Published:Updated:

ஊழிக்காலம் - 13 | காலநிலை மாற்றத்துக்கான சர்வதேச ஒப்பந்தங்கள் சொல்வது என்ன?

ஊழிக்காலம் | சர்வதேச ஒப்பந்தங்கள்
ஊழிக்காலம் | சர்வதேச ஒப்பந்தங்கள்

பாரீஸ் ஒப்பந்தம் ஒரு முக்கியமான மைல்கல். சர்வதேச அரசியலில் காலநிலை மாற்றம் பற்றிய விவாதத்தைத் தொடங்கிவைத்ததில் இதற்குப் பெரிய ஒரு பங்கு உண்டு.

காலநிலை மாற்றம் என்பது உலகளாவிய அச்சுறுத்தல். காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தவும் அதை சரியான முறையில் எதிர்கொள்ளவும் எல்லா நாடுகளும் இணைந்து செயல்படுவது அவசியம். "காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தொழில்நுட்பங்கள் நம்மிடம் போதுமான அளவுக்கு இருக்கிறது. நமக்குத் தேவை செயல்திட்டம்தான்" என்கிறார் அறிவியலாளர் ராபர்ட் வாட்ஸன்.

இன்னும் சொல்லப்போனால், உலக நாடுகள் அனைத்தும் ஒத்துழைத்து காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால், 2100க்குள் உலகப் பொருளாதாரத்திலேயே 600 ட்ரில்லியன் டாலர்வரை இழப்பு ஏற்படும் என்கிறது 2020ல் வெளியான ஒரு ஆய்வு! அதே நேரம் எல்லா நாடுகளும் இணைந்து செயல்பட்டால், உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் அது பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நன்மையாக முடியும்.

உலகளாவிய ஒத்துழைப்பு இருந்தால் மிகப்பெரிய சூழலியல் பிரச்னையாக இருந்தால்கூட அதை ஓரளவு சரிசெய்யலாம் என்பதற்கான மிகச்சிறந்த உதாரணம் 1987ல் உருவாக்கப்பட்ட மாண்ட்ரியால் ஒப்பந்தம் (Montreal Protocol). ஓசோன் படலத்தைக் காப்பாற்றுவதற்காக சில சர்வதேச விதிமுறைகளை இந்த ஒப்பந்தம் முன்வைத்தது. 2016 வரை இதில் ஆறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

Ozone Layer
Ozone Layer

சரியான முறையில் பொறுப்பைப் பகிர்ந்தளிப்பது, பிரச்னைகளுக்குத் தீர்வுகளை எட்டுவது, அறிவியல் ரீதியாகப் பிரச்னைகளை அணுகுவது என்று பல முனைகளில் மிகச்சிறப்பாக ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டது. ஓசோன் படலத்தில் சீர்குலைவு கண்டுபிடிக்கப்பட்டு சில வருடங்களிலேயே ஒப்பந்தம் வந்துவிட்டது என்பதும் ஒரு முக்கிய அம்சம். "சர்வதேச ஒப்பந்தங்களிலேயே மிகச்சிறப்பான வெற்றியை அடைந்த ஒரு ஒப்பந்தம் என்று இதைச் சொல்லலாம்" என்கிறார் கோஃபி அன்னான். உலக நாடுகள் அனைத்தும் இணைந்து செயல்பட்டதால், இப்போது அண்டார்டிக் பகுதியில் உள்ள ஓசோன் படலம் மீண்டு வரத்தொடங்கிவிட்டது.

மாண்ட்ரியால் ஒப்பந்தம் உண்மையில் பல சூழலியலாளர்களுக்கு ஒரு நம்பிக்கையை அளித்தது. அதைப் போலவே காலநிலை மாற்றத்தையும் எதிர்கொள்ளலாம் என்ற ஒரு மனப்பான்மையில் சர்வதேச மாநாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றத்துக்கான மாநாட்டுக் கட்டமைப்பு (United Nations Framework Convention on Climate Change) இதில் முக்கியமானது. 1992ல் இது உருவாக்கப்பட்டது. வருடாவருடம் உறுப்பினர் மாநாடு (Conference of Parties - COP) நடைபெற வேண்டும் என்ற ஒரு விதிமுறையோடு இந்தக் கட்டமைப்பு உருவானது. 2020ல் கொரோனா பெருந்தொற்று காரணமாக மாநாடு நடைபெறவில்லை.

1997ல் க்யோடோ ஒப்பந்தம் (Kyoto Protocol) ஒன்று உருவாக்கப்பட்டது. இது 2005ல் அமல்படுத்தப்பட்டது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் 1990ல் காணப்பட்ட கரிம உமிழ்வுகளை விட 5% குறைவாக உமிழ்வுகளை வெளியிட வேண்டும் என்று ஒப்பந்தம் வலியுறுத்தியது. ஆனால் இதில் ஒரு முக்கியப் பிரச்னை இருந்தது. அது எல்லா நாடுகளும் இதில் சேர்க்கப்படவில்லை என்பதுதான். வரலாற்று ரீதியாக அதிக உமிழ்வுகளுக்குக் காரணமாக இருந்த வளரும் நாடுகள் மட்டுமே ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டன. தவிர, ஒப்பந்தத்தை அமல்படுத்துவதிலும் பல சிக்கல்கள் இருந்தன.

Carbon Emission
Carbon Emission

காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டுக் அரசுக் குழு (Intergovernmental Panel for climate change) 1988ல் உருவாக்கப்பட்டது. காலநிலை மாற்றத்தின் காரணிகள், பாதிப்புகள், அதைக் கட்டுப்படுத்தும் முறை பற்றிய அறிவியல் அறிக்கைகளை அளிப்பது இந்தக் குழுவின் வேலை என்பதும் நிறுவப்பட்டது. உலகின் பல நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதில் இணைந்து அறிக்கை தயாரிப்பார்கள் என்று முடிவெடுக்கப்பட்டது.

இதற்கிடையில் காலநிலை மாற்றத்தை மறுப்பவர்களின் அரசியல், "நீதான் தப்பு, நான் பொறுப்பில்லை" என்பதுபோன்ற குற்றம்சாட்டல்கள், "சூழலியலாளர்கள் இப்படித்தான் பீதியைக் கிளப்புவாங்க" என்பதுபோன்ற அலட்சியங்களால் சில வருடங்கள் கழிந்தன.

2006ல் வெளியான ஒரு சர்வதேச அறிவியல் அறிக்கை, "காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால், ஒவ்வொரு வருடமும் உலகத்தின் மொத்த ஜி.டி.பியில் (Gross Domestic Product) 5% செலவழித்தால் மட்டுமே அதை எதிர்கொள்ளமுடியும். நிலைமை மோசமானால் 20% ஜி.டி.பி வரை செலவாகும்" என்று எச்சரித்தது.

கொஞ்சம் உலக நாடுகள் பயந்தன. சூழல், பேரிடர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கரிம உமிழ்வு என்பதுபோன்ற சொற்களுக்குப் பெரிதும் கவனம் தராத அரசுகள், ஜி.டி.பி பற்றிய ஆய்வு வந்த உடன் "இது பெரிய பிரச்னைதான் போல" என்று யோசித்தன. அப்போதும்கூட, "தீவு நாடுகள், வளர்ந்த நாடுகளே அதிகம் பாதிக்கப்படும்" என்கிற மனநிலை நிலவியது.

தன் ஐந்தாவது அறிக்கையை வெளியிட்ட பன்னாட்டு அரசுக் குழு, "காலநிலை மாற்றத்தால் உலகின் ஒவ்வொரு நாடும் பாதிக்கப்படும்" என்று 2014ல் அதிகாரபூர்வமாக அறிவித்தது. உலகமே ஆபத்தில் இருக்கிறது என்பது அதிகாரபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது.

அடுத்த வருடமே (2015) பாரீஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது. "புவியின் சராசரி வெப்பநிலை இரண்டு டிகிரி செல்சியஸைத் தாண்டி உயரக்கூடாது, 1.5 டிகிரி செல்சியஸுக்குக் கீழேதான் அதிகரிக்கவேண்டும்" என்பதை இலக்காக நிர்ணயித்தது பாரீஸ் ஒப்பந்தம். தங்களின் தொழில் நிலவரம், பொருளாதார சூழல் ஆகியவற்றைப் பொறுத்து, தங்களால் எந்த அளவுக்கு உமிழ்வுகளைக் கட்டுப்படுத்த முடியும் என்பதற்கு அந்தந்த நாடுகளே ஒரு இலக்கை நிர்ணயிக்க வேண்டும். ஐந்து வருடத்திற்கு ஒருமுறை இலக்கை மறுபடி ஆய்வு செய்து, இலக்கை அதிகரிக்கவேண்டும்.

Air Pollution
Air Pollution

நிகர பூஜ்ய உமிழ்வு (Net Zero Emission) கொண்டுவருவதற்கு நாடுகள் முயற்சி செய்யவேண்டும். வளர்ந்த நாடுகள் பிற நாடுகளுக்கு இலக்கை அடைவதில் பொருளாதார ரீதியாக உதவ வேண்டும். காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தொழில்நுட்ப வசதிகளில் சர்வதேச ஒத்துழைப்பு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் கட்டமைப்புகள் ஆகிய பலவற்றையும் பாரீஸ் ஒப்பந்தம் முன்வைத்தது.

இப்போதைக்கு இதில் 190 நாடுகள் கையெழுத்திட்டு அதைப் பின்பற்றி வருகின்றன. நவம்பர் 2020ல் அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவைப் பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து விலக்கிக் கொண்டார். பிப்ரவரி 2021ல் ஜோ பைடன் அமெரிக்க அதிபரானபின்னர், பாரீஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைவதற்கான அறிக்கையில் கையெழுத்திட்டார்.

பாரீஸ் ஒப்பந்தம் ஏன் முக்கியமானது?

காலநிலை மாற்றத்தின் அச்சுறுத்தல் மனித செயல்பாடுகளால் ஏற்பட்டது என்கிற அறிவியல் அடிப்படையை அது முன்வைக்கிறது.

காலநிலை மாற்றம் ஒரு உலகளாவிய அச்சுறுத்தல் என்று அது உறுதிப்படுத்துகிறது.

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உலகளாவிய ஒத்துழைப்பு தேவை என்பதை அடிப்படையாகக் கொண்டு அது உருவாக்கப்பட்டிருக்கிறது.

பாரீஸ் ஒப்பந்தத்தில் சிக்கல்களே இல்லை என்று சொல்லிவிட முடியாது. பல நாடுகள் தங்கள் இலக்கை அடைய முயற்சிகளை எடுக்கவில்லை, அவ்வப்போது சுணக்கம் காட்டுகின்றன. இலக்கை நிர்ணயிப்பதிலும் சர்வதேச அரசியல் வேற்றுமைகளின் தாக்கம் இருக்கிறது. இப்போது இருக்கும் நிலைமையைப் பார்த்தால் 2100க்குள் நிச்சயம் புவியின் சராசரி வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸாவது உயரும். ஆகவே பாரீஸ் ஒப்பந்தம் முழுமையாக வெற்றியடைந்திருக்கிறது என்று சொல்லிவிடமுடியாதுதான்.

Global Warming
Global Warming

ஆனால், பாரீஸ் ஒப்பந்தம் ஒரு முக்கியமான மைல்கல். சர்வதேச அரசியலில் காலநிலை மாற்றம் பற்றிய விவாதத்தைத் தொடங்கிவைத்ததில் இதற்குப் பெரிய ஒரு பங்கு உண்டு. குறைவான கரிம உமிழ்வுகளை வெளியேற்றும் தொழில்நுட்பங்கள், புதிய சந்தைக் கட்டமைப்புகள், சூழலியலைப் பாதுகாக்கும் சட்டங்கள் ஆகியவற்றை நோக்கி உலகம் கொஞ்சமாவது நகரத் தொடங்கியிருக்கிறது. காலநிலை நீதி (Climate justice), வளரும் நாடுகள் மீதான வளர்ந்த நாடுகளின் பொறுப்புணர்வு ஆகியவை உலக அளவில் பேசப்ப்படுகின்றன. தீவு நாடுகளுகளின் குரலைப் பதிவு செய்யும் களங்களாக சர்வதேச ஒப்பந்த மாநாடுகள் உருவாகியிருக்கின்றன. இவை எல்லாமே ஆரோக்கியமான போக்குகள். இன்னும் சில கறார் விதிமுறைகள், புதிய ஒப்பந்தங்கள் ஆகியவற்றின்மூலம் ஒத்துழைப்பின் விகிதத்தை அதிகப்படுத்தமுடியும்.

சர்வதேச ஒப்பந்தங்கள் இருந்தும் ஏன் நாடுகளுக்கிடையே முரண்கள் ஏற்படுகின்றன? உலகத்துக்கே அச்சுறுத்தல் என்று தெரிந்த பின்னும் நாடுகள் ஏன் இணைந்து செயல்படுவதில்லை? இதில் சர்வதேச அரசியலின் குறுக்கீடு இருக்கிறது என்கிறார்களே அது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

- Warming Up...

அடுத்த கட்டுரைக்கு