Published:Updated:

`லாக்கப் மரணங்கள்.. கைதிகளுக்கும் அடிப்படை உரிமை உண்டு' - இலங்கை உச்ச நீதிமன்றம்

லாக்கப் மரணங்கள் தொடர்பாக இலங்கை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள சமீபத்திய தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இலங்கை உச்ச நீதிமன்றம்
இலங்கை உச்ச நீதிமன்றம்

இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் பெற்றுள்ள தகவல்களின்படி இந்தியாவில் 1993-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டுவரை 31,845 லாக்கப் மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறபோது ஏற்படுகிற மரணங்களை இதுகுறிக்கும். சமீபத்தில் ஹைதராபாத் கால்நடை மருத்துவர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக கைது செய்யப்பட்ட நால்வர் சம்பவ இடத்தில் விசாரணையின்போது தப்பிக்க முயன்றதாக சுட்டுக் கொல்லப்பட்டனர். மிகப்பெரிய அளவில் ஆதரவு, எதிர்ப்பு என இதற்கு எதிர்வினைகள் இருந்தன.

Representational Image
Representational Image

இந்த நிலையில், இலங்கையில் இதேபோல நடைபெற்ற லாக்கப் மரணம் தொடர்பான வழக்கொன்றில் சமீபத்தில் இலங்கை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க காவல்துறைக்கும் அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காவல்துறையால் கொலை வழக்கு ஒன்றுக்காக கைது செய்து கொண்டு செல்லப்பட்ட ரானாமுகாகே அஜித் பிரசன்னா என்பவர் விசாரணையின்போது காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார். `விசாரணைக்குச் சென்று திரும்பி வருகையில் காவலரின் ஆயுதத்தைக் கைப்பற்ற முயன்றார். அப்போது நடைபெற்ற மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்’ என காவல்துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் பிரசன்னாவின் மனைவி ரத்னநாயகே தரங்கா லக்மலி இதை எதிர்த்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். உச்ச நீதிமன்றம் தற்போது வழங்கியுள்ள தீர்ப்பில், ``அரசுக்கு அனைத்துக் குடிமக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருக்கிறது. இறந்தவருடைய அடிப்படை உரிமையைக் காக்க அரசு தவறிவிட்டது. குற்றம்சாட்டப்பட்டவரை சரியாகக் கையாள காவல்துறையும் தவறிவிட்டது. காவல்துறையின் விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை. குற்றம்சாட்டப்பட்டவர் கைவிலங்கு மாட்டப்படாமல் இரவு நேரத்தில் வெறும் மூன்று காவலர்களின் பாதுகாப்போடு கதவில்லாத வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். இத்தகைய சூழ்நிலைகளில் காவல்துறையின் வாதங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை" என்று தெரிவித்துள்ளது.

Representational Image
Representational Image
outlook.com

மேலும், நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்பில், 1974-ம் ஆண்டு அமெரிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பொன்றை மேற்கோள் காட்டியுள்ளனர். அதில், ``குற்றத்துக்காக ஒருவர் சிறையில் வைக்கப்பட்டிருந்தால் அவர் அரசியலமைப்பு வழங்கியுள்ள பாதுகாப்புகளை முழுமையாக இழந்துவிட மாட்டார். சிறைகளுக்கும் அரசியலமைப்புக்கும் இடையே இரும்புத் திரை ஒன்றும் இல்லை“ எனக்கூறி கைதியின் அடிப்படை உரிமைகள் நிலைநாட்டப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.

குற்றங்களுக்கு உடனடி தண்டனை வழங்க வேண்டும் என்கிற போக்கு உலகம் முழுவதும் வளர்ந்துவருகிற சூழலில், இலங்கை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.