Published:Updated:

80ஸ் கிட், மாணவர் தலைவர், மனநலப் பிரச்னை... சிலியின் புதிய அதிபர் கேப்ரியல் போரிக்கின் கதை தெரியுமா?

கேப்ரியல் போரிக் | Gabriel Boric
News
கேப்ரியல் போரிக் | Gabriel Boric ( Luis Hidalgo | AP )

Obsessive Compulsive Disorder (OCD) என்ற மனநலப் பிரச்னை கேப்ரியல் போரிக்கிற்கு இருக்கிறது. இதை வெளிப்படையாக அவர் அறிவித்தே பிரசாரம் செய்தார்.

நம் ஊர் 80'ஸ் கிட்ஸ் நிறைய பேர் தங்களுக்குத் திருமணம் ஆகவில்லையே என்று கவலைப்படுகிறார்கள். ஆனால், ஒருவர் வீதிப்போராட்டங்கள் மூலம் புகழ்பெற்று ஆட்சியையே பிடித்துவிட்டார்.

'எதற்கெடுத்தாலும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தும் ஒருவரை அதிபர் ஆக்கினால், அவரால் நிலையான ஆட்சியைத் தரமுடியாது. நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கெடும். போராட்டம் நடத்துபவர்கள் ஆட்சி செய்ய சரிப்பட மாட்டார்கள்' என்ற பிரசாரத்தை மீறி சிலி நாட்டு மக்கள் அவருக்கு வாக்களித்துள்ளனர். குறிப்பாக பெண்கள் அதிகம் வாக்களித்துள்ளனர்.

கேப்ரியல் போரிக் | Gabriel Boric
கேப்ரியல் போரிக் | Gabriel Boric
AP

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அவர், கேப்ரியல் போரிக். நீளமாக முடியும் தாடியும் வளர்த்து, ஸ்டைலாக ஜெர்சி அணிந்து, உடலெங்கும் டாட்டூ போட்டுக்கொண்டு வீதியில் இறங்கிப் போராடிய மாணவர் தலைவர். 35 வயதில் இப்போது அந்த நாட்டின் அதிபராகி இருக்கிறார். கோட், சூட், டை அணிந்த மேல்தட்டு அரசியல்வாதிகளையே பார்த்துப் பழகிய நாட்டில், வீதிகளில் வலம்வந்த ஓர் இளைஞனை அதிபர் ஆக்கியிருக்கிறார்கள் மக்கள். சிலி நாட்டின் மிக இளம்வயதில் அதிபர் ஆனவர் அவர்தான். முடியைக் குறைத்து, ஃபார்மல் உடைகளால் டாட்டூக்களை மறைத்து கண்ணியமான அதிபர் கெட்டப் ஏற்றிருக்கிறார் கேப்ரியல் போரிக்.

தென் அமெரிக்க கண்டத்தின் தென் பகுதியில் வால் போல நீண்டிருக்கும் நாடு சிலி. ஆசிய, ஐரோப்பிய நாடுகளையோ, அமெரிக்காவையோ கூர்ந்து கவனிக்கும் அளவுக்கு தென் அமெரிக்க நாடுகளை நாம் கண்டுகொள்வதில்லை. அகஸ்டோ பினோசெட் என்ற சர்வாதிகாரி 18 ஆண்டுகள் இரும்புக்கரம் கொண்டு ஆட்சிசெய்து, ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தபோது சிலி குறித்து உலகம் கவலைப்பட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பினோசெட்டை வீழ்த்திவிட்டு அங்கு ஜனநாயகம் மலர்ந்தபோதும், ஊழலும் பாரபட்சமும் பெருகிவிட்டது. ஒருகாலத்தில் தென் அமெரிக்காவிலேயே வலிமையான பொருளாதாரமாக இருந்த சிலியில் இப்போது ஏழ்மை அதிகரித்துள்ளது. உலகிலேயே பொருளாதார சமத்துவமின்மை அதிகம் நிலவும் தேசங்களில் ஒன்றாக அது இருக்கிறது. வெறும் ஒரு சதவிகித பெரும் பணக்காரர்கள் கையில், நாட்டின் 25 சதவிகித சொத்துகள் போய்விட்டன. அவர்களே ஆட்சியைத் தீர்மானிக்கிறார்கள். பெருநிறுவனங்களுக்கு வரியைக் குறைத்து, அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தி, ஏழைகளுக்குத் துயரத்தைக் கொடுத்தது அரசு. இதை எதிர்த்து போராட்டங்கள் வெடித்தன. மெட்ரோ ரயில் கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிரான போராட்டத்தில் 29 பேர் உயிரிழக்கும் அளவுக்கு சூழல் இருந்தது.

கேப்ரியல் போரிக் | Gabriel Boric
கேப்ரியல் போரிக் | Gabriel Boric
AP
1986 பிப்ரவரி 11-ம் தேதி பிறந்தவர் கேப்ரியல் போரிக். சிலி பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்கும் மாணவராக இருந்தபோது, இலவச உயர்கல்வி வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் குதித்தார். அந்தப் போராட்டம் அவரை ஓர் அரசியல் தலைவராக உருவெடுக்க வைத்தது. அதன்பின் அவரால் படிக்க முடியவில்லை. 28 வயதிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சிலி மக்களுக்கு சமீப காலமாக அரசியல் கட்சிகள் மீது அதிருப்தி அதிகரித்துவிட்டது. சர்வாதிகாரி பினோசெட் காலத்தில் அமலுக்கு வந்த அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று மக்கள் போராடினர். இதற்காக 155 பேர் கொண்ட அரசியல் சட்ட நிர்ணய சபையை உருவாக்க அரசு முடிவு செய்தது. இந்தச் சபைக்கு இந்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடந்தபோது, பெரும்பாலான இடங்களில் சுயேச்சைகளே வென்றனர். முன்னணி அரசியல் கட்சிகள் இதனால் அதிர்ச்சி அடைந்தன. சுயேச்சைகளை பெரும்பான்மையாகக் கொண்ட அந்த சபைதான் புதிய அரசியல் சட்டத்தை உருவாக்குகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தச் சூழலில் இப்போது அதிபர் தேர்தல் வந்தபோது, இடதுசாரிக் கட்சிகள் இணைந்து கேப்ரியல் போரிக்கை வேட்பாளராக நிறுத்தின. கேப்ரியல் தன்னை கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டதில்லை. 'மிதமான சோஷியலிசவாதி' என்றுதான் தன் அடையாளத்தைச் சொன்னார். "சிலியின் தலையெழுத்தை இளைஞர்கள் மாற்றுவார்கள்" என்ற முழக்கத்துடன் தேர்தலை சந்தித்தார். எளிய மக்களுக்குப் பாதுகாப்பு தரும்விதமான பென்ஷன் திட்டத்தைச் சீரமைப்பது, அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு, பெரிய நிறுவனங்களுக்கு அதிக வரி விதிப்பது, சூழலைக் காக்கும் பசுமைப் பொருளாதாரம் ஆகிய வாக்குறுதிகளை அளித்தார்.

Obsessive Compulsive Disorder (OCD) என்ற மனநலப் பிரச்னை கேப்ரியல் போரிக்கிற்கு இருக்கிறது. இதை வெளிப்படையாக அவர் அறிவித்தார். 'அனுபவம் இல்லாத, பக்குவப்படாத, இப்படி ஒரு மனநல பாதிப்பு கொண்டவரை அதிபர் ஆக்குவது ஆபத்து' என்று எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்தன. அதையே, 'சிலி மக்கள் மனநலப் பிரச்னை குறித்து விவாதிப்பது நல்ல விஷயம்தான்' என்று கேப்ரியல் எதிர்கொண்டார்.
ஜோஸ் அன்டோனியோ காஸ்ட் | José Antonio Kast
ஜோஸ் அன்டோனியோ காஸ்ட் | José Antonio Kast
Luis Hidalgo | AP

அவரை எதிர்த்து வலதுசாரிக் கூட்டணி சார்பில் போட்டியிட்டவர், ஜோஸ் அன்டோனியோ காஸ்ட். சர்வாதிகாரி பினோசெட்டின் ஆட்சியை வெளிப்படையாகவே பாராட்டினார் அவர். சிலியை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுவந்த அவர் வழியில் ஆட்சி நடத்துவேன் என்று வாக்குறுதி கொடுத்தார். மக்கள் அவரை நிராகரித்துவிட்டனர்.

"இந்த நாட்டில் பணக்காரர்களுக்கு நீதி கிடைப்பது போலவே இனி ஏழைகளுக்கும் நீதி கிடைக்கும். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கான விலையை இனி ஏழைகள் கொடுக்க வேண்டி இருக்காது. அனைவரின் உரிமையும் மதிக்கப்படும்" என வெற்றிக் கொண்டாட்டத்தில் கேப்ரியல் போரிக் சொன்னார்.

சமீபகாலமாக அண்டை நாடுகளிலிருந்து சிலிக்கு அகதிகள் வருவது அதிகரித்துள்ளது. இதனால் இனவாத பிரசாரம் பெரிய அளவில் பரப்பப்படுகிறது. தேசத்தையே பிளவுபடுத்தும் அளவுக்கு இந்தப் பிரச்னை பெரிதாகியுள்ளது. நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் வலுவாகவே இருக்கின்றன. போரிக் வெற்றியைத் தொடர்ந்து அந்நிய முதலீடுகள் வருவது கேள்விக்குறி ஆகியுள்ளது. பெருநிறுவனங்கள் அவரை ஆபத்தானவராகப் பார்க்கின்றன. ஏற்கெனவே மோசமாக இருக்கும் பொருளாதாரம் இதனால் இன்னும் பாதிக்கப்படும்.

கேப்ரியல் போரிக் | Gabriel Boric
கேப்ரியல் போரிக் | Gabriel Boric
Matias Delacroix | AP

"நான் பொறுப்புடன் ஆட்சி நடத்துவேன். நான் சிலி மக்கள் எல்லோருக்குமான அதிபர். எல்லா மக்களின் நலன்களையும் கவனிப்பேன். இனி பேசுவதைவிட அதிகம் கேட்பேன். வலுவான எதிர்க்கட்சி இருப்பது நல்லதுதான். அது ஆரோக்கியமான உரையாடலுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரும்" என்று உறுதி கொடுத்திருக்கிறார் போரிக்.

சோஷியலிச அடையாளத்துடன் ஆட்சிக்கு வந்து, அதன்பின் மக்கள் விரோத ஆட்சியைத் தந்து நாற்காலியை விட்டு நகர மறுத்த பல தலைவர்களை தென் அமெரிக்கா பார்த்திருக்கிறது. கேப்ரியல் போரிக் அந்த வரிசையில் வருவாரா? அல்லது சிலி மக்களுக்கு புதிய விடியலைத் தருவாரா?