உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் நடக்கும் யுத்தம், இப்போது பல நாடுகளுக்குத் தலைவலியாக மாற இருக்கிறது. உக்ரைனுக்குள் தனது மிலிட்டரி படைகளை அனுப்ப, ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டிருக்கும் வேளையில், அது இந்தியாவுக்கும் ஒரு கடுமையான பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்தக் காத்திருக்கிறது. அது பெட்ரோல் விலை.

கச்சா எண்ணெய்தான் பெட்ரோலின் மூலப்பொருள். உலகில் WTI (West Texas Intermediate) மற்றும் Brent என இரண்டு கச்சா எண்ணெய்தான் பெட்ரோல் தயாரிப்புக்கு முக்கியமான மூலப்பொருள்கள். WTI என்பது டெக்ஸாஸ் போன்ற வட அமெரிக்கா நாடுகளில் இருந்து எடுக்கப்படுவது. Brent என்பது நார்வே, ஷெட்லேண்ட் தீவு, ரஷ்யா (77% ஆசியாவிலும், 23% ஐரோப்பாவிலும் இருப்பதால் ரஷ்யாவை Eurasia என்கிறார்கள்.) போன்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்து உருவாவது. நமது இந்திய நாட்டுக்கு Brent கச்சா எண்ணெய்தான் பெரும்பாலும் மூலம். ரஷ்யா போன்ற நாடுகளிடம் இருந்து பெட்ரோலின் மூலப்பொருளான Brent எனப்படும் கச்சா எண்ணெய் மற்றும் LNG (Liquified Natural Gas), சமையல் எண்ணெய் போன்ற பல இத்தியாதிகளை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
போர் அபாயத்தால், ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி/இறக்குமதி செய்வதில் கடும் சிக்கல் இருக்கப் போகிறது. இதனால் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக உயர இருக்கிறது. இப்போது வரை 91 டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் 6,787 ரூபாய்) விற்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பேரல் க்ரூட் ஆயிலின் விலை, 100 டாலரைத் தொட்டாலே கஷ்டம்; இதில் பேரலுக்கு 150 டாலர்களைத் தொடவும் வாய்ப்பிருக்கிறதாம். இது இந்தியா போன்ற நாடுகளுக்குக் கடுமையான பெட்ரோல் விலையேற்றத்தைக் கொடுக்கும். அதாவது, பெட்ரோல் ஒரு லிட்டருக்கு சுமார் 8 ரூபாயும், டீசல் விலை சுமார் 5 ரூபாய் வரையும் விலையேற்றம் காணலாம்.

உலகில் கச்சா எண்ணெயின் முதல் பணக்கார நாடான ஈரானும் – அமெரிக்காவும் பேச்சு வார்த்தை நடத்தி, ஈரானிய ஆயிலை இந்தியா மார்க்கெட்டுக்குக் கொண்டு வந்தால் நாம் தப்பிக்க வாய்ப்புண்டு. இந்தப் போர் சட்டென முடிவுக்கு வந்து, இந்த ஆண்டின் பாதியில் கச்சா எண்ணெய் பேரலின் விலை 70 டாலர்களுக்குக் கீழே வந்தால், பெட்ரோல் விலை குறையக் கூட வாய்ப்பு இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘ரஷ்யா – உக்ரைன் போரை இந்திய அரசு கவனித்துக் கொண்டேதான் இருக்கிறது. இதனால், எரிபொருளுக்கு மட்டுமில்லை; இந்தியப் பொருளாதாரத்துக்கும் இது ஒரு அபாயமாக இருக்கலாம்!’’ என்று அபாயச் சங்கு ஊதியிருக்கிறார்.
மார்ச் 10–ம் தேதி ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளும் வெளியாகட்டும்; இருக்கு நமக்கு!