Published:Updated:

கொரோனா: வளைகுடா நாடுகளுக்கு இந்தியா செய்த உதவிகள் என்ன?

Mohammed Bin Salman and Narendra Modi
Mohammed Bin Salman and Narendra Modi ( Twitter / PMO India )

லாக்டௌன் நீக்கப்பட்டதும், வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியர்கள் தாய்நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள். கேரளாவுக்கு மட்டும் 5 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வளைகுடா நாடுகளையும் கொரோனா ஆட்டி படைத்து வருகிறது. இந்தப் பகுதியில், இரான் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டு தற்போது, அதிலிருந்து மீண்டு வருகிறது. சவுதி அரேபியா, இராக் உள்ளிட்ட நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குட்டி நாடான அமீரகத்தில் சுமார் ஒரு கோடி மக்கள் வசிக்கின்றனர். இந்த நாட்டில் 11,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக 500 பேர் இங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். கொரோனவைக் கட்டுப்படுத்த முடியாமல், அமீரக அரசு செய்வதறியாது திகைத்து வருகிறது. அமீரகத்தில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் பெருகி வருவதால், அங்கு டாக்டர்களுக்கும் செவிலியர்களுக்கும் அதிக தேவை உருவாகியுள்ளது.

கொரேனா பாதிப்பு
கொரேனா பாதிப்பு
Credits : Pixabay

இதனால், இந்தியாவிலிருந்து மருத்துவர்கள், டாக்டர்கள், செவிலியர்களை அனுப்பி வைக்குமாறு அமீரக அரசு இந்திய அரசிடத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளது. சுகாதாரத்துறை ஊழியர்களை அனுப்பும்பட்சத்தில் அமீரகத்திலிருந்து டெல்லிக்கு தனி விமானத்தை இயக்கத் தயராக இருப்பதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அமீரகத்தின் ஒரு கோடி மக்கள் தொகையில் 34 லட்சம் பேர் இந்தியர்கள் ஆவார்கள். இது அமீரக மக்கள் தொகையில் 30 சதவிகிதம் ஆகும். கேரளா, தமிழ்நாடு, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டில் அதிகமாக வசிக்கின்றனர். அமீரகம், சவுதி, கத்தார், பஹரைன் குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் மொத்தம் 1.26 கோடி இந்தியர்கள் பணிபுரிகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், பாகிஸ்தான் உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்களை தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்ற அமீரக அரசு முடிவெடுத்தது.

ஆனால், இந்திய அரசு வேண்டுகோளை ஏற்று இந்தியர்களை மட்டும் வெளியேற்ற அந்த நாட்டு அரசு விலக்கு அளித்தது. இந்திய மாநிலங்கள் தற்போது கொரோனா பாதிப்பில் இருப்பதால், இந்தியர்களை அமீரகத்திலேயே சில காலம் வைத்திருக்கும்படி, இந்திய அரசு அமீரகத்துக்கு வேண்டுகோள் விடுத்தது. இதை ஏற்றுக்கொண்ட அமீரகம், இந்தியர்களை தங்கள் நாட்டிலேயே வைத்து பராமரித்து வருகிறது.

இந்தியாவுக்கும் அமீரகரத்துக்குமிடையே நிலவும் நல்ல உறவின் அடிப்படையில், இந்தியாவும் அந்த நாட்டுக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை அனுப்ப முடிவு செய்துள்ளது. அதுபோல், கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன் அமீரகத்திலிருந்து இந்தியாவுக்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகளை மீண்டும் தங்கள் நாட்டுக்கு அனுப்பும்படியும் இந்திய அரசிடத்தில் அமீரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இரு கோரிக்கைகளையும் இந்திய அரசு பரீசிலித்து வருகிறது.

Be (கொரோனா) Negative!
Be (கொரோனா) Negative!
கபசுரக் குடிநீர்.. விளக்கிச் சொன்ன ஐ.ஏ.எஸ் அதிகாரி.. ஆச்சர்யத்தில் மூழ்கிய மத்திய குழுவினர்!

இதற்கிடையே, சில நாள்களுக்கு முன் குவைத் பிரதமர் ஷேக் சபா அல் காலீத் கொரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்த தங்கள் நாட்டுக்கு மருத்துவக்குழுவினரை அனுப்பி உதவுமாறு பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, 15 ராணுவ மருத்துவர்களைக் கொண்ட குழுவை இந்திய அரசு குவைத் நாட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்திய ராணுவத்திலிருந்து ஆண்டுக்கு 100 மருத்துவர்கள், 40 செவிலியர்கள் ஓய்வு பெற்று வருகின்றனர். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற மருத்துவர்கள் செவிலியர்களை இந்தப் பணியில் பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மருத்துவர்கள், செவிலியர்கள் அனுப்புவதைத் தவிர, வளைகுடா நாடுகளில் கொரோனாவைக் கட்டுப்படுத்த மருந்து, மாத்திரைகளையும் இந்தியா அனுப்பி வருகிறது. குவைத், ஜோர்டான், பஹரைன், கத்தார், சவுதி, அமீரகம், ஓமன் நாடுகளுக்கு இந்தியா 4.5 கோடி ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மாத்திரை மற்றும் 11 மெட்ரிக் டன் HCQ மாத்திரை தயாரிக்க உதவும் மூலப் பொருள்களையும் இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இது தவிர, 2.27 கோடி பாராசிட்டமால் மாத்திரைகளும் அமீரகம், குவைத் போன்ற நாடுகளுக்கு இந்தியா சார்பில் அனுப்பப்பட்டுள்ளன.

Modi
Modi

அதேவேளையில், வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களை இந்தியாவுக்கு அழைத்து வரவும் இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. வருகின்ற 3-ம் தேதி லாக்டௌன் நீக்கப்பட்டால் வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களில் தாயகம் திரும்ப விருப்பமுள்ளவர்கள், விமானப்படை விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் வழியாக தாய்நாட்டுக்கு மீட்டு வர முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, கேரளா, தமிழ்நாடு அரசுகள் இணைய தளம் வழியாக வளைகுடா இந்தியர்களின் பெயர்களை பதிவு செய்ய கேட்டுக் கொண்டுள்ளன. கேரளாவில் அதிகபட்சமாக வளைகுடா நாடுகளிலிருந்து, 5 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அந்த மாநில அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு