Published:Updated:

உக்ரைன் vs ரஷ்யா பிரச்னையின் வரலாறு: அமெரிக்காவின் நேட்டோ விளையாட்டும், இந்தியாவின் நிலைப்பாடும்!

உக்ரைன் பிரச்னை ( ஹாசிப் கான் )

நேட்டோ கூட்டணிக்குப் போட்டியாக 'வார்சா ஒப்பந்த நாடுகள்' என்ற கூட்டமைப்பை ரஷ்யா உருவாக்கியது. சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு இந்தக் கூட்டமைப்பு செயலற்றுப் போனது.

உக்ரைன் vs ரஷ்யா பிரச்னையின் வரலாறு: அமெரிக்காவின் நேட்டோ விளையாட்டும், இந்தியாவின் நிலைப்பாடும்!

நேட்டோ கூட்டணிக்குப் போட்டியாக 'வார்சா ஒப்பந்த நாடுகள்' என்ற கூட்டமைப்பை ரஷ்யா உருவாக்கியது. சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு இந்தக் கூட்டமைப்பு செயலற்றுப் போனது.

Published:Updated:
உக்ரைன் பிரச்னை ( ஹாசிப் கான் )

சீனாவுக்கு அண்டை நாடாக இருப்பது இந்தியாவின் நிரந்தரத் தலைவலி என்றால், ரஷ்யாவுக்கு அண்டை நாடாக மாறியதுதான் உக்ரைன் தேசத்தின் தலைவலி. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்குமா என்ற சஸ்பென்ஸ் இன்று உலகப் பிரச்னையாக மாறியிருக்கிறது. அமெரிக்காவும் ஐரோப்பிய வல்லரசுகளும் ரஷ்யாவைக் கடுமையாக எச்சரிக்கின்றன. 'உக்ரைனைத் தாக்கும் ஐடியாவெல்லாம் இல்லை' என்று சொல்லிக்கொண்டே எல்லையில் படைகளைக் குவித்துவந்தது ரஷ்யா. 'பிப்ரவரி 16-ம் தேதி ரஷ்யா தாக்குதலை ஆரம்பிக்கும்' என்று அமெரிக்கா யூகம் சொன்னது. உக்ரைன் தலைநகரில் இருந்த தன் தூதரகத்தையும் மூடியது. ஆனால், ரஷ்யா இதை ஜாலியாகக் கிண்டல் செய்துவிட்டு, எல்லையிலிருந்து கொஞ்சம் படைகளை விலக்கிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. எனினும், நேற்று ஜோ பைடனே, "ரஷ்யா பின்வாங்காது. புதின் நிச்சயம் உக்ரைனைத் தாக்குவார்" என்று தெரிவித்திருக்கிறார். இதனால் போர்ப் பதற்றம் தணியவில்லை என்பதே உண்மை.

இந்தப் பதற்றத்தால் இந்தியாவில் பங்குச்சந்தை சரிகிறது. உக்ரைன் நாட்டில் இருக்கும் இந்தியர்களைத் திருப்பி அழைத்துக்கொள்ள விமானங்கள் பறந்தபடி இருக்கின்றன. மருத்துவம் படிக்கும் கனவுடன் அங்கு சென்ற நம் ஊர் மாணவர்கள், மிரட்சியுடன் தாய்மண் திரும்புகிறார்கள். எங்கோ இருக்கும் உக்ரைனில் போர் நிகழ்ந்தால், நம் ஊரில் பெட்ரோல் விலை எவ்வளவு எகிறும் என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ரஷ்யாவும் அமெரிக்காவும் நேருக்கு நேர் யுத்தகளத்தில் மோதும் சூழல் வந்துவிடக்கூடாது என்று உலகெங்கும் பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.

உக்ரைனை மையமாக வைத்து என்ன நடக்கிறது? உலக வல்லரசுகள் நிகழ்த்தும் சதுரங்க வேட்டையில் வெட்டப்படும் பகடைக்காயாக அந்தத் தேசம் ஆகிவிடுமா? இதில் இந்தியாவுக்கு என்ன பாதிப்புகள்? பார்க்கலாம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மீண்டும் வலிமை பெற்ற ரஷ்யா!

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே மறைமுகமாக நிகழ்ந்த 'யார் பெரிய வல்லரசு' என்ற பனிப்போரே உலகின் வரலாறாக இருந்தது. பல தேசங்களில் ஆட்சியை உருவாக்குவதும், கவிழ்ப்பதுமாக இந்த வல்லரசுகள் விளையாடின. சோவியத் யூனியனின் உளவு அமைப்பை அமெரிக்காவே மிரட்சியுடன் பார்த்த காலம் அது.

1991-ம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்து சிதறியது. ரஷ்யா தனி நாடாகிவிட, இன்னும் 14 பகுதிகள் தனித்தனி நாடுகள் ஆகின. உக்ரைன் அதில் ஒன்று. ரஷ்யா மீண்டும் பலம் பெற்றுவிடக் கூடாது என்று அமெரிக்கா நினைத்தது. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய வல்லரசுகளும் இதே முடிவில் இருந்தன. அதனால், சோவியத் யூனியனிலிருந்து உடைந்து உருவான குட்டிக் குட்டி தேசங்களை வளைக்க ஆரம்பித்தன.

இதற்கிடையே 1999-ம் ஆண்டு ரஷ்யாவின் அதிபராகப் பதவியேற்றார் விளாடிமிர் புதின். ரஷ்ய மக்களிடம் தேசியவாத உணர்வை ஊட்டி தொடர்ந்து அங்கு ஆட்சியில் இருக்கும் புதின், ரஷ்யாவை மீண்டும் வல்லரசாக்கத் துடிக்கிறார். அதன் உஷ்ணத்தை அதிகம் சந்திப்பது உக்ரைன் தேசம்தான்.
விளாடிமிர் புதின்
விளாடிமிர் புதின்
AP

அமெரிக்காவின் நேட்டோ விளையாட்டு!

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கிழக்கு ஐரோப்பாவில் பல நாடுகளில் கம்யூனிச அரசுகளை ரஷ்யா அமைத்தது. இதனால் மிரண்டு போன அமெரிக்கா, 1949-ல் வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள் என்ற கூட்டமைப்பை உருவாக்கியது. 'நேட்டோ' என சுருக்கமாக அழைக்கப்படும் இதில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற 12 நாடுகள் இணைந்தன. நேட்டோ கூட்டமைப்பில் இருக்கும் எந்த ஒரு நாட்டின் மீது அந்நியப் படையெடுப்பு நிகழ்ந்தாலும், மற்ற நாடுகள் படைகளை அனுப்பி உதவி செய்யும்.

இந்த நேட்டோ கூட்டணிக்குப் போட்டியாக 'வார்சா ஒப்பந்த நாடுகள்' என்ற கூட்டமைப்பை ரஷ்யா உருவாக்கியது. சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு இந்தக் கூட்டமைப்பு செயலற்றுப் போனது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், நேட்டோ வலுவடைந்தது. சோவியத் யூனியனில் உடைந்து பிரிந்த பல நாடுகளை நேட்டோவில் இணைத்தது அமெரிக்கா. 1997-க்குப் பிறகு இப்படி பல நாடுகள் சேர ஆரம்பித்தன. இப்போது நேட்டோவில் 30 நாடுகள் உள்ளன. ரஷ்யாவின் அண்டை நாடுகளான எஸ்தோனியா, லாட்வியா, லிதுவேனியா ஆகியவையும் நேட்டோவில் இணைந்தன. போதாக்குறைக்கு உக்ரைனும் ஜார்ஜியாவும் நேட்டோவில் சேர விரும்பின. அவையும் இணைந்தால், ரஷ்யாவைச் சுற்றி இருக்கும் எல்லா நாடுகளிலும் அமெரிக்கா தடம் பதித்தது போல ஆகிவிடும். இதை ரஷ்யா ரசிக்கவில்லை.

ரஷ்யா நடத்திய உக்ரைன் போர்!

உக்ரைன் தனி நாடாக இருந்தாலும், அதைக் கிட்டத்தட்ட தன் பின்புற வாசல் போலவே கருதுகிறது ரஷ்யா. ரஷ்யர்களுடன் இன மற்றும் பண்பாட்டு ரீதியாக உக்ரைன் மக்கள் ஒன்றுபட்டவர்கள் என்பது ரஷ்யாவின் வாதம். உக்ரைனில் ரஷ்ய சார்பு அரசே இருந்தது. 2014-ம் ஆண்டு மக்கள் போராட்டம் நடத்தி அந்த அரசை வீழ்த்தினர். இதன் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாகக் குற்றம் சாட்டினார் புதின்.
உக்ரைன் மக்கள் போராட்டம் - 2013-14
உக்ரைன் மக்கள் போராட்டம் - 2013-14
Lystopad, CC BY-SA 3.0 via Wikimedia Commons

இதைத் தொடர்ந்து உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுத்தது. அந்தப் போரில் 14 ஆயிரம் பேர் இறந்தார்கள். உக்ரைன் நாட்டின் தென்பகுதியில் இருந்த கிரீமியா தீபகற்பத்தை ரஷ்யா தன்வசப்படுத்திக் கொண்டது. 'அங்கிருக்கும் மக்கள் விடுதலை கோரினார்கள்' என்று இதற்குக் காரணம் சொன்னார் புதின்.

ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. சர்வதேச அழுத்தங்கள் வந்தன. ஆனால், புதின் பணியவில்லை. உக்ரைன் நாட்டில் இருக்கும் லுஹான்ஸ்க் மற்றும் டோனட்ஸ்க் பகுதிகளில் சில ஆயுதக்குழுக்கள் அரசுக்கு எதிராகப் போராடி வருகிறார்கள். அவர்களுக்கு வெப்பன் சப்ளையராக இருக்கிறது ரஷ்யா. விரைவில் அந்தப் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்கும் உத்தேசத்தில் இருக்கிறார் புதின். இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக உக்ரைன் நாட்டையே ஆக்கிரமிப்பதுதான் ரஷ்யாவின் திட்டம்.

பெரிய கடற்கரைப் பரப்பு ரஷ்யாவுக்கு இருந்தாலும், அவை வருடத்தின் சில மாதங்கள் பனி உறைந்து மூடிக்கொள்ளும். அப்போது கருங்கடல் மட்டுமே போக்குவரத்துக்கு ஒரே வழி. அந்தக் கடலுக்குள் இருந்ததால்தான் கிரீமியாவைப் பிடித்தார் புதின். ஒட்டுமொத்தமாக உக்ரைனைப் பிடித்தால், ஐரோப்பாவில் பெரிய சக்தியாக ரஷ்யா உருவெடுக்கும்.

உக்ரைனின் உணர்ச்சிப் போராட்டம்!

ரஷ்யாவின் ஆபத்திலிருந்து தப்பிக்க நேட்டோவில் இணைவதுதான் ஒரே வழி என்று தீர்மானித்தார் உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கி. அதற்கான முயற்சியில் இறங்கியபோதுதான் தன் ஆக்ரோஷத்தைக் காட்டினார் புதின். உக்ரைனின் கிழக்குப் பக்கம் ரஷ்ய எல்லை. அங்கே ஒரு லட்சம் ரஷ்யப் படையினர் குவிந்தார்கள். தெற்கில் கிரீமியா பகுதியிலும் கருங்கடலிலும் படைகளும் போர்க்கப்பல்களும் அணிவகுத்தன. உக்ரைனுக்கு வடக்கே இருப்பது பெலாரஸ். அது ரஷ்யாவின் நேச நாடு. அங்கு 30 ஆயிரம் படையினரையும் போர் விமானங்களையும் அனுப்பினார் புதின். ஒரே ஓர் உத்தரவு போட்டால் மூன்று திசைகளிலும் தாக்குதல் தொடங்கும். ரஷ்ய எல்லையிலேயே இருக்கும் உக்ரைன் தலைநகர் கீவ், சில மணி நேரங்களில் வீழும். ஒரு போர் நடந்தால் 50 ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழக்கலாம் என்ற நிலை.

'உக்ரைனைத் தாக்கினால் சும்மா இருக்க மாட்டோம்' என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருக்கிறார். உக்ரைன் இன்னமும் முறைப்படி நேட்டோவில் இணையவில்லை என்பதால், அந்த நாட்டுக்குப் படைகளை அனுப்பமுடியாது. அதனால், நேட்டோ உறுப்பினர்களாக இருக்கும் அண்டை நாடுகளில், உக்ரைன் ஆதரவுப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. எஸ்தோனியா, லாட்வியா, லிதுவேனியா, போலந்து, ருமேனியா போன்ற நாடுகளுக்கு இந்தப் படைகள் போயுள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், கனடா, நெதர்லாந்து, நார்வே, டென்மார்க் என்று பல நாடுகளும் படைகளையும் போர் விமானங்களையும் இங்கு குவித்துள்ளன. பிரஸ்ஸல்ஸ் நகரில் இருக்கும் நேட்டோ தலைமையகம் 24 மணி நேரமும் பிஸியாக இருக்கிறது.

சமாதானம் சாத்தியமா?

புதின் குறி வைப்பது உக்ரைனுக்கு மட்டும் இல்லை. அவர் இதைக் காரணமாக வைத்து எல்லா கணக்குகளையும் தீர்த்துக்கொள்ளப் பார்க்கிறார். அதனால் இப்போதைக்கு அந்த எல்லையில் போர்ப் பதற்றம் தணியாது என்பதே யதார்த்தம். அவரின் நிபந்தனைப் பட்டியல் பெரியது.

* 1997-க்குப் பிறகு நேட்டோவில் இணைந்த எல்லா நாடுகளிலிருந்தும் அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகளின் படைகள் வெளியேற வேண்டும்.

* உக்ரைன் மற்றும் ஜார்ஜியாவை நேட்டோவில் சேர்க்கக்கூடாது.

* கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ எங்கும் படைகளை நிறுத்தி வைக்கக்கூடாது.

* ஐரோப்பாவிலிருந்து அணு ஆயுதங்களை அமெரிக்கா விலக்கிக்கொள்ள வேண்டும்.

ஆகியவை புதின் போடும் நிபந்தனைகள். கிட்டத்தட்ட ரஷ்யாவுக்கு ஆபத்து ஏற்படுத்தும் எந்த ஏரியாவிலும் அமெரிக்கப் படைகள் இருக்கக்கூடாது என்பதுதான் புதின் சொல்வது. உக்ரைனை மிரட்டுவதன் மூலம் இதையெல்லாம் சாதித்துக்கொள்ளலாம் என்று அவர் நினைக்கிறார். உக்ரைனை ரஷ்யா தாக்கினால், அதை அடக்கி வைக்க தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நினைக்கிறார்.

ஒருவேளை ஏதேனும் விபரீதம் நிகழ்ந்தால், அநேகமாக ஐரோப்பாவின் அனைத்து நாடுகளுமே போர்க்களத்தில் எதிரும் புதிருமாக நிற்கும் நிலை ஏற்படும் என்பதே இப்போதைய நிலை. இந்தச் சூழலை ஐரோப்பிய தலைவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் ஜோ பைடனும் புதினும் முஷ்டி முறுக்கினாலும், அவர்கள் சமாதானம் பேசுவதற்குப் பறக்கிறார்கள்.

நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோலன்பர்க்
நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோலன்பர்க்
Olivier Matthys | AP

"நேட்டோவில் உக்ரைன் சேரலாமா, வேண்டாமா என்பதை நாங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ரஷ்யாவுக்கு இதில் கருத்து சொல்ல எந்த உரிமையும் இல்லை" என்று நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோலன்பர்க் சொல்கிறார். ஆனால், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், "ரஷ்யாவின் பாதுகாப்பு குறித்து புதின் சொல்வதை மதிக்க வேண்டும்" என்கிறார். ஜெர்மனி அதிபர் ஒல்ஃப் ஷோல்ஸ், "உக்ரைனை நேட்டோவில் சேர்ப்பது குறித்து இப்போது எந்தப் பேச்சும் இல்லை" என்கிறார். போரைத் தவிர்ப்பதற்காக இந்த இருவருமே புதினுடன் பேசி வருகிறார்கள்.

ரஷ்யாவின் இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெயை ஐரோப்பாவின் பல நாடுகள் நம்பியுள்ளன. கொரோனா ஏற்படுத்திய பொருளாதாரப் பேரழிவிலிருந்து உலகம் மீண்டுவரும் வேளையில், ஒரு போரை யாராலும் தாங்க முடியாது என்பதே இவர்களின் சமாதானப் பேச்சுக்குக் காரணம்.

இந்தியாவின் நிலை என்ன?

உக்ரைன் விவகாரம் வெடித்த நாளிலிருந்தே, 'இருதரப்பும் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்னையைத் தீர்த்துக்கொள்ள வேண்டும்' என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக இருந்தது. போர்க்கருவிகள் உள்ளிட்ட பல தேவைகளில் ரஷ்யாவைச் சார்ந்து இந்தியா இருக்கிறது. அதேநேரத்தில் அமெரிக்காவின் வர்த்தக உறவும் நமக்கு வேண்டும். அதனால் ஐ.நா சபையில் இந்த விவகாரம் வந்தபோதும், இந்தியா நடுநிலை வகித்தது.

ரஷ்யாவிலிருந்து S400 ஏவுகணைத் தடுப்பு அமைப்பை இந்தியா வாங்குகிறது. ரஷ்யாவின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருப்பதால், இதை இந்தியா வாங்குவது சிக்கல். ஆனால், நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா சில விதிவிலக்குகளை அளிக்கும். அப்படி இதற்கும் விதிவிலக்கு கிடைக்கும் சூழல் உள்ளது. ஒருவேளை போர் தொடங்கினால், இது சிக்கலாகும்.

உக்ரைன் விவகாரம் முற்றி போர்ச்சூழல் ஏற்பட்டால், ரஷ்யாவுக்கு ஆதரவான நிலையை சீனா எடுக்கலாம். அப்போது ரஷ்ய - சீன உறவு இன்னும் இறுக்கமாகும். ஏற்கெனவே ஜி ஜின்பிங்கும் புதினும் நெருக்கமாக உறவாடி வருகிறார்கள். போர்க்களத்தில் நடுநிலை வகிக்கும் நண்பனைவிட, ஆதரவு கொடுக்கும் நண்பனே மேலானவன். அதனால் சீன ஆதரவு நிலையை ரஷ்யா எடுத்தால், இந்தியாவுக்கு சிக்கல்கள் கூடும்.

புதினுக்கு எதிராக போராடும் உக்ரைன் மக்கள்
புதினுக்கு எதிராக போராடும் உக்ரைன் மக்கள்
AP

உக்ரைனின் நிலவும் பதற்றமே கடந்த ஒரு மாதத்தில் கச்சா எண்ணெய் விலையை கணிசமாக உயர்த்தியிருக்கிறது. இப்போது சுமார் 90 டாலரில் இருக்கும் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, பிரச்னை முற்றினால் 125 டாலராக உயரக்கூடும் என்கிறார்கள். ஏற்கெனவே பெட்ரோல் அதிக விலையில் இருக்கும் இந்தியாவில் இன்னும் விலை உயரும்.

'மாஸ்கோவில் மழை பெய்தால் மயிலாப்பூரில் குடை பிடிப்பார்கள்' என்று கம்யூனிஸ்ட் கட்சியினரை மற்றவர்கள் கிண்டல் செய்வார்கள். மாஸ்கோ முஷ்டியை முறுக்கினால் மயிலாப்பூரிலும் பாதிப்பு ஏற்படும் அளவுக்கு உலகம் இப்போது சுருங்கிவிட்டது நிஜம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism