Published:Updated:

கார்ட்டூன் சர்ச்சை... தேவாலயத்தில் பயங்கரவாதத் தாக்குதல் - பிரான்ஸில் தொடரும் பதற்றம்!

பிரான்ஸ் தேவாலயத்தில் தாக்குதல்
பிரான்ஸ் தேவாலயத்தில் தாக்குதல் ( Daniel Cole )

பிரான்ஸில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே நீஸ் நகரில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பயங்கரவாதி ஒருவர் நடத்திய தாக்குதலில் மூவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரத்தில் துப்பாக்கியுடன் சந்தேகிக்கும் முறையில் நடமாடிய மற்றொரு நபரை போலீஸார் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இதனால் பாரிஸ் நகரில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.

என்ன நடந்தது பாரிஸ் நகரில்?

கடந்த 2015-ல் பிரான்ஸின் பிரபல பத்திரிக்கையான சார்லி ஹெப்டோவில் (Charlie Hebdo) வெளிவந்த முகமது நபியின் கார்ட்டூனால் பெரும் சர்ச்சை வெடித்தது. இதையடுத்து, 2015-ம் ஆண்டு, ஜனவரி 7-ம் தேதி சார்லி ஹெப்டோ அலுவலகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

பிரான்ஸ் அதிபர் மேக்ரான்
பிரான்ஸ் அதிபர் மேக்ரான்
ERIC GAILLARD

கடந்த 16-ம் தேதி சாமுவேல் பேட்டி என்னும் வரலாற்று ஆசிரியர் தனது வகுப்பில் முகமது நம்பியின் கேலிச் சித்திரத்தைக் காட்டியதற்காக, 18 வயது இளைஞரால் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் பாரிஸ் நகரில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சை அலைகளை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்துகு அஞ்சலி செலுத்தும்விதமாக நிகழ்ந்த பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்குக் கண்டனம் தெரிவித்தார். அப்போது, அவர் இஸ்லாம் மதம் குறித்துப் பேசியது சர்ச்சையானது.

பிரான்ஸ் அதிபர் மேக்ரான், இஸ்லாம் மத நம்பிக்கைகளைப் புண்படுத்துவதாக பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கருத்து தெரிவித்தார். அதற்கு ஆதரவு தெரிவிக்கும்விதமாக அரபு நாடுகளான துருக்கி, கத்தார், ஜோர்டன் உள்ளிட்ட நாடுகள் பிரான்ஸ் தயாரிப்புப் பொருள்களைப் புறக்கணித்தன.

பிரான்ஸ்: தலை துண்டித்துக் கொல்லப்பட்ட ஆசிரியர்! - கொடூரத்துக்குக் காரணமான கேலிச் சித்திரம்

இந்தநிலையில், பாரிஸிலுள்ள நீஸ் நகரில் அமைந்திருக்கும் நோட்ரே-டேம் (Notre-Dame) என்னும் கிறிஸ்தவ தேவாலயத்தில் நேற்று காலை 9 மணி அளவில் கையில் கத்தியுடன் சென்ற மர்ம நபர் ஒருவர், அங்கிருந்தவர்களைக் கத்தியால் கொடூரமாகக் குத்தியிருக்கிறார். இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரத்தில் அவிங்க்கான் மாகாணத்தில் துப்பாகியுடன் சந்தேகிக்கும் முறையில் சுற்றித்திரிந்த நபரை போலீஸார் சுற்றிவளைத்தனர். அப்போது, துப்பாகியைக் கீழே போடும்படி போலீஸார் கட்டளையிட்டிருக்கிறார்கள். அதை ஏற்க மறுத்த அந்த நபர் போலீஸாரை நோக்கி நகர்ந்திருக்கிறார். அப்போது, தற்காப்பு நடவடிக்கைக்காக போலீஸார் அவரைச் சுட்டு வீழ்த்தினர்.

தொடர்ந்து நிகழ்ந்துவரும் இது போன்ற பயங்கரவாதச் சம்பவங்களால் பிரான்ஸ் முழுவதும் அதிநவீன ஆயுதங்கள் ஏந்திய பாதுகாப்புப் படையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

பிரான்ஸ்
பிரான்ஸ்
ERIC GAILLARD

ரோந்துப் பணிக்காக முதலில் 3,000 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது 7,000 வீரர்கள் குவிக்கப்பட்டிருக்கின்றனர். அதோடு பயங்கரவாதிகள் தங்கியிருக்கும் பகுதிகளைத் தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்றுவருவதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்துக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மேலும், இந்தச் சூழலில் பிரான்ஸுக்கு உரிய உதவிகள் செய்யத் தயாராக இருப்பதாக மோடி கூறியிருக்கிறார்.

மலேசிய முன்னாள் பிரதமரின் ட்வீட்டால் சர்ச்சை:

மகாதீர் முகமது
மகாதீர் முகமது

இந்தநிலையில், மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, சாமுவேல் பேட்டியின் கொலையை நியாயப்படுத்தி கருத்து தெரிவித்தது சர்ச்சையாகியிருக்கிறது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த அவர், இஸ்லாமியர்களின் உணர்வுகளைப் புண்படுத்திய பிரான்ஸ் மக்களைக் கொலை செய்ய இஸ்லாமியர்களுக்கு உரிமையுண்டு என்று கூறியது பெரும் சர்ச்சையானது. தற்போது அந்தப் பதிவை ட்விட்டர் நிர்வாகம் நீக்கியிருக்கிறது.

பிரான்ஸில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு