Published:Updated:

இந்தியாவில் உச்சம் தொடும் கொரோனா... பாதிக்கப்படும் உலக நாடுகள்!

வர்த்தகம்
வர்த்தகம்

வரும் ஆண்டுகளில் இரண்டு இலக்கப் பொருளாதார வளர்ச்சியை நிர்ணயித்த இந்தியப் பொருளாதார வல்லுநர்கள், அதை மறுபரிசீலனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். இந்தியாவின் இந்த நிலையால், உலகளவில் எந்தெந்த துறைகளில் பாதிப்பு ஏற்படும்?

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாட்டையே ஒட்டுமொத்தமாகப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவத் தொடங்கியபோது, தொற்றுப் பரவலைக்கட்டுப்படுத்த முழு ஊரடங்கு உலகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டது. ஆனால், அது பொருளாதார ரீதியில் பலத்த அடியைக் கொடுத்தது.

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்குச் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், உலக நாடுகள் சில இயல்பு நிலைக்குத் தற்போது திரும்பியிருக்கின்றன; எனவே அவற்றின் பொருளாதாரமும் ஓரளவு சீரடையத் தொடங்கியிருக்கிறது.

கொரோனா டெஸ்ட்
கொரோனா டெஸ்ட்

ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான இந்தியா, கொரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த தடுமாறிக் கொண்டிருக்கிறது. தொற்றுகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து மோசமடைந்துவரும் நிலையில், மீண்டும் ஒரு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். என்றபோதிலும், நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் தற்போது முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி தேக்கமடைந்திருக்கிறது.

குறையும் பொருளாதார வளர்ச்சி... முனைப்புடன் செயல்பட வேண்டிய நேரமிது!

கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் தாக்கத்திலிருந்தே இந்தியப் பொருளாதாரம் இன்னும் மீளாத நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் இந்தியாவை நிலைகுலையச் செய்திருப்பது சர்வதேச வர்த்தகத்தில் பெரும் நெருக்கடியை இப்போது உருவாக்கியிருக்கிறது.

வரும் ஆண்டுகளில் இரண்டு இலக்கப் பொருளாதார வளர்ச்சியை நிர்ணயித்த இந்தியப் பொருளாதார வல்லுநர்கள், அதை மறுபரிசீலனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். இந்தியாவின் இந்த நிலையால், உலகளவில் எந்தெந்த துறைகளில் பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.

விநியோகச் சங்கிலி
விநியோகச் சங்கிலி

விநியோகச் சங்கிலி!

அளவின் அடிப்படையில் பார்க்கும்போது, உலக வர்த்தகத்தின் 80 சதவிகித சரக்குகள் கப்பல்கள் மூலமாகவே உலகமெங்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன. ‘சப்ளை செயின்’ எனப்படும் விநியோகச் சங்கிலி முறையால் இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய உலகுக்கு, மூலப் பொருள்களையும் உள்ளடக்கிய இந்தச் சரக்குகள் உலக நாடுகளுக்குக் கப்பல்களில் கொண்டுசெல்லப்படுகின்றன.

ஒட்டுமொத்தமாகச் சுமார் 10 லட்சம் பேர் பணிபுரியும் இந்தத் துறையில் இந்தியர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 2 லட்சம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். அதிகாரி நிலையிலும், திறன் சார்ந்த முக்கியப் பணிகளிலும் இந்தியர்கள் பெருவாரியாக இருக்கின்றனர்.

இந்தியாவில் இரண்டாவது அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டிருப்பதால், உலக நாடுகள் பல இந்தியாவுடனான விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், சீனா மற்றும் ஹாங்காங் ஆகியவை இந்தியத் துறைமுகங்களிலிருந்து வரும் கப்பல்களுக்கு ஏற்கெனவே கடுமையான தனிமைப்படுத்துதல் விதிகளை அமல்படுத்தியிருக்கின்றன.

இதனால், இந்தியாவைச் சேர்ந்த கப்பல் பணியாளர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. இந்தியர்கள் அதிகம் பணியில் இருக்கும் இந்தத் துறையில் இத்தகைய சூழல் கடும் நெருக்கடியை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையை எதிர்கொள்ளக் கப்பல் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்பது ஒரு தீர்வாக முன்வைக்கப்படுகிறது; ஆனால், அது நடைமுறையில் மிகக் கடினமான ஒன்று!

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

தடுப்பூசியும் மருந்துகளும்!

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி மையமான சீரம் நிறுவனம் இந்தியாவில் அமைந்திருக்கிறது. உலகளவில் விநியோகத்தில் இருக்கும் அனைத்து கொரோனா தடுப்பூசிகளில் 60 சதவிகிதத்துக்கும் மேலாக இந்தியாதான் உற்பத்தி செய்கிறது.

ஏறக்குறைய 92 நாடுகளுக்கு 20 கோடி கோவிட் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து தருவதாக சீரம் நிறுவனம் கடந்த ஆண்டு ஒப்புக்கொண்டிருந்தது. ஆனால், இந்தியாவின் மக்கள்தொகையில் வெறும் 2 சதவிகித்ததினர் மட்டுமே இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் சீரம் நிறுவனமும், இந்திய அரசும் மற்ற நாடுகளுக்கு உற்பத்தி செய்யும் நிலையிலிருந்து தற்போது இந்தியாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கியுள்ளன.

இது ஏற்கெனவே சிக்கலில் உள்ள உலக தடுப்பூசிச் செயல்பாட்டை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் என்று அஞ்சப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி சந்தேகங்களும் விளக்கங்களும்...

கோவிட் தடுப்பூசி பற்றாக்குறை ஒருபுறம் இருக்க, உலகம் முழுவதும் உள்ள மருந்து நிறுவனங்களும் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையால் கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயம் உருவாகியிருக்கிறது.

இந்தியாதான் உலகின் மிகப்பெரிய ஜெனரிக் மருந்து உற்பத்தியாளர். அமெரிக்காவில் அனைத்து மருந்துப் பரிந்துரைகளிலும் 90 சதவிகிதம் ஜெனரிக் மருந்துகள் என்றும், அவற்றில் எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகளில் மூன்றில் ஒன்று இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஜெனரிக் மருந்து என்கிறது ஓர் ஆய்வு.

ஜெனரிக் மருந்து
ஜெனரிக் மருந்து

ஒரு மருந்தையோ மாத்திரையையோ அதன் மூலப்பொருள்களின் வேதியியல் பெயரால் அழைப்பது ‘ஜெனரிக்'. ஒரு மருந்து நிறுவனம் புதிதாக ஒரு மருந்தைக் கண்டுபிடித்தால், முதல் 20 ஆண்டுகளுக்கு அந்த நிறுவனம் மட்டுமே அதை விற்பனை செய்யமுடியும். இதைக் ‘காப்புரிமைக் காலம்’ என்று சொல்லலாம். காப்புரிமைக் காலம் முடிந்தபிறகு அது எல்லோருக்கும் பொதுவானதாகிவிடும். பிறகு அதை எந்த மருந்து நிறுவனம் வேண்டுமானாலும் தயாரித்து விற்பனை செய்யலாம். அப்படி விற்கப்படும் மருந்துகளையே ‘ஜெனரிக் மருந்துகள்’ என்கிறோம்.

காப்புரிமைக் காலம் முடிந்தபின்னர், அந்த மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட பெயர்களைச் சூட்டிக்கொள்வார்கள். 'பாராசிட்டமால்' என்பது ஜெனரிக் பெயர். அதுவே தயாரிக்கும் நிறுவனங்களைப் பொறுத்து, கால்பால், குரோசின், டோலோ, மெட்டாசின் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

ஜெனரிக் மருந்து உற்பத்தியில் இந்தியா உலகின் முன்னணி நாடாக இருந்தாலும், அதைத் தயாரிப்பதற்கான மூலப் பொருள்களில் 70 சதவிகிதம் சீனாவிடம் இருந்தே பெறப்படுகிறது. ‘சப்ளை செயின்’ எனப்படும் விநியோகச் சங்கிலி கொரோனாவால் நெருக்கடியைச் சந்தித்திருக்கும் இந்தச் சூழலில் ஜெனரிக் மருந்து தயாரிப்பில் இந்தியா பின்னடவை சந்திக்கும் என்று அஞ்சப்படுகிறது.

ஆடைகள்!

உலகின் முன்னணி ஆடை ஏற்றுமதியாளரான இந்தியா, தற்போதைய சூழலில் அந்தத் துறையில் தொழிலாளர் பற்றாக்குறையைக் கடுமையாக எதிர்கொண்டுவருகிறது.

டெல்லி, பெங்களூரு போன்ற இந்தியாவின் முக்கிய ஆடை உற்பத்தி நகரங்களில் கொரோனா மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதால், 50 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் பணிக்கு வரவில்லை. கடந்த ஆண்டு ஏற்பட்ட பின்னடைவிலிருந்தே இன்னும் மீளாத நிலையில், தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லாத சூழலில் ஆடை உற்பத்தித் துறை பெரும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களின் கொள்முதலும், ஏற்றுமதிகளும் முறையே 30 மற்றும் 24 சதவிகிதம் கடந்த ஆண்டு குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆடைகள்
ஆடைகள்

பொருளாதார சேவைகள்!

இந்தியாவில் சுமார் 44 லட்சம் பேர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக நடைமுறை மேலாண்மைத் துறையில் பணியாற்றுகின்றனர். கடந்த சில பத்தாண்டுகளாக வெளிநாட்டு நிறுவனங்கள் குறைந்த கூலியைக் கருத்தில்கொண்டு ஏராளமான இந்தியர்களைப் பணிக்கு எடுத்தது.

இந்த நிலையில், பெரிய வங்கிகளும், வணிக நிறுவனங்களும் தங்கள் இணையச் செயல்பாடுகள் மற்றும் சேவைகளுக்குப் பெரிதும் இந்தியாவையே நம்பியிருக்கின்றனர்.

பொருளாதாரம்
பொருளாதாரம்

கோல்டுமேன் சாக்ஸ், வெல்ஸ் ஃபார்கோ போன்ற நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தியிருக்கின்றன. என்றபோதிலும், இந்தியப் பணியாளர்களுக்கு இந்தச் சமயத்தில் வீட்டிலிருந்து பணியாற்றுவது என்பது மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

பணியாளர்களின் குடும்பத்தினர் யாரேனும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது, நிறுவனம் சார்ந்த தரவுகள், கோப்புகள் ஆகியவற்றின் பாதுகாப்பு போன்ற நடைமுறைச் சிக்கல்களை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.

இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கு வேறு நாடுகளுக்குப் பணியை மாற்றுவது, வீட்டிலிருந்தே பணியாற்றுவது, திட்டங்களில் காலத்தை நீட்டிப்பது போன்ற நடவடிக்கைகளை நிறுவனங்கள் முடுக்கிவிட்டுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு