Published:Updated:

FUKUSHIMA: பசிபிக் பெருங்கடலில் புகுஷிமா அணு உலை கழிவுநீரைக் கலக்க ஜப்பான் முடிவு! - விளைவுகள்?!

புகுஷிமா
புகுஷிமா ( Twitter/@javihagen )

`பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில், ``அணுசக்தியும் மானுடமும் ஒன்றாக வாழ முடியாது என்கிற கூற்று மீண்டும் உண்மையாகியுள்ளது'' என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஜப்பான் நாட்டில், 2011-ம் ஆண்டு பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக 11 மார்ச், 2011 அன்று சுனாமி பேரலை ஜப்பானைக் கடுமையாகத் தாக்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். சுனாமியால் மிகப்பெரிய சேதத்தைச் சந்தித்தது புகுஷிமா (Fukushima) பகுதியில் அமைந்திருக்கும் அணு உலை.

புகுஷிமா டாய்ச்சி அணு உலை சேதம்!

புகுஷிமாவின் டாய்ச்சி (Daiichi) அணு உலைக்குள் கடல்நீர் பெருமளவில் புகுந்ததால், அங்குள்ள மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் சேதமடைந்தன. இதன் காரணமாகக் குளிரூட்டும் சாதனங்கள் செயலிழந்தன. அணு உலையில் வெப்பம் அதிகரித்தது. இதன் விளைவாக சுற்றியிருக்கும் பகுதிகளில் கதிர்வீச்சின் தாக்கம் அதிகமானது. காற்றில் பரவும் கதிர்வீச்சைத் தடுக்கவும், வெப்பத்தைக் குறைக்கவும் லட்சக்கணக்கான லிட்டர் டன் தண்ணீர் பயன்படுத்தப்பட்டது.

புகுஷிமா அணு உலை
புகுஷிமா அணு உலை
Vikatan
ரஷ்யாவில் 1986-ம் ஆண்டு நடந்த செர்னோபில் அணு உலை விபத்துக்குப் பிறகு உலகின் இரண்டாவது மிகப்பெரிய அணு உலை விபத்தாகப் பார்க்கப்பட்டது புகுஷிமா அணு உலை விபத்து!

குறையாத கதிர்வீச்சு!

10 ஆண்டுகள் கடந்த பின்னும், புகுஷிமா அணு உலை கதிர்வீச்சின் தாக்கம் குறையவில்லை. இதற்கிடையே அணு உலையை முழுமையாகச் செயலிழக்கச் செய்யும் பணியைச் செய்து வருகிறது ஜப்பானின் டெப்கோ நிறுவனம். அணு உலையில் கதிர்வீச்சைக் குறைக்க, இதுவரை 12.5 லட்சம் டன் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்காகப் பயன்படுத்தப்பட்ட நீர், கதிர்வீச்சுடன் கலந்து கழிவுநீராக மாறிவிடும்.

பின்னர் அந்தக் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு அணு உலையிலுள்ள தொட்டிகளில் சேமித்து வைக்கப்படும். இந்தநிலையில், அடுத்த ஆண்டு இறுதிக்குள் கழிவுநீர் தேக்கி வைக்கும் தொட்டிகள் நிரம்பிவிடும் என்று டெப்கோ நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது.

Yoshihide Suga
Yoshihide Suga
twitter/ @XHNews

ஜப்பான் அரசின் முடிவு!

இதையடுத்து சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நீரைப் பசிபிக் பெருங்கடலில் கலக்க முடிவு செய்திருக்கிறது ஜப்பான் அரசு. இது குறித்துப் பேசிய ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா (Yoshihide Suga), ``புகுஷிமா அணு உலையை முழுவதுமாக செயலிழக்கச் செய்ய வேண்டுமென்றால், கழிவுநீரைக் கடலில் கலப்பதைத் தவிர வேறு வழியில்லை. கதிர்வீச்சு நிறைந்த கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்ட பின்னரே கடலில் கலக்கப்படும். ஐ.நா-வின் சர்வதேச அணுசக்தி அமைப்பின் கண்காணிப்பின் கீழ், விதிமுறைகளுக்கு உட்பட்டு, பாதுகாப்புடன் இந்தப் பணி நிறைவு செய்யப்படும். இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக இந்தப் பணி நிறைவடையும்'' என்று கூறினார்.

நீண்ட நாள்களாகவே இந்தத் திட்டம் குறித்து ஜப்பான் அரசு பரிசீலனை செய்துவந்தது. இருந்தும், மீனவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கடும் எதிர்ப்புகள் காரணமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது. தற்போது வேறு வழியில்லை என்ற நிலை வந்த பிறகே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவிருப்பதாக அந்த நாட்டு அரசு தகவல் தெரிவித்திருக்கிறது.

Japan Protest
Japan Protest
Twitter

மீனவர்கள் எதிர்ப்பு!

இது குறித்து ஜப்பான் மீன்வள கூட்டுறவு அமைப்பு, ``இது ஜப்பானிய மீனவர்களை நசுக்கும் செயல்'' என்று தெரிவித்திருக்கிறது. ஜப்பானைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புகளைப் பதிவு செய்துவருகின்றனர். ஜப்பான் பிரதமரின் முகமூடிகளைப் போட்டுக்கொண்டு, மீன், இறால் உள்ளிட்ட கடல் பிராணிகளின் புகைப்படங்களோடு கதிரியக்கச் சின்னங்களை இணைத்து, `இதனால் கடலில் பெரும் பாதிப்புகள் ஏற்படும்' என்று கூறி போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

அமெரிக்கா ஆதரவு

சர்வதேச அணுசக்தி முகமையின் ஒப்புதல் பெற்று ஜப்பான் செய்யவிருக்கும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது அமெரிக்கா. ``ஜப்பானின் அணுகுமுறை சர்வதேச தரத்தில் இருக்கிறது. அனைத்துவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு இந்தத் திட்டத்தை ஜப்பான் செயல்படுத்தும்'' என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறது அமெரிக்கா.

புகுஷிமா அணு உலை - சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கழிவுநீர்
புகுஷிமா அணு உலை - சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கழிவுநீர்
Twitter/@kawataru_j
Vikatan

சீனா - தென்கொரியா எதிர்ப்பு

``ஜப்பானின் பொறுப்பற்ற முடிவு இது. இந்த முடிவால் அண்டை நாடுகளுக்குப் பாதிப்பு உண்டாகும்'' என்று சீனா அரசு தெரிவித்திருக்கிறது. தென் கொரியா அரசு, ``ஜப்பானின் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது. இது எங்கள் நாட்டு மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்கத்தை ஏற்படுத்தும்'' என்று கடுமையாக எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறது. மேலும், இது குறித்து சர்வதேச நீதிமன்றத்தை அணுகி தடை கோருவோம் என்று தென் கொரியா அறிவித்திருக்கிறது. ரஷ்யா, தாய்வான் ஆகிய நாடுகளும் ஜப்பானின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்வது என்ன?

``கழிவுநீரிலுள்ள அதிக அளவு கதிர்வீச்சு நீக்கப்பட்ட பிறகே கடலில் கலக்கப்படும் என்று ஜப்பான் அரசு தெரிவித்திருந்தாலும், அதிலிருக்கும் ட்ரிட்டியத்தை (Tritium) முழுமையாக அகற்ற முடியாது. உலக நாடுகள் எதனிடமும் அதற்கான தொழில்நுட்பம் இல்லை. கதிர்வீச்சின் வீரியம் குறைக்கப்பட்டாலும், அதன் நீண்டகால விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பது நமக்குத் தெரியாது.

ஏற்கெனவே பசிபிக் பெருங்கடலின் வளம் நாசமடைந்துவிட்டது. பல வகை கடல் பிராணிகள் அழிந்துவிட்டன. தற்போது இந்தக் கழிவுநீரைக் கலப்பதால் என்னென்ன விளைவுகள் ஏற்படப்போகின்றனவோ'' என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

புகுஷிமா டாய்ச்சி அணு உலை
புகுஷிமா டாய்ச்சி அணு உலை
Twitter/@kawataru_j
எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினை ஓரங்கட்டிய `நாம் தமிழர்' காளியம்மாள்! - எதில் தெரியுமா?!

கீரின்பீஸ் சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பு, ``அணு உலையின் கழிவுநீரைக் கடல் நீரில் கலந்தால், அது கடல் வளத்துக்குத் தீங்கு ஏற்படுத்தும். மனித மரபணுவில் பாதிப்பை ஏற்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது'' என்று எச்சரித்திருக்கிறது.

`பூவுலகின் நண்பர்கள்' அமைப்பும் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் ஜப்பான் அரசின் இந்த முடிவு குறித்து கவலை தெரிவித்திருக்கிறது. மேலும், அந்த ஃபேஸ்புக் பதிவில், ``அணுசக்தியும் மானுடமும் ஒன்றாக வாழ முடியாது என்கிற கூற்று மீண்டும் உண்மையாகியுள்ளது'' என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

ஜப்பான் அரசின் முடிவு குறித்து உங்கள் கருத்துகளை கமென்ட்டில் சொல்லுங்கள்!
அடுத்த கட்டுரைக்கு