Published:Updated:

ஆங் சான் சூகியின் கைது, ராணுவத்தின் வெறியாட்டம், கொல்லப்படும் மக்கள் - பர்மா என்கிற மியான்மரின் கதை!

நாடு முழுதும் வெடித்தெழுந்துள்ள போராட்டங்களில் இதுவரை 5,000 பேர் வரை இறந்துள்ளதாக ராணுவ அறிக்கை கூறுகிறது. மனித உரிமைகள் அறிக்கை இந்த எண்ணிக்கை இன்னும் பல மடங்கு இருக்கும் என்கிறது. அத்தனையையும் பரம ரகசியமாக வைத்திருந்து கையாளும் ராணுவத்தின் உண்மையான நோக்கம் என்ன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

50 ஆண்டுகளுக்கும் மேலாக இரும்புக்காரங்களுக்குள் இருகிக்கிடந்த மியான்மர் மக்கள், தங்களை ஆட்டிப்பிடித்த சாபம் விலகி, விமோசனம் பெற்றுவிட்டதாக நினைத்த நினைப்பில் மீண்டும் இடியை இறக்கியுள்ளது அந்நாட்டு ராணுவம்.

கடந்த பிப்ரவரி மாதம் முதலாம் தேதி காலை கண்விழித்த மியான்மர் மக்களுக்கு தொலைத் தொடர்பு சேவை முற்றாக தூண்டிக்கப்பட்டதை தெரிந்து கொண்டபோது தூக்கிவாரிப்போட்டது. சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டு, எங்கும் யாரும் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத ஒரு இறுக்கமான சூழல் தம்மை சுற்றியபோதுதான் ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது என்ற உண்மை மெல்ல மெல்ல அவர்களுக்கு உறைக்கத் தொடங்கியது.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக, நாட்டை பாதுகாக்க வேண்டிய ராணுவமே கொடூரமான முறையில் மக்களை தூக்கிப் போட்டு மிதித்து வருகிறது. அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு, ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் காணாமல் ஆக்கப்பட்டு, உடைமைகள் நொறுக்கப்பட்டு, உரிமைகள் பறிக்கப்பட்டு, குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு வருகிறார்கள். மியான்மரில் அப்படி என்னதான் பிரச்னை, ஏன் அங்கே தொடர்ந்து ராணுவக் கலவரங்கள் நிகழ்கின்றன?!

மியான்மர் என்கிற பர்மாவின் கதை!

பர்மாவின் ஈராவடி பள்ளத்தாக்கின் (Irawaddy valley) நாகரிகம் 3,500 ஆண்டுகளுக்கு முன்பு பழமையானது. எல்லா நாகரிகங்களைப் போலவே இங்கும் மக்கள் நெல் விவசாயம் செய்தும், கால்நடைகளை வளர்த்தும் வாழ்ந்துள்ளனர். நான்காம் நூற்றாண்டில் தேராவத பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்டபோது அதன் அடுத்த கட்டத்தை அடைந்தது பர்மா. இன்று பர்மாவின் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் பெளத்தர்கள். மொத்த மக்கள்தொகையில் பௌத்த துறவிகளை அதிகம் கொண்டுள்ள ஒரே நாடு இதுதான்.

மியான்மர்
மியான்மர்

பர்மாவின் எழுச்சி

ஒன்பதாம் நூற்றாண்டில், வடக்கிலிருந்து வந்த Bamar எனும் ஒரு குழு முக்கியத்துவம் பெற்று Pagan (இன்றைய Bagan) என்ற அதி சக்திவாய்ந்த ராஜ்யத்தை நிறுவினர். பழைய நகர மாநிலங்கள் இந்த Pagan-னின் எழுச்சிக்கு வழிவிட்டு ஒத்துழைப்பு வழங்கியதால் அது நாட்டின் ஒருங்கிணைந்த சிறந்த நிர்வாகத்திற்கு வழிவகுத்தது. 1057-ல் மன்னர் அனவ்ரஹ்தா (king Anawrahta or Aniruddha) பர்மா முழுவதையும் வெற்றிகரமாக ஒன்றிணைத்தார். அவரைப் பின்தொடர்ந்த ஏனைய மன்னர்கள் ஆயிரக்கணக்கான பௌத்த ஆலயங்களையும் (pagodas) மடங்களையும், நூலகங்கள் மற்றும் கல்லூரிகளையும் கட்டினர்.

இருப்பினும், வேற்று மதங்களைப் பின்பற்றிய அதன் புவியியல் அண்டை நாடுகளிலிருந்து இந்த பௌத்த இராஜ்ஜியம் தனிமைப்படுத்தப்பட்டது. துறவறத்தின் மீது அதிகரித்து வந்த செல்வாக்கு, ஒன்றிணைந்த ராஜ்ஜியத்தில் வீழ்ச்சியை உருவாக்கி மங்கோலிய மற்றும் டார்டார் (Mongol and Tartar) படையெடுப்புகளுக்கு வழியமைத்தது. அதன் பின் பல்வேறு ஆளும் வம்சங்கள் வளர்ந்து வீழ்ந்தன.

BAYINNAUNG-ன் மாபெரும் சம்ராஜ்ஜியம்.

மன்னர் அனவ்ரஹ்தாவிற்கு அடுத்தபடியாக பர்மாவின் அடுத்த ஒருங்கிணைப்பாளராக பதினாறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பேயினோங் (Bayinnaung) என்ற மன்னன் போற்றப்படுகிறார். பேயினோங் ஒரு விரிவாக்க ஆட்சியாளராக இருந்து பெரிய நிலப்பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்வதன் பொருட்டு இடைவிடாத யுத்தத்தை நடத்தினார். அவரது அடக்குமுறையும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும் இன்றைய பர்மாவின் இராணுவ ஆட்சியாளர்களால் ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளப்பட்டு பின்பற்றப்படுகிறது. அவர் 1581-ல் தனது 66வது வயதில் இறந்த பின்னர், அவரது ஆட்சி பர்மா, தாய்லாந்து மற்றும் லாவோஸ் முழுவதிலும் பரவியது. ஆயினும் மன்னர் மறைவின் பின்னர் ராஜ்ஜியங்கள் சிறிது சிறிதாக பிளவுபட்டு வீழ்ச்சியடையத் தொடங்கின.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரிட்டனுடன் மோதல்

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பர்மிய விரிவாக்கம் சீனாவுடன் மோதலை ஏற்படுத்தியது. பர்மிய ஜெனரல் மஹா பண்டுலா (Burmese general Maha Bandula) 1824-ல் அசாமை கைப்பற்றியது தான் பிரிட்டிஷ்காரர்கள் பார்மாவிற்குள் நுழைவாதற்கான பிள்ளையார் சுழியைப் போட்டது. ஆடு நனைகிறது என்று கவலைப்பட்ட ஓநாயாக, இந்தியாவிலிருந்து பர்மா கைப்பற்றிய நிலப்பரப்பை மீண்டும் பெற பிரிட்டிஷ் போராடியது தான் பார்மாவில் அரங்கேறிய முதல் ஆங்கிலோ-பர்மியப் போர். உண்மையில் ஆங்கிலேயர்கள் கைப்பற்ற நினைத்த நாடுகளின் பட்டியலிலேயே பர்மா இல்லை. ஆனால், அப்போதே வல்லரசாக வளரத்தொடங்கியிருந்த சீனாவுடனான இலாபகரமான வர்த்தகத்திற்கு ஒரு நுழைவாயிலாகவே பர்மாவைக் கருதியதால் மெல்ல மெல்ல பர்மாவிற்குள் பிரிட்டன் நுழைந்தது.

இந்தியாவின் ஒரு மாகாணமாக இருந்த பர்மா!

ஆங்கிலேயர்கள் 1886-ம் ஆண்டில் பர்மாவை இந்தியாவின் ஒரு மாகாணமாக்கினர். விவசாயம் ஏற்றுமதியை நோக்கி நகர்ந்து உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக பர்மா மாறியது. சிவில் சர்வீஸ் வேலைகளை நிரப்ப இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். பர்மாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் சீனர்களின் வணிக முயற்சிகள் ஊக்குவிக்கப்பட்து பர்மிய மக்களிடம் மனக்கசப்பை ஏற்படுத்தியது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அதிருப்தி அடைந்த மக்களின் போராட்டம் பர்மாவில் 1890 வரை தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் கெரில்லா செயல்பாடுகளை நிறுத்துவதற்காக பிரிட்டிஷ் ராணுவம் ஒரு சில கிராமங்களை முற்றாக அழித்தது.

1920-ல் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான புதுப்பிக்கப்பட்ட எதிர்ப்பின் முதல் அறிகுறிகளாயின. இதில் பௌத்த பிக்குகள் மிக முக்கிய பங்கு வகித்தனர். போராட்டக்காரர்களின் மையத்தலமாக இருந்த ரங்கூன் பல்கலைக்கழகத்தின் (Rangoon University) இளம் சட்டக்கல்லூரி மாணவனான ஆங் சான், தேசிய சுயாட்சிக்கான இயக்கத்தில் அதிக முக்கியத்துவத்தைப் பெற்றார்.

மியான்மர் போராட்டம்
மியான்மர் போராட்டம்

இந்தியாவில் இருந்து பிரிந்த பர்மா!

இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில் பர்மாவின் நிர்வாகம் இந்தியாவிலிருந்து பிரிந்தது. பர்மா கம்யூனிஸ்ட் கட்சியை இணைந்து நிறுவ சீன கம்யூனிஸ்டுகளுடன் தொடர்பு கொள்ள முயன்றார் ஆங் சான். ஆனால் ஜப்பானிய அதிகாரிகள் முந்திக்கொண்டு இராணுவப் பயிற்சியையும் ஒரு தேசிய எழுச்சிக்கான ஆதரவையும் அளிப்பதாக வாக்குக் கொடுத்தனர். Thirty Comrades என அழைக்கப்படும் ஆங் சான் மற்றும் 29 இளைஞர்கள் பயிற்சிக்காக ஜப்பானிய ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த சீனாவின் ஹைனன் தீவுக்கு புறப்பட்டனர்.

பர்மாவின் விடுதலை

1942-ல் இராணுவ நடவடிக்கைகளின் போது ஆங் சான் மீது ஒரு கொலை வழக்குத் தொடரப்பட்டாலும், அவருக்கு இருந்த மிகப்பெரிய மக்கள் ஆதரவைப் பார்த்து அதிர்ந்து போனது பிரிட்டிஷ் அரசு. இறுதியாக 1947 ஜனவரியில் பிரிட்டனில் இருந்து பர்மாவின் சுதந்திரத்தைப்பற்றி ஆங் சானுடன் பேச்சுவார்த்தை நடத்த உடன்பட்டது.

அதன் பின் நடந்த பொதுத் தேர்தலில் ஆங் சானின் AFPFL கட்சி 255 சட்டமன்ற தொகுதிகளில் 248ஐ வென்றது. ஆனால் இந்த மகிழ்ச்சி நெடுநாள் நிலைக்கவில்லை. ஜூலை 19, 1947 அன்று, ஒரு எதிர்க்கட்சி அரசியல்வாதியின் தூண்டுதலின் பேரில், ஆங் சான் மற்றும் அவரது அமைச்சரவையின் பல உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனாலும் ஆங் சானின் சகாவான யு நு (U Nu) பொறுப்புகளை ஏற்று, நடவடிக்கைகளை முன்னெடுத்துச்சென்றார். ஜனவரி 4, 1948 அன்று அதிகாலை 4.20 மணிக்கு ஆங்கிலேயரிடமிருந்து பர்மா சுதந்திரமடைந்தது. பிரிட்டிஷ் எதிர்ப்பு உணர்வு மிகவும் வலுவானதால் மற்றைய காலனித்துவ நாடுகளைப் போலல்லாமல், பிரிட்டிஷ் காமன்வெல்த் (British Commonwealth) அமைப்பில் சேர மாட்டோம் என்று பர்மா அறிவித்தது.

சுதந்திரத்தின் பின்னரான சவால்கள்

அதிருப்தி அடைந்த கம்யூனிச பிரிவுகள் மற்றும் இனக்குழுக்கள் மூலம் யு நு-வின் அரசாங்கம் பல சவால்களை எதிர்கொண்டது. அதிகரித்து வந்த இந்த பூசல்களுக்கு மத்தியில் குழம்பிய குட்டையில் மீன் பிடித்த கதையாக 1962-ல் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.

1987-ல் பர்மாவை வளர்ச்சியடையாத நாடுகளின் பட்டியலில் ஐக்கிய நாடுகள் சபை சேர்த்தது. மேற்கத்திய நாடுகளிடமிருந்து தனிமைப்பட்ட பர்மாவின் பொருளாதாரம் வீழச்சியடைந்தது. இதனால் விரக்தியடைந்த அப்போதிருந்த ராணுவ ஜெனரல் நே வின், ஜூலை 1988-ல், திடீரென பதவி விலகப்போவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து வெடித்த கலவரத்தில் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3,000 பேர் பலியானார்கள். அன்று தொடங்கிய போராட்டங்கள் இன்று வரை ஓய்ந்தபாடில்லை.

மியான்மர் போராட்டம்
மியான்மர் போராட்டம்

ஆங் சான் சூகி

இருளுக்குள் தத்தளித்த பர்மிய மக்களுக்கு வெளிச்சம் கொடுக்கும் விடிவெள்ளியாக வந்தார் ஆங் சான் சூகி! இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் படித்து, கல்வியாளர் மைக்கேல் ஹாரிஸை திருமணம் புரிந்த ஆங் சானின் மகள் ஆங் சான் சூகி ஜப்பான் மற்றும் பூட்டானில் வாழ்ந்து, பணிபுரிந்த பின்னர், அவர்களின் இரண்டு குழந்தைகளான அலெக்சாண்டர் மற்றும் கிம் ஆகியோரை வளர்ப்பதற்காக இங்கிலாந்தில் குடியேறினார். ஆனால் தந்தை வாங்கிக்கொடுத்த சுதந்திரத்தை அனுபவிக்க முடியாமல் அல்லல்படும் பர்மாவைப் பற்றிய நெருடல் அவருக்குள் உறுத்திக்கொண்டே இருந்தது.

பர்மாவில் ராணுவத்திற்கு எதிரான கலவரம் உச்ச கட்டத்தில் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், 1988-ல் தாயைப் பார்க்க நாடு திரும்பினார் ஆங் சான் சூகி. அப்போது இராணுவ வலிமைமிக்க சர்வாதிகாரியின் மிருகத்தனமான ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் படுகொலை செய்யப்பட்டதால், அவருக்கு எதிராகப் பேசவும், மக்களின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காக அகிம்சைவழிப் போராட்டத்தைத் தொடங்கவும் ஆங் சான் சூகி முடிவெடுத்தார்.

அப்போதுதான் பர்மிய இராணுவம் 19 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டம் ஒழுங்கு மறுசீரமைப்பு கவுன்சிலை அமைத்து நாட்டை வழிநடத்தும் என்ற புதிய martial law-வைப் பிறப்பித்தது. தனது அகிம்சை நிலைப்பாடு மற்றும் அரசியல் ஒருமைப்பாட்டுக் கொள்கைகளால் மக்களின் இதயங்களை ஈர்த்த ஆங் சான் சூகி, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். பர்மிய முஸ்லிம் ரோஹிங்கியா சிறுபான்மையினருக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு அவரது பாராமுகத்தின் காரணமாக சர்வதேச அளவில் அவரது மதிப்பு சிறிது பாதிக்கப்பட்டாலும், நாட்டின் பௌத்த பெரும்பான்மையினர் மத்தியில் அவர் பிரபலமாகத் தொடங்கினார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் வீட்டுக் காவலில் இருந்த ஆங் சான் சூகியின் போராட்டம் சர்வதேச அடையாளமாக அவரை உருவாக்கியது.

வீட்டுக் காவலில் இருந்தபோதும், "சக்தியற்றவர்களின் சக்திக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு" என்ற பாராட்டோடு 1991-ம் ஆண்டில், ஆங் சான் சூகிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 2010 நவம்பர் 13 அன்று வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார் சூகி. அதைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டு, முதல்முறையாக நடந்த திறந்த முறைத் தேர்தலில் தனது ஜனநாயகத்திற்கான தேசிய லீக்-கை (National League for Democracy) மிகப் பிரம்மாண்டமான வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். தோல்வி எனும் கசப்பு மாத்திரையை விழுங்க மறுத்த ராணுவம் அடிபட்ட புலியாகி சரியான சந்தர்ப்பத்திற்காக பதுங்கிக் காத்திருந்தது.

2015-ம் ஆண்டில் அவர் மகத்தான வெற்றியைப் பெற்ற போதிலும், அவருக்கு வெளிநாட்டு குடியுரிமைகொண்ட குழந்தைகள் உள்ளனர் எனக் காரணம் காட்டி, மியான்மர் அரசியலமைப்பு அவர் ஜனாதிபதியாக வருவதைத் தடைசெய்தது. எனினும் மாநில ஆலோசகராகவும் ஜனாதிபதி வின் மைண்ட்டின் நெருங்கிய உதவியாளராகவும் இருந்து வந்தார்.

மியான்மர் ராணுவ ஆட்சியாளர்
மியான்மர் ராணுவ ஆட்சியாளர்

மாபெரும் வெற்றியும் எதிர்பாரா திருப்பமும்!

2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவரது என்எல்டி கட்சி, 2015-ல் பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகளைப் பெற்று மீண்டும் ஒரு அதிரவைக்கும் மகத்தான பெரும்பான்மையை வென்றது. 1117 ஆசனங்களில் 85%க்கும் கூடிய ஆசனங்களை கைப்பற்றியது ஆங் சான் சூகியின் NLP கட்சி. இதில் எட்டு மில்லியனுக்கும் கூடிய வாக்குகள் ஊழல் மோசடி செய்யப்பட்டது எனக் கூறி மறு வாக்கெடுப்புக்கு கோரிய ராணுவத்தின் விண்ணப்பத்தை தேர்தல் கமிட்டி காட்டமாக மறுத்தது.

ஆயினும் முடிவுகளை ஏற்க மறுத்த இராணுவம், பிப்ரவரி 1-ம் தேதி சூகி, மியான்மர் ஜனாதிபதி உற்பட பல அமைச்சர்களையும், துணை அமைச்சர்களையும் கைது செய்து சிறையில் அடைத்து, நாட்டின் ஆட்சிப் பொறுப்பை அடுத்த ஒரு வருட காலத்திற்கு ராணுவ ஜெனரல் கையில் ஒப்படைத்தது.

எதற்காக இந்த போராட்டம்?

ராணுவத்தின் இந்தக் குற்றச்சாட்டு எவ்விதத்திலும் உண்மை இல்லை என்று மறுக்கும் மக்களின் கோபம், புரட்சியாக வெடித்தது. கைது செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்து, ராணுவம் வாபஸ் வாங்கும் வரையில் இந்தப் போராட்டம் தொடரும் என்று மக்கள் துணிந்து களத்தில் குதித்து விட்டனர். எங்கள் விடுதலையை எங்களுக்கு திருப்பிக்கொடு போன்ற ஸ்லோகங்கள் அடங்கிய கூச்சலுடன், பாத்திரங்களினால் தட்டி ஒலி எழுப்பியும், வாகனங்களின் ஹாரன்களை ஒலிக்கவிட்டும், டார்ச் லைட் வெளிச்சத்தை பற்றவைத்தும், மூன்று விரல்களை ஒன்றிணைத்து சல்யூட் குறியீட்டை காண்பித்தும் என நாட்டைப் பாதுகாக்க வேண்டிய ராணுவத்திற்கு எதிராகவே போர்க்கொடி தூக்கி உள்ளனர் பொது மக்கள்.

ராணுவ ஆதிக்கம் மியான்மருக்கு உள்ளே மட்டும் தானா என்றால் அதுதான் இல்லை. சென்ற வாரம் இங்கிலாந்தின் மியான்மருக்கான தூதர் க்யாவ் ஸ்வார் மின்ன் (Ambassador Kyaw Zwar Minn) அலுவலகம் பூட்டப்பட்டது. காலையில் வேலைக்கு சென்றவர் பல மணி நேரம் வெளியே காத்திருந்தும் அவருக்கு மியன்மர் தூதரகத்துக்குள் அனுமதி மறுக்கப்பட்டது. மியன்மர் ராணுவ இணைப்பு அதிகாரியால் லண்டனின் மியான்மர் தூதரகம் முற்றாக கைப்பட்டப்பட்டதாகவும், தூதர் க்யாவ் ஸ்வார் மின்ன் சென்ற மாதம் ராணுவத்துடனான கருத்து மோதலால் பிரிந்து வந்ததால் அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, ஆட்சியைக் கைப்பற்றிய மறு நொடியே தூதர் பதவியிலிருந்து தூக்கி ஏறியப்பட்டுள்ளார் என்றும் அறிவித்தார்கள். ராணுவத்தை எதிர்க்கும் மற்ற நாடுகளில் பணியாற்றும் மியான்மருக்கான வெளிநாட்டு தூதர்களுக்கும் இனி வரப்போகும் நாட்களில் இதே கதி ஏற்படலாம்.

மியான்மர் போராட்டம்
மியான்மர் போராட்டம்

NLD கட்சி ஆட்சிக்கு வருவதை ஏன் ராணுவம் விரும்பவில்லை?

மியான்மர் அரசியலில் ராணுவத்திற்கு இருந்த அதிகாரத்தை ஆங் சான் சூகியின் NLD கட்சி விரும்பவில்லை. கடந்த 50 வருட கால ராணுவ அடக்குமுறை ஆட்சிக்கு முற்றுபுபுள்ளி வைக்க ஒரே வழி, அரசியல் சாசனத்தை திருத்தி எழுதி அதில் ராணுவத்திற்கு இருந்த அதிகாரங்களை பறிப்பது ஒன்றே என கருதியது ஆங் சான் சூகியின் NLD கட்சி. இதனால் சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்த ராணுவம் இப்போது ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. ஏற்கெனவே நாட்டின் அரசியலில் பாதுகாப்பு அமைச்சகம், உள் விவகார அமைச்சகம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு போன்ற முக்கியமான அதிகாரங்கள் ராணுவத்தின் கையில் இருந்தாலும் ஒட்டு மொத்த அதிகாரத்தையும் தன் இரும்புக் கரங்களுக்குள் மீண்டுமொருமுறை பறித்துப் போட்டுக்கொண்டுள்ளது ராணுவம்.

1962-ல் ஆசியாவின் பணக்கார நாடுகளில் ஒன்றாக இருந்த பர்மா இன்று ஆசியாவின் மிகப்பெரிய ஏழை நாடுகளில் ஒன்றாகி விட்டது. 10 வருடங்கள் சுவைத்த ஜனநாயகத்தின் ருசி கண்ட மக்கள் மீண்டும் ஒரு இருண்ட யுகத்துக்குள் செல்லத் தயாராக இல்லை. நாடு முழுதும் வெடித்தெழுந்துள்ள போராட்டங்களில் இதுவரை 5,000 பேர் வரை இறந்துள்ளதாக ராணுவ அறிக்கை கூறுகிறது. மனித உரிமைகள் அறிக்கை இந்த எண்ணிக்கை இன்னும் பல மடங்கு இருக்கும் என்கிறது. எந்த வெளித் தொடர்பும் இல்லாமல், அத்தனையையும் பரம ரகசியமாக வைத்திருந்து கையாளும் ராணுவத்தின் உண்மையான நோக்கம் என்ன, அவர்கள் அடுத்த கட்ட நகர்வு என்ன, இதன் பின்னணி என்ன போன்ற பல கேள்விகளுக்கான விடை மியான்மர் ராணுவத்திற்கே வெளிச்சம்.

மக்கள் கேட்கும் ஜனநாயகத்தை ராணுவம் மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்குமா? இல்லை அதிகார போதை தலைக்கேறிய ராணுவத்தின் அசுர ஆட்டத்தில் மியான்மர் மக்கள் ஒட்டுமொத்தமாக அடிமை வாழ்க்கைக்கு தம்மை மீண்டும் பழக்கப்படுத்திக் கொள்வார்களா என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு