Published:Updated:

உண்ணாவிரதப் போராட்டத்தில் உயிரிழந்த 28 வயதுப் பெண் பாடகர்... யார் இந்த ஹெலின் போலக்?

அவர்கள் செய்தது எல்லாம் அடக்குமுறைக்கு எதிரான உரிமைக் குரல்களை எழுப்பியது மட்டும்தான். இதனால் பல இன்னல்களுக்கும் சித்ரவதைகளுக்கும் க்ரூப் யோரம் இசைக் குழுவினர் இரையாகினர். இவர்களின் கலாசார மையம் சோதனை என்ற பெயரில் அரசால் பலமுறை சூறையாடப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

துருக்கியில் 2016-ம் ஆண்டின் முன்பனிக்காலமான நவம்பரில் இஸ்தான்பூலில் உள்ள ஐடில் கலாசார மையம் காவல்துறையால் சூறையாடப்படுகிறது. அங்கிருந்த 'க்ரூப் யோரம்' இசைக்குழுவுக்குச் சொந்தமான, இசைக் கருவிகள், இசைப் புத்தகங்கள் என யாவும் சேதப்படுத்தப்படுகின்றன. அங்கிருந்த 30-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள், காவல் துறையால் அதிரடியாகக் கைது செய்யப்படுகின்றனர். அதில் சமீபத்தில் உண்ணாவிரதத்தால் உயிரிழந்த ஹெலின் போலக்கும் ஒருவர். மேலும், அந்த இசைக் குழுவுக்கு துருக்கி அரசாங்கத்தால் 2018-ல் நிரந்தரத் தடை விதிக்கப்படுகிறது. இதற்கு அக்குழுவின் நபர்கள் டி.ஹெச்.கே.பி.சி (DHKP-C) என்னும் மார்க்சிய லெனினிய அமைப்பில் உறுப்பினர்களாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

யோரும் இசைக்குழு
யோரும் இசைக்குழு

புரட்சிகர மக்கள் விடுதலை முன்னணி (டி.ஹெச்.கே.பி.சி) என்னும் பெயரில் செயல்படும் இந்த அமைப்பு துருக்கி, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தால் பயங்கரவாதக் குழுவாகக் கருதப்பட்ட ஒரு அமைப்பாகும். மேலும், தொடர்ந்து மூன்று வருடங்களாக 10 முறைக்கும் மேலே யோரமின் கலாசார மையம் காவல்துறையின் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இதற்கான காரணத்தை அறிந்துகொள்வதற்கு முன்பாக க்ரூப் யோரமைப் பற்றி முதலில் அறிய வேண்டியது அவசியம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சலுகைகள்... சிறப்பான செயல்பாடுகளால் கொரோனாவை வென்ற தைவான்!

`க்ரூப் யோரம்' துருக்கியில் 1985-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மக்கள் இசைக் குழுவாகும். நாட்டுப்புற இசையை அடிப்படையாகக் கொண்டு பாடல்களை உருவாக்கும் இவர்கள் அவ்வப்போது துருக்கி அரசின் அநீதிகளுக்கு எதிராகவும் பாடல்கள் பாடி வந்தனர். இதுவரை 23-க்கும் மேற்பட்ட இசை ஆல்பத்தையும் , எஃப் டைப் (F type) என்னும் ஒரு படத்தையும் இக்குழு வெளியிட்டுள்ளது. இவர்கள் துர்கிஸ் மற்றும் குர்திஷ் நாட்டுப்புறப் பாடல்களையும் இணைந்து பாடி வந்தனர். துருக்கி அரசு குர்திஷ் இன மக்கள் மீது ஏற்கெனவே ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், எளிய, நாட்டுப்புற மக்களின் குரலை இந்தக் குழு பாடிவந்ததால், மக்களைத் தூண்டும் விதமாகப் பாடல்களை இயற்றி வருகிறது என இந்த இசைக்குழு மீது பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியது துருக்கி அரசு.

ஹெலின்
ஹெலின்

ஆனால், அவர்கள் செய்தது எல்லாம் அடக்குமுறைக்கு எதிரான உரிமைக் குரல்களை எழுப்பியது மட்டும்தான். இதனால் பல இன்னல்களுக்கும் சித்ரவதைகளுக்கும் 'க்ரூப் யோரம்' இசைக் குழுவினர் இரையாகினர். இவர்களின் கலாசார மையம் சோதனை என்ற பெயரில் அரசால் சூறையாடப்பட்டது. இதனால் 2016-ம் ஆண்டு இவர்களில் 30 பேர் கைது செய்யப்படுகிறார்கள். இதற்குப் பிறகு துருக்கி அரசு இந்த இசைக் குழுவைச் சேர்ந்த 6 பேரைத் தேடப்படும் தீவிரவாதிகளாக அறிவிக்கிறது. இதோடு குழுவின் பாடல்கள், இசை நிகழ்ச்சிகள் ஆகியவை 2018-ம் ஆண்டு தடை செய்யப்படுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தங்கள் இசைக்குழு மீதான தடையை நீக்கவும், கைது செய்யப்பட்ட சகாக்களை விடுவிக்கக்கோரியும் 2019 ஜூன் மாதம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர் இசைக் குழுவின் உறுப்பினர்கள். இதில், 'க்ரூப் யோரம்' இசைக் குழுவின் கிட்டாரிஸ்டான இப்ராஹீம் கோக்சேக்கும், ஹெலின் போலக்கும் கைது செய்யப்படுகின்றனர். இப்ராஹீம் கோசேக் 2019 ஜூன் 19-ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பிக்கிறார். பின்னர் ஜனவரி 4, 2020 முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவிக்கிறார். அதேபோல, நவம்பர் 20, 2019 முதல் உண்ணாவிரதம் இருந்த வந்த ஹெலின் போலக், ஜனவரி 20, 2020 முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவிக்கிறார்.

ஹெலின்- கோசெக்
ஹெலின்- கோசெக்

ஹெலின் போலக் 2019-ம் ஆண்டு இறுதியில் விடுதலை செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து கோசெக்கும் மோசமான உடல்நிலை காரணமாக பிப்ரவரி 24, 2020-ல் விடுதலை செய்யப்பட்டார். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் இசைக் குழுவின் உரிமைகளை மீட்க இவர்கள் இருவரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களது உண்ணாவிரதத்தை கலைக்கும் விதமாகத் துருக்கி அரசு மார்ச் 11-ம் தேதி இவர்கள் இருவரையும் கட்டாயமாக உணவருந்த வைப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறது. அங்கேயும் இருவரும் உணவருந்த மறுத்து விடுகின்றனர்.

`இனி சாதாரண விஷயங்களைப் பார்த்தும் சிரிப்பாள்!' -சிரிய குழந்தையை மீட்ட துருக்கி அதிகாரிகள்

யோரமின் கலாசார மையத்தை தாக்காதிருத்தல், தடை செய்யப்பட்ட இசை நிகழ்ச்சிகள் மீது தடை நீக்கம் செய்தல், கைது செய்யப்பட்ட இசைக் குழுவின் உறுப்பினர்களை விடுதலை செய்தல், இசைக் குழுவின் உறுப்பினர்களைத் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்ததைத் திரும்பப் பெறுதல் ஆகியவையே இவர்களின் கோரிக்கைகள். இந்த இசைக் குழு முதலாளித்துவ எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, அமெரிக்க எதிர்ப்பு, துருக்கி அரசின் கொள்கை எதிர்ப்பு ஆகியவற்றை தனது பாடல்களில் வெளிப்படுத்தியது. இவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. க்ரூப் யோரமின் 25-வது ஆண்டு இசை விழாவில் 55,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்தனர். மக்களின் உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த ஒரே காரணத்துக்காக அரசின் வெறுப்பையும் சேர்த்தே சம்பாதித்தது க்ரூப் யோரம் இசைக்குழு.

ஹெலின்
ஹெலின்

இந்தநிலையில், கடந்த ஏப்ரல் 3-ம் தேதியன்று ஹெலின் போலக் தொடர் உண்ணாவிரதத்தால் உயிரிழந்தார் என யோரம் இசைக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது. இவர் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்புகூட இவர்களின் ஆதரவாளர்கள் துருக்கி அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தனர். ஆனால், துருக்கி அரசு உண்ணாவிரதத்தைக் கைவிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த முடியும் எனக் கூறி அழைப்பை நிராகரித்துவிட்டது. ஹெலின் போலக் தனது உண்ணாவிரதப் போராட்டத்தின் 288-வது நாளில் உயிரிழந்தார். 28 வயதே ஆன ஹெலின் போலக்கின் இறப்பை வெறும் செய்தியாக மட்டுமே கடந்து விட முடியாது. அதிகார வர்க்கத்துக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் கூக்குரலாகும். இனி அதிகார வர்க்கத்துக்கு எதிராக மக்களின் போராட்டம் எழும்போதெல்லாம் ஹெலின் போலக்கின் பெயர் நிச்சயம் உச்சரிக்கப்படும். உயிர்நீத்தாலும் கடைசி வரை தனது கோரிக்கைகளை கைவிடவில்லை ஹெலின் போலக். இந்த உலகம் உள்ள வரை வரலாற்றின் சிவப்பு பக்கங்களில் நிச்சயம் நினைவுகூரப்படுவார் ஹெலின்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு