Published:Updated:

கத்தார் ஏர்வேஸ் vs ஏர்பஸ்: ஒப்பந்த முறிவுக்கான காரணம் என்ன?

Airbus A320 neo ( Wikimedia Commons )

கத்தார் ஏர்வேஸின் புதிய 50 விமானங்களுக்கான 6 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை ரத்து செய்தது ஏர்பஸ் நிறுவனம்.

கத்தார் ஏர்வேஸ் vs ஏர்பஸ்: ஒப்பந்த முறிவுக்கான காரணம் என்ன?

கத்தார் ஏர்வேஸின் புதிய 50 விமானங்களுக்கான 6 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை ரத்து செய்தது ஏர்பஸ் நிறுவனம்.

Published:Updated:
Airbus A320 neo ( Wikimedia Commons )
ஏர்பஸ், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிவில் மற்றும் ராணுவ விமானங்களைத் தயாரிக்கும் நிறுவனம். ஏர்பஸ்க்கும் கத்தார் அரசின் விமான சேவை நிறுவனமான கத்தார் ஏர்வேஸ்க்கும் இடையிலான பிரச்னை இப்போது லண்டன் நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கிறது.

சமீபத்தில் ஏர்பஸ் நிறுவனத்தால் தயாரித்து அளிக்கப்பட்ட A350 வகை விமானத்தின் மேற்பூச்சு விரிசல் விழுவதாகவும் பெயிண்ட் உதிர்வதாகவும் விமானத்தில் ஒளி ஊடுருவாமல் தடுக்கும் காப்பர் படலம் இதனால் பாதிக்கப்படுவதாகவும் கத்தார் ஏர்வேஸ் குற்றம் சாட்டியிருந்தது. தீவிரமான பாதுகாப்பு பிரச்னை எனக் குறிப்பிட்டதற்கு ஏர்பஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்து, "கத்தார் ஏர்வேஸ், சொந்த பொருளாதார நலனுக்காக விமானங்களைக் கோவிட் காரணத்தைக் காட்டி நிறுத்தி வைத்திருக்கிறது. அவர்களின் தொழில்நுட்ப பிரச்னையைப் பாதுகாப்பு குறைபாடு எனத் தெரிவிக்கிறார்கள்" என்று மறுப்பு தெரிவித்தது.

விமானத்தின் மேற்பூச்சு பிளவு
விமானத்தின் மேற்பூச்சு பிளவு
Reuters

இந்நிலையில் ஏர்பஸ், கத்தார் ஏர்வேஸ் உடனான புதிய A321 நியோ வகையைச் சார்ந்த 50 விமானங்களுக்கான மற்றுமொரு ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்கிறது. இதன் ஒப்பந்த மதிப்பு 6.35 பில்லியன் டாலர். 2017 டிசம்பரில் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் படி இதன் முதல் விமானத்தை பிப்ரவரி 2023 இல் தயாரித்து வழங்குவதாக ஏர்பஸ் ஒப்புக்கொண்டிருந்தது.

இந்த அறிவிப்புக்கு கத்தார் ஏர்வேஸ் சார்பில் "வருந்தத்தக்க மற்றும் விரக்தி அளிக்கும் முடிவு" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் தனிப்பட்ட விசாரணையில் A350 விமானங்களில் கத்தார் ஏர்வேஸ் பிரச்னைக்கு முன்பே 5 வேறு விமான நிறுவனங்களுக்கு பெயிண்ட் உதிர்தல், மேற்பூச்சு விரிசல் உள்ளிட்ட பிரச்னைகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2022-ம் ஆண்டுக்கான கால்பந்து விளையாட்டு கத்தாரில் நடைபெறுவதையொட்டி சிறப்பு விமானத்தை அறிமுகப்படுத்த, விமானத்தை மீண்டும் பெயிண்ட் செய்த போது இது போலான 980 இடங்களில் குறைபாடுகளைக் கத்தார் ஏர்வேஸ் கண்டறிந்ததே இதன் ஆரம்பம்.

European Union Aviation Safety Agency ஆய்வு செய்ததில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏதுமில்லை எனச் சான்று அளித்த பிறகும் கத்தார் ஏர்வேஸ் லண்டன் நீதிமன்றத்தை அணுகியுள்ளது. "விமானங்களை நிறுத்தி வைத்திருப்பதற்கு எந்தவொரு நியாயமான காரணமும் இல்லை" என ஏர்பஸ், லண்டன் நீதிமன்றத்தில் தங்கள் தரப்பில் சமர்ப்பித்த ஆவணத்தில் தெரிவித்திருக்கிறது.

கத்தார் ஏர்வேஸ் விமானம்
கத்தார் ஏர்வேஸ் விமானம்

A350 மாடல் விமானங்கள் 53 இல் 21 விமானங்களில் இந்தப் பிரச்னை இருப்பதால் 618 மில்லியன் டாலர் நஷ்ட ஈடாக கத்தார் ஏர்வேஸ் கேட்டுள்ளது.

மேற்பூச்சு பழுது ஏற்படும் A350 வகை விமானத்தைச் சிக்கல் சரியாகும் வரை ஏற்பதில்லை. இருப்பினும் புதிய வகை A321 நியோ விமானத்தை ஏற்பதாக கத்தார் சார்பில் சொல்லப்படுகிறது. ஏர்பஸ் செய்தி தொடர்பாளர், "எங்கள் உரிமையின் அடிப்படையில் இந்த A321 நியோ விமானத்தைச் சார்ந்த ஒப்பந்தத்தையும் ரத்து செய்வதை உறுதி செய்கிறோம்" என ஆங்கில நாளிதழில் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவிலான இந்தப் பிரச்னை அனைவராலும் கவனிக்கப்படுகிற ஒன்றாக மாறியுள்ளது.