Published:Updated:

எத்தியோப்பியாவின் பென்னிகுயிக் தமிழர்!

கண்ணன் அம்பலம்
பிரீமியம் ஸ்டோரி
கண்ணன் அம்பலம்

தேர்வு பற்றிய தெளிவான பாதை ஏற்பட்டு வெற்றி பெறுவதற்குள் உச்சவரம்பு முடிந்துவிட்டது.

எத்தியோப்பியாவின் பென்னிகுயிக் தமிழர்!

தேர்வு பற்றிய தெளிவான பாதை ஏற்பட்டு வெற்றி பெறுவதற்குள் உச்சவரம்பு முடிந்துவிட்டது.

Published:Updated:
கண்ணன் அம்பலம்
பிரீமியம் ஸ்டோரி
கண்ணன் அம்பலம்

“நான் யாரென்றால் நாம்!”

- ஆப்பிரிக்கப் பழமொழி

“இந்த உலகமே ஒரு கூடாரம்தான். நான் ஆப்பிரிக்காவில் காலடி வைத்ததும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால், எத்தியோப்பிய வாழ்க்கை ஆரம்பத்தில் கடினமாக இருந்தது. ஆப்பிரிக்கக் கண்டத்தின் கொம்பு என்றழைக்கப்படும் அந்நாடு எல்லோரையும் முட்டாது என்பதைத் தாமதமாகவே உணர்ந்தேன். ஒரே தட்டில் மொத்தமாய் சாப்பாட்டைக் கொட்டி சுற்றி எல்லோரும் உட்கார்ந்து சாப்பிடும் அவர்களின் உணவுப் பழக்கத்திலிருந்தே அவர்களின் வாழ்க்கை எனக்கு ஆச்சர்யமாகவும் நம்பிக்கைக்குரியதாகவும் இருந்தது.

எத்தியோப்பியாவின் பென்னிகுயிக் தமிழர்!

சின்ன நிலப்பரப்புக்குள் 80 வெவ்வேறு மொழிகள் பேசும் அவர்களின் ஒன்றுபட்ட கலாசாரம் வியப்பானது. இம்மக்களால்தான் ஒரு தனிமனிதனான என்னால் இத்தனை பாலங்களை அந்நிய மண்ணில் என் சிற்றறிவிலிருந்து கட்டித்தர முடிந்தது!” என்று சொல்லும் பேராசிரியர், டாக்டர் கண்ணன் அம்பலம் எத்தியோப்பிய நாட்டிலிருக்கும் வொல்லேகா பல்கலைக்கழகத்தின் பொது நிர்வாகத்துறைப் பேராசிரியர். 48 பாலங்கள், 28 இடங்களில் நல்ல குடிநீர் வசதி ஏற்படுத்திக்கொடுத்திருக்கும் இவரை அந்நாட்டின் ஊடகங்கள் கொண்டாடி மகிழ்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் எத்தியோப்பியாவின் பென்னி குயிக் இவர்!

“மதுரை அலங்காநல்லூர் பக்கத்துல பொந்துகம்பட்டிதான் என்னோட கிராமம். கஷ்டப்பட்ட விவசாயக்குடும்பம். குடும்பமா களை எடுக்குறது நாத்து நடறதுன்னு இளம்பிராயம் பச்சைய வாசனையோடு கழிந்தது. படிக்க வைக்க முடியாத அளவுக்கு வறுமையான சூழல்ல பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளில விடுதியில தங்கிப் படிச்சேன். ப்ளஸ் டூல முதல் மாணவனா வந்தேன்.

எத்தியோப்பியாவின் பென்னிகுயிக் தமிழர்!

வயல் வேலைக்குப் போன என்னை என் பள்ளித் தலைமை ஆசிரியர் வீட்டுல பேசி மேலே படிக்கச் சொன்னார். மதுரை தியாகராசர் கல்லூரியில பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரி சேர்ந்தேன். அப்பல்லாம் சிவில் சர்வீஸ் தேர்வைப் பத்தின புத்தகங்கள் படிப்பேன். ஒரு ஐ.ஏ.எஸ் ஆகணும்கிற கனவு எனக்கு இருந்துச்சு. பொது நிர்வாகம் படிக்க சென்னை கிறித்தவக் கல்லூரிக்கு வந்தேன். அப்புறம் மிகுந்த பொருளாதார சிக்கல்லயும் டெல்லில தங்கி பிஹெச்.டி முடிச்சேன். பிஹெச்.டில ‘Administration approach to combat desertification’ என்ற தலைப்பில் பண்ண காரணமே அந்த desertification என்ற வார்த்தைதான்! அந்த வார்த்தை குறித்த ஆராய்ச்சியில் இறங்கியபோதுதான் நீர் மேலாண்மை எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்துகொண்டேன்.

எத்தியோப்பியாவின் பென்னிகுயிக் தமிழர்!

ஆராய்ச்சிக்காக பல்கலைக்கழகமே என்னை வளைகுடா நாடுகளுக்கும் அனுப்பியது. நம் பாரம்பர்ய நீர் மேலாண்மையை நாம் கைக்கொள்ளாவிட்டால் உலகமே பொட்டல் காடாகிப்போகும் என்பதையும் அதைச் சமாளிப்பதையும் என் ஆராய்ச்சிக் கட்டுரை விளக்கியது.

இந்த நேரத்தில் நான் விளையாட்டாக முன் தயாரிப்பே இல்லாமல் சிவில் சர்வீஸ் தேர்வில் நிறைய அட்டெம்ப்ட் கொடுத்திருந்து விரயமாக்கியிருந்ததால் என்னுடைய ஐ.ஏ.எஸ் முயற்சிக்கான வயது வரம்பு குறுகியது. தேர்வு பற்றிய தெளிவான பாதை ஏற்பட்டு வெற்றி பெறுவதற்குள் உச்சவரம்பு முடிந்துவிட்டது.

எத்தியோப்பியாவின் பென்னிகுயிக் தமிழர்!

அப்போதுதான் எத்தியோப்பியப் பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளருக்கான அறிவிப்பைப் பத்திரிகை விளம்பரத்தில் பார்த்தேன். உடனே அப்ளைசெய்தேன்.வீட்டில் ‘ஆப்பிரிக்கா வெல்லாம் போகணுமா?’ எனக் கேட்டார்கள். அங்கிருந்த ஒரு பேராசிரியருக்குக் கடிதம் எழுதிக்கேட்டேன். “தயவு செய்து இங்கிட்டுலாம் வந்திடாதே... கஷ்டப்படுவே!” என்று பயமுறுத்தி யிருந்தார். என் வயதின் வேகம் எனக்கு எத்தியோப்பியா போயே ஆக வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது!” என்று ஒரு ‘பயோபிக்’ சினிமாவுக்கான இன்டெர்வெல் விடுவதுபோல நிறுத்தித் தொடர்ந்தார்.

“நான் விரிவுரையாளராக வேலைக்குச் சேர்ந்த புதிதில் வொல்லேகா பல்கலைக்கழகத்தின் பிரசிடெண்ட் (அந்த ஊர் துணை வேந்தர்) எங்களிடம் பேசினார். ‘பல்கலைக் கழகம் ஆரம்பித்து ரெண்டு வருஷம்தான் ஆகிறது. இது ஒரு குழந்தைபோல... அதை வளர்த்தெடுப்பது உங்கள் கையில்தான் இருக்கு’ என அவர் சொன்னது நெகிழ வைத்துவிட்டது. கல்வியறிவுல பின்தங்கிய அந்தப் பகுதி மக்கள் பல வருஷமா அரசாங்கத்துக்கிட்ட போராடித்தான் அந்தப் பல்கலைக்கழகத்தைக் கொண்டு வந்திருக்காங்க. இதெல்லாம் சேர்ந்து இனி நாம இங்கேதான் இருக்கணும்னு முடிவெடித்தேன்!” என்று சொல்லும் கண்ணன் அம்பலம், வெற்றிகரமாக 12 வருடங்களைக் கடந்து பேராசிரியராகப் பணியைத் தொடர்கிறார்.

கண்ணன் அம்பலம்
கண்ணன் அம்பலம்

“ஒருநாள் ஒரு கிராமத்துக்குப் போயிருந்தேன். ஆறுகள் சின்னச்சின்னதா கிளை விரித்து ஓடும் சிற்றோடைகள் சூழ்ந்த வித்தியாசமான நிலப்பரப்பு அது. அங்கே வயசான ஒரு அம்மா ஆற்றைக் கடக்க முடியாம அவதிப்பட்டாங்க. பார்க்கச் சின்னதா இருக்குற இந்த ஆறுகள் திடீர் வெள்ளம் வரும்போது பலரைக் காவு வாங்கியிருக்கு. அப்போ நானும் என் மாணவர்களும் சேர்ந்து அங்கே கிடைச்ச மரங்கள், கற்கள் மற்றும் சிமென்ட் கொண்டு குட்டியா பாலம் ஒன்றைக் கட்டினோம். காலையில் ஆரம்பிச்சு மாலைக்குள் புதுப்பாலம் தயாராகிடுச்சு. மறுநாளிலிருந்து பயன்பாட்டுக்கு வந்தது. செம வரவேற்பு. அதன்பிறகு வெவ்வேறு கிராமங்களிலிருந்து பாலம் கட்டித்தரச் சொல்லி அழைப்பு வந்தது. இப்படி ஒரு வேகத்தில் ஆரம்பிச்சு இந்த 12 வருஷ எத்தியோப்பிய வாழ்க்கையில 50வது பாலத்தைத் தொடப்போறேன்.

ஒவ்வொரு பாலமும் ஒவ்வொரு சவாலோடு இருக்கும். ஒரு இடத்துல கம்புகள் கொண்டு கட்டிடலாம். இன்னொரு இடத்துல அதைச் செஞ்சா ஆற்று வெள்ளம் பாலத்தை அடிச்சுட்டுப் போயிடும். அதுக்குக் கற்கள் கொண்டு ஆற்றின் பரப்பளவைப் பாலம் அமையிற இடத்துல குறுக்கி, பிறகு கட்டணும். எல்லாமே நான் இணையத்துல பார்த்தும், சிறுவயதில் ஊரில் ஓடையின் குறுக்கே பாத்தி கட்டியும் தெரிஞ்சுகிட்ட எளிய முறைதான்.

எத்தியோப்பியாவின் பென்னிகுயிக் தமிழர்!

நான் கட்டிக்கொடுக்குற இந்தப்பாலத்துக்கு சில சிறப்பம்சங்கள் உண்டு. இதற்கான மூலப் பொருள்களான மரம், கற்கள் போன்றவற்றை மக்களைக் கொண்டு வரச் சொல்வேன். கம்பி, பைப், சிமென்ட் போன்றவற்றை வாங்கிட்டுப் போவேன். கூடவே என் மாணவர்கள் இருப்பார்கள். இப்படி ‘கம்யூனிட்டி பிரிட்ஜாக’ கூட்டு உழைப்பு இருந்தால்தான் இது நம்ம பொருள் என்ற பொறுப்பு மக்களுக்கு இயல்பா பாலத்தின் மீது வரும்.

இப்போ மக்களே ஆர்வமா வராங்க. சேர்ந்தே பாலங்களைக் கட்டுறோம். என் மாணவர்கள் என்னைப் பற்றி அந்த மக்கள்கிட்ட சொன்ன விஷயங்களைக் கேட்டு என்னை நன்கு கவனிச்சு அனுப்பணும்னு மெனக்கெடுவாங்க. ஊரிலேயே சௌகரியமான படுக்கையைக் கொண்டு வந்து போட்டுத் தூங்க வைப்பாங்க... அவ்வளவு பாசமான மனிதர்கள்!” சொல்லும்போதே நெகிழ்கிறார் கண்ணன் அம்பலம்.

அரசாங்கம் இவரின் முயற்சிகளை அங்கீகரித்திருக்கிறதா?

“சமூகப்பணிக்கான சிறந்த மனிதர் விருதைத் தொடர்ந்து எனக்களித்து கௌரவித்தது என் பல்கலைக்கழகம். இப்போது அந்த மக்களுக்கு இந்தப் பாலம் உருவாக்கும் தொழில்நுட்பம் வசமாகிவிட்டது. அரசாங்கம் என் முயற்சியைப் பார்த்து,

‘எங்களாலேயே முடியாது என ஒதுக்கிய இடங்களில் உங்கள் பாலங்கள் எங்களின் பார்வையையே மாற்றிவிட்டது. இவ்வளவு குறைந்த செலவில் இவ்வளவு உறுதியான பாலங்களை வடிவமைத்தது ஆச்சர்யம்தான். உங்களுக்கு நன்றி!’ என்று சொன்னது. உலகம் முழுவதும் வெபினார்களில் இந்தப்பாலங்களைப் பற்றியும் இதை உருவாக்க ஆன மனித முயற்சி பற்றியும் பேசிவருகிறேன்.

எத்தியோப்பியாவின் பென்னிகுயிக் தமிழர்!

இப்போது மாணவர்கள் மூலமும் செய்தித்தாள் வழியாகவும் என்னைப் பற்றிக்கேள்விப்பட்டு எனக்கான அழைப்பு மக்களிடமிருந்து வருகிறது. ‘கெபலே’ எனப்படும் அவர்களின் பஞ்சாயத்தைக் கூட்டி, பாலம் கட்டுவதற்கான பொருள்களைச் சேகரித்து வைத்திருப்பார்கள். நான் போய் வேலையை ஆரம்பிப்பேன். இப்படி ஆயிரக்கணக்கான கி.மீ எத்தியோப்பியாவிற்குள் குறுக்கும் நெடுக்குமாகப் பயணித்திருக்கிறேன். அந்த நாட்டின் புவியியல் சூழலியல் எல்லாமே எனக்கு இப்போது அத்துப்படி!

ஒரு கிராமத்தில் நீர்நிலையிலிருந்து வரும் கலங்கலான தண்ணீரை மக்கள் குடங்களில் எடுத்துச் செல்வதைப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது. ஆண்டுதோறும் மோசமான நீரால் அங்கு பலர் மரணிக்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டிருந்தேன். ‘நான் உங்களுக்கு நல்ல குடிநீர் ஏற்பாடு செய்து தருகிறேன்’ என்றதும் கிராம மக்கள் நம்பவே இல்லை. அரசாங்கத்திலிருந்து வந்த இன்ஜினீயர்களே முடியாது என்றதை இவர் எப்படி செய்யப்போகிறார் என நினைத்தார்கள். அந்த ஊற்றுப்பகுதியில் கூழாங்கற்கள், கரி போன்ற பொருள்களைக் கொண்டு எளியமுறையில் ஒரு வடிகட்டி உருவாக்கி, ஸ்படிகத் துல்லியமான நீரை வரவைத்துக் காட்டியதும் ஆச்சர்யப்பட்டார்கள். இது மிக எளிமையான, நம் மண்ணுக்கேற்ற சூழலியல் தொழில்நுட்பம். அம்மக்கள் என்னை வாஞ்சையோடு உச்சிமுகர்ந்தார்கள்.

எத்தியோப்பியாவின் பென்னிகுயிக் தமிழர்!

இப்போது வாரம் ஒரு பாலம், ஒரு நீர் ஊற்று என பிஸியாகவே என் நாள்கள் போகின்றன. மழைக்காலத்தில் மட்டும் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொள்வேன் பயணம் செய்வதற்காக. ஒரு மாதம் மட்டும் பல்கலைக்கழக விடுமுறையில் இந்தியாவுக்கு வருவேன்.

நீர் மேலாண்மையை உலகுக்குச் சொன்னவர்களே நாம்தான். கீழடி அகழாய்வில் கிடைத்த குளம், உறை கிணற்றுக்கான சுவடுகளே அவற்றுக்கான சான்றுகள்தான்” என்று பெருமிதம் படரப் பேசுகிறார்.

‘‘சோ.தர்மன் தன் ‘சூல்’ நாவலில் நீர் மேலாண்மை பற்றிய தரவுகளை கதாபாத்திரங்கள் வழி பகிர்ந்திருக்கிறார். அத்தனையும் உண்மை யான நம் பண்பாட்டின் கூறுகள். அவையெல்லாம் என் இளம்பிராயத்தில் நானே உணர்ந்தவை.

நம் முன்னோர்களின் அறிவு என் சிந்தனைவழி சிதறியிருப்பதாகவே எத்தியோப்பிய மண்ணில் நான் நிற்கும்போது உணர்கிறேன்!” என்கிறார் கண்ணன் அம்பலம்.