Published:Updated:

பாகிஸ்தானின் கொரோனாவை விஞ்சிய பாலியல் சர்ச்சைப் புகார்… அலறவிடும் அமெரிக்க அழகி சிந்தியா ரிச்சி!

சிந்தியா ரிச்சி
சிந்தியா ரிச்சி

பாகிஸ்தான் நாட்டு மக்களை கொரோனா வைரஸ் படாதபாடு படுத்திவரும் நிலையில், பாகிஸ்தானின் முக்கிய அரசியல் தலைவர்கள் சிலரை பாலியல் குற்றச்சாட்டு அலறவைத்துள்ளது.

இந்தியாவைப் போலவே பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமாக இருந்துவருகிறது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும், ஊரடங்களால் மக்கள் வேலையிழந்து, வாழ்வாதாரங்களை இழந்து தவித்த காரணத்தாலும், பொருளாதார நடவடிக்கைகளுக்காகவும் மே 9-ம் தேதி ஊரங்கு தளர்த்தப்பட்டது. அதுவரை கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் தாக்கம், அதன் பிறகு அதிகரிக்கத் தொடங்கியது. பாகிஸ்தானில் தற்போது கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை நெருங்கிவிட்டது. கொரோனா தொற்றால் 2,200 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூன் 8-ம் தேதி ஒரே நாளில் 105 பேர் அங்கு மரணமடைந்துள்ளனர்.

சிந்தியா ரிச்சி
சிந்தியா ரிச்சி

கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்றுவரும் கொரோனா பரிசோதனைகளில் ஐந்து பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுவருகிறது. ஊரடங்கு உத்தரவு திரும்பப்பெறுவதற்கு முன்பாக, பத்துப் பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், பாகிஸ்தானின் சிந்து, பஞ்சாப் ஆகிய மாகாணங்களின் நிர்வாகங்களுக்கு உலக சுகாதார நிறுவனம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

அதில், கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு வைரஸ் பரவல் கட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்பது உட்பட பல நிபந்தனைகளை உலக சுகாதார நிறுவனம் விதித்துள்ளது. நாளொன்றுக்கு 50,000 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. ஆனால், அங்கு நாளொன்றுக்கு 24,000 பேருக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அந்த ஆறு நிபந்தனைகளில் ஒன்றைக்கூட நிறைவேற்ற முடியாத சூழல்தான் பாகிஸ்தானில் உள்ளது.

பெனசீர் புட்டோ
பெனசீர் புட்டோ

இந்த நிலையில், பாகிஸ்தான் மக்களுக்கு தமது அரசு நேரடியாக பணப் பரிவர்த்தனை செய்யும் திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்திவருவது தொடர்பான அனுபவங்களை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் அறிவித்தார். அதற்கு கொரோனா தொற்று பாதிப்புகளைச் சமாளிக்க இந்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி என்பது பாகிஸ்தானின் ஜி.டி.பி-க்கு இணையானது என்று பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார். இந்த விவகாரம், இரு நாடுகளின் அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகியிருக்கிறது.

பாகிஸ்தானில் `கொரோனா’ கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திவரும் நிலையில், கொரோனாவுக்கு இணையாக பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பாலியல் சர்ச்சை ஒன்று புயலாக மாறியுள்ளது. அந்தப் புயலின் பெயர் சிந்தியா ரிச்சி. `கொரோனா’ என்ற சொல்லுக்கு இணையான சொல்லாக சிந்தியா ரிச்சி என்ற பெயர் பாகிஸ்தானில் இப்போது பிரபலமடைந்துள்ளது. இந்த சர்ச்சை பாகிஸ்தான் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது.

மோடி - இம்ரான் கான்
மோடி - இம்ரான் கான்

சிந்தியா ரிச்சி என்பவர் ஓர் அமெரிக்கப் பெண்மணி. அவர், 2010-ம் ஆண்டு தொடங்கி, கடந்த பத்து ஆண்டுகளாக பாகிஸ்தானில் வசித்துவருகிறார். வலைதள எழுத்தாளர் என்று அறியப்படும் அந்தப் பெண்மணி, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பி.பி.பி) சமூக ஊடகப்பிரிவில் பணியாற்றியதாகச் சொல்லப்படுகிறது. அவர், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கிவருகிறார்.

1967-ல் ஆரம்பிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தானில் மிகவும் செல்வாக்கு மிக்க ஒரு கட்சிகளுள் ஒன்று. படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ இந்தக் கட்சியைச் சேர்ந்தவர். பெனசீர் பூட்டோவின் கணவரான ஆசிப் அலி சர்தாரி தற்போது இதன் தலைவராக இருக்கிறார். இவர்மீதுதான் அமெரிக்க பெண்மணியான சிந்தியா ரிச்சி பாலியல் குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.

சிந்தியா ரிச்சி
சிந்தியா ரிச்சி

சிந்தியா ரிச்சியின் ட்விட்டர் பதிவுகள் ஒவ்வொன்றும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகின்றன. ``ஆசிப் அலி சர்தாரியால் (பெனசீர் பூட்டோவின் கணவர்) பாலியல் உறவுகொள்ளப்பட்ட பெண்களை, பாலியல் பலாத்காரம் செய்யுமாறு பெனசீர் பூட்டோ உத்தரவிடுவார்” என்கிற ட்வீட் படுபயங்கரமானதாக இருக்கிறது. இதுபோன்ற சிந்தியா ரிச்சி வெளியிடும் தகவல்கள் பாகிஸ்தான் அரசியல் களத்தில் அணுகுண்டுகளாக வெடித்துக்கொண்டிருக்கின்றன.

முதலில் 2009-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு தாம் சென்றதாகவும், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசுப் ரஸா கீலானியும் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ரஹ்மான் மாலிக்கும் பாகிஸ்தானின் இமேஜை உயர்த்துவதற்கு உதவுமாறு தன்னிடம் கேட்டுக்கொண்டதாக சிந்தியா கூறுகிறார். அதைத் தொடர்ந்து, பி.பி.பி-யின் தகவல்தொடர்பு ஆலோசகராக தாம் இருந்ததாகவும் அவர் கூறுகிறார். 2010-ம் ஆண்டு பாகிஸ்தானில் குடியேறிய சிந்தியா ரிச்சி, தற்போது இஸ்லாமபாத்தில் வசித்துவருகிறார். பி.பி.பி கட்சியுடன் நெருக்கமாக இருந்து செயல்பட்டுவந்த சிந்தியா ரிச்சி, திடீரென தற்போது அந்தக் கட்சியின் தலைவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளைக் கூறிவருகிறார்.

ரஹ்மான் மாலிக் 2011-ம் ஆண்டு தம்மை பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறும் அவர், முன்னாள் பிரதமர் யூசுப் ரஸா கீலானியும் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் மக்தூம் சஹாபுதீனும் ஜனாதிபதி இல்லத்துக்குள் வைத்து தம்மை துன்புறுத்தினார்கள் என்கிறார். அவர் குறிப்பிடும் காலகட்டத்தில் ஆசிப் அலி சர்தாரி தலைமையிலான ஆட்சி பாகிஸ்தானில் இருந்தது.

சிந்தியா ரிச்சி
சிந்தியா ரிச்சி

2018 நாடாளுமன்றத் தேர்தலில் பி.பி.பி கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும், தற்போது சிந்து மாகாணத்தில் ஆளும் கட்சியாக அது இருக்கிறது. அமெரிக்கப் பெண்மணி கூறிவரும் அதிரடியான குற்றச்சாட்டுகளால் அதிர்ந்து போயுள்ள அந்தக் கட்சியின் தலைவர்கள், இந்த விவகாரம் குறித்து 'ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி' விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளனர். பாகிஸ்தான் நாடாளுமன்ற செனட் சபையில் உறுப்பினராக இருக்கும் பி.பி.பி கட்சியின் பிரதிநிதியான ஷெர்ரி ரஹ்மான், இந்தக் குற்றச்சாட்டுகளை வன்மையாக மறுத்துள்ளார். சிந்தியா ரிச்சி அவதூறுகளை அள்ளிவீசுவதாக ஜூன் 1-ம் தேதி இஸ்லாமபாத் போலீஸாரிடம் ஒரு புகார் அளிக்கப்பட்டது. ஆனால், சிந்தியா மீது வழக்கு பதிவு செய்ய இஸ்லாமபாத் போலீஸார் மறுத்துவிட்டனர். ``இது சைபர் க்ரைம் தொடர்பான வழக்கு. ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சியின் கீழ்தான் இது வரும்” என்று காரணம் தெரிவிக்கப்பட்டது.

‘ராணுவ வீரர்களுக்கு ஆபத்து!’- வைரஸ் நோயாளிகளை PoK பகுதிக்கு மாற்றும் பாகிஸ்தான்?

பாகிஸ்தானிலும் சர்வதேச அளவிலும் தன் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக தமக்கு ரூ.120 மில்லியன் வழங்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் யூசுப் ரஸா கீலானிக்கு ரிச்சி நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், தாம் பிரதமராக இருந்தபோது சிந்தியா ரிச்சியைச் சந்திக்கவே இல்லை என்று மறுத்துள்ள யூசுப் ரஸா கீலானி, தமக்கு ரூ.100 மில்லியன் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சிந்தியா ரிச்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தன் ஃபேஸ்புக் பக்கத்தில் `லைவ்’ ஆகத் தோன்றி தான் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானதாக சிந்தியா உறுதிபடத் தெரிவித்தார். அதற்கான ஆதாரங்களாக ஸ்க்ரீன்ஷாட், டெக்ஸ்ட் மெசேஜ், ஆடியோ போன்றவை இருப்பதாகவும், அவற்றை உரிய நேரத்தில் வெளியிடுவேன் என்றும் அப்போது அவர் கூறினார். தாம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் புகார் செய்ததாகவும், அன்றைக்கு இருந்த அரசியல் சூழலில், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் சிந்தியா ரிச்சி கூறியுள்ளார்.

சிந்தியா ரிச்சி
சிந்தியா ரிச்சி

மற்ற நாடுகளைப் போலவே சில ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானிலும் `மீ டூ’ இயக்கம் பெரும் புயலைக் கிளப்பியது. கொரோனா தொற்று தீவிரமடைந்துவருவதால், அனைவரின் கவனமும் அதன் மீது இருந்துவரும் நிலையில், தற்போது சிந்தியா ரிச்சி கிளப்பியுள்ள பாலியல் குற்றச்சாட்டுகளின் மீது பாகிஸ்தான் மக்களின் கவனம் திரும்பியிருக்கிறது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு திணறுவதாகவும், அதிலிருந்து மக்களைத் திசைத்திருப்புவதற்கு சிந்தியா ரிச்சியை வைத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளைக் கிளப்புவதாகவும் சில ஊடகங்கள் எழுதுகின்றன. தான் கூறிவரும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மிக முக்கியமான ஆதாரங்களை மிக விரைவில் வெளியிடப்போவதாக தற்போது தன் ட்விட்டர் பக்கத்தில் சிந்தியா ரிச்சி தெரிவித்துள்ளார். வெடிக்கப்போவது அணுகுண்டா, புஸ்வானமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

அடுத்த கட்டுரைக்கு