தென்னாப்பிரிக்காவின் பெண் அமைச்சர் போபி ரமதூபா என்பவர் பதின்பருவத்தில் மாணவிகள் கருவுறுவது குறித்து தெரிவித்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் மாபெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இவர், பள்ளி மாணவிகளிடம் உரையாற்றுவது போல சமூக வலைதளங்களில் ஒரு காணொளி வெளியானது.
அதில் அவர் பள்ளி மாணவிகளிடம், ``உங்கள் புத்தகங்களைத் திறங்கள்... உங்கள் கால்களை அல்ல" என சர்ச்சைக்குரிய வகையில் கூறுகிறார். இதே கருத்தை தன்னுடைய உரையில் பல தடவை குறிப்பிடுவதோடு மாணவிகளையும் தன்னைப் பின்தொடர்ந்து திரும்பக் கூற வைப்பது போல அந்தக் காணொளியில் உள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தென்னாப்பிரிக்காவின் சுகாதாரத்துறை அமைச்சரான போபி ரமதூபா, செக்காபென்க் நகரில் உள்ள கிவானேன் பள்ளியில் பதின்பருவத்தில் மாணவிகள் கருவுறுவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வில் உரையாற்றச் சென்றார். அப்போதுதான் மாணவிகளுக்கு விழிப்புணர்வு தருவதாக எண்ணி இப்படி ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்த விவகாரத்தில் மாணவிகளையே குற்றம் சுமத்தும் வகையில் பேசியிருப்பதே சர்ச்சைக்கு காரணம்.
இது குறித்து அந்நாட்டைச் சேர்ந்த `வுமன் ஃபார் சேன்ஜ்' என்னும் பெண்கள் அமைப்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டது. அதில், ``அமைச்சர் போபி ரமதூபா, மாணவிகளிடம் கூறியிருப்பது மிகவும் தவறு. இதுவா அரசாங்கம் பெண்களுக்குத் தரும் பாலியல் கல்வி? பாதிக்கப்படும் பெண்களையே குற்றம் சுமத்துவதாக இருக்கிறது அமைச்சரின் கருத்து" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
``இது பதின்பருவத்தில் இருக்கும் பெண்களிடம் பாலியல் கல்வி, வன்முறையைப் பற்றி பேசுவதற்கு உரிய முறை அல்ல" என ஒரு ட்விட்டர் பயனாளர் தன் கருத்தைப் பதிவிட்டிருந்தார். பல்வேறு வகைகளில் கண்டனங்கள் வலுப்பெறவும் போபி ரமதூபா தன்னுடைய கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகக் கூறியுள்ளார்.

``நான் பெண்களை மட்டும் கூறவில்லை. ஆண்களையும் சேர்த்துதான் கூறினேன். என்னுடைய பேச்சுக்கு அங்கிருந்த மக்கள்கூட வரவேற்பு தெரிவித்தனர். அவர்கள் பேசத் தயங்கியதை நான் ஒளிவு மறைவின்றி கூறியதாகப் பாராட்டினர்" என்று தெரிவித்துள்ளார். இருந்தாலும் அரசாங்கத்தின் உயர் பதவியில் இருக்கும் ஓர் அமைச்சரே சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியது தவறு என்பதே பல்வேறு மக்களின் கருத்து.