Published:Updated:

அமெரிக்காவில் மோடி | குவாட் கூட்டணி உருவானது ஏன்... சீனாவின் கோபமும், ஆபத்துகளும்!

மோடி - ஜோ பைடன்

''ஆசிய நாடுகளுக்குள் இருக்கும் நல்லிணக்கத்தைக் கெடுப்பதற்கு அமெரிக்கா செய்யும் சதியே 'குவாட்' கூட்டணி'' என்று சீனா கடுமையாக விமர்சனம் செய்கிறது. தனக்கு ஆதரவாக இருக்கும் பல நாடுகளை 'குவாட் கூட்டணியில் சேர்ந்துவிடக்கூடாது' என சீனா எச்சரிக்கிறது.

அமெரிக்காவில் மோடி | குவாட் கூட்டணி உருவானது ஏன்... சீனாவின் கோபமும், ஆபத்துகளும்!

''ஆசிய நாடுகளுக்குள் இருக்கும் நல்லிணக்கத்தைக் கெடுப்பதற்கு அமெரிக்கா செய்யும் சதியே 'குவாட்' கூட்டணி'' என்று சீனா கடுமையாக விமர்சனம் செய்கிறது. தனக்கு ஆதரவாக இருக்கும் பல நாடுகளை 'குவாட் கூட்டணியில் சேர்ந்துவிடக்கூடாது' என சீனா எச்சரிக்கிறது.

Published:Updated:
மோடி - ஜோ பைடன்
மோடி என்றாலே விமானங்களும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுமே நினைவுக்கு வரும். கொரோனா அதைக் கனவுக்காலம் ஆக்கியிருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரதமர் மோடி வெளிநாடு செல்கிறார். அமெரிக்காவில் நடைபெறும் குவாட் நாடுகளின் கூட்டத்தில் (Quad Summit) அவர் பங்கேற்கிறார்.

இந்த இடத்தில் பலருக்கும் இரண்டு கேள்விகள் எழும். முதல் கேள்வி, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் நண்பரான மோடியிடம் புதிய அதிபர் ஜோ பைடன் எப்படி நடந்து கொள்வார்? இரண்டாவது கேள்வி, அது என்ன குவாட்?

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தாண்டி, பல காரணங்களுக்காக இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனவே, மோடியுடன் இணக்கமாக நடந்துகொள்ளவே ஜோ பைடன் விரும்புவார்.

சொல்லப் போனால், அமெரிக்க ஆட்சி மாற்றத்தால் மோடியை விட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதிபரான பிறகு ஜோ பைடன் மோடியுடன் இரண்டு முறை போனில் பேசிவிட்டார். ஆனால், இம்ரான் கானுடன் இதுவரை மரியாதை நிமித்தமாகக்கூட பேசவில்லை. இது இம்ரான் கானுக்குப் பெரிய கௌரவப் பிரச்னையாக இருக்கிறது. 'அவர் ரொம்ப பிஸியாக இருப்பார் போலிருக்கிறது' என்றுகூட ஒரு பேட்டியில் இம்ரான் சொன்னார். பாகிஸ்தான் அமைச்சர்கள் சிலர் ஜோ பைடனை இதற்காக கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள்.

இம்ரான் கான்
இம்ரான் கான்

பாகிஸ்தான் எப்போதும் அமெரிக்காவின் செல்லப்பிள்ளை. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் எத்தனை சில்மிஷங்கள் செய்தாலும், அந்த நாட்டை அமெரிக்கா செல்லம் கொஞ்சும். ஆனால், ஜோ பைடன் அப்படிச் செய்யவில்லை. இந்தியாவிலிருந்து நரேந்திர மோடியைத்தான் முதலில் அமெரிக்கா அழைக்கிறார்.

அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் இணைந்து 'குவாட்' என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளன. குவாட் தலைவர்களின் முதல் நேரடிக் கூட்டம் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதற்குத்தான் மோடி அமெரிக்கா சென்றிருக்கிறார்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

'குவாட்' என்ற வார்த்தைக்கு 'நான்கு புறமும் கட்டமைப்புகள் கொண்ட நடைவெளி' என அர்த்தம். இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் என இரண்டு கடல்களைக் கொண்ட அகன்ற வெளியின் நான்குபுறமும் இருக்கும் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளும் உருவாக்கியிருக்கும் இந்தக் கூட்டணிக்கு பெயர் பொருத்தம் இதனால் வந்தது. ஆனால், சீனா இந்தக் கூட்டணியைக் கடுமையாக எதிர்க்கிறது. காரணம், சீனாவுக்கு நான்கு மூலைகளிலும் இந்த நாடுகள் இருக்கிறது.

China's President Xi Jinping
China's President Xi Jinping
Bebeto Matthews

'குவாட்' கூட்டணி உருவானது தற்செயலான ஒரு விஷயம். கடந்த 2004-ம் ஆண்டு இந்தியாவை சுனாமி தாக்கியது. அதைத் தொடர்ந்து, 'கடல் போக்குவரத்தைப் பாதுகாக்க வேண்டும், பேரிடர் நிவாரணப் பணிகளில் இணைய வேண்டும்' என இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகியவை கூடிப் பேசின. அப்போதே சீனா இதை எதிர்த்தது. சீனாவின் கடல் ஆதிக்கத்தை எதிர்க்கவே இந்தக் கூட்டணி உருவானது என அந்த நாடு கருதியது.

உலக அளவிலான சரக்குப் போக்குவரத்தில் இந்தோ-பசிபிக் கடல் பகுதி முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது. உலக நாடுகளின் 42 சதவிகித ஏற்றுமதியும், 38 சதவிகித இறக்குமதியும் இந்தக் கடல்சார் கப்பல் போக்குவரத்து வழியாகவே நிகழ்கின்றன. எனவே, இந்தக் கடல் பிரதேசத்தில் சீனாவின் கை ஓங்குவது ஆபத்து என அமெரிக்கா கருதுகிறது. இதனாலேயே அந்த நாடு 'குவாட்' கூட்டணியில் ஆர்வம் காட்டியது.

இந்தக் கூட்டணியில் இந்தியாவுக்கு மட்டும் பல சங்கடங்கள் உள்ளன. அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்கெனவே ராணுவக் கூட்டணி இருக்கிறது. அந்தக் கூட்டணியில் இந்தியா இணைய முடியாது. அமெரிக்க சார்பு நாடாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள இந்தியா விரும்பவில்லை. சீனா மற்றும் ரஷ்யாவுடன் ஏற்கெனவே ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு, பிரிக்ஸ், போன்ற கூட்டமைப்புகளில் இந்தியா இருக்கிறது. குவாட் கூட்டணி வலுவானால், இந்த உறவுகள் பாதிக்கப்படலாம்.

ஜோ பைடன்
ஜோ பைடன்
Evan Vucci
அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் சீனாவிலிருந்து தள்ளியே இருக்கின்றன. ஆனால், சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாடாக இந்தியா இருக்கிறது. அதனால், 'குவாட் என்ன மாதிரி கூட்டணியாக இருக்கும்? இதில் இணைவதால் இந்தியாவுக்கு என்ன லாபம்?' என்ற கேள்விகள் நம் அரசுக்கு இருந்தன.

இடையில் வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது அமெரிக்கா. அப்போது வட கொரிய அதிபர் கிம்மை வழிக்குக் கொண்டுவர சீனாவின் உதவி அமெரிக்காவுக்குத் தேவைப்பட்டது. இதேபோல ஆஸ்திரேலியாவுக்கும் வர்த்தகத் தேவைகள் இருந்தன. எனவே, குவாட் அமைப்பு கிடப்பில் போடப்பட்டது.

இந்தக் கொரோனா காலத்தில் சீனாவால் இந்த நான்கு நாடுகளுமே பல பிரச்னைகளை சந்தித்தன. இந்தியாவுக்கு சீனாவால் எல்லைப் பிரச்னை. ஜப்பானுக்கு சீனக் கடல் எல்லையில் பிரச்னை. கொரோனாவால் உலகிலேயே மோசமாகப் பாதிக்கப்பட்ட அமெரிக்கா, அதற்காக சீனாவைக் கடுமையாகக் குற்றம் சாட்டியது. 'சீனாவின் ஆய்வுக்கூடத்திலிருந்து கொரோனா கிருமி பரப்பப்பட்டதா என விசாரிக்க வேண்டும்' என்றது ஆஸ்திரேலியா. இதனால் அந்த நாட்டுக்குச் செய்யும் ஏற்றுமதிக்கு சீனா கட்டுப்பாடுகள் விதித்தது.

President Joe Biden meets with Australian Prime Minister Scott Morrison
President Joe Biden meets with Australian Prime Minister Scott Morrison
Evan Vucci

இப்படி சீனாவால் பாதிக்கப்பட்ட நால்வரும் இணைந்து குவாட் கூட்டணிக்கு இப்போது உயிர் கொடுத்திருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக இந்தியப் பெருங்கடலில் 'மலபார் கடல் பயிற்சி' என்ற பெயரில் இந்தியக் கடற்படை பயிற்சி செய்யும். அமெரிக்கா மற்றும் ஜப்பான் கடற்படைகள் இதில் இணையும். கடந்த ஆண்டு இந்தப் பயிற்சியில் முதன்முறையாக ஆஸ்திரேலியா இணைந்தது. குவாட் கூட்டணி மீண்டும் உருவாக அது விதை போட்டது. இந்த ஆண்டு மார்ச் மாதம் நான்கு நாடுகளின் தலைவர்களும் வெர்ச்சுவல் சந்திப்பு நடத்தினார்கள். இப்போது நேரில் சந்திக்கிறார்கள்.

எதிர்காலத்தில் 'குவாட் பிளஸ்' என்ற பெயரில் தென் கொரியா, நியூசிலாந்து, வியட்நாம் என பல நாடுகளையும் இதில் சேர்க்க இருக்கிறார்கள்.

ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும்விதமாக நெடுஞ்சாலைகளையும் ரயில் பாதைகளையும் உருவாக்குகிறது சீனா. இன்னொரு பக்கம் பல நாடுகளில் துறைமுகங்களையும் கட்டுகிறது. இப்படி உலகின் அசைக்க முடியாத வல்லரசாக தன்னை நிரூபிக்க நினைக்கும் சீனாவுக்கு முட்டுக்கட்டைப் போட நினைக்கிறது 'குவாட்' கூட்டணி.

இதனால், ''ஆசிய நாடுகளுக்குள் இருக்கும் நல்லிணக்கத்தைக் கெடுப்பதற்கு அமெரிக்கா செய்யும் சதியே 'குவாட்' கூட்டணி'' என்று சீனா கடுமையாக விமர்சனம் செய்கிறது. தனக்கு ஆதரவாக இருக்கும் பல நாடுகளை 'குவாட் கூட்டணியில் சேர்ந்துவிடக்கூடாது' என சீனா எச்சரிக்கிறது.

சீனாவின் எதிரிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணி என்றாலும், குவாட் தலைவர்கள் இதுவரை ராணுவ ஒத்துழைப்பு பற்றிப் பேசவில்லை. பருவநிலை மாற்றம், கொரோனா போன்ற விஷயங்களையே இம்முறை சந்திப்பில் பேச இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், கொரோனா கட்டுப்பாடுகள் இருக்கும் நேரத்தில் வெறுமனே இந்த விஷயங்களை மட்டுமே விவாதிப்பதற்காக இந்தச் சந்திப்பு நடக்கப் போவதில்லை என்பது நிஜம்.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா
'குவாட்' கூட்டணியில் இந்தியாவுக்கு என்ன லாபம் கிடைக்கப் போகிறது என்பது முக்கியமானது. ஏனெனில், இந்தக் கூட்டணி மீது சீனாவுக்குக் கோபம் வந்தால், அது முதலில் இந்தியாவையே பாதிக்கும். எல்லையில் வந்து சீன ராணுவம் பிரச்னை செய்யும்.

எனவே, 'சீனாவின் எதிரிகளுடன் நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்வதன் மூலம் இந்தியாவுக்கு வலிமை கிடைக்கப் போகிறதா' என்பதைத் தீர்மானிப்பது முக்கியம். இல்லாவிட்டால், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெறும் வல்லரசுப் பனிப்போரில் உருட்டப்படும் பகடைக்காயாக இந்தியா மாறிவிடும்!