Published:Updated:

சீண்டும் சீனா... எதிர்கொள்ளும் இந்தியா!

எதிர்கொள்ளும் இந்தியா
பிரீமியம் ஸ்டோரி
எதிர்கொள்ளும் இந்தியா

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இந்த மோதல் போக்கின் வரலாற்றுப் பின்னணி குறித்து நம்மிடம் விவரித்தார், சென்னையைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் பெர்னார்டு டி சாமி.

சீண்டும் சீனா... எதிர்கொள்ளும் இந்தியா!

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இந்த மோதல் போக்கின் வரலாற்றுப் பின்னணி குறித்து நம்மிடம் விவரித்தார், சென்னையைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் பெர்னார்டு டி சாமி.

Published:Updated:
எதிர்கொள்ளும் இந்தியா
பிரீமியம் ஸ்டோரி
எதிர்கொள்ளும் இந்தியா
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்தான் இந்தியாவிற்கு வருகை தந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங். மாமல்லபுரத்தில் நடந்த பிரதமர் மோடியுடனான அவரின் சந்திப்பு இரு நாடுகளின் நல்லுறவை வளர்க்கும் என்று நம்பப்பட்டது.

இது நடந்து எட்டு மாதங்களே ஆன நிலையில் இன்று காட்சிகள் முற்றிலுமாக மாறியிருக்கின்றன. இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் சீன ராணுவத்தினருடனான மோதலில் கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளுடன் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

லடாக்கில் உள்ள இந்தியா–- சீனா எல்லையில் உள்ளது பாங்காங் திசோ ஏரி. அதை ஒட்டிய பகுதியில் சாலைப் பணி, கல்வான் பகுதியில் உள்ள தர்புக்-சையோக்-தவுலத் பெக் ஓல்டி (Darbuk-Shayok-Daulat Beg Oldie) சாலையை இணைக்கும் பணி ஆகியவற்றை இந்திய அரசு மேற்கொண்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, எல்லைப் பகுதியில் தன் ராணுவப் படைகளை கடந்த மே 5 - 6 தேதிகளில் குவித்தது. மே 9-ம் தேதி சிக்கிம் மாநிலத்தில் உள்ள நகுலா பகுதியில் இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் எல்லைப் பகுதிகளில் அதிக வீரர்களைக் குவித்தன. தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புப் படைத் தலைவர் பிபின் ராவத் உள்ளிட்டோருடன் எல்லைப் பதற்றம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மே 26-ம் தேதி ஆலோசனை நடத்தினார். கல்வான் பகுதியில் ஏற்பட்ட எல்லைப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண இரு நாடுகளின் தலைமை ராணுவ அதிகாரிகள் இடையே ஜூன் 12-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் பிறகு, இரு நாட்டு வீரர்களுக்கு இடையே ஜூன் 15-ம் தேதி கைகலப்பு ஏற்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“ஜூன் 15, 16-ம் தேதிகளில் இரவு நேரத்தில் இந்தியா - சீனா ராணுவத்தினரிடையே ஏற்பட்ட கடும் மோதலில், இந்திய வீரர்கள் மூன்று பேர் மரணமடைந்தனர். பூஜ்ஜியத்துக்கும் குறைவான வெப்பநிலை காரணமாக, மோதலில் படுகாயமடைந்திருந்த 17 இந்திய வீரர்களும் உயிரிழந்தனர்” என இந்திய ராணுவம் அறிக்கையில் தெரிவித்தது. அந்த மோதலில், சீன ராணுவத்தினரும் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு கூறினாலும், எத்தனை வீரர்கள் இறந்தனர் என்பது பற்றி அவர்கள் வாய்திறக்கவில்லை.

சீண்டும் சீனா... எதிர்கொள்ளும் இந்தியா!

2017-ம் ஆண்டு சிக்கிம் மாநிலத்தில் உள்ள டோக்லாமில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் மோதல் போக்கு ஏற்பட்டது. அப்போதுகூட, இரு தரப்பும் அடித்துக்கொள்ளும் சூழல் எழவில்லை. ஆனால், இந்த முறை 20 இந்திய வீரர்கள் உயிரிழந்து, 76 இந்திய வீரர்கள் படுகாயமடைந்த துயரம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சூழலில் ‘இந்திய மண்ணில் ஒரு அங்குலம்கூட விட்டுத்தர முடியாது’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். சீனாவுக்குத் தக்க பதிலடி கொடுப்பதற்கு இந்திய ராணுவத்தினருக்கு முழுச் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இந்த மோதல் போக்கின் வரலாற்றுப் பின்னணி குறித்து நம்மிடம் விவரித்தார், சென்னையைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் பெர்னார்டு டி சாமி.

“1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்று இரண்டு ஆண்டுகளில், மக்கள் சீனக் குடியரசு 1949-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதை இந்தியாதான் முதன் முதலில் அங்கீகரித்தது. சர்வதேச அளவில் புதிதாக ஒரு நாடு உருவானால், அதை இன்னொரு நாடு அங்கீகரிக்க வேண்டும். அப்போதுதான், அது ஒரு நாடாகக் கருதப்படும். சீனாவை அன்றைய பிரதமர் நேரு அங்கீகரித்தார். நேருவுக்கும், சீனாவின் பிரதமர் சூ யென்லாய்க்கும் நல்ல நட்பு இருந்தது. அவர்கள் இருவரும்தான் இந்தோனேசியா சென்று பஞ்சசீலக் கொள்கையை வெளியிடக் காரணமாக இருந்தனர். பரஸ்பரம் இரு நாடுகளும் எல்லைகளை மீறக்கூடாது, பரஸ்பரம் இரு நாடுகளும் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது என்பன உள்ளிட்ட ஐந்து கொள்கைகள் கொண்டதுதான் பஞ்சசீலக் கொள்கை.

சூ யென்லாய் இந்தியாவுக்கு வந்தார். நேரு சீனாவுக்குச் சென்றார். அப்படியான நல்லுறவும் நிலவிக்கொண்டிருந்த காலத்தில்தான், திபெத் என்பது சீனாவின் ஒரு பகுதி அல்ல என்றும், திபெத் தனி நாடு என்றும் சொல்லிவரும் தலாய் லாமா 1959-ம் ஆண்டு இந்தியா வந்தார். அவருக்கு அடைக்கலம் கொடுத்து, ஹிமாச்சலப்பிரதேசம் தரம்சாலாவில் தங்குவதற்கு இந்திய அரசு இடம் கொடுத்தது. இங்கு நாடுகடந்த அரசை (Government in exile) தலாய் லாமா நடத்திவருகிறார். அங்குதான் பிரச்னை ஆரம்பித்தது. திபெத்தை சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஏற்காததால், இந்தியா மீது சீனாவுக்குக் கடும் கோபம். அதனால் ஏற்பட்ட பகையானது, 1962-ம் ஆண்டு போராக வெடித்தது. இந்தியாவின் பல பகுதிகளை சீனா ஆக்கிரமித்தது. அதற்குப்பின் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான உறவு என்பது ‘எலியும் பூனையும்’ உறவுதான்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது சீனாவுக்குச் சென்றார். அப்போது, சீனாவுடனான உறவு வலுப்பட வேண்டும் என்பதற்காக, சீனாவில் தன்னாட்சி அதிகாரம் கொண்ட பகுதி திபெத் என்பதை அங்கீகரிக்கிறோம் என்று வாஜ்பாய் கூறினார். அதற்கு பதிலாக, சிக்கிமை இந்தியாவின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கிறோம் என சீனா அறிவித்தது. அதைத் தொடர்ந்து எல்லைப் பிரச்னை பற்றி விவாதிப்பதற்காக இந்தியாவும் சீனாவும் பல குழுக்களை அமைத்து, பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தின. அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதனால்தான், இந்திய – சீன எல்லையில் அவ்வப்போது பதற்றம் ஏற்படுகிறது. 2017-ம் ஆண்டு சிக்கிம் பகுதியில் உள்ள டோக்லாமில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.

அதன் பிறகு, இப்போது மிகப்பெரிய அளவுக்கு எல்லையில் மோதல் ஏற்பட்டுள்ளது. லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக இந்திய அரசு அறிவித்ததே சீனாவுக்கு பிரச்னை. கல்வான் பள்ளத்தாக்கு தன்னுடையது என்று சீனா சொல்கிறது. அத்தகைய சூழலில், கல்வானில் பாலம் மற்றும் எல்லையில் உள்ள இந்தியப் பகுதிக்குள் சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை இந்தியா மேற்கொண்டது. அதைச் சீனா ஆட்சேபிக்கிறது. மேற்குப் பகுதியில் சியாச்சின் பனிச்சிகரத்தை வைத்து பாகிஸ்தானும், கிழக்குப் பகுதியில் அருணாசலப்பிரதேசத்தை வைத்து சீனாவும் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. இப்போது, இந்தியப் பகுதிகளைத் தன் வரைபடத்தில் இணைத்து நேபாளம் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது” என்கிறார் பேராசிரியர் பெர்னார்டு டி சாமி.

“பொருளாதார ரீதியில் இந்தியா பலம் பெற்றிருந்தால், இந்திய வீரர்களைக் கொல்லும் அளவுக்கு சீனாவுக்கு தைரியம் வந்திருக்காது” என்கிறார், அப்துல்கலாமின் ஆலோசகராக இருந்தவரும் அப்துல்கலாம் லட்சிய கட்சியின் தலைவருமான வெ.பொன்ராஜ்.

“தனது பொருளாதார பலம், ராணுவ வல்லமை ஆகியவற்றை வைத்து மற்ற நாடுகளிடம் எல்லை மீறுவது சீனாவுக்குப் புதிதல்ல. 1962-ல் இருந்தே இந்தியாவுடன் உரசிக்கொண்டுதான் இருக்கிறது சீனா. ராணுவ பலத்தில் சீனாவுக்கு இணையாக இந்தியா இருக்கிறது. ஆனால், பொருளாதார பலத்தில் இந்தியா கோட்டைவிட்டுள்ளது. இந்தியாவின் ஜி.டிபி 7 சதவிகிதத்திலிருந்து 3 சதவிகிதமாக வீழ்ந்துள்ளது. அதனால்தான், இந்தியாவுடன் மோதுவதற்கும் ராணுவ வீரர்களை அடித்துக் கொல்வதற்கும் சீனாவுக்குத் துணிச்சல் வருகிறது. சீனாவுக்கு நிகராக நாம் ராணுவ பலம் பெற்றிருந்தபோதிலும், ஒரு போர் ஏற்பட்டு அந்தப் போரால் ஏற்படுகிற இழப்புகளையும் பொருளாதார வீழ்ச்சியையும் தாங்கக்கூடிய சக்தி இந்தியாவுக்கு இல்லை. நம்மைச் சுற்றி இருக்கக்கூடிய சார்க் நாடுகள் அனைத்தையும் 2014-ல் பிரதமர் அழைத்தார். ஆனால், 2020-ல் அண்டை நாடுகள் அனைத்தும் எதிரி நாடுகளாகிவிட்டன. இதற்கான காரணங்களை உடனடியாக ஆராய வேண்டும்” என்றார்.

சீனாவிலிருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது. கடந்த டிசம்பர் மாதம் பரவிய கொரோனா வைரஸின் தாக்கத்தால், உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக விளங்கும் சீனா கடுமையாக பாதிக்கப்பட்டது. கொரோனாவைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையால் பல லட்சம் பேர் வீடுகளில் முடங்கினர். தொழிற்சாலைகளும், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டன. அதனால், சீனா பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டது. கொரோனா மற்றும் பொருளாதாரப் பலவீனங்களைக் காட்டிக்கொள்ளக்கூடாது என்பதற்காகவும் தங்கள் மக்களை உற்சாகப்படுத்துவற்காகவும்தான் சீனா இந்தியாவிடம் வாலாட்டுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, சீனப் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்கள் இந்தியாவில் எழுந்துள்ளன. தற்போது, இந்தியாவில் சீனாவின் வர்த்தகம் மற்றும் முதலீடுகள்மீதான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனாவுக்கு எதிரான போரை உலகமே மேற்கொண்டிருக்கும்போது, எல்லையில் அத்துமீறி மோதல் போக்கை மேற்கொள்ளும் சீனாவின் நடவடிக்கை உலகத்தின் வெறுப்பைச் சம்பாதித்துள்ளது.

விதைக்கப்பட்ட பழனிக்கு வீரவணக்கம்!

வெள்ளிப்பனி முகடுகளில் வீற்றிருக்கும் அன்னை தேசத்து எல்லைகளைக் காக்கும் காவல் தெய்வங்கள் நம் ராணுவ வீரர்கள். 45 ஆண்டுகளுக்குப் பின் சீன ராணுவத்தினருடனான மோதலில் இந்த வீரர்களில் 20 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். நாட்டைக் காக்கப் போராடி உயிர்த் தியாகம் செய்த அந்த வீரர்களில் தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனியும் ஒருவர்.

சீண்டும் சீனா... எதிர்கொள்ளும் இந்தியா!
சீண்டும் சீனா... எதிர்கொள்ளும் இந்தியா!
சீண்டும் சீனா... எதிர்கொள்ளும் இந்தியா!

கடுக்கலூர் என்ற அடிப்படை வசதிகள் ஏதுமற்ற குக்கிராமத்தில் இருந்து 22 ஆண்டுகளுக்கு முன் முதல் நபராக ராணுவத்தில் சேர்ந்தவர் ஹவில்தார் பழனி. விவசாயக் குடும்பத்தின் தலைமகனாகப் பிறந்த பழனிக்குப் பின் தங்கை சீதா, தம்பி இதயக்கனி என இருவர் பிறந்தனர். பால்ய வயதில் விளையாட்டில் ஆர்வம் காட்டிய பழனி தனது 18 வயதில் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். அண்ணன் காட்டிய வழியில் இதயக்கனியும் 10 ஆண்டுகளுக்கு முன் ராணுவத்தில் சேர்ந்தார்.

சீண்டும் சீனா... எதிர்கொள்ளும் இந்தியா!
சீண்டும் சீனா... எதிர்கொள்ளும் இந்தியா!
சீண்டும் சீனா... எதிர்கொள்ளும் இந்தியா!
சீண்டும் சீனா... எதிர்கொள்ளும் இந்தியா!
சீண்டும் சீனா... எதிர்கொள்ளும் இந்தியா!

பழனியின் மனைவி வானதிதேவி ஒரு பட்டதாரி. இவர்களுக்கு பிரசன்னா, திவ்யா என இரு குழந்தைகள் பிறக்க அவர்களின் கல்விக்காக ராமநாதபுரத்திலேயே குடியிருக்க விரும்பினார். அங்கே ஒரு வீடு கட்ட வேண்டுமென்பது பழனியின் பல நாள் கனவு. அது இந்த ஆண்டு நிஜமானது. புதிய வீட்டுக்குப் புதுமனை புகுவிழா நடத்த மே 24-ல் நாள் குறித்தனர். ஆனால் அந்த நேரத்தில் லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தினரின் அத்துமீறல் நிலவியதால் பழனிக்கு விடுமுறை கிடைக்கவில்லை. கணவர் வந்த பின் நிகழ்ச்சியை நடத்த நினைத்தார் வானதிதேவி. ஆனால் பழனியோ, ‘`இப்போதைக்கு லீவு கிடைக்காது. எனவே எளிமையாகப் புதுமனைபுகுவிழாவை நடத்திவிட்டுக் குடியேறுங்கள்’’ எனக் கூறியுள்ளார். கணவர் வர இயலாததால் அவர் பிறந்த நாளான ஜூன் 3-ல் புது வீட்டில் குடியேறினார் வானதிதேவி. புது வீட்டிற்கு விரைவில் வர வேண்டும் எனக் காத்திருந்த நிலையில்தான் அந்தக் கொடூர நிகழ்வு எல்லையில் நடந்தது. காலம் முழுவதும் பெற்றோர், உடன்பிறந்தோர், மனைவி, குழந்தைகள் நலனில் ஆர்வமும் அக்கறையும் காட்டிவந்த பழனியின் ‘சொந்த வீடு’ கனவு நிறைவேறிய நிலையில், அந்த வீட்டில் அவரது மூச்சுக்காற்று பட முடியாத சோகம் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் பேரதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. ஆனால் தாய்நாட்டைக் காப்பதற்காக அவர் விட்ட மூச்சுக்காற்று இன்று நம் சுவாசத்தில் கலந்திருக்கிறது.