Published:Updated:

`இதைச் செய்ய எப்படி மனம் வந்தது?’ - அடுக்குமாடி குடியிருப்புவாசிகளைப் பதறவைத்த நபர் #Corona

லிஃப்ட் வீடியோ
லிஃப்ட் வீடியோ

``இப்படி ஒரு நோய்த்தொற்று பரவிக்கொண்டிருக்கும் வேளையில், இது போன்ற செய்கைகள் எங்களை திகைப்புக்கு உள்ளாக்குகிறது. இது போன்ற சிலரின் நடவடிக்கைகளால்தான் சமூகப்பரவல் மிகவேகமாக நடந்து வருகிறது.”

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தொற்று அதிக அளவில் பரவிவரும் சூழலில், இருமும்போதோ தும்மும்போதோ கைக்குட்டையைப் பயன்படுத்துங்கள் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கனடாவின் வான்கோவர் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் லிஃப்ட்டைப் பயன்படுத்திய ஒருவர், லிஃப்ட்டிலிருந்து வெளியேறும் முன்பு, அங்கிருக்கும் பட்டன்களில் எச்சிலை உமிழ்ந்துவிட்டுச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ அங்கிருப்பவர்களிடையே அச்சத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

குடியிருப்பாளர்
குடியிருப்பாளர்

வீடியோவில் பதிவான காட்சிகளில், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள லிஃப்ட் ஒன்றில் ஒருவர் கைநிறைய பைகளோடு உள்நுழைகிறார். பட்டனை அழுத்திவிட்டு காத்திருக்கிறார். தான் வெளியேறவேண்டிய தளம் வந்ததும், அங்கிருக்கும் பட்டன்கள் மீது எச்சிலை உமிழ்ந்துவிட்டு வெளியே செல்கிறார். இந்த வீடியோவைப் பார்த்த மற்ற குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அக்குடியிருப்பில் வசிக்கும் மேரி ஹுய் என்கிற பெண், இந்த வீடியோவைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

`தந்தை மூலம் மகளுக்கு பரவியது’ - சென்னை பெண் டாக்டரின் கொரோனா ட்ராவல் ஹிஸ்ட்ரி #Corona

இந்தச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசியுள்ள அவர், ``பட்டன்கள் மீது எச்சில் போன்ற ஏதோ படிந்திருப்பதை நான் கண்டேன். ஆனால், அது சுத்தம் செய்யப் பயன்படும் திரவமாய் இருக்கலாம் என நான் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. பின்பு, எங்கள் குடியிருப்பில் வசிக்கும் ஒருவரின் முகநூல் பக்கத்தில் அந்தப் புகைப்படம் பகிரப்பட்டிருந்தது. என் நண்பர் ஒருவரும் இந்த வீடியோவை எனக்கு அனுப்பினார். இப்படி ஒரு நோய்த்தொற்று பரவிக்கொண்டிருக்கும் வேளையில், இதுபோன்ற செய்கைகள் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற சிலரின் நடவடிக்கைகளால்தான் சமூகப் பரவல் மிகவேகமாக நடந்து வருகிறது” என்று கோபத்துடன் கூறியுள்ளார்.

ட்விட்டர் பதிவு
ட்விட்டர் பதிவு

மேலும், ``வீடியோவில் பார்க்கும்போது அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பவராகத்தான் தெரிகிறார். ஆனால், மருத்துவர்கள் கொரோனா தொற்று என்பது அறிகுறிகள் எதுவும் இல்லாமலேகூட ஒருவருக்கு இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். எனவேதான் இது எங்களைப் பயமுறுத்துகிறது. இந்த வீடியோவில் இருக்கிற மனிதர், தான் உபயோகிக்கும் லிஃப்ட்டில் தன்னுடைய குடியிருப்பிலேயே இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் என்றால், மக்கள் நடமாடும் பிற பொது இடங்களிலும் நாகரிகமற்ற செயல்களில் ஈடுபடுபவராகத்தான் இருப்பார்" என்று ஹுய் தெரிவித்துள்ளார்.

குடியிருப்பில் வசிக்கும் சிலர், ``அவருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. எப்படி ஒருவரால் இந்தச் சமயத்தில் இப்படி செய்ய முடிகிறது?" என தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதைப் பற்றி காவல்துறையினரிடமும் புகார் அளித்திருக்கிறார் ஹுய். மேலும், குடியிருப்பின் நிர்வாகம் அந்நபரைக் கண்டறிந்து, கண்டித்து அபராதம் விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வார்டில் 80 வயதுப் பாட்டி டைரியில் எழுதியது என்ன? - கொரோனா பாசிட்டிவ் கதைகள்
அடுத்த கட்டுரைக்கு