பிரீமியம் ஸ்டோரி
கலையரசன்
கலையரசன்

- கலையரசன்

ஈழத்தமிழ் எழுத்தாளரான கலையரசன் இப்போது நெதர்லாந்தில் வசித்துவருகிறார். அரசியல், பொருளாதாரம், தத்துவம், சமூகம் குறித்து பல முக்கியமான கட்டுரைகளைச் சிற்றிதழ்களிலும் சமூக வலை தளங்களிலும் எழுதியுள்ளார். இவர் எழுதியுள்ள ‘காசு ஒரு பிசாசு’ என்னும் புத்தகம் உலகப் பொருளாதாரப் பிரச்னைகள் குறித்த முக்கியமான நூல்.

வீன கால வரலாற்றில் முதல் முறையாக, ஈரானில் ஷியா பிரிவினரின் போர்ப்பிரகடனமாகக் கருதப்படும் செங்கொடி பறக்கிறது. அதன் அர்த்தம், ஈராக்கில் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப் பட்ட ஈரானிய ஜெனரல் காசிம் சுலைமானியின் கொலைக்கு பழிக்குப் பழி வாங்கும் யுத்தம் வெகு விரைவில் தொடங்கும் என்பதாகும். கவனிக்கவும்: 1980-களில் ஈரான் - ஈராக் போர் காலத்தில்கூட இந்தக் கொடி பறக்கவிடப்படவில்லை!

ஈரானின் ஷியா மதப்பிரிவினரின் ஆன்மிகத் தலைநகரமான கோம் நகரில் உள்ள புனித ஸ்தலமான ஜம்கரன் மசூதியின் உச்சியில் இந்த செங்கொடி ஏற்றப்பட்டுள்ளது. ஈரானின் அரசியல் தலைநகரம் டெஹ்ரான். ஆனாலும், ஷியாக்களின் மதத்தலைவராகக் கருதப்படும் ஆயத்துல்லா, கோம் நகரிலிருந்துதான் ஆட்சி பரிபாலனத்தைக் கவனிப்பார். ஆகவே, செங்கொடி ஏற்றப்பட்டதன் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. இந்தச் சம்பவம் நவீன உலக வரலாற்றில் இதற்கு முன்னர் ஒருபோதும் நடந்ததில்லை. இதில் உள்ள விசேஷம் என்ன?

காசிம் சுலைமானி
காசிம் சுலைமானி

ஹுசைனின் கொடி!

இஸ்லாமிய ஷியா மதப் பிரிவினரைப் பொறுத்தவரை இந்த செங்கொடி ஒரு வரலாற்று துயரத்தை குறிப்பால் உணர்த்துகிறது. ஷியா முஸ்லிம்களின் வரலாற்றில் முதல்முறையாக, அவர்களால் முதலாவது இமாம் என மதிக்கப்படும் ஹுசைன் தூக்கிப் பிடித்த கொடி அது. 1,400 ஆண்டுகளுக்கு முன்னர், இஸ்லாமிய ராஜ்ஜியத்தை ஆண்ட கலீபாக்களால் இறைத்தூதர் முஹம்மதுவின் மகள் பாத்திமாவின் கணவர் அலி சதிசெய்து கொல்லப் பட்டார். அவர்களின் மகன் ஹுசைன் குருதியில் நனைந்த செங்கொடியை ஏந்தி, ஆட்சியாளர் களின் அநீதிக்கும் அராஜகத்துக்கும் எதிராகப் போராட்டம் நடத்தினார். அதனால், இந்தச் செங்கொடி ‘ஹுசைனின் கொடி’ என்று அழைக்கப்படுகின்றது. ஷியா இஸ்லாமியரைப் பொறுத்தவரை இது உணர்வுபூர்வமான விடயம். நீதியை நிலைநாட்டும் போராட்டத்துக்கான அறைகூவல். பகைவர்களைப் பழிதீர்ப்பதற்கான மதக்கடமை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்றைய நிலைமையைப் புரிந்து கொள்வதற்கு நாம் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்க வேண்டும். இஸ்லாமிய மதம் பரவிய ஆரம்ப காலங்களில், 632-ம் ஆண்டு இறைத்தூதர் முஹம்மதுவின் மறைவுக்குப் பின்னர், இஸ்லாமிய அகிலத்திற்கு யார் தலைமை தாங்குவது என்ற பிரச்னை எழுந்தது. இஸ்லாமிய அகிலத்தின் தலைமைப் பதவிக்கு, அதாவது கலீபாவாக முஹம்மதுவின் ஆருயிர் நண்பர் அபூபக்கர் பெரும்பான்மை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு வருடங்கள் மட்டுமே ஆட்சி செய்த அபூபக்கர் காலத்திலும், அதற்குப் பின்னர் இரண்டு வருடங்கள் கலீபாவாக இருந்து ஓர் அடிமையால் கொல்லப்பட்ட உமர் காலத்திலும், ஆட்சியாளர்களுக்கு பாத்திமாவின் கணவர் அலியின் நிபந்தனையற்ற ஆதரவு இருந்துவந்தது. உண்மையில், அலி தனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய கலீபா பதவிக்காக பொறுமையுடன் காத்திருந்தார்.

இருப்பினும், உமருக்கு அடுத்ததாக உத்மான் கலீபாவாகப் பதவியேற்றதற்கு பின்னரான காலத்தில் அலியின் ஆதரவாளர்கள் கிளர்ச்சி செய்தனர். உத்மான் தன் உறவினர்கள், நண்பர் களுக்கு அரசுப் பதவிகளைக் கொடுத்து அதிகாரத்தில் வைத்திருந்தார். அத்துடன் முன்பு இறைத்தூதர் முஹம்மதுவை எதிர்த்துப் போரிட்ட குற்றத்துக்காக நாடு கடத்தப்பட்ட இனக்குழுக்களையும் சேர்த்துக் கொண்டார். இதனால் குடிமக்கள் கலகம் செய்தனர். கலீபாவின் வீட்டை முற்றுகையிட்ட ஒரு கும்பல் உத்மானைக் கொன்றுவிட்டது. கலீபா உத்மானுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தவர்கள் மத்தியில் ஷியாக்கள் இருந்தனர்.

ஈரான் மசூதி
ஈரான் மசூதி

இன்றைக்கும் ஷியா - இஸ்லாமிய மத நிறுவனமானது அடிமட்ட மக்கள் சக்தியில் நம்பிக்கைகொண்டு இயங்கிவருகின்றது. அதனால்தான், ஈரானில் 1979-ம் ஆண்டு நடந்த மக்கள் எழுச்சியை இஸ்லாமியப் புரட்சியாக மாற்ற முடிந்தது. அன்று பல்வேறு இடதுசாரிக் கட்சிகள் முன்னெடுத்த பொதுவுடைமைக்கான வர்க்கப் புரட்சியை, ஆயத்துல்லா கொமெய்னி தந்திரமாக சுவீகரித்து இஸ்லாமியப் புரட்சியாக மடைமாற்றியது ஒரு தனிக்கதை. (புரட்சிக்குப் பின்னரும் சில வருடக் காலம் இடதுசாரிகளும் மதவாதிகளும் கூட்டணி வைத்திருந்தனர்)

இந்த இடத்தில் சன்னி முஸ்லிம் பிரிவினருக்கும் ஷியா முஸ்லிம் பிரிவினருக்கும் இடையிலான சமூகப் பின்னணியையும் கவனிக்க வேண்டும். சன்னி முஸ்லிம் பிரிவினர் ஒருவகையில் மேலைத்தேய கலாசார மரபை பின்பற்றினார்கள் எனலாம். அரசியல் தலைமையைத் தேர்ந்தெடுப்பதில் நவீன காலத்து குடியரசு முறையை பின்பற்றினாலும் அரசு, ஆளும் வர்க்கம் போன்றவற்றில் விட்டுக்கொடாத தன்மையைக் கொண்டிருந்தனர். அதற்கு மாறாக, ஷியா முஸ்லிம் பிரிவினர் கீழைத்தேய மரபை பின்பற்றினார்கள். அவர்களைப் பொறுத்தவரை, அரசியல் தலைமைக்குத் தகுதியான நபர் அரச பரம்பரை போன்று வாரிசு முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அத்துடன் அரசு, ஆளும் வர்க்கம் போன்ற வற்றுக்குப் பதிலாக அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட ஓர் ஆன்மிகத் தலைவரே, அரசியலுக்கும் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.

அரசியல், மதம் தொடர்பான ஷியாக்களின் இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் இன்றைய ஈரானில் ஆட்சி நடக்கிறது. அந்த நாட்டில் நாடாளுமன்ற முறையிலான அரசமைப்புக்குச் சமாந்திரமாக மதத்தலைவர்களும் தனியான அரசு நிர்வாகத்தை நடத்துகின்றனர். பொதுத்தேர்தல்கள் மூலமாக மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டாலும், உண்மையான அதிகாரம் மதத்தலைவர்கள் கைகளில்தான் இருக்கிறது. அங்கே இரண்டு ராணுவங்கள் இருக்கின்றன. அரசியல் தலைமைக்குக் கட்டுப்படும் தேசிய ராணுவம் ஒரு புறமும், ஆயத்துல்லாவுக்கு விசுவாசமான புரட்சிகர ராணுவம் மறுபுறமும் இயங்கிவருகின்றன.

யார் இந்த சுலைமானி?

ஈரானிய தேசிய ராணுவத்தில் யாரும் சேரலாம். ஆனால், புரட்சிகர ராணுவத்தில் கொள்கை அடிப்படையில் விசுவாசமானவர்கள் மட்டுமே சேர்த்துக்கொள்ளப் படுவார்கள். சமீபத்தில் ஈராக்கில் கொல்லப்பட்ட ஜெனரல் சுலைமானி, புரட்சிகர ராணுவத்தின் ஒரு பிரிவான ‘அல் குத்ஸ்’ சிறப்புப் படையணிக்கு தலைமைதாங்கியவர். வறுமையான குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து உயர் பதவிக்கு வந்தவர். நாட்டுப்பற்று மிக்கவர். மூன்று வருடங்களுக்கு முன்னர் சிரியா, ஈராக்கில் நடந்த ஐ.எஸ்.ஐ.எஸ் எதிர்ப்புப் போரில் முக்கியப் பங்காற்றியவர். ஒரு வகையில், ஜெனரல் சுலைமானியின் ராணுவ தந்திரோபாயம்தான் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதம் தோற்கடிக்கப்படவும் காரணமாக இருந்தது. பூகோள அரசியல் சதுரங்க ஆட்டத்தில், ஈரானுக்கு வரவிருந்த ஆபத்தை சிரியாவிலும் ஈராக்கிலும் எதிர்த்துப் போராடி முறியடித்திருந்தார். உண்மையில், இதுவே அமெரிக்கா அவரைக் குறிவைத்து தீர்த்துக்கட்ட காரணமாகவும் இருந்திருக்கலாம்.

ரத்த சரித்திரம்!

இங்கேயும் வரலாற்றை சற்றே திரும்பிப் பார்ப்போம். ஆரம்ப கால இஸ்லாமிய சாம்ராஜ்ய வரலாற்றில் நடந்த உள்நாட்டுப் போர்கள் மிக முக்கியமானவை. உண்மையில், கலீபா உத்மானின் மரணத்துக்குப் பின்னர், இறைத்தூதர் முஹம்மதுவின் மருமகன் அலிக்குதான் கலீபா பதவி கிடைத்திருக்க வேண்டும். ஆனால், டமாஸ்கஸ் ஆளுநர் முவாவியா மிகத் தீவிரமாக அலியை எதிர்த்துவந்தார். அவரின் படையினரும், அலியின் படையினரும் மோதிக் கொண்டதே முதலாவது உள்நாட்டுப் போர் ஆகும். 657-ம் ஆண்டு, உள்நாட்டுப் போரின் இறுதியில் முவாவியாவின் ஆட்களால் அலி படுகொலை செய்யப்பட்டார்.

ஈரான் மசூதி உச்சியில் செங்கொடி பறப்பது ஏன்?
இந்த இடத்தில் சன்னி முஸ்லிம் பிரிவினருக்கும் ஷியா முஸ்லிம் பிரிவினருக்கும் இடையிலான சமூகப் பின்னணியையும் கவனிக்க வேண்டும்.

அடுத்து வந்த சில வருடங்களில் எதிர்பாராத சில திருப்புமுனைகள் ஏற்பட்டன. 669-ம் ஆண்டு அலியின் மூத்த மகன் ஹசன், முவாவியாவின் ஆட்களால் நஞ்சூட்டிக் கொல்லப் பட்டார். இன்றைக்கும் ஷியா முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அலியின் இரண்டாவது மகன் ஹுசைன் மிக முக்கியமான ஆளுமை. பெரும்பாலான ஷியா முஸ்லிம்களின் வீடுகளில் ஹுசைனின் படத்தை மாட்டிவைத்திருப்பார்கள். சமீபத்தில் ஈரானில் நடந்த ஜெனரல் சுலைமானியின் இறுதிச்சடங்குகளின் போதும், சொர்க்கத்தில் ஹுசைன், சுலைமானியை ஆரத்தழுவும் படங்களுடன் கூடிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

ஷியா முஸ்லிம்களின் வரலாற்றில் முதல்முறையாக ஹுசைன்தான் செங்கொடி ஏந்திப் போருக்குச் சென்றார். எதேச்சாதிகார அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் தம்முயிர் ஈந்த தியாகிகளின் ரத்தத்தில் தோய்ந்த படியால் அது சிவப்பு நிறக்கொடி ஆனது. கொடியின் சிவப்பு நிறமானது வஞ்சகர்களைப் பழிதீர்க்கும் கடமையை உணர்த்துவதாகவும் அதிகார வர்க்கத்துக்கு எதிரான விடுதலைப்போரின் எழுச்சியாகவும் கருதப்பட்டது. இன்றைய ஈராக்கில் உள்ள கர்பலா நகரில், 680-ம் ஆண்டு நடந்த போரில் ஹுசைனின் படையினர் சுற்றிவளைக்கப்பட்டனர். இறுதிப்போரில் ஹுசைனும் அவரின் குடும்பத்தினரும் எதிரிப்படைகளால் கொல்லப்பட்டனர். ஹுசைனின் தலை வெட்டி எடுத்துச் செல்லப்பட்டது.

தியாக மரணத்துக்கு ஒப்பாரி!

கர்பலா நகரில் ஹுசைன் படுகொலை செய்யப்பட்ட இடம் இன்றைக்கும் ஷியாக்களின் புனிதத்தலமாகப் பேணிப் பாதுகாக்கப்படுகிறது. அங்கு ஒரு பெரிய மசூதி உள்ளது. அதற்கு ஒவ்வொரு வருடமும் ஷியாக்கள் புனித யாத்திரை செல்கிறார்கள். இஸ்லாமியக் காலண்டரில் வரும் ஆஷூரா நாளன்று, ஹுசைன் கொல்லப்பட்டதால் வருடந்தோறும் ஆஷுரா நினைவுதினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அன்றைய தினம் ஷியா மத நம்பிக்கையாளர்கள் தமது தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு ஒப்பாரிவைத்து அழுவார்கள். சிலர் ரத்தம் வரும்வரை சவுக்கால் அடித்து, தம்மைத் தாமே வருத்திக்கொள்வார்கள்.

இன்றைக்கும் ஷியா முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அலியின் இரண்டாவது மகன் ஹுசைன் மிக முக்கியமான ஆளுமை. பெரும்பாலான ஷியா முஸ்லிம்களின் வீடுகளில் ஹுசைனின் படத்தை மாட்டி வைத்திருப்பார்கள்.

பிற மதத்தவர்களுக்கு மட்டு மல்லாமல் சன்னி முஸ்லிம்களுக்கும், ஷியாக்கள் இப்படி அடித்துக்கொண்டு அழும் நடைமுறை புரியாத புதிராக இருக்கும். பலர் இதை பைத்தியக்காரத்தனம் என்றும் சொல்வார்கள். ஆனால், ஷியாக்களை பொறுத்தவரையில் இது உணர்வு பூர்வமான விடயம். அநேகமாக இஸ்லாத்துக்கு முன்பிருந்த கீழைத்தேய பண்பாட்டிலிருந்து இந்தப் பழக்கம் வந்திருக்கலாம். எது எப்படியோ, ஹுசைனின் தியாக மரணத்தை நினைத்து ஒப்பாரி வைக்கும் சம்பிர தாயம், அவர்களது மத நம்பிக்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.

திரும்பிய வரலாறு

கர்பலாவில் பறந்த ஹுசைனின் செங்கொடி இறக்கப்பட்டு 1,400 வருடங்களுக்குப் பின்னர், இப்போதுதான் மீண்டும் அதே செங்கொடி கோம் நகரில் ஏற்றப்பட்டுள்ளது. அந்தக் கொடியில் ‘ஹுசைன் சிந்திய ரத்தத்துக்குப் பழி தீர்ப்பவர்களுக்காக’ என்று எழுதப் பட்டுள்ளது. இந்தச் சம்பவமானது இனி வருங்காலத்தில் உக்கிரமான போர் நடக்கப்போவதற்கான அறிகுறி. அன்றைய ஈராக்கில் ஷியாக்களின் ராணுவத் தளபதியும், பன்னிரு இமாம்களில் ஒருவருமான ஹுசைன் எதிரிகளால் வஞ்சகமான முறையில் தீர்த்துக் கட்டப்பட்டார். வரலாறு திரும்புகிறது என்பது மாதிரி, இன்று ஜெனரல் சுலைமானி அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் தீர்த்துக் கட்டப்பட்டார். இந்த ஒற்றுமையானது வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், ஷியா மத நம்பிக்கையாளர்களுக்கு இது உணர்ச்சியைத் தூண்டும் அளவுக்குக் குறிப்பிடத்தக்க விடயம்.

சுலைமானி
சுலைமானி
பூமியில் போரும் குழப்பங்களும் அதிகரிக்கும் காலத்தில் 12-வது இமாமின் வருகை இடம்பெறும் என்று ஷியாக்கள் நம்புகின்றனர்.

டெஹ்ரானில் நடந்த ஜெனரல் சுலைமானியின் இறுதிச்சடங்கில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இஸ்லாமியப் புரட்சி நடந்து கால் நூற்றாண்டுக்குப் பின்னர், இந்தளவு அதிக எண்ணிக்கையிலான மக்கள் திரண்டது இதுவே முதல்முறை. அத்துடன் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட மக்கள், ஆஷுரா தினம் அனுஷ்டிப்பது போன்று தலையிலும் மார்பிலும் அடித்து ஒப்பாரி வைத்தனர். ஈரான், ஈராக், லெபனான் ஆகிய நாடுகளில் உள்ள ஷியா முஸ்லிம்களை பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் அல்லது ஆன்மிகத் தலைவர்கள், அமெரிக்காவுக்கு எதிரான பழிதீர்க்கும் போருக்கு அங்கீகாரம் வழங்கி உள்ளனர். அதன் அர்த்தம், ‘ஷியா முஸ்லிம்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அமெரிக்காவுக்கு எதிரான போரை தமது நீதியான மதக்கடமையாகக் கருத வேண்டும்’ என்பதே. அதை அவர்கள் ஹுசைனின் செங்கொடி ஏற்றப்பட்ட மறுகணமே புரிந்துகொண்டு விட்டனர்.

கலிகால நம்பிக்கை!

கலிகாலத்தில் வரும் விஷ்ணுவின் கடைசி அவதாரமான கல்கி அவதாரத்தை இந்துக்கள் நம்புவதுபோல, முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஊழிக்காலம் பற்றி நம்பிக்கைக்கொண்டுள்ளனர். அப்படி வரும் காலத்தில் கடவுளின் பிரதிநிதி பூமியில் தோன்றுவார்; நியாயத் தீர்ப்பு வழங்குவார் என்றும் நம்புகின்றனர். இதுபற்றிய விவரணைகள் பைபிள், குரான் இரண்டிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி உள்ளன.

ஷியா முஸ்லிம்களுக்கென தனித்துவமான நம்பிக்கை உள்ளது. அவர்கள் இறைத்தூதர் முஹம்மதுவுக்கு அடுத்ததாக பன்னிரண்டு இமாம்களை தமது வழிகாட்டிகளாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த மதத் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக வாரிசு உரிமையின்படி மதத்தலைவர் களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஆனால், 868-ம் ஆண்டு பிறந்த 12-வது இமாம் முஹம்மத் ஹசன் அலி இயற்கை மரணம் அடையவில்லை; அவர் திடீரென மறைந்துவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

பூமியில் போரும் குழப்பங்களும் அதிகரிக்கும் காலத்தில் 12-வது இமாமின் வருகை இடம்பெறும் என்று ஷியாக்கள் நம்புகின்றனர். இது ‘இயேசு வருகிறார்’ எனும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையைப் பெரிதும் ஒத்துள்ளது. 12-வது இமாம் தோன்றும் காலத்தில் நீதி நிலைநாட்டப்பட்டு, சமாதானம் ஏற்படும் என்பது ஷியாக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

ஈரானில் ஜம்கரன் மசூதியின் உச்சியில் ஹுசைனின் செங்கொடி பறக்கிறது. இந்தத் தகவலை சாதாரண விடயமாகக் கடந்துவிட முடியாது. ஜெனரல் சுலைமானியின் படுகொலைக்கு அடுத்த நாள் ஈரானிய ராணுவ தலைமைத் தளபதி அமெரிக்காவுக்கு ஓர் எச்சரிக்கை விடுத்தார்: “இந்தப் போரை நீங்கள் தொடங்கி இருக்கலாம். ஆனால், நாங்கள்தான் அதை முடித்து வைக்கப்போகிறோம்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு