்கான கதவுகள் திறந்துள்ளன.