Published:Updated:

`சாராவுக்கு நிகழ்ந்தது யாருக்கும் நிகழக்கூடாது!' - லண்டனை உலுக்கிய பாலியல் குற்றம்; என்ன நடந்தது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சாராவின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் காவல்துறை அதிகாரி
சாராவின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் காவல்துறை அதிகாரி ( Photo: Ian West/PA via AP )

நண்பருடன் பேசியபடியே நடந்து சென்ற சாராவை வழிமறித்த கூசன்ஸ், தன்னுடைய அடையாள அட்டையைக் காண்பித்து, சாரா கொரோனா விதிமுறைகளை மீறியதாகவும், அதனால் அவரை கைது செய்வதாகவும் அச்சுறுத்தியிருக்கிறார்.

உலகின் எந்த மூலையில் ஒரு பெண்ணுக்கு பாலியல் வன்புணர்வு நிகழ்ந்தாலும், மொத்த உலகமும் பதறிப்போய் விடுகிறது. இப்படித்தான், கடந்த 7 மாதங்களுக்கு முன்னால், தெற்கு லண்டனை மட்டுமல்ல மொத்த உலகத்தையும் ஓர் உலுக்கு உலுக்கியது சாரா எவர்டின் மரணம். பாலியல் வன்புணர்வு செய்து, பெல்ட்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்து, உடலை எரித்து, மிச்சம் மீதியைக் குளத்தில் விட்டெறிந்தது என்று, அந்த 33 வயது இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமையை மனித மனம் படைத்த எவராலும் தாங்க முடியாது.

Sarah Everard
Sarah Everard
Photo: Metropolitan Police via AP
பணியிடத்தில் பாலியல் கொடுமை: விமானப்படை அதிகாரிக்கே இதுதான் நிலை; நீங்கள் தேசத்துக்குப் பாதுகாப்பா?

தெற்கு லண்டனின் பிரிஸ்டன் பகுதியைச் சேர்ந்த சாரா எவரார்டு (Sarah Everard) மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிந்து வந்தவர். கடந்த மார்ச் மாதம் 3-ம் தேதி மாலை தன் வீட்டிலிருந்து 3 கி.மீ தொலைவிலிருந்த தன் நண்பரை சந்திக்கச் சென்றிருக்கிறார். நண்பரை சந்தித்து விட்டு இரவு 9 மணியளவில் செல்போனில் பேசியபடியே வீட்டிற்கு நடந்து சென்றவரின் செல்போன் இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டதாலும் அதன்பிறகு சாராவிடமிருந்து எந்த அழைப்பும் வராததாலும் அதிர்ச்சி அடைந்த அவரின் நண்பர் போலீசில் புகார் அளித்தார். கூடவே, தன் தோழி சாரா காணாமல் போனதை சமூக வலைத்தளங்களிலும் அந்த நண்பர் பதிவிட்டிருக்கிறார். இதனால், சாரா காணாமல் போன தகவல் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிலையில், சாரா காணமல் போய் ஒரு வாரம் கழித்து, அவருடைய வீடு இருந்த பகுதியிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள கென்ட் நகரின் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள குளத்திலிருந்து சாராவின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.

காணாமல் போனதாகப் பதிவான சாராவின் வழக்கு, இதையடுத்து கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டது. சாரா மாயமான இடத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த ஸ்காட்லாந்து யார்டு போலீசார், 48 வயதான வேன் கூசன்ஸ் என்ற காவல்துறை அதிகாரிக்கு சாராவின் கொலையில் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்தனர்.

சாரா காணாமல் போன அன்று நடந்தது இதுதான். நண்பருடன் பேசியபடியே நடந்து சென்ற சாராவை வழிமறித்த கூசன்ஸ், தன்னுடைய அடையாள அட்டையைக் காண்பித்து, சாரா கொரோனா விதிமுறைகளை மீறியதாகவும், அதனால் அவரை கைது செய்வதாகவும் அச்சுறுத்தியிருக்கிறார். அதன்பிறகு சாராவின் கைகளில் விலங்கிட்டு தன்னுடைய காரில் கடத்திச் சென்றவர், நகருக்கு வெளியிலிருந்த தன்னுடைய பண்ணை வீட்டில் வைத்து அவரை பாலியல் வன்புணர்வு செய்து கொலையும் செய்திருக்கிறார். சிசிடிவி ஆதாரங்கள் கூசன்ஸை காட்டிக்கொடுத்துவிட்டன.

Sexual Harassment  (Representational Image)
Sexual Harassment (Representational Image)

இதற்கிடையில், சமூக வலைத்தளங்களில் காவல்துறையினரின் மீதான நம்பிக்கை தங்களுக்குக் குறைந்துவிட்டதாக ஒரு சாராரும், லண்டனில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டதாக மற்றொரு சாராரும் விவாதங்களை எழுப்பியிருந்தனர். தவிர, சாராவின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட பெண்கள் `குற்றவாளியை உடனே கைது செய்யுங்கள்' என்று கோஷமிட்டு போராட்டமும் நடத்தினார்கள். இதனால், சாரா கொலை வழக்கு லண்டனில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில்தான் கூசன்ஸ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி அட்ரியன் ஃபுல்ஃபோர்டு (Adrian Fulford), கடத்தல், பலாத்காரம், கொலை ஆகிய மூன்று குற்றங்களில் ஈடுபட்டதற்காக கூசன்ஸுக்கு பரோல் இல்லாத ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறார்.

சாராவின் பெற்றோர், ``அவள் மிகுந்த கருணையானவள். நகைச்சுவை உணர்வு நிரம்பியவள். எங்கள் மகிழ்ச்சி எங்களைவிட்டு சென்றுவிட்டது. அவளுக்கு நிகழந்தது யாருக்கும் நிகழக்கூடாது'' என்கிறார்கள் கண்கள் கலங்கியபடி. சாராவுக்கு நேர்ந்த கொடுமை தனக்கு அதிர்ச்சியளிப்பதாகவும், இதுபோன்ற குற்றங்கள் எதிர்காலத்தில் நடைபெறாதபடிக்கு போலீசார் செயல்பட வேண்டுமென்று இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜான்சன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

Metropolitan Police Commissioner Dame Cressida Dick makes a statement to the media
Metropolitan Police Commissioner Dame Cressida Dick makes a statement to the media
Photo: David Parry/PA via AP
`எந்தக் கடவுள் இந்த சாமியாரின் காணிக்கையை ஏற்றுக்கொள்வார்?' - சிறார் வதை வழக்கில் கேரள நீதிமன்றம்

லண்டன் மாநகர காவல்துறையோ, ``காவல்துறையினரின் மீதான மக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புகிறோம். லண்டனில் ஒரேயொரு காவல்துறை அதிகாரி உங்களை நிறுத்தி விசாரணையில் ஈடுபடுவது வழக்கத்திற்கு மாறானது. அப்படி நடந்தாலோ, காவல்துறை அதிகாரி உங்களைக் கைது செய்ய முற்பட்டாலோ, `உங்களுடைய சக காவல்துறை அதிகாரி எங்கே' என்று அவரை நீங்கள் கேளுங்கள். கூடவே, நீங்கள் எந்த காவல் நிலையத்திலிருந்து வருகிறீர்கள், இங்கு ஏன் நின்றுகொண்டிருக்கிறீர்கள், என்னை ஏன் தடுத்தீர்கள் மற்றும் என்னிடம் நீங்கள் பேசுவதற்கான காரணம் என்னவென்று கேளுங்கள்'' என்றிருக்கிறது.

சாராவுக்கு நிகழ்ந்தது இனி யாருக்கும் நிகழாமல் இருக்கட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு