Published:Updated:

`உக்ரைன் உருக்குலைகிறது... புதின் ஆடும் புதிர் விளையாட்டு!'- போர் குறித்த 10 முக்கிய விஷயங்கள்!

உக்ரைன் மீதான தாக்குதல்

எந்தப் போருமே உலக அளவில் பெரிய பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும். ரஷ்யா தொடங்கியுள்ள போரும் இதற்கு விதிவிலக்கு இல்லை.

`உக்ரைன் உருக்குலைகிறது... புதின் ஆடும் புதிர் விளையாட்டு!'- போர் குறித்த 10 முக்கிய விஷயங்கள்!

எந்தப் போருமே உலக அளவில் பெரிய பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும். ரஷ்யா தொடங்கியுள்ள போரும் இதற்கு விதிவிலக்கு இல்லை.

Published:Updated:
உக்ரைன் மீதான தாக்குதல்
உக்ரைன் நாட்டின் அங்கமாக இருக்கும் லானெஸ்க் மற்றும் தோனெஸ்க் பகுதிகளை தனி நாடுகளாக அங்கீகரித்த கையோடு, உக்ரைன் மீதான ராணுவத் தாக்குதலை முறைப்படி அறிவித்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். அடுத்த சில நிமிடங்களில் உக்ரைன் தலைநகரான கீவ் நகரில் குண்டுகள் வீசப்படும் சத்தம் கேட்டது. வியாழன் அதிகாலை ரஷ்யப் போர் விமானங்கள் பறந்து சென்று உக்ரைன் நகரங்களில் தாக்குதலைத் தொடங்கிவிட்டன. கிழக்கு உக்ரைனில் நம்பமுடியாத வேகத்தில் ரஷ்யப் படைகள் முன்னேறிச் செல்கின்றன. பல நகரங்களை தன் வசப்படுத்தி வருகின்றன. ரஷ்யா - உக்ரைன் போர் குறித்த 10 முக்கியமான விஷயங்கள் இங்கே...

1. ரஷ்யா போரைத் தொடங்கியதுமே உக்ரைனில் பதற்றம் அதிகரித்துள்ளது. விமானத் தாக்குதல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் சைரன்கள் உக்ரைனின் நகரங்களில் இடைவிடாமல் ஒலிக்கின்றன. தாக்குதல்களிலிருந்து தப்பிக்க, தரைக்கு அடியில் இருக்கும் மெட்ரோ ரயில் ஸ்டேஷன்களில் மக்கள் அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள். தலைநகரான கீவ் நகரிலிருந்து மக்கள் அச்சத்துடன் வெளியேறுவதால், அங்கு எல்லா சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.

வெளியேறும் உக்ரைன் மக்கள்
வெளியேறும் உக்ரைன் மக்கள்
Emilio Morenatti

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2. உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கிய அதே நிமிடத்தில், உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கும் உலக நாடுகளுக்குக் கடுமையான எச்சரிக்கையும் புதின் விடுத்திருக்கிறார். "இந்த விவகாரத்தில் தலையிட நினைக்கும் அந்நியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். யாராவது தலையிட்டால், வரலாற்றில் எப்போதும் நீங்கள் சந்திக்காத விளைவுகளை இங்கு சந்திப்பீர்கள். அதற்கான எல்லா முடிவுகளையும் நான் எடுத்திருக்கிறேன். நான் சொல்வது உங்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன்" என்றார் அவர்.

3. இந்தப் போர் விளையாட்டை புதின் மிகுந்த சாமர்த்தியமாக ஆடிவருகிறார். "நாங்கள் உக்ரைனை ஆக்கிரமிக்கும் திட்டத்தில் இல்லை. உக்ரைன் நாட்டிலிருந்து ராணுவத்தை அப்புறப்படுத்தப் போகிறோம்" என்கிறது ரஷ்யா. அதாவது, உக்ரைன் நாட்டின் ராணுவத்தை இல்லாமல் செய்வதுதான் ரஷ்யாவின் திட்டம். "உங்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு வீட்டுக்குச் செல்லுங்கள்" என்று உக்ரைன் ராணுவத்துக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை செய்திருக்கிறார். உக்ரைன் அரசோ, "மக்கள் எல்லோரும் ராணுவச் சேவை செய்யத் தயாராக இருக்க வேண்டும்" என்று உத்தரவு போட்டிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

4. ரஷ்யாவின் விமானத் தாக்குதல்கள் எல்லாமே உக்ரைனின் ராணுவக் கட்டமைப்புகளைக் குறி வைத்தே நடக்கும் என்று சொல்லியிருக்கிறார் புதின். விமான நிலையங்கள், ராணுவத் தளங்கள், ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள் ஆகியவை மீதே ரஷ்ய விமானங்கள் குண்டுகளை வீசி வருகின்றன. பொதுமக்களுக்கு பாதிப்பு இருக்காது என்று ரஷ்யா சொன்னாலும், அப்பாவிகளைக் கொல்லாத போர் என்று எதுவுமே கிடையாது என்பதுதான் நிஜம்.

5. இந்தப் போரைத் தவிர்ப்பதற்காக கடைசி நிமிடம் வரை உலக சமூகம் முயற்சி செய்துவந்தது. ஒரு வாரமாகவே ரஷ்ய - உக்ரைன் எல்லையில் சின்னச் சின்னதாக தாக்குதல்கள் நடைபெற்று வந்த நிலையில், ஐ.நா-வுக்கான உக்ரைன் தூதர், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பலமுறை மன்றாடிப் பார்த்தார். "உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா குண்டு வீசாது என்ற உறுதிமொழியைக் கொடுக்கச் சொல்லுங்கள்" என்று கெஞ்சினார். ரஷ்யா அப்படி உறுதிமொழி கொடுக்கத் தயாராக இல்லை. தாக்குதல் தொடங்கியதும், "அமைதியை விரும்பும் உக்ரைன் இதிலிருந்து தன்னைத் தற்காத்துக்கொண்டு வெற்றி பெறும். உலக நாடுகள் இனியும் வேடிக்கை பார்க்கக்கூடாது. தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டும். இது நீங்கள் செயல்பட வேண்டிய நேரம்" என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா வேண்டுகோள் விடுத்தார்.

உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா
உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா
John Minchillo

6. போர் அச்சம் தொடங்கியதுமே, ரஷ்யாவில் இருந்த உக்ரைன் மக்களை வெளியேறுமாறு அந்த நாடு கேட்டுக்கொண்டது. யாரும் ரஷ்யாவுக்குப் பயணம் செல்ல வேண்டாம் என்றும் தடை விதித்தது. உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். "நம் நாட்டில் இருக்கும் பிரிவினைவாதிகளுக்கு ரஷ்யா உதவி செய்துவருகிறது. அதனால்தான் இரண்டு நாடுகளுக்கும் பிரச்னை. ரஷ்யாவுக்கு நாம் ஒருபோதும் அச்சுறுத்தலாக இல்லை. ஆனால், அவர்கள் தாக்கினால் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள எல்லா முயற்சிகளையும் செய்வோம்" என்றார். தாக்குதல் தொடங்குவதற்கு முதல் நாளான புதன்கிழமை அவர் ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் சமாதானம் பேச முயன்றார். ஆனால், புதின் பேச மறுத்துவிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

7. தாக்குதல் தொடங்குவதற்கு முன்பாகவே, "அன்புள்ள புதின், என் மனதின் அடி ஆழத்திலிருந்து ஒரே ஒரு விஷயத்தை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். உங்கள் படைகள் உக்ரைனைத் தாக்குவதைத் தடுத்து நிறுத்துங்கள். அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், ஏற்கெனவே நிறைய பேர் இறந்துவிட்டார்கள்" என்று ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வேண்டுகோள் விடுத்தார். வியாழன் காலை அவர் மீண்டும், "மானுட இனத்தின் நலனுக்காக உங்கள் படைகளை ரஷ்யாவுக்குத் திருப்பி அழைத்துக்கொள்ளுங்கள். போரின் நாசகரமான விளைவுகளால் உக்ரைன் மட்டுமில்லை, உலகமே பாதிப்புக்கு ஆளாகும்" என்று வேண்டினார். வல்லரசுகளுக்கு போர்வெறி வரும்போது, வெறுமனே வேண்டுகோள் விடுக்கும் அமைப்பாக மட்டுமே ஐ.நா இருப்பது வேதனை.

விளாடிமிர் புதின்
விளாடிமிர் புதின்

8. உக்ரைன் பிரச்னை முற்றிய நேரத்திலிருந்து, அந்த நாட்டு அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கியுடன் தொடர்ச்சியாகப் பேசிவருகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். போர் தொடங்கியதுமே, "இந்தப் போரால் நிகழ இருக்கும் எல்லா அசம்பாவிதங்களுக்கும் ரஷ்யாதான் பொறுப்பு" என்று ஜோ பைடன் எச்சரித்தார். "சமாதானத்துக்கான பாதை திறந்திருந்தபோதும், ரத்தம் சிந்தும் அழிவுப்பாதையை புதின் தேர்வு செய்திருக்கிறார். நாங்கள் சும்மா விட மாட்டோம்" என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்தார். ஏற்கெனவே ரஷ்யா மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கும் ஐரோப்பிய யூனியன் மீண்டும் சில கடுமையான தடைகளை விதிக்கப் போகிறது. அமெரிக்காவும் இதையே செய்ய உள்ளது.

9. எந்தப் போருமே உலக அளவில் பெரிய பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும். ரஷ்யா தொடங்கியுள்ள போரும் இதற்கு விதிவிலக்கு இல்லை. 2014-ம் ஆண்டுக்குப் பிறகு கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 100 டாலரை வியாழக்கிழமை தாண்டியிருக்கிறது. இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலையை இது கடுமையாக உயர்த்தும்.

உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் உற்பத்தி நாடு ரஷ்யா. ஐரோப்பாவின் பல நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெயை நம்பியிருக்கின்றன. ஐரோப்பிய நாடுகளுக்கு இயற்கை எரிவாயுவை அதிகம் தரும் நாடும் ரஷ்யாதான். எனவே, ரஷ்யாவை எந்த அளவுக்கு மற்ற நாடுகள் பகைத்துக்கொள்ளும் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கி
உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கி

10. உக்ரைன் தலைநகரை விரைவில் கைப்பற்றி, அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கியை ஆட்சியிலிருந்து அகற்றிவிட்டு, தங்களுக்குச் சாதகமான ஒருவரை இடைக்கால அதிபராக நியமிக்க ரஷ்யா திட்டம் வைத்திருக்கிறது. எனவே ஜெலன்ஸ்கியை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்ற அமெரிக்கா விரும்புகிறது. இதற்காக அவரிடம் அமெரிக்கத் தலைவர்கள் பேசி வருகிறார்கள். ஆனால், 'என்ன நடந்தாலும் உக்ரைனில் இருக்கவே விரும்புகிறேன்' என்று ஜெலன்ஸ்கி கூறுகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism