அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முதல் ஆப்பிரிக்க - அமெரிக்க பெண் நீதிபதி ஆகிறார் கெடான்ஜி பிரௌன் ஜாக்சன். அமெரிக்க நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக, கறுப்பினத்தைச் சேர்ந்த பெண் நீதிபதியான கெடான்ஜி பிரௌன் ஜாக்சன், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணியாற்ற செனட் உறுதியளித்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி, தன் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஒரு ஆப்பிரிக்க - அமெரிக்க பெண்ணை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பரிந்துரைப்பதாக உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் குற்றவியல் நீதி அமைப்பில் உள்ள இனசார்பு மற்றும் நீதிமன்றத்தில் பன்முகத்தன்மை இல்லாத நிலை போன்றவற்றில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மேலும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில், ஒன்பது நீதிபதிகள் உள்ளனர். அவர்களில் ஆறு பேர் பழைமைவாத மற்றும் குடியரசுக் கட்சி நிர்வாகங்களால் பரிந்துரைக்கப்பட்டவர்கள், மற்ற மூன்று பேர் தாராளவாதத்தைச் சார்ந்த மற்றும் ஜனநாயக நிர்வாகங்களால் பரிந்துரைக்கப்பட்டவர்கள். இதில் 1994-ல் ஜனாதிபதி பில் கிளின்டனால் நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட நீதிபதி ஸ்டீபன் ஜி பிரேயர், ஜனவரியில் ஓய்வு பெறுவதற்கான தனது முடிவை அறிவித்தார். காலியான அந்த இடத்துக்கு அதிபர் ஜோ பைடன், ஆப்பிரிக்க - அமெரிக்க பெண் நீதிபதியான கெடான்ஜி பிரௌன் ஜாக்சனை பரிந்துரைத்தார்.
இதை விமர்சித்த குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியைத் தேர்வு செய்வதற்கு இனம் மற்றும் பாலின ஒதுக்கீடு அடிப்படையில் பரிந்துரைக்கக் கூடாது, அதற்கு நீதித் திறமையும், அறிவார்ந்த அனுபவமும் தேவை என்று குறிப்பிட்டு இருந்தனர். இதற்குப் பதிலளித்த ஜோ பைடன், ``நான் பரிந்துரைத்தவர், அசாதாரண தகுதிகள், பண்பு மற்றும் நேர்மை கொண்டவராக இருப்பார். மேலும், அவர் உச்ச நீதிமன்றத்துக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் ஆப்பிரிக்க - அமெரிக்கப் பெண். இதுவே நீண்ட கால தாமதமாகும்" என்று கூறினார். தொடர்ந்து ஜனநாயகக் கட்சியினர் அவரின் தகுதிகளைப் பாராட்டினர். கலந்துரையாடல்களுக்குப் பின்னர், கெடான்ஜி ஜாக்சனின் நியமனத்தை ஆதரித்து குடியரசுக் கட்சியினர் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து வியாழக்கிழமை அன்று கெடான்ஜி ஜாக்சனின் நியமனத்துக்கு செனட் ஒப்புதல் அளித்தது.

கெடான்ஜி பிரௌன் ஜாக்சன், ஹார்வேர்டு சட்டப் பள்ளியின் பட்டதாரி. அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்ற கொலம்பியா மாவட்ட (District of Columbia - DC) சுற்றுக்கான நீதிபதியாகப் பணியாற்றியவர். முன்னதாக, 2013 மற்றும் 2021-க்கு இடைப்பட்ட காலத்தில் கொலம்பியா மாவட்ட நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றியவர். உச்ச நீதிமன்ற முதல் பெண் ஆப்பிரிக்க - அமெரிக்க நீதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள கெடான்ஜி, உச்ச நீதிமன்றத்தின் ஆறாவது பெண் நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அமெரிக்க தண்டனைக் குழுவின் துணைத் தலைவராகவும் இருப்பார் என்று வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவித்துள்ளது.