Published:Updated:

இந்தியா - சீனா நட்புறவு நாடகம்... இந்தியாவின் ஏக்கமும் சீனாவின் துரோகமும்!

இந்தியா-சீனா
News
இந்தியா-சீனா ( AP )

சீனா ஒருபுறம் நல்லுறவை வளர்க்கும் பேச்சு வார்த்தைகளைச் செய்து கொண்டே, மறுபுறம் தன் படைகளை இந்தியாவை நோக்கி முன்நகர்த்துகிறது. இந்தியா சீனாவைக் கையாளும் விதத்தை மாற்றுவது அவசியம் என்பதற்கு இருநாடுகளின் சமீபத்திய உறவுநிலையைச் சற்று ஆராய்ந்தால் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.

இந்தியாவை எல்லா பக்கங்களிலும் இன்னல்கள் சூழ்ந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக, தலையாய பிரச்னையாக மாறியிருக்கிறது இந்தியா - சீனா இடையேயான போர் பதற்றம். இரு நாட்டு அதிகாரிகளும் சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் பதற்றத்தைக் குறைப்பது, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவது, பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியை நிலைநாட்டுவது என ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால், கல்வான் பள்ளத்தாக்கில் சீனப் படைகள் குவிக்கப்படுவதாக சாட்டிலைட் புகைப்படங்கள் காட்டிக் கொடுக்கின்றன.

சீனாவுடன் நட்பைப் பலப்படுத்தி இந்த எல்லை பிரச்னையைத் தீர்க்கலாம் என்று தொடர் முயற்சி செய்கிறது இந்தியா. ஆனால், சீனாவோ ஒருபுறம் சுமுகமான நல்லுறவை வளர்க்கும் பேச்சு வார்த்தைகளைச் செய்துகொண்டே, மறுபுறம் தன் படைகளை இந்தியாவை நோக்கி முன்நகர்த்துகிறது. இந்தியா சீனாவைக் கையாளும் விதத்தை மாற்றுவது அவசியம் என்பதற்கு இருநாடுகளின் சமீபத்திய உறவுநிலையைச் சற்று ஆராய்ந்தால் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

இந்தியா அதன் எல்லைகளில் சீனா, பாகிஸ்தான் என இரு முனை ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறது. ஒரே நேரத்தில் இரு நாடுகளும் தாக்கத் தொடங்கினால், இந்தியா அதைச் சமாளிப்பது கடினம். அதற்காகத்தான், ஆண்டாண்டு காலமாக சமாதானப் பேச்சுவார்த்தைகளை நம்பி இருக்கிறது இந்தியா. 1999-ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது. பாகிஸ்தானிடம் நல்லுறவை வளர்க்க முயற்சி செய்தார். டெல்லியிலிருந்து லாகூர் வரை புதிய பேருந்து வசதிகளை ஏற்படுத்தி, அதன் முதல் பயணத்தில் பாகிஸ்தான் சென்று நட்பு பாராட்டினார். ஆனால் அதே, ஆண்டு பாகிஸ்தான் இந்தியாவுக்கு அளித்த பரிசு கார்கில் போர். இது ஒரு உதாரணம் மட்டுமே. இப்படி பலமுறை பாகிஸ்தான் இந்தியாவின் சமாதான முயற்சிகளை மீறி பகைமை பாராட்டியிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நிகழ்காலத்தில், மோடியின் மத்திய பா.ஜ.க அரசு இந்த நட்பு பாராட்டுதலைச் சீனாவிடம் மேற்கொள்ள முயற்சி செய்தது. ஆனால், சீனாவும் தொடர்ந்து இந்தியாவை வஞ்சித்து வருகிறது.

உதாரணம் 1: 2014-ம் ஆண்டு, பிரதமர் ஆனதும் முதல்முறையாகச் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க இருந்தார் மோடி. இந்தச் சந்திப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், தெற்கு லடாக்கில் சுமர் (Chumar) பகுதியில் சீனப்படை ஊடுருவி அங்கு தற்காலிகமான சாலைகளை அமைத்தனர். இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு முடிந்தது. ஆனால், சில வாரங்களுக்குப் பிறகு இந்தியா அப்பகுதியில் அமைத்திருந்த எல்லை பாதுகாப்பு இடுகைகளை (Defensive Fortifications) நீக்குவதாக ஒப்புக்கொண்ட பிறகு பின்வாங்கியது சீனா.
உதாரணம் 2: டோக்லாம் விவகாரம்- 2017-ம் ஆண்டு இந்தியா பூட்டானுக்கு ஆதரவாக, டோக்லாம் பகுதியில் சீனா நுழையாமல் தடுத்து வெற்றிகொண்டது. ஆனால், அந்த விவகாரம் முடிவுக்கு வந்த பிறகும் சீனா அமைதியுறவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் படிப்படியாகத் தன்னுடைய பலத்தை அதிகரித்து. அப்பகுதியில் நிரந்தர ராணுவக் கட்டுமானங்களை நிறுவியது. இதை இந்தியாவும் பூட்டானும் வேடிக்கை மட்டுமே பார்க்க, இன்று டோக்லாமில் கணிசமான பகுதி சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதே காலகட்டத்தில், இந்தியாவுடன் சீனா நட்பு பாராட்டிவந்தது நாம் அறிந்ததே.

சீனா இந்தியாவின் வர்த்தக உறவைப் பலப்படுத்திக்கொள்ள ஒருபுறம் நண்பனாக நெருங்கி வரும் அதே வேளையில், தன்னுடைய எல்லைகளை விரிவுபடுத்த எதிரியாகவும் செயல்படத் தயங்குவதில்லை. ஆனால், இந்தியாவோ எப்படியாவது சீனாவை மகிழ்வடையச் செய்து நட்பு பாராட்டி, எல்லைப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்ற வண்ணம் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சீனாவுக்கு இந்தியாவிலிருந்து கிடைக்கும் வர்த்தக லாபம் இரண்டு மடங்காக உயர்ந்து, தற்போது வருடத்துக்கு, சுமார் 60 பில்லியன் டாலராக இருக்கிறது. 2015-ம் ஆண்டு மோடியின் சீனப் பயணத்தில், மேலும் பல சீன ஆதரவு முடிவுகள் எடுக்கப்பட்டன. சீன சுற்றுலாப் பயணிகள் இந்தியா வருவதற்கு எலக்ட்ரானிக் விசா முதல், சீன நிறுவனங்கள் இந்தியா சந்தையைப் பயன்படுத்துவதற்கு உரிமம் வரை அனைத்தும் எளிதாகக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டன.

 தலாய் லாமா
தலாய் லாமா

2018-ம் ஆண்டு, சீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்ட இந்தியா, திபெத்தின் தலாய் லாமா உடன் அதிகாரபூர்வமான தொடர்பை நிறுத்தியது. மோடி- ஜி ஜின்பிங் ஒவ்வோர் ஆண்டும் நட்பு ரீதியாக முறைசாரா சந்திப்புகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி 2018-ல் சீனாவின் வுகான் நகரிலும், 2019-ம் ஆண்டு இந்தியாவில் மாமல்லபுரத்திலும் இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்து நட்பு பாராட்டினர். ஆனால், சீனா எல்லை விவகாரத்தில் என்றுமே நண்பனாக இல்லை, இருக்கப் போவதுமில்லை என்று மீண்டும் நிரூபித்துவிட்டது. சீனாவுக்குத் தேவையெல்லாம் இந்தியாவுடனான வர்த்தக உறவு மட்டுமே. சீனாவுடன் கைகுலுக்க இந்தியா எவ்வளவு ஏங்கினாலும் நயவஞ்சகமாகத் துரோகம் இழைக்கிறது சீனா. இந்தியா இதைப் புரிந்துகொண்டு, சீனாவைக் கையாள்வதில் தன்னுடைய போக்கை மாற்றிக்கொள்வது அவசியம். அதற்கு மற்றுமொரு உதாரணமாகத்தான் சமகால நிகழ்வுகள் இருக்கின்றன.

கடந்த வாரம் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதல், சர்வதேச அளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஒட்டுமொத்த உலகமும், இந்த இரு நாடுகளையும் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாகத் தீர்வு காண வேண்டும் எனப் பல்வேறு நாடுகளும் பல சர்வதேச அமைப்புகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன. சீனப் படைகள் எல்லையிலிருந்து பின் வாங்குவதும், அத்துமீறுவதுமாக இருக்கின்றன. இதனால் பல நாள்களாக அங்கு பதற்றமான சூழலே நிலவுகிறது.

இந்த விவகாரம் குறித்து பலர் பலதரப்பட்ட கருத்துக்களைப் பகிர்ந்து வரும் நிலையில், பா.ஜ.க-வின் பொதுச் செயலாளர் ராம் மாதவ் ஒரு பேட்டியில், "சீனா சுமார் 13 -14 நாடுகளுடன் எல்லை பிரச்னையைக் கொண்டிருக்கிறது. போரில் ஈடுபடாமலேயே எல்லைகளை ஆக்கிரமிக்கும் வேலையைத்தான் தொடர்ந்து செய்துவருகிறது சீனா. பிற நாடுகளைப்போல அல்லாமல், சீனா எப்போதும் வித்தியாசமாகவே யோசிக்கிறது. சீனாவை முன்னாள் அரசுகள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை, அதுதான் பல ஆண்டுகளாக பிரச்னை தொடர்வதற்கான காரணம்" என்று கூறியிருக்கிறார்.

கல்வான் பள்ளத்தாக்கு
கல்வான் பள்ளத்தாக்கு
Google Earth

அவர் சொல்வது சரியே, சீனாவைக் கையாள்வதில் இந்தியா ஒரு மாற்று முறையைக் கையாள வேண்டும் என்ற விமர்சனம் தொடர்ந்து வைக்கப்படுகிறது.

இந்த நிலையில், பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டை ஏற்று, சீனா எல்லைப் பகுதியிலிருந்து பின்வாங்கியதாகச் செய்திகள் வெளியாயின. இதனால் எல்லையின் பதற்றம் குறையும் சூழல் ஏற்பட்டது. சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஸ்ரீவத்சவா, ''மோதலுக்குச் சீனா அத்துமீறுவதே காரணம்'' என்று தெரிவித்துள்ளார். சீனாவுடனான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. சர்வதேச கவனம் பெற்றிருக்கும் இந்த விஷயத்தில், பல நாடுகள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, ரஷ்யா இரு நாடுகளுக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை செய்து வைக்கக் களத்தில் இறங்கியிருக்கிறது.

சீனாவுடன் தொடர்ந்து நல்லுறவில் இருக்கும் ரஷ்யா, இந்தியாவை ஒருவழியாகச் சம்மதிக்க வைத்து இரு நாடுகளுக்கும் இடையே வெளியுறவுத்துறை அமைச்சக மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது. ஜூன் 23-ம் தேதி காணொலி மூலம் நடந்த இந்தக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜீ லாவ்ரோவ் ஆகியோர் கலந்துகொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மேலும், ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் வெற்றியின் 75-வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்துகொண்டார். அப்போது சீனப் பாதுகாப்புத்துறை அமைச்சருடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னர், இந்தியா சீனா இடையில் சமரசம் செய்து வைக்கும் பேச்சுவார்த்தைக்கு உதவுவதாக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் முன்வந்தார். ஆனால், இரு நாடுகளும் இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீட்டை நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா புறப்படும் ராஜ்நாத்சிங்
ரஷ்யா புறப்படும் ராஜ்நாத்சிங்

இருந்தபோதும் சமீபத்தில் இந்தியா- சீனப் போர் பதற்ற நிலையைக் காரணம் காட்டி, ஜெர்மனியில் உள்ள தனது படைகளைக் குறைத்து இடமாற்றம் செய்திருக்கிறது அமெரிக்கா. ஐரோப்பிய யூனியன் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, "சீனா ஆசியாவில் பல நாடுகளுடன் எல்லை பிரச்னையில் இருக்கிறது, சீனாவைச் சமாளிக்கும் பொருட்டு அமெரிக்கா படைகள் சரியான இடத்தில், தயார் நிலையில் இருக்க வேண்டியது அவசியம். அதன் காரணமாகவே ஜெர்மனியில் இருக்கும் அமெரிக்கா படையின் அளவு குறைக்கப்படுகிறது" எனச் சொல்லியிருக்கிறது.

இந்தியா - சீனா மட்டுமல்ல, உலகின் மற்ற நாடுகள்கூட நம் இரு நாடுகளிடையே போர் வருவதை விரும்பவில்லை. காரணம், உலகின் மிகப்பெரும் இரண்டு சந்தைகள் போரில் ஈடுபட்டால் பெரும் வர்த்தக இழப்பு ஏற்படும் என்ற அச்சமே. போர் தவிர்க்கப்படுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், சீனா தன் எல்லையை விரிவுபடுத்துவதற்கான முயற்சியை ஒருபோதும் கைவிடாது என்பதே நாம் புரிந்துகொள்ள வேண்டியது.