Published:Updated:

பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுமா அமெரிக்கா? - மாநாடுகள் உணர்த்தும் உண்மை #MyVikatan

Trump
Trump ( Alex Brandon / AP )

2015-ம் ஆண்டு மேற்கொண்ட பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கா. இதற்கான முடிவை ஏற்கெனவே அதிபர் ட்ரம்ப் எடுத்துவிட்டாலும் இந்த வருட நவம்பரில்தான் வெளியேற முடியும் என்கிற ஒப்பந்தத்தின் விதிகளின்படி அந்த நாளுக்காகக் காத்திருக்கிறது அமெரிக்கா.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

பரபரப்பான கொரோனாவுடனான யுத்தத்துக்கு இடையே அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடக்கவிருக்கிறது (?). தமிழக வம்சாவளி அமெரிக்கர் கமலா ஹாரிஸ் உட்பட பல வேட்பாளர்கள் களமிறங்கி இறுதியாக இப்போது `ஜோ பிடனும்' , தற்போதைய அதிபர் `ட்ரம்ப்பும்' களத்தில் உள்ளனர். நவம்பர் 3-ம் தேதி தேர்தல். ஆனால், நமது பின்வரும் அலசல் நவம்பர் 4-ம் தேதியுடையது.

ஆம், அன்றுதான் அமெரிக்கா 2015-ம் ஆண்டு மேற்கொண்ட பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுகிறது.

Trump
Trump
Alex Brandon

பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் பொதுநோக்கு புவியின் வெப்பநிலையை 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைக்க வேண்டும் என்பதே.

பொதுவாக காலநிலை ஒப்பந்தங்கள் குறித்த விவாதங்கள் நடைபெறும்போது வளரும் நாடுகளுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுகிறது என்று வளர்ந்த நாடுகளும், வளர்ந்த நாடுகளுக்கு சாதகமாக உள்ளதென்று வளரும் நாடுகளும், பரஸ்பரம் குற்றம் சாட்டிவருகின்றன.

சுற்றுசூழல் பொருளாதாரத்தோடு இணைந்துள்ளதால் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் மற்றும் கடைப்பிடிப்பதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. இந்நிலையில்தான் 2015-ல் பாரிஸ் ஒப்பந்தம் நிறைவேறியது. பல நாடுகள் எதிர்ப்புக்குரல் எழுப்பினாலும் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் காலநிலை குறித்த ஆர்வத்தாலும், இலாகவமான காய் நகர்த்துதலின் மூலமும் 196 நாடுகள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டன.

Climate change
Climate change
Markus Spiske on Unsplash

அதிகரிக்கும் வெப்பநிலை, வறட்சி, காட்டு தீ, காற்று மாசு, நீர் மாசு, பெருவெள்ளம், பனிப்பாறை உருகி கடல் மட்டம் உயர்தல், ஓசோன் படலம் பாதிப்பு போன்ற இடர்கள் மூலம் இயற்கை சமநிலை பாதிக்கப்பட்டு உலகத்துக்கு பல சவால்களை தந்திருக்கிறது. உலகம் இத்தகைய கடினமான இயற்கை பேரிடர்களை சந்தித்துக்கொண்டிருக்கும்போது, உலகின் சக்திவாய்ந்த நாடான அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவது மேலும் சிக்கலை உண்டாக்கும்.

ஏனெனில், சீனா போன்ற கார்பனை அதிகம் வெளியிடும் நாடுகளுக்கும், பெரும் தொழில் நிறுவனங்களுக்கும் அமெரிக்காவின் வெளியேற்றம் பெரும் வாய்ப்பாக அமைந்துவிடும். அமெரிக்காவே வெளியேறுகிறது என்றால், அதை தொடர்ந்து மேலும் பல நாடுகள் இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் அபாயம் இருக்கிறது.

ஒபாமாவும் ட்ரம்ப்பும் மட்டுமல்ல, வரலாற்றில் அமெரிக்க அதிபர்கள் காலநிலை குறித்து வேறுபட்ட நிலைப்பாட்டை எடுப்பது வழக்கம்தான். ஒபாமாவின் முயற்சியில் நிறைவேறிய ஒப்பந்தத்திலிருந்து தற்போது வெளியேறுவதாக ட்ரம்ப் முடிவெடுத்திருக்கிறார். இதற்கான முடிவை ஏற்கெனவே அதிபர் ட்ரம்ப் எடுத்துவிட்டாலும் இந்த வருட நவம்பரில்தான் வெளியேற முடியும் என்கிற ஒப்பந்தத்தின் விதிகளின்படி அந்த நாளுக்காகக் காத்திருக்கிறது அமெரிக்கா.

Vikatan

உலகம் காலநிலை மாற்றம் குறித்து வேறு வேறு கருத்துகளை கொண்டிருக்கிறது. அவற்றை இதுவரையில் நடந்துவந்த மாநாடுகளின் மூலமே அறியலாம். காலநிலை ஒப்பந்தங்களின் காலக்கோட்டினை மேலோட்டமாகப் பார்த்துவிடுவோம்.

Industry
Industry
Unsplash

1900-ம் ஆண்டுக்கு முன் வெகு சில காலநிலை ஒப்பந்தங்களே புழக்கத்தில் இருந்தன. அதுவும் கனிம வளங்கள் பங்கீடு, நதிநீர் மற்றும் நீர்வழித்தட பங்கீடு போன்றவற்றை சார்ந்த ஒப்பந்தங்களாவே இருந்தன.

1902-ம் ஆண்டு முதன்முதலாக வேளாண் தொழிலுக்கு பயன்படும் பறவைகளைப் பாதுகாப்பது குறித்த கூட்டமும், 1916-ல் கனடா மற்றும் அமெரிக்காவிற்கிடையில் புலம்பெயரும் பறவைகளை பாதுகாக்கும் ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது. 1911 சீல்களை பேணிப்பாதுகாக்கும் ஒப்பந்தமும் கையெழுத்தானது. London convention for protection of wild animals, birds, and fish in Africa ஒப்பந்தம் மட்டும் விலங்கு, பறவைகள், மீன்களைக் குறித்து பேசியதாக சூழலியல் அறிஞர் ஜெர்ரி நக்சாம் (Gerry Nagtzaam) குறிப்பிடுகிறார்.

1930-லிருந்து 1940 வரை நாடுகள் தாவரங்களையும் விலங்குகளையும், பாதுகாப்பதின் அவசியத்தை உணர்ந்து மேற்கத்திய நாடுகள் சில ஒப்பந்தங்களை மேற்கொண்டன.

1940-50-களில் இதற்கான சூழல் எதுவும் இன்றி உலகப்போர்களால் சுற்றுசூழலுக்கும் மனிதகுலத்துக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அணுகுண்டு வீச்சு, நீர் மூழ்கிக் கப்பலைத் தாக்குதல், எண்ணெய்க் கப்பலை மூழ்கடித்தல் எனச் சூழல் மிகவும் சேதமானது. இதன்காரணமாகவே 50-களில் எல்லாம், போருக்கு பிறகான சேதத்தால் ஏற்பட்ட மாசு சீரமைப்பைச் சார்ந்ததாக சூற்றுச்சூழலியல் இருந்தது.

Forest
Forest
daniel plan on Unsplash

1960-களில் இருந்துதான் சர்வதேச சுற்றுச்சூழலியல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு, சுற்றுச்சூழலியல் இயக்கங்களும் சட்டங்களும் தோன்றின.

1962-ம் ஆண்டு ராச்சேல் கார்சன் எழுதிய `சைலன்ட் ஸ்ப்ரிங்' என்னும் புத்தகதில் பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஏற்படும் உணவுச்சங்கிலி பாதிப்பு குறித்தும் எழுதப்பட்டிருந்தது, அப்புத்தகம் ஐந்து லட்சம் பிரதிகளுக்குமேல் விற்றது. சூழலியல் சார்ந்த ஒரு புத்தகம் தொடர்ந்து 31 வாரங்களுக்கு மேல் அதிகம் விற்கப்படும் புத்தகமாக சாதனை படைத்தது.

ஆனால், மாநாடுகளைப் பொறுத்தவரை இதுவரையில் இரண்டு அல்லது மூன்று நாடுகளுக்கிடையே மட்டுமே நடைபெற்றது. இயற்றப்பட்ட ஒப்பந்தங்களும் ஒரு தெளிவற்ற நிலையில் இருந்தன.

1967-68-களில் மேற்கு ஐரோப்பாவில் பெய்த அமிலமழை போன்ற காரணங்களால் ஸ்வீடன் காலநிலை மாநாட்டை நடத்த ஒப்புக்கொண்டது. அதிக நாடுகள் பங்கேற்று சுற்றுசூழல், மனித உரிமைகள் குறித்து விவாதித்த மாநாடு என்றால் அது ஸ்வீடன் ஸ்டாக் ஹோம் மாநாடுதான்.

Save Our Planet
Save Our Planet
Markus Spiske on Unsplash

ஸ்டோக்ஹோம் (1972)

1972-ம் ஆண்டு நடைபெற்ற மாநாடுதான் சர்வதேச சுற்றுச்சூழல் சட்டங்களை இயற்றுவதற்கு அடித்தளமிட்டது. 133 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் உட்பட 6,000 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் தலைமையில் ஒரு குழு ஸ்டோக்ஹோம்க்கு பயணித்தது.

அன்றும் வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் உள்ள பிரச்னைகள் விவாதிக்கபட்டன. மனித உரிமைகள், இயற்கை வளங்கள், மாசு, குறித்தும் மனிதன் வாழ்வதற்கேற்ப சுற்றுச்சூழல் அமைவதற்கு வலியுறுத்தப்பட்டது. நாடுகள் எல்லைகடந்து ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க விதிகள் ஏற்படுத்த வேண்டும் என ஒப்புக்கொள்ளப்பட்டது. சுற்றுச்சூழல் குறித்து எடுக்கப்பட வேண்டிய 109 பரிந்துரைகள் உருவாக்கப்பட்டன. UNEP என்னும் சர்வதேச சுற்றுச்சூழல் நிறுவனத்தை நிறுவ வழிவகுத்தது.

ரஷ்யா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. சில நாடுகள் மாநாட்டு தீர்மானங்களை ஏற்று நடக்க ஒப்புதல் அளித்தன. பல நாடுகள் வெவேறு பிரச்னைகளை முன்வைத்தன. ஆனால், பிரச்னைகளுக்கு தீர்வு எட்டாமல் இந்த மாநாடு முடிவடைந்தது.

ரியோ மாநாடு: 1992

ஸ்வீடன் ஸ்டோக்ஹோம் மாநாடு முடிந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு, 1992-ம் ஆண்டு ரியோ நகரில் மற்றோர் மாநாடு நடைபெற்றது. 176 நாடுகள், 103 நாடுகளின் தலைவர்கள், 6,000 பத்திரிகையாளர்கள் என உலகம் முழுவதிலுமிருந்து 30,000 பேர் பங்கேற்றிருந்தனர்.

Forest
Forest
Unsplash

எல்லா நாடுகளும் அளவுக்கு அதிகமாக (over consumption) வளங்களை எடுப்பதாக அமெரிக்கா தனது கருத்தைப் பதிவுசெய்தது. ரியோ மாநாட்டு பிரகடனம் சர்வதேச சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், சுற்றுச்சூழல், மனித உரிமைகள், ஏழைகளின் தேவையறிந்து பொருளாதார வளர்ச்சியில் ஈடுபடவும் கேட்டுக்கொள்ளும் 27 கோட்பாடுகளை அறிவித்தது.

வளரும் நாடுகள் எல்லாம் மூலப்பொருள் பற்றாக்குறை குறித்து விவாதித்தன. மேலும், ரியோ மாநாட்டு ஒப்பந்தம் வளரும் நாடுகளுக்கு சாதகமாக இல்லை என்பதை சுட்டிக்காட்டி பல நாடுகள் கையொப்பமிட மறுத்தன. ஆனாலும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எந்தவொரு முடிவும் எட்டாமல். மாநாடு முடிவுபெற்றது.

Kyoto ஒப்பந்தம் 1997

Kyoto ஒப்பந்தம் 11 டிசம்பர் 1997-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தம், 36 தொழில்மயமான நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் (emission) கரியமில வாயு மற்றும் இதர ஊறு விளைவிக்கும் வாயு உமிழ்வு அளவிற்கு, இலக்கு நிர்ணயித்தது. 1990இல் இருந்த நிலையில் இருந்து 5 சதவிகிதம் அளவுக்கு ஊறு விளைவிக்கும் வாயு உமிழ்வு அளவை 2008-2012 ஆண்டுக்குள் குறைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. க்ரீன் ஹவுஸ் எமிசன் எனப்படும் வாயுக்கள் (கார்பன், மீத்தேன்) உமிழும் அளவை உலக நாடுகள் ஒரே முறையில் கணக்கிட்டு பதிவு செய்யவும் வழிகாட்டு நெறிகளை வகுத்தது.

Forest
Forest
Matt Howard on Unsplash

ரஷ்யா பல ஆண்டுகள் இந்த ஒப்பந்தத்தில் இணையாமல் இருந்தது. பெரும் முயற்சிக்குப் பின் 2005-ம் ஆண்டு ரஷ்யா ஏற்றுகொண்ட பிறகு இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. ஆனால், 2011-ல் கனடா இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது.

ஜோஹன்னஸ்பர்க் மாநாடு: 2002

இந்த மாநாட்டில் நிலையான வளர்ச்சி (Sustainable development) குறித்து விவாதிக்கப்பட்டது, இரட்டை கோபுர தாக்குதல் இந்த மாநாட்டின் விவாதத்தை தீவிரவாத தாக்குதல்கள் குறித்த பிரச்னைகளையும், காலநிலை மட்டுமின்றி வேறு பிரச்னைகள் குறித்த விவாதங்களுக்கும் கொண்டுசென்றது.

ரியோ +20 (2012)

எங்களுக்குத் தேவை எதிர்காலம் என்ற குரலோடு இந்த மாநாடு 45,000 பேருடன் 150 நாட்டின் தலைவர்களுடன் நடந்தது. ஆனால், பராக் ஒபாமா, ஏஞ்செலா மார்க்கெல், டேவிட் கேமரூன் போன்ற வளர்ந்த நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை. இந்த மாநாட்டில்தான் 'கிரீன் எகானமி' என்னும் சொல்லாடல் பயன்படுத்தப்பட்டது. இந்த மாநாட்டிலும், பல விவாதங்கள் எழுந்தன. ஆவணத்தில் நூறு பத்திகளுக்கும் மேல் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எல்லோருக்கும் ஒரே மாதிரியான திட்டம் பொருந்தாது என்று எதிர்ப்பு குரல்கள் எழுந்தன.

Fire
Fire
Unsplash

பாரிஸ் 2015

பாரிஸ் மாநாடு, 2015-ம் ஆண்டு 30 நவம்பர் முதல் 13 டிசம்பர் வரை நடைபெற்றது. இதில் 196 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

நமது நாட்டிலிருந்து பிரதமர் மோடி பங்கேற்று “இன்னும் சில நாள்களில் புவி கோளின் விதியை தீர்மானிக்கபோகிறோம்” என்று தன் உரையை தொடங்கி, இந்தியா எடுக்கப்போகும் நடவடிக்கைகளை பற்றி சுருக்கமாக விவரித்தார்.

அமெரிக்காவின் சார்பில் பராக் ஒபாமா பங்கேற்று, "உலகத்தின் முதல் பொருளாதார மற்றும் உலகின் இரண்டாவது கார்பன் உமிழியாகவும் உள்ள நாட்டிலிருந்து வந்திருக்கிறேன்" எனப் பேசினார். தொடர்ந்து, "அதிக வெப்பமான 15 ஆண்டுகளில் 14 ஆண்டுகள் 2000-ம் ஆண்டிலிருந்து 2015-ம் ஆண்டுக்குள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

உலகில் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் முதல் தலைமுறை நாம்தான். அதை சரிசெய்ய முடிந்த கடைசி தலைமுறையும் நாம்தான்" எனக்கூறி அமெரிக்கா அதற்காக எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

பல ஆண்டுகளின் போராட்டத்திற்கு பிறகு, காலநிலை மாநாடுகளில் 2015 பாரிஸ் ஒப்பந்தம் மட்டும்தான், அனைத்து நாடுகளையும் காலநிலை பாதிப்பு குறித்த ஒரு பொதுவான முடிவிற்கு வரவைத்தது.

Dry land
Dry land
Unsplash

உலகின் வெப்பநிலை 2 டிகிரி அளவுக்கு குறைத்து, (1.5 டிகிரி அளவிற்கு வெப்பநிலை உயர்ந்தாலும்) தொழில்மயதிற்கு முந்தைய வெப்பநிலையில் பூமியை தக்கவைக்க வேண்டியதுதான் இலக்கு. இதற்கு தேவையான உலக நாடுகளின் உறுதியை பெறுவதுதான் இந்த மாநாட்டின் பொதுவான நோக்கமாக இருந்தது.

இவ்வாறு பெருமுயற்சி கொண்டு 196 நாடுகளை இணைத்து ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்ததிலிருந்துதான் ட்ரம்ப் நவம்பர் 4-ல் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

அதற்கு அவர் கூறும் காரணம், "பாரிஸ் ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு இழப்பை ஏற்படுத்தி தொழில் நிறுவனங்களை முடக்குகிறது. இது அமெரிக்கர்களின் நலனுக்கு எதிரானது. சீனா இன்னும் பல ஆண்டுகளுக்கு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ள இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது. ஆனால் அமெரிக்கா அவ்வாறு செய்ய அனுமதிக்கவில்லை. மேலும் அனைத்து நாடுகளும் ஒருவேளை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு கடுமையாக கடைப்பிடித்தாலும் பாரிஸ் ஒப்பந்தத்தின் மைய கருவான 2 டிகிரி குறைப்பது இயலாதது" இவ்வாறு கூறுகிறார்.

இதற்கு சில நிறுவனங்களின் ஆய்வுகளை மேற்கோள் காட்டினாலும், அமெரிக்கர்களிடையே கூட இது ஒரு விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது. ட்ரம்ப் சொல்லும் அந்தக் கணக்குப்படி பார்த்தால் இந்தியாவும் சீனாவும்தான் அதிக வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும். அமெரிக்காவை தொடர்ந்து மற்ற நாடுகளும் வெளியேறினால் மீண்டும் உலகம் சுற்றுசூழல் குறித்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது அவ்வுளவு ஒன்றும் எளிதல்ல என்பதை கடந்த கால மாநாடுகளின் வரலாறு கூறுகிறது.

Antarctica
Antarctica
Agustín Lautaro on Unsplash

இந்நிலையில் 'தி கார்டியன்' பத்திரிகை இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறும்போது ஏற்படும் பாதிப்பு குறித்து வரும் செப்டம்பர் 21 காலநிலை வாரத்தில் உலக பத்திரிகை நிறுவனங்களுடன் இணைந்து இளம்வாக்காளர்களுக்கு கொண்டுபோய் சேர்க்க உள்ளது. மேலும் இது குறித்து நூறு நாள்களுக்கு தொடர்ந்து எழுதுவதாக அறிவித்து செயல்படுத்தியும் வருகிறது. இந்த முன்னணி பத்திரிகை புதைப்படிம நிறுவனங்களின் விளம்பரங்களைப் பெறுவதில்லை என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் தேர்தல் முடிவுகள், அமெரிக்கர்களின் தலையெழுத்தை மட்டுமல்ல. ஒட்டுமொத்த உலகின் நலன் சார்ந்ததே. தேர்தலில் ட்ரம்ப் தோல்வியுற்றால், அமெரிக்காவின் தற்போதய நிலைப்பாடு மாறலாம்.

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகித் தோன்றாக் கெடும்

என்னும் குறளுக்கிணங்க, தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடித்து குறைந்தபட்சம் நாமாவது அளவறிந்து இயற்கை வளங்களை பயன்படுத்துவோம்.

- நா.உமாசங்கர், சந்தூர்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு