Published:Updated:

`மருந்து தட்டுப்பாடு, தொடரும் திருட்டு; மிரட்டும் கொரோனா’ - அமெரிக்காவிலிருந்து ஒரு குரல்!

கொரோனா
கொரோனா

"திருடர்களிடருந்து தங்களையும் தங்களின் பொருள்களையும் பாதுகாத்துக்கொள்ள பலரும் லைசென்ஸ் துப்பாக்கி வாங்கறாங்க. தற்சமயம் எங்க நாட்டுல துப்பாக்கி விற்பனை அதிகம் நடக்குது."

கொரோனாவின் பாதிப்பு, அமெரிக்காவில் அதிக அளவில் உயிரிழப்புகளையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனாவின் தீவிரத்தைத் தடுக்க, அந்த நாட்டு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்துவருகிறது. அமெரிக்காவில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மீனாவிடம், அங்குள்ள கள நிலவரத்தைக் கேட்டோம்.

கொரோனா
கொரோனா

``அமெரிக்காவில், வாஷிங்டன் மாகாணத்தின் சியாட்டில் நகரத்துலதான் முதலில் உயிரிழப்பு ஏற்பட்டுச்சு. அதன் பிறகு, படிப்படியா கொரோனாவின் தாக்கம் அமெரிக்கா முழுக்கவே பரவ ஆரம்பிச்சது. நான் வசிக்கும் கலிஃபோர்னியா மாகாணம் உட்பட அமெரிக்கா முழுக்க எல்லா கல்வி நிறுவனங்களையும் மூடிட்டாங்க. அரசு ஊழியர்கள் சிலர் மட்டும் அலுவலகம் போய் வேலை செய்த நிலையில், இப்போ அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பெரும்பாலானோர் வீட்டுல இருந்துதான் வேலை செய்றாங்க.

65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ரொம்பவே கவனமா இருக்கணும்னு அரசு அறிவுறுத்தியிருக்கு. வணிக நிறுவனங்கள் பலவும் மூடப்பட்டுள்ளதால, ஷாப்பிங் பண்றதுல பலருக்கும் சிரமங்கள் ஏற்படுது. மாஸ்க், கிளவுஸ் உள்ளிட்ட இப்போதைக்கான அத்தியாவசிய பொருள்களுக்கும் மருந்துகளுக்கும் அதிக தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கு. இதனால, மூத்த குடிமக்கள் ரொம்பவே பாதிக்கப்படுறதால, இங்குள்ள பல வணிக நிறுவனங்கள் அவங்க மட்டுமே ஷாப்பிங் செய்ய தனி நேரத்தை ஒதுக்கியிருக்காங்க. முடிந்தவரையில் மற்றொருவரிடமிருந்து ஆறடி இடைவெளிவிட்டு இருப்பதைப் பலரும் கடைப்பிடிக்கிறாங்க.

கொரோனா
கொரோனா

மிக அவசியத் தேவை தவிர, நண்பர்கள் மற்றும் உறவினர்களைக்கூட இப்போதைக்கு சந்திக்க வேண்டாம்னு அரசு அடிக்கடி அறிவுறுத்திட்டே இருக்கு. அதனால, பெருவாரியான மக்கள் வீட்டுலயே முடங்கியிருக்காங்க. ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகுதான் வழக்கம்போல பள்ளிகள் இயங்கும்னு சொல்லியிருக்காங்க. `வொர்க் ஃப்ரம் ஹோம்’ முறையும் இன்னும் சில வாரங்களுக்குத் தொடரும்னு சொல்லியிருக்காங்க. சிறப்புக் குழந்தையின் தாயான நான், பல்வேறு சிறப்புக் குழந்தைகளுக்கு தெரபி கொடுக்கும் நிபுணராக வேலைசெய்றேன்.

கொரோனா பாதிப்பால, பெரும்பாலான மக்கள் போக்குவரத்துப் பயன்பாட்டைத் தவிர்க்கிறாங்க. அதனால, சிறப்புக் குழந்தைகளுக்கு வீடியோ உரையாடல் வாயிலாக தெரபி கொடுக்கிறேன். கொரோனா பாதிப்பு அமெரிக்க மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிப்போட்டிருக்கு.

மீனா
மீனா

கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால், படிச்சவங்க மட்டுமில்லாம படிக்காத பலரும் வேலை வாய்ப்பு இழந்துட்டாங்க. இதனால, திருட்டு அதிகம் நடக்குது. எனவே, திருடர்களிடருந்து தங்களையும் தங்களின் பொருள்களையும் பாதுகாத்துக்கொள்ள பலரும் லைசென்ஸ் துப்பாக்கி வாங்கறாங்க. தற்சமயம் எங்க நாட்டுல துப்பாக்கி விற்பனை அதிகம் நடக்குது. இக்கட்டான சூழலில் மனித நேயம் உதயமாவதுபோல, வீடில்லாத ஆதரவற்ற மக்கள் கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள தேவாலயங்கள் உட்பட பல்வேறு இடங்கள்ல அடைக்கலம் கொடுக்கிறாங்க. உலகம் முழுக்கவே கொரோனா பாதிப்பு சீக்கிரமே கட்டுக்குள் வரணும்” என்று நம்பிக்கையுடன்பேசினார் மீனா.

அடுத்த கட்டுரைக்கு