Published:Updated:

இயற்கை விவசாய கொள்கைதான் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமா? உண்மை என்ன?

``அரசியல் லாபத்திற்காகப் பல்வேறு துறையினருக்கும் மானியங்களை அள்ளித் தெளித்தார்கள். அதுவும் கஜானா காலியாக ஒரு முக்கிய காரணமாக அமைந்து விட்டது. தற்போது அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கக்கூட அரசிடம் பணம் இல்லாத நிலை நீடிக்கிறது."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த சில மாதங்களாக இலங்கையின் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியடைந்துள்ளது. சமீபகாலமாக இலங்கையில் ரசாயன உரங்கள் தடைசெய்யப்பட்டு இயற்கை விவசாயம் மட்டுமே செய்ய வேண்டும் என்ற அரசின் உத்தரவுதான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இயற்கை விவசாய கொள்கைதான் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமா என இலங்கையைச் சேர்ந்த சுதாகரனிடம் கேட்டோம்.

``இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அதில் இயற்கை விவசாயக் கொள்கையும் ஒரு காரணம். ஆனால் அதுமட்டுமே முழுமையான காரணமில்லை. இலங்கையின் பொருளாதாரம் சுற்றுலாவை அடிப்படையாகக் கொண்டது. கொரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சுற்றுலாத் தொழில் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதான் முக்கிய காரணம். இரண்டாவதாக இங்குள்ள தொழிற்சாலைகள் முதல் விவசாயம் வரை மூலப்பொருள்களுக்கு இறக்குமதியை மட்டுமே நம்பியுள்ளன. உள்நாட்டு உற்பத்தியும் மிகவும் பின்தங்கியுள்ளது.

சுதாகரன்
சுதாகரன்

நீடித்த நிலையான கொள்கை அரசிடம் இல்லை. அரசியல் லாபத்திற்காகப் பல்வேறு துறையினருக்கும் மானியங்களை அள்ளித் தெளித்தார்கள். அதுவும் கஜானா காலியாக ஒரு முக்கிய காரணமாக அமைந்து விட்டது. தற்போது அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கக்கூட அரசிடம் பணம் இல்லாத நிலை நீடிக்கிறது. நாட்டின் கடன் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு டாலரின் இலங்கை மதிப்பு 130 ரூபாயாக இருந்தது. தற்போது 210 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதிலிருந்தே பொருளாதார வீழ்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும்.

இந்தியா முழுவதும் பரவிய இயற்கை விவசாயம்! - பல்லாயிரக்கணக்கில் பரிமாறிய பாரம்பர்ய விதைகள்!

விவசாயத்தைப் பொறுத்தவரை இதுவரை இலங்கை விவசாயிகள், ரசாயன உரங்களைப் போட்டுத்தான் பெரும்பாலும் விவசாயம் செய்து வந்தார்கள். இந்நிலையில் அரசு திடீரென ரசாயன இடுபொருள்களுக்குத் தடை செய்துள்ளதால், என்ன செய்வது எனக் குழப்பத்தில் விவசாயிகள் இருக்கிறார்கள்.

இயற்கை விவசாயத்தில் பெரும்பாலான விவசாயிகளுக்கு அனுபவம் இல்லை. மற்றொரு பக்கம் ரசாயன விவசாயத்திலிருந்து இயற்கை விவசாயத்திற்கு மாறும்போது மகசூல் இழப்பைச் சந்தித்து அதன் பிறகுதான் வழக்கமான மகசூலை எடுக்க முடியும். அந்த மகசூல் இழப்புக் காலங்களை விலைவாசி அதிகமான இந்தக் காலகட்டத்தில் சமாளிக்க முடியாது என நினைக்கிறார்கள்.

தற்போது இலங்கையின் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டு அனைத்திற்கும் இறக்குமதியை மட்டுமே நம்பியுள்ளது. அதனால் பொருள்களின் விலை உயர்ந்துகொண்டே போகிறது. ஒரு கிலோ சர்க்கரையின் விலை இந்திய மதிப்பில் 240 ரூபாய். உளுந்து, கடலை, பயறு வகைகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்துகொண்டிருந்த இலங்கை இடையில் அதற்குத் தடைவிதித்தது. உள்நாட்டில் உற்பத்தி செய்ய விவசாயிகளை ஊக்கப்படுத்தியது. ஆனாலும் போதுமான உற்பத்தி இல்லை. அதனால் அந்தப் பொருள்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.

இயற்கை விவசாயம்
இயற்கை விவசாயம்
இலங்கையில் சீனாவின் தீவு... எப்படிச் சமாளிக்கப் போகிறது இந்தியா?

ஒரு கிலோ உளுந்து இந்திய மதிப்பில் 400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அந்த விலைக்கு விற்றாலும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. சிறுதானியங்கள், அரிசி அனைத்திற்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. அதன் காரணமாக விலையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. 100 கிராம் மஞ்சள் இந்திய மதிப்பில் 300 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இந்த இக்கட்டான சூழலைச் சீனா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறது. அரசுக்குத் தேவையான கடனுதவி செய்துவிட்டு, தனக்குத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்கிறது. கொரோனா தாக்கம் குறைந்து உலகம் வழக்கமான வாழ்க்கைமுறைக்கு மாறிய பிறகுதான் இந்த நிலை மாறும். மீண்டும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குள் வர வேண்டும். உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியடைய வேண்டும். அப்போதுதான் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையை நோக்கித் திரும்பும்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு