Published:Updated:

இத்தாலி வழக்கு: பறிபோகிறதா, ஆழ்கடல் மீன்பிடி உரிமை?

பரிதவிக்கும் இந்திய மீனவர்கள்!

பிரீமியம் ஸ்டோரி

ர்வதேச கடல் எல்லையை வரையறை செய்வது தொடர்பாக, இந்தியா - இத்தாலி இடையே நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நடுவர் மன்றத் தீர்ப்பாயத்தில் வழக்கு நடந்துவருகிறது. ஜூலை 20-ம் தேதி இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை முடிந்திருக்கும் நிலையில், இந்தியாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதுடன், ஆழ்கடல் மீன்பிடித் தொழில் முழுமையாக பாதிக்கப்படும் என்று அஞ்சுகிறார்கள் மீனவர்கள்.

2012-ம் வருடம் கேரளத்தின் ஆலப்புழா கடலோரப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள்மீது, இத்தாலி நாட்டுக்குச் சொந்தமான `என்ரிகா லெக்ஸி’ என்ற சரக்குக் கப்பலில் சென்றவர்கள் துப்பாக்கியால் சுட்டார்கள். இதில் அஜேஷ் பிங்கி, வாலண்டைன் ஆகிய இரு தமிழக மீனவர்கள் உயிரிழந்தனர்.

இத்தாலி வழக்கு: பறிபோகிறதா, ஆழ்கடல் மீன்பிடி உரிமை?

இது தொடர்பாக கப்பலில் இருந்த மாஸிமிலியானோ லத்தோர், சல்வடோர் ஜிரோன் ஆகியோர் கேரள போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம், 20.5 கடல் மைல் தொலைவில் நடந்தது. இந்த விவகாரத்தில் 200 கடல் மைல் (நாட்டிகல்) தொலைவு வரையிலும் உள்ள கடல் பகுதி இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக இந்திய அரசு தெரிவித்தது. ஆனால், ‘12 கடல் மைல் தொலைவு மட்டுமே இந்தியாவுக்குச் சொந்தம்; சம்பவம் நடந்த பகுதி சர்வதேச கடல் எல்லைக்கு உட்பட்டது. இதனால், இந்தியா நடவடிக்கை எடுக்க முடியாது’ என்று இத்தாலிய அரசு வாதிட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இத்தாலி அரசின் இந்தக் கோரிக்கையை நிராகரித்த கேரள உயர் நீதிமன்றம், ‘200 கடல் மைல் வரையிலும் உள்ள பகுதி, பிரத்யேக பொருளாதார மண்டலம். அதுவும் இந்தியாவுக்குச் சொந்தமானதுதான்’ என்று உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தில் நடந்த மேல்முறையீட்டிலும் ‘இந்திய இறையாண்மையில் இத்தாலி தலையிட முடியாது’ என்று உத்தரவிடப்பட்டது. அதனால் இந்த வழக்கை 2015-ம் ஆண்டு சர்வதேச தீர்ப்பாயத்துக்குக் கொண்டு சென்றது இத்தாலிய அரசு. அங்கு ஜூலை 8-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையிலும் இறுதிக்கட்ட விசாரணை நடந்து முடிந்து, விரைவில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

இந்த விவகாரம் பற்றிப் பேசிய, தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச் செயலாளரான ஃபாதர் சர்ச்சில், “200 கடல் மைல் வரையிலும் இந்திய இறையாண்மைக்கு உட்பட்ட பகுதி. அங்கு மீன் பிடித்துக்கொண்டிருந்த இருவரின்மீது அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்திக் கொன்றது கிரிமினல் குற்றம். இதுகுறித்து நமது விசாரணை அமைப்புகள் விசாரிக்க வேண்டுமே தவிர, சர்வதேச விசாரணைக்கே அனுமதித்திருக்கக் கூடாது.

தற்போது நெதர்லாந்தில் நடந்த விசாரணையில் இத்தாலி தரப்பில், ‘சம்பவம் நடந்த இடம் இந்தியாவுக்குச் சொந்தமானதல்ல’ என வாதிட்டுள்ளனர். இந்தியத் தரப்பில் இதை எதிர்த்து வாதிட்டபோதிலும், ஒருவேளை நமக்கு பாதகமாகத் தீர்ப்பு வந்தால், 12 கடல் மைல் வரை மட்டுமே நமக்கு உரிமையாக இருக்கும். அதன் பின்பு, நம் கடல் எல்லைக்குள் 12 கடல் மைல் தூரம் வரை உள்ளே வந்து சர்வதேச கப்பல்கள் மீன் பிடிக்கும். சர்வதேச கப்பல்கள், ஐந்தாயிரம் வாட்ஸ் மின்விளக்கு வெளிச்சத்தை கடலில் காட்டி மீன்களை வரவழைத்து வாரிச்சுருட்டும். அதனால் நமது பாரம்பர்ய மீனவர்கள் மற்றும் ஆழ்கடல் மீனவர்களுக்கு மீன் கிடைக்காமல்போகும்.

அத்துடன் 12 கடல் மைல் தொலைவுக்கு மட்டுமே நம்மால் கண்காணிக்க முடியும் என்பதால், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும். ஏற்கெனவே கச்சத்தீவைத் தாரை வார்த்ததால் ஏற்பட்ட பாதிப்பின் கொடுமையை நாள்தோறும் அனுபவித்து வரும் மீனவர்களுக்கு சர்வதேச தீர்ப்பாயத்தின் மூலமாகக் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது’’ என்றார்.

நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் இந்த விவகாரம் குறித்து, மத்திய அரசு வெளிப்படையாக விவாதிக்க வேண்டியது அவசியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு