Published:Updated:

கொரோனா ஊரடங்கு... உலகளவில் அதிகரித்துள்ள காவல்துறையினரின் வன்முறைச் செயல்கள் - ஓர் அலசல்!

காவல்துறை சோதனை
காவல்துறை சோதனை

காவல்துறையினரின் அதிகாரங்கள் வரம்பு மீறி தனி மனித உரிமைகளைப் பறிக்கும் செயலாகவும் சில வேளைகளில் உருவெடுத்துள்ளது.

கொரோனா வைரஸ், உலக அளவில் எதிர்பார்த்த பாதிப்புகளைக் கடந்து, தீர்க்க முடியாத மற்றும் சிக்கலுக்குள்ளான பல பாதிப்புகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் தங்களின் உள்கட்டமைப்புகளுக்கு ஏற்ப, நெறிமுறைகளை வகுத்து தேசிய அளவிலான ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் நடமாட்டம் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற முக்கிய நோக்கத்துக்காகவே ஊரடங்கை உலக நாடுகள் அறிவித்தன. ஊரடங்கு விதிகளை மக்கள் கடைப்பிடிப்பதை உறுதிசெய்ய காவல்துறைக்கு அதிகப்படியான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், காவல்துறையினரின் செயல்பாடுகள், வரம்பு மீறி தனி மனித உரிமைகளைப் பறிக்கும் விதமாக பல இடங்களில் உருவெடுத்துள்ளது.

ஜார்ஜ் ஃப்ளாய்ட்
ஜார்ஜ் ஃப்ளாய்ட்
AP

கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்காவில் நடத்தப்பட்ட காவல்துறையினரின் கொடூரமான தாக்குதல் சம்பவம், உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. புகையிலை வாங்குவதற்காக கடைக்குச் சென்ற கருப்பின அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்ட், கடையில் டாலரைக் கொடுத்துள்ளார். டாலரைப் பெற்றுக்கொண்ட கடைக்காரர் அது கள்ளநோட்டாக இருக்கும் என்ற சந்தேகத்தில் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளார். தனது காரின் உள்ளே அமர்ந்திருந்த ஜார்ஜை, கடைக்காரர் தெரிவித்த அடையாளங்களின் பேரில் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். காரை விட்டு வெளியேறும் படி அவரை காவல்துறையினர் வற்புறுத்த, ஃப்ளாய்ட் மறுத்துள்ளார். அவரை காரிலிருந்து இறக்கிய காவலர் டெரக் சவுவின், ஃப்ளாய்டை காரின் டயர் அருகில் படுக்க வைத்ததோடு, தனது முழங்காலால் ஃப்ளாய்டின் கழுத்துப் பகுதியை நெரித்துள்ளார். அழுத்தம் தாங்காமல் சில நிமிடங்களில் இறந்துள்ளார் ஃப்ளாய்ட். இந்தச் சம்பவத்தை 17 வயதுச் சிறுமி டேர்னெல்லா ஃப்ரேசியர், தன் மொபைல் போனில் படம்பிடித்துள்ளார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவ, கொந்தளித்த கறுப்பின அமெரிக்கர்கள் களத்தில் இறங்க, அது மிகப்பெரிய போராட்டமாக வெடித்துள்ளது. கறுப்பின மக்கள் மட்டுமல்லாது அனைத்துத் தரப்பு மக்களும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள். வல்லரசு நாடாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் அமெரிக்காவின் காவல்துறையினர், நிற வெறியால் ஒருவரை கொடூரமாக கொலை செய்திருப்பது உலகளவில் மிகப்பெரிய அதிர்வை உண்டாக்கியிருக்கிறது. காவல்துறையினரின் அதிகாரம் குறித்தும் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

மார்ச் மாதத்தின் இறுதியில் ஆப்பிரிக்க நாடான கென்யாவில், காவல்துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதலால், 13 வயதுச் சிறுவன் உட்பட, இருவர் கொல்லப்பட்டனர். அன்றைய தினத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதே இரண்டு என்பதுதான் மிகவும் கொடுமையான ஒரு விஷயம். அதேபோல, கென்யாவின் கடலோர நகரமான மொம்பசாவில், கர்ப்பிணிப் பெண் ஒருவரை மருத்துவமனையில் விட்டுவிட்டு, வீடு திரும்பிய டாக்ஸி டிரைவர் ஒருவர் காவல்துறையினரின் கடுமையான தாக்குதலால் உயிரிழந்துள்ளார். சிறுவன் யாசின் ஹூசைன் மோயோவின் மரணம் அதைவிடக் கொடுமையானது. தனது வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூடியிருந்த பொதுமக்களை, ஊரடங்கு விதிமுறைகளை மீறுவதாகக் கூறி காவல்துறையினர் கடுமையாகத் தாக்குவதை, தனது வீட்டின் மூன்றாவது மாடியில் நின்று பார்த்துக்கொண்டிருந்தான், சிறுவன் யாசின் ஹூசைன் மோயோ. காவலர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து பயந்து போன அவனிடம், ``காவல்துறையைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நாம் வீட்டில் இருக்கிறோம். நாம் செய்வதில் தவறில்லை'' என யாசினின் தாயார் நம்பிக்கையளித்துள்ளார். சில நிமிடங்களில், காவலர் ஒருவர் சிறுவன் மீது டார்ச் லைட்டை ஒளிரவிட்டதாகவும், பின், எந்தவித முன்னறிவிப்புமின்றித் தனது மகனைச் சுட்டுக் கொன்றதாகவும் யாசினின் தாயார் கதீஜா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் செய்தி தொலைக்காட்சியிடம் பேசுகையில், ஊரடங்கை மீறிய கும்பலைக் கலைக்க முற்படும் போது, சிறுவன் தற்செயலாகச் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

`அமெரிக்க போராட்டம் பற்றிய கேள்வி... 21 விநாடிகள் அமைதி’ - ட்ரம்ப்பின் பெயரை தவிர்த்த ட்ரூடோ

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கும் நாடாக அறியப்படும் பிலிப்பைன்சில், ஊரடங்கை மீறியதற்காக, கேவைட் மாகாணத்தில் இரு சிறுவர்களை காவலர்கள் சவப்பெட்டியில் சிறிது நேரம் அடைத்து வைத்து தண்டனை அளித்துள்ளனர். மேலும், இளைஞர்கள் சிலரை, நாய்கள் அடைக்கப்படும் கூண்டுகளில் அடைத்து வைத்து சித்ரவதைப்படுத்தியுள்ளனர். மணிலா நகரில் ஊரடங்கை மீறியதாக நான்கு சிறுவர்களும் நான்கு சிறுமிகளும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஏழு பேரின் தலைமுடியைக் காவல்துறையினர் அறுத்துள்ளனர். காவல்துறையினரின் இந்தச் சம்பவத்தைத் தட்டிக் கேட்ட சிறுவன் ஒருவனை, உடைகள் அகற்றப்பட்ட நிலையில் வீதிகளில் நடந்து சென்று வீட்டினை அடைய காவல்துறையினர் பணித்துள்ளனர். பிலிப்பைன்சில் மட்டும் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக சுமார் 17,000 வழக்குகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. காவல்துறையினரின் இந்தச் செயலைக் கண்டிக்கத் தவறிய அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டோ, ஊரடங்கு விதிகளைப் பின்பற்றுவதில் சிக்கல் இருந்தால், சிக்கலை ஏற்படுத்துவோரை சுட்டு வீழ்த்த அனுமதியளித்துள்ளார். அதிபரின் இந்தச் செயலுக்கு அந்தநாட்டின் மனித உரிமை ஆர்வலர்கள் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கின்றனர்

இந்தியாவைப் பொறுத்தவரையில், இந்தச் சம்பவங்களுக்கெல்லாம் சற்று மேலான பல சம்பவங்கள் நடந்துள்ளன. டெல்லியிலிருந்து உத்தரப்பிரதேசத்தின் பரேலி மாவட்டத்துக்கு, அரசின் சிறப்புப் பேருந்துகள் மூலம் வீடு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் கிருமிநாசினிகளை தெளித்துள்ளனர். பேருந்தை விட்டு இறங்கிய தொழிலாளர்களைத் தரையில் அமரச் செய்துள்ளனர். பின், அறிவுரைகளை வழங்கிய காவலர் ஒருவர், அனைவரையும், தங்களது கண்களையும், வாய்களையும் மூடச் சொல்லியதோடு, உடன் இருக்கும் குழந்தைகளை அவரது பெற்றோர்கள் பார்த்துக் கொள்ள உத்தரவிட்டுள்ளார். பின், அனைவரின் மீதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் இந்த எல்லை மீறிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை எற்படுத்தியது. மனிதர்கள் மீது கிருமிநாசினிகளை நேரடியாக தெளிப்பதால் கண் எரிச்சல், சருமத் தொந்தரவுகள் ஏற்படுவதோடு நிரந்தர உடல்நலக்கேட்டை விளைவிக்கும் என மருத்துவர்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தேவையில்லாமல் சுற்றியவரை கண்டிக்கும் காவல்துறை
தேவையில்லாமல் சுற்றியவரை கண்டிக்கும் காவல்துறை

தமிழகத்தைப் பொறுத்தவரையில், இரு சக்கர வாகனங்களில் சென்றால், வண்டிகளின் மீது பெயின்டைப் பூசுவதும் சில இடங்களில் வாகனங்களில் சென்ற நபர்களின் மீதே பெயின்ட் பூசப்பட்ட காட்சிகளையும் நாம் சமூக வலைதளப் பக்கங்களில் பார்த்திருப்போம். சென்னை போன்ற பெருநகரங்களில் ஊரடங்கை மதிக்காது இருசக்கர வாகனங்களில் வெளியே சுற்றிய இளைஞர்களைப் பிடித்த காவல்துறையினர், பாடல்களை ஓட விட்டு அதற்கேற்றாற்போல அவர்களை நடனம் ஆட வைத்து அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றியும், செய்தித் தொலைக்காட்சிகளுக்கும் வழங்கியும் மகிழ்ந்துள்ளனர். இன்னும் சில இடங்களில் ட்ரோன் கேமராக்கள் மூலம் பொதுமக்களை விரட்டியும் வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக எனச் சொல்லப்பட்டாலும், தனிமனித உரிமை என்பது காவல்துறையினரின் இதுபோன்ற செயல்களால் மிகப்பெரிய கேள்விகுறியாகியிருப்பதையும் காண நேர்கிறது.

ஊரடங்கு விதிகளை மீறியதாக உலகெங்கும் பொதுமக்கள் காவல்துறையினரால் இதுநாள்வரை பல்வேறு விதமான சித்ரவதைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து ஒரு வேளை உணவுக்குக் கூட வழியில்லாத சூழலே பெரும்பாலானோரின் நிலையாக இருக்கிறது. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ஊரடங்கு இரு மாதங்களைக் கடந்தும் நடைமுறையில் இருந்து வருகிறது. கொரோனா தொற்றால் உயிர்பலி ஒருபுறமிருக்க, வாழ்வாதாரம் இழந்து தவிப்பதால் பசியினாலும் உயிர்பலிகள் நிகழந்துகொண்டுதான் இருக்கின்றன. இவ்வாறான சூழலில், தங்களின் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள மக்கள் அரசின் விதிமுறைகளை மீறுவது இயல்பான ஒன்றுதான். இந்தநிலையில், காவல்துறையினரும் மக்களில் ஒருவர்தான் என்பதை மறந்து, அதிகாரம் கையில் இருப்பதால், என்னவோ இவ்வாறான வக்கிரச் செயல்களுக்குத் தங்களை உள்ளாக்கிக் கொண்டுள்ளனர். சட்டங்களும் விதிமுறைகளும் ஒருபுறமிருக்க, மனிதாபிமானமும் தற்போதைய முதன்மையான தேவையாக இருக்கிறது என்பதையே இது போன்ற செயல்கள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

அடுத்த கட்டுரைக்கு