Published:Updated:

கும்பல் படுகொலைகள்… நடுங்க வைக்கும் அமெரிக்க இனவெறி வரலாறு!

மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் சிவில் உரிமைகளுக்கான போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து1964-ல் சிவில் உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தன் சொந்த நாட்டின் பிரச்னையைத் தீர்க்க முடியாமல் பதுங்கு குழிக்குள் ஓடிப்போய் ஒளிந்துகொண்டது பெரும் வேடிக்கையானது. இதற்கு முன்பு காஷ்மீர் விவகாரத்திலும்கூட இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாகவும் ட்ரம்ப் அறிவித்தார். எந்த நாட்டில் பிரச்னை என்றாலும் நாட்டாமை செய்ய முந்திக்கொண்டுவருபவர் ட்ரம்ப்.

அமெரிக்காவில் போராட்டம்
அமெரிக்காவில் போராட்டம்

அமெரிக்காவில் போலீஸாரால் கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிளாய்ட் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்றுவரும் போராட்டங்களால் அமெரிக்காவே பற்றியெரிகிறது. அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை முன்பாக போராட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு ஆவேசப் போராட்டம் நடத்தியதால், பதுங்குக் குழிக்குள் ஓடி ஒளிந்தார் ட்ரம்ப்.

கொரோனா வைரஸ் பரவலால் உயிரிழப்புகள் உட்பட கடுமையான பாதிப்புகளை அமெரிக்கா சந்தித்துவரும் வேளையில், காவல்துறையின் காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிரான போராட்டங்கள் அமெரிக்கா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. நியூயார்க், சிகாகோ, பிலடெல்ஃபியா, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடைபெற்றுள்ளன. கண்ணீர்ப்புகை குண்டுகளையும், ரப்பர் தோட்டாக்களையும் வெடித்து போராட்டக்காரர்களை போலீஸார் விரட்டியடிக்கிறார்கள்.

அமெரிக்காவில் போராட்டம்
அமெரிக்காவில் போராட்டம்

போலீஸாரின் தாக்குதலில் ஏராளமானோர் கடுமையாக காயமடைந்துள்ளனர். 40-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அதை மீறி மக்கள் பொதுஇடங்களுக்கு வந்து போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். 15 மாகாணங்களிலும் தேசிய காவல்படையினரும் உள்நாட்டு அவசர நிலைகளுக்கான ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கறுப்பின மக்கள் காவல்துறையினரால் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும், அதை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதும் இது முதல் முறை அல்ல. அமெரிக்காவின் நீண்ட நெடிய வரலாற்றில் இதுபோல ஏராளமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, கும்பலாகச் சேர்ந்து கறுப்பினத்தவரை கொடூரமாகத் தாக்கும் கும்பல் படுகொலைச் சம்பவங்கள் அமெரிக்காவில் பரவலாக நிகழ்ந்துள்ளன. 1882 முதல் 1968 வரை 4,742 கும்பல் கொலைகள் நடைபெற்றதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இதில் சிலர் வெள்ளை இனத்தவர் என்றாலும், கொலை செய்யப்பட்டோரில் பெரும்பாலோர் கறுப்பினத்தவரே. வெள்ளை இனத்தவர் பெருமளவில் வசிக்கும் தெற்கு மாகாணங்களில்தான் இத்தகைய கும்பல் கொலைகள் அதிகளவில் நிகழ்ந்தன.

அடிமைத் தழும்பு
அடிமைத் தழும்பு

20-ம் நூற்றாண்டில் ஆயிரக்கணக்கில் கும்பல் கொலைகள் நிகழ்ந்துள்ளன. அப்படி கொலைசெய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர், தூக்கிலிட்டு கொலைசெய்யப்பட்டவர்கள். கும்பலாகச் சேர்ந்து ஒருவரை அடித்துக் கொலை செய்து அல்லது தூக்கிலிட்டு கொலை செய்து, அதைப் புகைப்படமாக எடுத்து விற்பனை செய்த கொடுமையும் நிகழ்ந்துள்ளது. துப்பாக்கியால் சரமாரியாகச் சுடப்பட்டும், உயிருடன் எரித்தும் பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். காரின் பின்னால் கட்டி இழுத்துச்சென்றும், உயரமான இடத்திலிருந்து குதிக்க வைத்தும் பலர் கொலைசெய்யப்பட்டுள்ளனர். காவல்துறையின் ஆதரவுடனேயே இந்தக் கும்பல் கொலைகள் நடத்தப்பட்டுள்ளன. அந்த கொலைகளுக்கு உடந்தையாக இருந்த காவல்துறையினர் மட்டுமல்ல, அந்தக் கொலைகளை நிகழ்த்தியவர்களும் எந்த தண்டனைக்கும் உள்ளாவதில்லை. மிகப்பெரிய அளவில் சிவில் உரிமைகளுக்கான போராட்டம் நடைபெற்று, அதன் பிறகுதான் அந்தக் கொடுமைகள் குறைந்தன.

இனப்பாகுபாடும், அதனால் நிகழ்த்தப்படும் வன்முறைகளும் அமெரிக்காவில் நீண்டகாலமாக இருந்துவருகின்றன. இதன் வரலாற்றுப் பின்னணியைப் பார்த்தால்தான், இந்தப் பிரச்னைகளுக்கான காரணங்கள் புரியும். முதன்முதலில் அமெரிக்காவுக்குப் போனவர்கள் விவசாயம் செய்தார்கள். பருத்தி, புகையிலை, அரிசி ஆகியவற்றை பிரதானமாக உற்பத்தி செய்தார்கள். வேளாண் பணிகளுக்கு நிறைய அடிமைகள் தேவைப்பட்டனர். அப்போது, கறுப்பின மக்கள் அடிமைகளாக அழைத்துச்செல்லப்பட்டனர்.

அமெரிக்காவில் போராட்டம்
அமெரிக்காவில் போராட்டம்

முதலில் `அடிமைகள்’ என்று அழைக்கப்பட்ட அவர்கள், பிறகு, `நீக்ரோக்கள்’ என்றும், `கறுப்பர்கள்’ என்றும் அழைக்கப்பட்டனர். இன்றைக்கு `ஆப்ரிக்க அமெரிக்கர்கள்’ என்று குறிப்பிடப்படுகிறார்கள். அடிமைகளாக நடத்தப்பட்ட இவர்களுக்கு எந்த உரிமைகளும் இல்லாத நிலையில், கடுமையான அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள். இந்த நிலையில், மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் சிவில் உரிமைகளுக்கான போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து1964-ல் சிவில் உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

`ட்ரம்பின் கேம் சேஞ்சர்..!' - தடுப்பு மருந்து ஆய்வை மீண்டும் தொடங்கிய உலக சுகாதார நிறுவனம்

அதன் பிறகுதான் கறுப்பின மக்களுக்கு ஓட்டுரிமை உட்பட அனைத்து உரிமைகளும் கிடைத்தன. அடிமை முறையும் ஒழிக்கப்பட்டது. கறுப்பின மக்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படும் என்பதில் உறுதியாக இருந்தவர், 1961 முதல் 1963 வரை அமெரிக்க அதிபராக இருந்த ராபர்ட் எஃப் கென்னடி. ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரான கென்னடி 1963-ல் இறந்துவிட்டார். ஆனாலும், ஜனநாயகக் கட்சியின் ஆட்சியில், 1964-ம் ஆண்டு சிவில் உரிமைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. அதனால்தான், இன்றைக்கும் ஜனநாயகக் கட்சியில் அதிக அளவில் கறுப்பின மக்கள் இருக்கிறார்கள்.

டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்

வெள்ளை இனத்தவர் குடியரசுக் கட்சியில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். இன்றைக்கு அங்கு வன்முறைகள் நடைபெறுவதற்கு குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ட்ரம்ப் ஜனாதிபதியாக இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம் என்ற கருத்து தற்போது நிலவுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு