மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் போர்னோ மாகாணம் சிபோக்கில், 2014-ம் ஆண்டு நுழைந்த `போகோ ஹராம்' பயங்கரவாதிகள், 270 மாணவிகளைக் கடத்திச் சென்றனர். இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளைக் கிளப்பியது.

இதைத் தொடர்ந்து, #BringBackOurGirls என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது. கடும் அழுத்தத்தின் விளைவாக, பல வருட சிறைப்பிடிப்புக்குப் பின் 160 பெண்கள் அவர்களால் விடுதலை செய்யப்பட்டனர். காணாமல் போன மற்ற பெண்களின் நிலை மழுங்கடிக்கப்பட்டது. படிப்படியாக இந்தச் செய்தியின் தீவிரம் குறைந்து, மறைந்து போனது.
எட்டு வருடங்களான நிலையில், பிரான்ஸைச் சேர்ந்த ப்ருனே நௌரி (Prune Nourry) என்ற கலைஞர், காணாமல் போன அந்தப் பெண்களின் புகைப்படங்களை அவர்களின் குடும்பத்தினரிடம் பெற்று, அதை வொர்க் ஷாப்பிற்கு வந்த மாணவிகளுக்குக் கொடுத்துள்ளார்.
தென்மேற்கு நைஜீரியா இஃபேவில் உள்ள Obafemi Awolowo பல்கலைக்கழத்தில், ஒருநாள் அவுட்டோர் வொர்க் ஷாப்பில் பங்கேற்ற அந்த மாணவிகள், காணாமல்போன மாணவிகளின் நினைவாக சிற்பங்களை வடிவமைத்துள்ளனர். `சிலைகளும் சுவாசிக்கின்றன’ (Statues Also Breathe) என்ற தலைப்பில், 108 நைஜீரிய பெண்களின் டெரகோட்டா முகச்சிற்பங்கள் நைஜீரியா லாகோஸ் நகரில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து ப்ருனே நௌரி கூறுகையில், ``இந்த மாணவிகளுக்கு நம்மால் எதுவும் செய்ய முடியாமல் போனது குறித்து பயனற்றவர்களாக உணர்ந்தோம். இந்தச் சிற்பங்களின் மூலம் ஒரு சிறிய விஷயத்தையாவது கொடுக்க முடிந்தது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பல வருடங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட இஃபே தலை ( Ife heads) என்ற கலைவடிவத்தால் ஈர்க்கப்பட்டு, 108 நைஜீரிய பெண்களின் முகங்களை வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.