Published:Updated:

கொரோனாவைத் தாண்டி உலகில் என்னவெல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன? ஓர் பார்வை...#MustKnow

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

செய்திகள், சமூக வலைதளங்களிலெல்லாம் கொரோனா ஆக்கிரமத்துள்ள நிலையில் இதே சமயத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பே இந்தக் கட்டுரை.

கடந்த சில மாதங்களாகவே கொரோனா வைரஸ் என்ற ஒற்றை வார்த்தையை மையமாகக் கொண்டு சுழன்று வருகிறது உலகம். அரசியல், பொருளாதாரம் தொடங்கி சினிமா, பொழுதுபோக்கு வரை அனைத்துத் துறைகளையும் கொரோனா தொடர்பான செய்திகளே ஆக்கிரமித்திருக்கின்றன. இவ்வளவு பெரிய நோய்த்தொற்று தாக்கம் எனும்போது இது இயல்புதான். ஆனால் உலகில் வேறு எதுவுமே நடப்பதில்லையா எனும் கேள்வி மட்டும் விடாமல் துரத்தியது... அவ்வாறு உலகைச் சுற்றி நடந்த முக்கியமானவற்றின் தொகுப்பே இந்தக் கட்டுரை...

கொரோனா
கொரோனா

தமிழகத்தைப் பொறுத்தவரையிலும் கொரோனா தாண்டி பல விஷயங்கள் பரபரப்பாகப் பேசப்பட்டன. தஞ்சை கோயில் தொடர்பாக நடிகை ஜோதிகாவின் பேச்சு தொடங்கி பல பெண்களை ஏமாற்றிய காசி எனும் இளைஞனின் வழக்கு வரை பல விஷயங்கள் நடந்துள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் பணம் பறித்து மோசடி செய்த காசியின் வழக்கு மீண்டுமொரு பொள்ளாச்சி போல பூதாகரமாக உருவெடுத்துள்ளது. இவை தவிர திரைப்பட நடிகர்களின் ரசிகர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்ததும் செய்திகளில் கவனம் பெற்றது. திரையுலகில் பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் மற்றும் நடிகர் ரிஷி கபூர் ஆகியோரது அடுத்தடுத்த எதிர்பாராத மரணங்கள் சமூக வலைதளங்களில் மிக முக்கிய கவனம் பெற்றன. அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டமும், ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்டோர் கைது, பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி மீதான வழக்கு, 68,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி ஆகியவை தேசிய அளவில் கவனம் பெற்றன.

இவற்றை தாண்டி, அதிக கவனம் பெறாத சில முக்கியச் செய்திகள் பின்வருமாறு:

காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை:

காஷ்மீரில் லக்‌ஷர்-இ-தொய்பா அமைப்பின் முக்கியத் தலைவரான ஹைதர் உட்பட இரண்டு தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் நுழைந்த இந்தத் தீவிரவாதிகள் காஷ்மீரில் அந்த்வாரா பகுதியில், பொது மக்களை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தனர். அம்மக்களை மீட்பதற்காக ஏற்பட்ட மோதலில், நான்கு ராணுவ அதிகாரிகள், ஒரு ஜம்முகாஷ்மீர் மாநில காவல்துறை அதிகாரி என ஐந்து பேர் மரணமடைந்தனர்.

அமெரிக்காவுடன் இராணுவ ஒப்பந்தம்:

இந்திய அரசு கொரோனாவுக்கான மருந்து வழங்கவில்லையென்றால் பதிலடி கொடுக்கப்படும் என ட்ரம்ப் பகிரங்கமாக அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்திய அரசு மருந்துகளை ஏற்றுமதி செய்தது. அமெரிக்காவில் இருந்து இந்திய ராணுவம் சுமார் 155 பில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவத் தளவாடங்கள் வாங்க முனைந்தது. இதற்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப் தற்போது அனுமதி அளித்துள்ளார்.

`உலகுக்கே சேதம்.. அதிக இழப்பீடு’ -சீனாவுக்கு எதிராக தீவிர விசாரணையை முன்னெடுக்கும் ட்ரம்ப் #Corona
உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

புதிய மின்சாரத் திட்டம்:

மத்திய அரசு விரைவில் கொண்டுவர இருக்கும் புதிய மின்சார திருத்தச் சட்டத்திற்கான சட்டவரைவு ஏப்ரல் 17ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. இதனையடுத்து, இது தொடர்பான ஆலோசனைகள், கருத்துகளைத் தெரிவிக்க 21 நாள்கள் கால அவகாசம் உண்டு என மத்திய அரசு கூறியிருக்கிறது. இந்தச் சட்ட வரைவு, பொதுப்பட்டியலில் இருக்கும் மின்சாரத்துறை தொடர்பான அதிகாரப்பகிர்வில், மாநிலங்களை விட மத்திய அரசிற்கு அதிக அதிகாரங்களையும், தனியார் நிறுவனங்களுக்கு நிறைய நன்மைகளையும் தருவதாக இருக்கிறது என சர்ச்சைகள் எழுந்துள்ளன.

மகாராஷ்டிரா தேர்தல்:

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா தேர்தலுக்குப் பிறகு சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சரானார். ஆனால் அப்போது அவர் சட்டமன்ற உறுப்பினராக இல்லை. சட்டப்படி முதலமைச்சர் பதவியேற்று ஆறு மாத காலத்திற்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும். இந்நிலையில்,கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்டிருந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற மேலவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து மே மாதம் 21 ஆம் தேதி அங்கு காலியான 9 சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெறும்.

பால்கர் தாக்குதல்:

ஏப்ரல் 16ம் தேதி குஜராத்திற்கு இறுதிச் சடங்கு ஒன்றில் பங்கேற்க, மஹாராஷ்டிராவின் கன்டிவலியிலிருந்து காரில் பயணம் செய்த இரண்டு சாதுக்கள் மற்றும் கார் ஓட்டுநரை, பால்கர் எனும் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வழிமறித்தனர். காரில் சென்றவர்களை அந்தக் கும்பல் கடுமையாகத் தாக்கியதில் மூவரும் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்தத் தாக்குதலை பா.ஜ.க அரசியலாக்குவதாக சிவசேனா உள்ளிட்ட ஆளும் கூட்டணிக் கட்சிகள் குற்றம்சாட்டின. மகாராஷ்டிரா போலீசாருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம், இந்தச் சம்பவம் தொடர்பாக நடந்து வரும் விசாரணை குறித்து நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மஹாராஷ்டிர அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இவை தவிர ஏர் இந்திய நிறுவனத்தை வாங்குவதற்கான ஏலத் தேதியை ஒத்திவைத்து அரசு உத்தரவிட்டது. பாகிஸ்தான், இந்திய மீனவக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது, இந்தியாவில் சர்வதேச பாக்ஸிங் நடத்துவதற்கான வாய்ப்பை இந்தியா இழந்தது, ஐஏஎஸ் அதிகாரி சஞ்சய் கோத்தாரி புதிய மத்திய விஜிலென்ஸ் ஆணையராக நியமிக்கப்பட்டது உள்ளிட்டவை இந்திய அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் ஆகும்.

பென்டகன் வெளியிட்ட வீடியோ
பென்டகன் வெளியிட்ட வீடியோ

உலக அளவில் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தல், பிரிட்டனின் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் தற்போதைய நிலை, சிரியாவில் நடக்கும் போர், ஆஸ்திரேலியா காடுகளின் தீ, விண்வெளி அதிசயங்கள், ஆகியவை முக்கிய நிகழ்வுகளாக கவனிக்கப்பட வேண்டியவை.

விண்வெளி அதிசயங்கள்:

ஓசோன் படலத்தில் நிகழும் அதிசயங்கள் தினம் நம் கவனத்தைப் பெறுகிறது. இவைமட்டுமல்ல, அமெரிக்கா பாதுகாப்பு துறை தலைமையகமான பென்டகன் சமீபத்தில் நீண்ட நாள்களாக ரகசியமாகப் பாதுகாத்து வந்த சில பறக்கும் விண்கலங்களின் வீடியோவை வெளியிட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து விண்வெளியில் வாழும் வேற்றுக்கிரக வாசிகளின் இருப்பு குறித்த விவாதங்கள் மீண்டும் தலையெடுத்திருக்கின்றன. அதேசமயம் விண்வெளியில் தனது முப்பதாவது ஆண்டை நிறைவு செய்திருக்கிறது ஹபிள் தொலைநோக்கி. பூமியில் இருந்து ஒரு லட்சத்து 63 ஆயிரம் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு நட்சத்திர மண்டலத்தை சமீபத்தில் படம் பிடித்திருக்கிறது ஹபிள்.

உலக நாடுகளில் கோவிட்-19  ஏற்படுத்தியிருக்கும் அரசியல் பாதிப்புகள் - ஓர் அலசல்!

ஆஸ்திரேலியாவின் காட்டுத் தீ:

கடந்த நவம்பர் மாதம் தொடங்கி பலமாதங்களாக ஆஸ்திரேலியாவில் பல ஹெக்டர் பரப்பளவுள்ள காடுகள் தீயில் அழிந்தன. பல ஆயிரம் பேர் தீயை அணைக்க போராடினர். உலக நாடுகள் எல்லாம் உதவிக்கரம் நீட்டின, சுமார் ஒரு பில்லியன் காட்டுவாழ் உயிரினங்கள் உயிரிழந்தன. கருகிய கோலா கரடி, கங்காரு உடல்களைப் பார்த்து உலகமே கண்ணீர் சிந்தியது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக அங்கு பெய்த பெரு மழையின் காரணமாக, ஆஸ்திரேலியா காடுகளில் பரவி வந்த பெரும் தீ முழுவதுமாக அடங்கியது என அதிகாரபூர்வமாக ஆஸ்திரேலியா அரசு அறிவித்திருக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல்:

அமெரிக்காவில் 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. குடியரசு கட்சியின் சார்பாக மீண்டும் களத்தில் நிற்கிறார் டிரம்ப். இவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பாக ஜோ பிடென் போட்டியிடுவார் என்பது உறுதியாகியிருக்கிறது. அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து பெர்னி சாண்டர்ஸ் விலகியதை அடுத்து ஜனநாயகக் கட்சி வேட்பளராக அறிவிக்கப்படவிருக்கிறார் ஜோ பிடென். அரசின் கொள்கை முடிவுகள் உட்பட, அமெரிக்காவின் அனைத்துத் தலைவர்களும், தலைமைகளும், இந்தத் தேர்தலை மனதில்கொண்டே இன்று வரை அனைத்து முடிவுகளையும் எடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

கனடாவின் துப்பாக்கித் தடை:

கனடாவில் நோவா ஸ்காட்டியா எனும் இடத்தில் கடந்த மாதம் 20-ம் தேதி போலீஸ் உடையில் சென்ற கேப்ரியல் வோர்ட்மேன் என்ற நபர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிசூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் 1,500 வகையான தாக்குதல் ரக துப்பாக்கிகளுக்குத் தடைவிதிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இதேபோல கடந்த ஆண்டு நியூஸிலாந்து நாட்டில் மசூதியில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து நியூஸிலாந்து நாட்டிலும் துப்பாக்கி விற்பனைத்தடை செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரென்டன் டாரண்ட் கடந்த மாதம் தன்னுடைய குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார்.

சிரியா போர்:

2011 ஆம் ஆண்டில் தொடங்கியது சிரிய போர். அந்நாட்டு அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சியாகத் தொடங்கிய சலசலப்பு, பல அரசுகள் தலையிடும் பன்னாட்டுப் போராக உருவெடுத்தது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக குண்டுமழை பொழிந்த சிரிய வான்வெளியில், கடந்த சில நாள்களாக அமைதி நிலவியது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தலையீட்டில் மார்ச் மாத இறுதி முதல் அனைத்துத் தரப்பிலிருந்தும் போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில், ஏப்ரல் இறுதி வாரம் சிரிய தலைநகரம் டமாஸ்காஸ் அருகே இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் மூன்றுபேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது

பிரெக்ஸிட்
பிரெக்ஸிட்

பிரெக்ஸிட் ஒப்பந்தம்:

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஐரோப்பிய யூனியனில் கடந்த ஜனவரி மாதம் அதிகாரபூர்வமாக வெளியேறியது பிரிட்டன். இதனடிப்படையில் ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரிட்டன் இடையே பிரெக்ஸிட் ஒப்பந்தம் கையொப்பமானது. இந்நிலையில் இவற்றிற்கு இடையேயான உறவு குறித்து இன்னும் பல முடிவுகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது. குறிப்பாக வர்த்தகம் மற்றும் போக்குவரத்து தொடர்பான ஒப்பந்தங்கள் கையொப்பமாகவில்லை. இந்த ஆண்டு இறுதிவரை அதற்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறிய இடைவெளிக்குப் பிறகு ஐரோப்பிய யூனியனிற்கும் பிரிட்டனிற்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் வீடியோ கான்பரன்சிங் முறையில் மீண்டும் தொடங்கியிருக்கிறது.

அதிகப்படியான தகவல் நுகர்வு நடைபெறும் டிஜிட்டல் யுகத்தில் இருக்கிறோம் நாம். இந்த நுகர்வு கலாசாரத்தால் உலகில் எந்த மூலையில் எது நடந்தாலும் அடுத்த நொடி அதை நம் உள்ளங்கை அலைபேசிகள் காட்டிக் கொடுத்து விடுகின்றன. இவ்வாறு பல வகையான தகவல்களை உள்வாங்கும் நாம் சில அவசியமான தகவல்களை தவறவிடுகிறோம். உலகின் கவனம் ஒற்றை இடத்தில குவிந்துகிடைக்க, அதைச் சுற்றியும் பல்வேறு சம்பவங்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு