Published:Updated:

`நெக்ஸ்ட் பூட்டான்' - சீன டிராகன் பின்வாங்குகிறதா, பாய்வதற்காகப் பதுங்குகிறதா?

பூட்டானுடன் சீனா நடத்தும் இந்த புதிய எல்லைப் பிரச்னைக்குக் காரணமே வேறு என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இதன் மூலம் இந்திய மாநிலமான அருணாசலப் பிரதேசத்தின் மீது ஒரு கண் வைக்கிறது சீனா என்கிறார்கள்.

எல்லைப் பிரச்னையில் சீனாவும் இந்தியாவும் கபடி ஆடிக்கொண்டிருக்கின்றன. சமீபத்தில், சீனா இந்திய எல்லையில் காலடி வைத்ததாகச் செய்திகள் வெளியாகின. அந்த பரபரப்பை உறுதிப்படுத்தும்படி இந்திய வீரர்கள் சண்டையில் உயிரிழந்தார்கள். ஆனால், பிரதமர் மோடி சீனா நம் எல்லைக்குள் வரவில்லை என்றார். காயமடைந்த வீரர்களை நேரில் சென்று சந்தித்தார். இடையில், சீனாவைச் சேர்ந்த நிறுவனங்களின் 59 ஆப்களை இந்தியா தடை செய்தது. இந்தச் சூழலில் இரு நாட்டின் ராணுவ உயரதிகாரிகளும் பேசி, பதற்ற நிலை குறைய நடவடிக்கை எடுப்பதாக முடிவு செய்யப்பட்டது.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

அதன்படி சீனா தன் ராணுவத்தை கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில், முக்கியமான மூன்று இடங்களில் 1 முதல் 1.5 கிமீ வரை இப்போது பின் வாங்கியிருக்கிறது எனச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தியாவும் அதே நேரத்தில் அந்தப் பகுதிகளில் சற்று பின்வாங்கியிருப்பதாகத் தெரிகிறது. ஞாயிறு அன்று, இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோரிடையே நடந்த பேச்சுவார்த்தையில், பதற்றத்தைக் குறைக்க இரு நாடுகளும் பஃபர் சோன் (Buffer Zone) எனப்படும் அமைதியான இடையாகப் பகுதியை நிலைநிறுத்த முடிவு செய்ததாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே இரு நாட்டுப் படைகளும் இப்போது பின்வாங்கி இருக்கின்றன என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் 38,000 சதுர கி.மீட்டர் இடத்தை உரிமை கொண்டாடுகிறது. அதேபோல சீனா இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் 90,000 சதுர கிமீட்டர் இடத்தை உரிமை கொண்டாடுகிறது. மிக நீண்ட இந்த எல்லைப் பகுதியில் சில இடங்களில் மட்டுமே படைகள் பின்வாங்கியிருக்கின்றன. ஆனால், எல்லையில் முக்கியத்துவம் வாய்ந்த பாங்கொங் ட்ஸோ மற்றும் டெப்சாங் சமவெளிப் பகுதிகளில் படைகள் பின்வாங்கவில்லை. ஜூன் மாதத் தொடக்கத்திலிருந்தே இரு நாடுகள் பேச்சுவார்த்தையில் இருந்தாலும், சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு எல்லையில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே இந்தப் பேச்சுவார்த்தைகள் பெரிதாகப் பலனளிப்பதாக இல்லை என அரசியல் பார்வையாளர்கள் கணிக்கிறார்கள்.

China
China

பல ஆண்டுகள் தொடரும் பிரச்னை என்றாலும், திடீரென சீனா இந்தியா எல்லைகளில் இப்படி சச்சரவு தொடர்வதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன.

1. கோவிட்-19 பிரச்சனையால் எல்லா நாடுகளின் கவனமும் வேறு பக்கம் இருக்கும்போது சீனா தன்னுடைய எல்லை விரிவாக்கத்தில் கவனம் செலுத்துகிறது.

2. இந்தியா தன்னுடைய எல்லைகளில் ராணுவ கட்டுமானத்தைப் பலப்படுத்தி வருகிறது. சீனா இதை விரும்பவில்லை.

3. இந்தியா ஜம்மு-காஷ்மீர் பகுதியின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி, அதை மத்திய அரசின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததால், அந்த பகுதியில் அதிக பலமும், அதிகாரமும் இந்திய அரசுக்குக் கிடைத்திருக்கிறது, இதைச் சீனா ஆபத்தாகப் பார்க்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படி, பல காரணங்களை நாம் பட்டியலிட மட்டுமே முடியும். சிதம்பர ரகசியத்தைக்கூட நாம் அறிந்துகொள்ள முடியும். ஆனால், சீனா என்ன நினைக்கிறது, என்ன செய்கிறது என அறிந்துகொள்வது முடியாது. சமீபத்திய இந்திய-சீன மோதலில் எத்தனை சீன வீரர்கள் மரணித்தனர் என்ற எண்ணிக்கையைக்கூட வெளியிடாமல்தான் வைத்திருக்கிறது சீன அரசு. அப்படித் தன் நாட்டு மக்களிடமேகூட வெளிப்படைத்தன்மை இல்லாத நாடுதான் சீனா. எனவே, சீனா பின்வாங்கவே செய்தாலும் நாம் இன்னும் ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டியிருக்கிறது. காரணம், சீனா ஒருபக்கம் பின்வாங்கலாம். ஆனால் மறுபக்கம் முன்னேறித் தாக்க முற்படலாம்.

1962 முதல் 2020 வரை இந்தியா - சீனா எல்லையில் என்ன நடந்தது? ஒரு விரிவான அலசல்!

இந்திய எல்லைகளிலிருந்து மெதுவாகப் பின்வாங்கிக் கொண்டிருக்கும் அதே சமயம் இன்னொரு எல்லைப் பிரச்னையைக் கையிலெடுத்திருக்கிறது சீனா. பூட்டானுக்கும் சீனாவுக்கும் இடையேயும் பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்னை இருக்கிறது. 2017-ம் ஆண்டு நடைபெற்ற டோக்லாம் விவகாரமும் பூட்டானுக்கு ஆதரவாக, சீனாவிடம் இருந்து அதன் எல்லைகளைக் காக்க இந்தியா உதவியதே ஆகும்.

இப்போது பிரச்னைக்குள்ளாகியிருக்கும் பகுதியைத் தெற்கு திபெத் என்கிறது சீனா. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் "சீனாவுக்கும் பூட்டானுக்கும் கிழக்கு, மத்திய மற்றும் மேற்குப் பகுதி எல்லைகளில் இருக்கும் பிரச்னை பல ஆண்டுகளாக நீடிக்கிறது. இதில் மூன்றாவது நாடு எந்தக் கருத்தையும் சொல்லத் தேவையில்லை” எனச் சொல்லியிருக்கிறார்.

பூட்டானுடன் சீனா நடத்தும் இந்தப் புதிய எல்லைப் பிரச்னைக்குக் காரணமே வேறு என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இதன் மூலம் இந்திய மாநிலமான அருணாசலப் பிரதேசத்தின் மீது ஒரு கண் வைக்கிறது சீனா என்கிறார்கள். இந்நிலையில், இந்தியா சீனா இடையேயான எல்லை விவகாரத்தைத் தீர்க்க தொடர்ந்து நடக்கும் பேச்சுவார்த்தைகளைப் பற்றி இருநாடுகளின் அறிக்கைகளும் பல்வேறு வித்தியாசங்களுடன் இருக்கின்றன. அஜித் தோவல் தன்னுடைய அறிக்கையில், "இரு நாடுகளும் அமைதியை நிலைநாட்ட முயற்சி செய்ய வேண்டும். படிப்படியாகப் படைகளைத் திரும்பப்பெற்று பதற்றத்தைக் குறைக்க வேண்டும்" எனச் சொல்கிறார்.

அதேசமயம் சீனாவின் வாங் யி, "சமீபத்திய மோதலில் யார் மீது தவறு என்பது தெளிவாக இருக்கிறது. அமைதியை நிலைநாட்டும் அதே வேளையில் சீனா தன்னுடைய எல்லைகளைப் பாதுகாக்கும்" எனக் கூறியிருக்கிறார். சீனாவின் அறிக்கை, ஜூன் 15 மோதலுக்கு இந்தியாவின் மீது பழி சொல்கிறது. அதுமட்டுமன்றி, சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் உரிமையை நிலைநாட்டத் தொடர்ந்து சீனா போராடும் எனவும் இந்த விஷயத்தில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை எனவும் தெளிவாகச் சொல்கிறது.

Xi Jinping and Narendra Modi
Xi Jinping and Narendra Modi
Photo: AP

1950-களில் நேரு - சௌ என்லாய் தொடங்கி இன்று மோடி - ஜி ஜின்பிங் வரை தொடர்ந்து இரு நாடுகளின் நல்லுறவுக்காகப் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. ஆனால், வீரர்களின் உயிரிழப்புகள் அந்த முயற்சிகள் பயனற்று போனதையே காட்டுகின்றன. எல்லைகளின் உரிமையைவிட, இனியும் ஒரு உயிரும் இப்படியான மோதல்களில் போகக் கூடாது என்பதே இரு நாடுகளின் பேச்சுவார்த்தையின் மையப் புள்ளியாக இருக்க வேண்டும். சீனா அதற்கு வெளிப்படையாக இருக்க வேண்டும். இந்தியா சற்று சாமர்த்தியமாகச் சீனாவைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு