Published:Updated:

ரீவைண்ட் 2021: ஜோ பைடன், தாலிபன் ஆட்சி டு சூயஸ் கால்வாய் பிரச்னை... பரபர டாப் 10 சர்வதேச சம்பவங்கள்!

ரீவைண்ட் 2021 - சர்வதேச சம்பவங்கள்
Listicle
ரீவைண்ட் 2021 - சர்வதேச சம்பவங்கள்

அரசியல், அறிவியல், சூழலியல் என அனைத்து துறையிலும் பல முக்கியமான நிகழ்வுகள் பதிவானாலும், இந்த ஆண்டு நடந்த சில பரபரப்பான சர்வதேச டாப் 10 சம்பவங்கள் இதோ...


வந்த வேகத்தில் முடியப்போகிறது 2021. பொருளாதார, சமூக ரீதியாக இன்னுமொரு மோசமான ஆண்டு முடிவுக்கு வருகிறது. 2021-ஐ பற்றி ஒரு நல்ல விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்றால், இது சென்ற வருடம் அளவுக்கு மோசமாக இல்லை என்பது மட்டுமே ஒரே ஆறுதல். பல துன்பியல் செய்திகளைப் போல சில நல்ல விஷயங்களும் இவ்வாண்டில் நிகழ்ந்தன. அரசியல், அறிவியல், சூழலியல் என அனைத்து துறையிலும் பல முக்கியமான நிகழ்வுகள் பதிவானாலும், இந்த ஆண்டு நடந்த சில பரபரப்பான சர்வதேச டாப் 10 சம்பவங்கள் இதோ...


ஜோ பைடனுடன் கமலா ஹாரிஸ்

10) ஜோ பைடன் அமெரிக்க அதிபர், கமலா ஹாரிஸ் துணை அதிபர்

“America is back” என்ற அறைகூவலுடன் பதவிக்கு வந்தார் ஜோ பைடன். அமெரிக்க வரலாற்றில் நடந்த மிகவும் சர்ச்சைக்குரிய தேர்தல்களில் ஒன்றான நவம்பர் 2020 ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றார். துணை அதிபராக பதவியேற்ற கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் ஆஃப்ரோ அமெரிக்க மற்றும் முதல் தெற்காசிய துணை பெண் ஜனாதிபதி என்னும் பெருமையைப் பெற்றார். 46 என்ற நம்பர் பிளேட் கொண்ட லிமோசினில் வந்த பைடன், கொரோனா காரணமாக, தனது நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் திரையில் தோன்றிய ஒரு virtual appointment ceremony மூலம் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தாலிபன்கள்

09) மீண்டும் தலைதூக்கிய தாலிபன்கள் ஆட்சி

இருபது நீண்ட வருடங்களுக்குப் பின் ஆப்கானிஸ்தானைக் கைவிட்டு அமெரிக்க வெளியேற, மீண்டும் ஆட்சியைப் பிடித்தது தாலிபான். அமெரிக்க முன்னால் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தாலிபன்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, குறித்த தேதிக்கு இரு வாரம் முன்னராகவே அமெரிக்க படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற உத்தரவிட்டார் புதிய ஜனாதிபதி ஜோ பைடன். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த முடிவை அடுத்து ஆப்கானிஸ்தான் தேசிய ராணுவம் சரிந்து, தாலிபன்கள் நாட்டைக் கைப்பற்றினர். தலைநகர் காபூலில் சிக்குண்ட ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களை மீட்க வந்த விமானத்தின் சக்கரங்களிலும், இறக்கைகளிலும் ஆப்கன் மக்கள் நெருக்கியடித்து ஏறி அமர்ந்து நாட்டை விட்டு தப்பிக்க முயன்ற காட்சி உலகையே உலுக்கியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்ட எவர் கிவன் கப்பல் ( AP )

08) சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்குக் கப்பல்

எவர்கிரீன் மரைன் நிறுவனத்துக்கு சொந்தமான, 2,00,000 டன் எடையுள்ள, மெகாஷிப் என அழைக்கப்படும் எவர் கிவன் கப்பல், மார்ச் 23 சீனாவிலிருந்து கிளம்பி நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நோக்கி மத்தியதரைக் கடலூடாக சென்ற பொழுது, எகிப்தின் சூயஸ் கால்வாயில் எதிர்பாராத விதமாக சிக்குண்டது. இதனால் கால்வாயின் இரு முனைகளிலும் 400க்கும் மேற்பட்ட கப்பல்கள் தேக்கமடைந்து உருவான போக்குவரத்து நெரிசல் சர்வதேச வர்த்தகத்தில் டோமினோ விளைவை ஏற்படுத்தியது.


சவுதி அரேபியா - கட்டார் எல்லை ( vikatan )

07) கட்டாருக்கான தனது எல்லைகளை திறந்த சவுதி அரேபியா

சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டார் மீது போடப்பட்ட தரை, கடல் மற்றும் வான்வழி தடைகளை நீக்கி தனது எல்லையை மீண்டும் திறந்தது சவுதி அரேபியா. இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கிறது என்றும், ஈரானுடன் மிக நெருக்கமான உறவை பேணுகிறது என்றும் கட்டார் மீதான ராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை சவுதி அரேபியா துண்டித்துக் கொண்டது. இந்தக் குற்றச்சாட்டுக்களை கட்டார் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில் இவ்வருடம் மீண்டும் கட்டார் - சவுதி எல்லைகள் திறக்கப்பட்டன.


டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா!

06) வெற்றிகரமாக நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸ்

COVID-19 தொற்றுநோய் பரவலில் உலகம் முடக்கிப் போனதைத் தொடர்ந்து முதன் முறையாக, மக்கள் ஒன்றிணைந்து சிறப்பாக நடந்து முடிந்த மாபெரும் விழா டோக்கியோ 2020 ஒலிம்பிக்ஸ். கொரோனா காரணமாக ஏற்கெனவே ஓராண்டு ஒத்திப்போடப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் இவ்வாண்டு பல தடைகளையும் மீறி சிறப்பாக நிகழ்ந்து முடிந்தது. 113 பதக்கங்களுடன் வழமை போலவே அமெரிக்கா முதல் இடத்தை பிடிக்க, 88 பதக்கங்களுடன் சீனா இரண்டாம் இடத்திற்கு வந்தது.


Eritrean–Ethiopian War Map 1998 ( Skilla1st, CC BY-SA 3.0 via Wikimedia Commons )

05) உச்சக்கட்டத்தை அடைந்த எத்தியோப்பியாவின் உள்நாட்டுப் போர்

அண்டை நாடான எரித்திரியாவுடனான சமாதான உடன்படிக்கைக்காக 2019ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார் எத்தியோப்பிய பிரதமர் அபி அஹ்மத். அதன் சூடு தணியும் முன்னரே கடுமையான உள்நாட்டுப் போரில் சிக்கியது எத்தியோப்பியா. சுமார் இரண்டு மில்லியன் எத்தியோப்பியர்கள் இடம்பெயர்ந்தும், பல ஆயிரம் பேர் உயிரிழந்தும், இன அழிப்பு, படுகொலைகள், கூட்டுப் பாலியல் வன்கொடுமை எனப் பல போர்க்குற்றங்களையும் அரங்கேற்றியது இந்தப் போர். சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ராஜதந்திர முயற்சிகள் இதுவரை கைகூடாத நிலையில் நம்பிக்கை இல்லாத புது வருடத்தை நோக்கி நகர்கின்றனர் எத்தியோப்பியா மக்கள்.


Angela Merkel, Olaf Scholz ( AP )

04) விடைபெற்ற ஜெர்மனியின் இரும்புப் பெண்மணி

பரபரப்பான ஐரோப்பிய உச்சிமாநாடுகள், வெற்றிகரமான கூட்டணி பேச்சுவார்த்தைகள், உலக தலைவர்களுடன் முக்கியமான சந்திப்புகள், அதிரடியான பல முடிவுகள், திறமையான தீர்மானங்கள், சிக்கலான ராஜதந்திர நகர்வுகள் என தனது 16 வருட வெற்றிகரமான அரசியல் வாழ்க்கைக்கு இந்த வருடம் ஓய்வு அறிவித்தார் உலகின் சக்தி வாய்ந்த பெண்மணி ஏஞ்சலா மெர்கல். ஜெர்மன் அரசியலில் மட்டுமல்ல, உலக அரசியலிலும் பல முக்கிய அதிர்வுகளை ஏற்படுத்தியவர். ஜெர்மனியை தன் இரு கரங்களிளும் தூக்கி அதன் அடுத்த கட்ட வளர்ச்சிப் பாதையில் விட்டுச் சென்றுள்ளார் இந்த 67 வயதான ஐயன் லேடி.


சீனா - தைவான்

03) சீனா - தைவான் இடையே இரட்டிப்பான பதற்றங்கள்

1949-ம் ஆண்டு சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சிக்குப் பிறகு, சீனாவிடமிருந்து பிரிந்து முழு இறையாண்மை உள்ள ஒரு சுயாதீன நாடாக தன்னை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முயற்சிகளை நோக்கி தைவான் நகர்ந்தது. இதை எப்போதுமே ஆதரிக்காத சீனா, தைவானை தன் அதிகார எல்லைக்குள் வைத்திருக்க சமீப காலங்களில் எடுத்த முயற்சி இந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியது. இந்த வருடம் அக்டோபர் தொடக்கத்தில் இருந்து, தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் 150க்கும் மேற்பட்ட ராணுவ போர் விமானங்களை அனுப்பியது சீனா. அதேபோல சீன ராணுவம் தைவான் எல்லையில் பயிற்சிகளை மேற்கொண்டது இப்பதற்றத்தை மேலும் இரட்டிப்பாக்கியது. 2025க்குள் சீனா, தைவான் மீது முழு அளவிலான படையெடுப்பை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Russian President Vladimir Put, left, and Russian General Staff Valery Gerasimov ( AP )

02) உக்ரைனின் நேட்டோ நோக்கிய நகர்வால் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் ரஷ்யா

தெற்கு உக்ரைனின் ஒரு பகுதியை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கைப்பற்றிய ரஷ்யா, மீண்டும் மற்றுமொரு ஆக்கிரமிப்புக்குத் தயாராகி வருவது இவ்வருடம் உலக அரசியலில் ஒரு பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷ்யாவை பாரிய அளவிலான பொருளாதாரத் தடைகளால் திருப்பித் தாக்குவோம் என்று அமெரிக்கா அச்சுறுத்தல் விடும் அளவுக்கு நிலைமை மோசமானது. ஐரோப்பா மற்றும் ரஷ்யா ஆகிய இரு பிராந்தியங்களுடனும் உக்ரைன் எல்லைகளைப் பகிர்ந்து கொண்டாலும், முன்னால் சோவியத் குடியரசின் ஓர் அங்கமாக இருந்த நாடு அது என்பதால், ரஷ்யாவுடன் ஆழமான சமூக மற்றும் கலாசார உறவுகளைக் கொண்டுள்ளது. ஆயினும் சமீப காலமாகவே ஐரோப்பிய அங்கத்துவத்தை நோக்கி உக்ரைன் நகர்வதை ரஷ்யா கடுமையாக எதிர்த்து வருகிறது. ஏனெனில் நேட்டோவில் உக்ரைன் இணைந்த மறுகணமே அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ரஷ்யா ஈசி டார்கெட் ஆகிவிடும் என்பதால், மேற்கத்திய கூட்டணியான நேட்டோவில் உக்ரைன் ஒருபோதும் சேராது என்ற உத்தரவாதத்தை ரஷ்யா கோருகிறது.


Belarusian President Alexander Lukashenko

01) அரசுக்கு எதிராக பெலாரஸில் வெடித்த போராட்டம்

சமீபத்தில் நடந்த தேர்தலில் பெலாரஸின் நீண்ட கால தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவிற்கு ஆதரவாக மோசடி நடந்ததாகக் கூறி ஒரு மிகப்பெரிய மக்கள் புரட்சி வெடித்தது. 1991இல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின் ஐரோப்பாவின் மிக நீண்ட ஆட்சியாளராகக் கருதப்படும் லுகாஷென்கோ பெலாரஸின் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். ஐரோப்பாவின் 'கடைசி சர்வாதிகாரி' என்று விவரிக்கப்படும் அவர், பலம் பொருந்திய KGB ரகசிய போலீஸ் முதல் சோவியத் கம்யூனிசத்தின் முக்கிய பல விஷயங்களை இன்று வரை தக்கவைத்துக்கொள்ள முயன்று வருகிறார். இதுவரை அவரது ஆட்சியின் கீழ் தேர்தல்கள் சுதந்திரமானதாகவோ அல்லது நியாயமானதாகவோ நடந்ததாகக் கருதப்படவில்லை என்றாலும் தன்னை ஒரு கடுமையான தேசியவாதியாக இவர் சித்திரித்துக் கொண்டதால் உறுதியான ஆதரவை மக்கள் அவருக்கு அளித்து வந்தனர்.

சமீபத்தைய தேர்தலில் மீண்டும் தான் வெற்றி பெற்றதாக இவர் அறிவித்ததை தொடர்ந்து, அவரை எதிர்த்து போட்டியிட்ட Ms Tikhanovskaya என்ற பெண் வாக்கு எண்ணிக்கையில் ஊழல் நடந்துள்ளதாக மனுத் தாக்கல் செய்தார். இதனால் அவரது மொத்த குடும்பமும் ஒன்று கைது செய்யப்பட்டனர் இல்லை நாடு கடத்தப்பட்டனர். அதேவேளை பெலாரஸ் ஒலிம்பிக் தடகள வீராங்கனை ஒருவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி ஒலிம்பிக் விளையாட்டுக்குப் பிறகு தனது தாயகத்திற்குத் திரும்ப மறுத்த சம்பவம் பெலாரஸை மீண்டும் சர்வதேச கவனத்திற்குக் கொண்டு வந்தது. பல பெலாரசியர்கள் போலந்து போன்ற அயல் நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புக ஆரம்பிக்க, நிலைமை இன்னும் சூடு பிடித்தது.


COP26 climate conference in Glasgow, Scotland ( AP Photo/Scott Heppell )

பிற சம்பவங்கள்

இது தவிர கொரோனாவிற்கான தடுப்பூசி கண்டுபிடிப்பு, ஐரோப்பாவின் எரிபொருள் நெருக்கடி, உலகளாவிய சிப் பற்றாக்குறை, உலகம் முழுவதும் உருவான விநியோகச் சங்கிலியிலான சிக்கல்களும் அதன் டொமினோ விளைவுகளும், மியான்மரில் நிகழ்ந்த திடீர் ராணுவ ஆட்சி மாற்றம், இங்கிலாந்தில் நடைபெற்ற COP26 என்றழைக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு, இங்கிலாந்து அரசாட்சியில் இருந்து விடுவித்து தன்னை ஒரு சுதந்திரக் குடியரசாக அறிவித்த பார்படாஸ், காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல், அமெரிக்காவைத் தாக்கிய மூர்க்கமான சூறாவளி, 2400க்கும் மேற்பட்டோரை பழிவாங்கிய ஹைட்டியின் புவி நடுக்கம், பிலிப்பைன்ஸில் 375 பேரைக் கொன்ற Super Typhoon Rai சூறாவளி, துருக்கியில் அதிகரித்த திடீர் பணவீக்கம், பெலாரஸ் மற்றும் பிற நாடுகளில் இருந்து வந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்களைத் தடுக்க ஐரோப்பாவில் கட்டப்பட்ட European wall, இங்கிலாந்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினரான இளவரசர் பிலிப்பின் மரணம், மிஸ் யுனிவர்ஸ் நிகழ்வு, ஜார்ஜ் ஃப்ளாய்டு வழக்கில் கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு எனப் பல முக்கிய நிகழ்வுகள் இந்த ஆண்டு சர்வதேச அரங்கில் பதிவாகின.

சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த வருடம் ஓரளவுக்கு உயிரிழப்புகள் குறைந்திருந்தாலும் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் சூழலியல் ரீதியில் மற்றுமொரு மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து முடிவுக்கு வருகிறது 2021. பிறக்கப்போகும் புது வருடம் என்ன மாதிரியான மாற்றங்களைத் தாங்கி வரக் காத்திருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இவை தவிர டாப் 10 சர்வதேச நிகழ்வுகள் என்றவுடன் உங்களின் சாய்ஸாகத் தோன்றுபவை என்னென்ன? கமென்ட்டில் சொல்லுங்கள்...