மீண்டும் ஒருமுறை இலங்கை எரிகிறது. இம்முறை மக்களின் கோப நெருப்பில், ராஜபக்ஷே குடும்பம் ஒட்டுமொத்தமாக எரிக்கப்பட்டுள்ளது. ராஜபக்ஷே குடும்பத்தில் கடைசியாக அதிகாரத்தில் ஒட்டியிருந்த அதிபர் கோத்தபய ராஜபக்ஷேவை விரட்டும் போராட்டத்தில் இலங்கை மக்கள் வெற்றி அடைந்துள்ளனர். இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாதபடி ஜூலை 9-ம் தேதி மக்கள் கூட்டம் திரண்டு ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்தது. தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அதிபர் கோத்தபய பின்வாசல் வழியாக வெளியில் ஓட நேரிட்டது.

சரியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு மே 9-ம் தேதி மக்கள் போராட்டத்தால் மகிந்த ராஜபக்ஷே ராஜினாமா செய்தார். அன்று நடந்த போராட்டம் எதிர்பாராதது. மகிந்தவின் ஆதரவாளர்கள் ஆயுதங்களுடன் திரண்டு, போராடிய மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதனால் மக்கள் ஆத்திரம் அடைந்து பிரதமர் இல்லத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர். மகிந்தவின் ஆதரவாளர்களைத் தேடித் தேடித் தாக்கினர். மக்களை சமாதானப்படுத்த தன் அண்ணன் மகிந்த ராஜபக்ஷேவை ராஜினாமா செய்ய வைத்தார் அதிபர் கோத்தபய. அதன்பின் இடைக்கால ஏற்பாடாக ரணில் விக்கிரமசிங்கே பிரதமரானார். தனக்கான ராணுவ மற்றும் போலீஸ் பாதுகாப்பை அதிகரித்துக்கொண்ட அதிபர், தான் மக்களின் கோபத்திலிருந்து தப்பிவிட்டதாகவே நம்பினார். அதற்கு ஏற்றபடி போராட்டங்களும் தணிந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
என்றாலும், இலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிரான இந்தப் போராட்டம் ‘கோத்தபய, வீட்டுக்குப் போ!’ என்ற முழக்கத்துடன்தான் தொடங்கியது. அவரை வீட்டுக்கு அனுப்பாமல் போராட்டம் முடியாது என்று, தலைநகர் கொழும்பில் ஜனாதிபதி மாளிகை மற்றும் பிரதமர் மாளிகைக்கு எதிரில் மக்கள் கூடாரம் போட்டுத் தங்கி தொடர்ச்சியாகப் போராடி வந்தனர். மகிந்த ராஜினாமா செய்தபிறகும் போராட்டம் தொடர்ந்தது. இதனால் அதிபர் கோத்தபய தனது ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியிலேயே வருவதில்லை. நாடாளுமன்றத்துக்குப் போனாலும், எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கோஷம் எழுப்பி அவரைத் துரத்தினர். புதிய பிரதமராகப் பதவியேற்ற ரணிலும் அரசு இல்லத்துக்கு வந்தால், போராட்டக்காரர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால், தன் சொந்த வீட்டில் இருந்தபடியே பணிகளைச் செய்தார்.
இப்படி ஆட்சி மாறியும் ஒரே ஒரு நல்ல விஷயம் கூட இலங்கையில் நடக்கவில்லை. பொருளாதார நெருக்கடி சரியாவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்று பிரதமர் பயமுறுத்திக் கொண்டே இருந்தார். இதற்கிடையே வெளிநாட்டுக் கடன்களுக்கு தவணை செலுத்தும் அளவுக்கு நிதி இல்லாததால், நாடு திவால் ஆனதாக அறிவித்தது அரசு. தனிநபர்களும் நிறுவனங்களும் திவால் ஆவதே அவமானகரமான விஷயம். ஒரு நாடு திவால் ஆவது வெட்கக்கேடு!

மக்களின் நிலைமை இன்னும் மோசமானது. சமைக்க உணவுப் பொருள்கள் இல்லை, குடிக்க பால் இல்லை. அடுப்பு பற்றவைக்க எரிவாயு இல்லை. அவசர சிகிச்சைக்கு மருத்துவமனைக்குப் போனால் மருந்துகள் இல்லை. எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு. இதையெல்லாம் மறந்து தூங்கலாம் என்றால் மின்சாரமும் பல மணி நேரம் இல்லை. அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாத நிலையில், பெட்ரோல், டீசல் இறக்குமதி செய்யவும் வழியில்லை. ரஷ்யாவிடமும் வளைகுடா நாடுகளிடமும் கெஞ்சிப் பார்த்துவிட்டு, வேறு வழியின்றி இதற்கும் ரேஷன் அறிவித்தது அரசு. பொதுப் போக்குவரத்து, மருத்துவமனை சேவை தவிர வேறு யாருக்கும் சில நாள்களுக்கு பெட்ரோல், டீசல் கிடையாது என்று அறிவிப்பு வெளியானது. அதுவரை பல மணி நேரம் வரிசையில் நின்று பெட்ரோல் வாங்கிய பலருக்கு அதுவும் கிடைக்காமல் போனது. சைக்கிள் வாங்கலாம் என்றால் அதற்கும் தட்டுப்பாடு. ரயிலிலும் பஸ்ஸிலும் நெரிசல் அதிகமானது.
பள்ளி வாகனங்களை இயக்க டீசல் இல்லாததால், நாடு முழுக்க பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தார்கள். மருத்துவமனைகளுக்கு அரசு நிதி தராததால், பல அரசு மருத்துவமனைகள் மக்களிடம் நன்கொடை திரட்டி சமாளிக்கின்றன. சாதாரண மருந்துகள் கிடைக்காமல்கூட பலர் உயிரிழக்க நேரிட்டது. ஒவ்வொரு நாளையும் நகர்த்துவதே கடினமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் முந்தின நாளைவிட நரகமாக இருந்தது.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மக்கள் பொங்கி எழுந்தனர். ஜூலை 9-ம் தேதி போராட்டத்துக்குத் தேதி குறித்தனர். ‘ஒட்டுமொத்த தேசமும் கொழும்பு செல்வோம்’ என்று போராட்ட இயக்கம் ஆரம்பித்தனர். ‘போராட்டத்தால் பெரும் கலவரம் ஏற்படலாம். இதை சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும்’ என்று அரசு சார்பில் வழக்கு போடப்பட்டது. ஆனாலும், போராட்டத்துக்குத் தடை விதிக்க மூன்று நீதிபதிகள் அடுத்தடுத்து மறுத்துவிட்டனர்.

இதைத் தொடர்ந்து கோத்தபய ராஜபக்ஷே தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேறு நடவடிக்கைகளில் இறங்கினார். கொழும்பு உள்ளிட்ட ஏழு பிரதேசங்களில் போராட்டத்துக்கு முதல்நாளே ஊரடங்கு உத்தரவை போலீஸ் அமல் செய்தது. நாடு முழுக்க பல்வேறு பகுதிகளில் முகாமிட்டிருந்த ராணுவத்தினர் தலைநகருக்கு அழைக்கப்பட்டனர். துப்பாக்கிகளை ஏந்திய 20 ஆயிரம் ராணுவத்தினரும் போலீஸாரும் ஜனாதிபதி மாளிகையைப் பாதுகாக்கக் குவிந்தனர். ஜனாதிபதி மாளிகைக்குச் செல்லும் முக்கிய சாலைகளில் இரும்புக் கம்பிகளால் தடுப்புகள் போடப்பட்டன. வெளியூர்களிலிருந்து மக்கள் வருவதைத் தடுக்க ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.
ஆனால், எதிர்க்கட்சிகளும் வழக்கறிஞர் சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், சனிக்கிழமை காலை எட்டு மணிக்கு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. பல நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில் போராட்டம் நடத்தி ரயில்களை இயக்க வைத்தனர் மக்கள். கொழும்பு புறநகர்ப் பகுதியில் இருந்தவர்கள் நடந்தே அதிபர் மாளிகை வாசலுக்கு வந்துவிட்டனர்.
ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இப்படித் திரண்டதை போலீஸாரும் ராணுவமும் எதிர்பார்க்கவில்லை. பௌத்த துறவிகள், கிறிஸ்தவ பாதிரியார்கள் உள்ளிட்ட பல்வேறு மதத் தலைவர்கள், விவசாயிகள், மீனவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என்று திரண்ட கூட்டத்தை போலீஸாரால் இரண்டு மணி நேரம் மட்டுமே சமாளிக்க முடிந்தது. காலை 10 மணிக்குக் கூட்டம் திரண்டதும் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், கண்ணீர்ப்புகை குண்டுகளை சுட்டும் கலைக்க முயன்றது போலீஸ். ஆனால், பாலித்தீன் உறைகளை முகத்தில் கவசம் போல அணிந்துவந்த மக்கள் இதற்கு அசரவில்லை. வானத்தை நோக்கி சுட்டு மிரட்டியது ராணுவம். ரப்பர்குண்டுகளால் சுட்டு சிலரைக் காயப்படுத்தினர். ஆனால், இரும்புத் தடுப்புகளை உடைத்துவிட்டு ஜனாதிபதி மாளிகையை நோக்கிப் போவதில் குறியாக இருந்தனர் மக்கள்.

12 மணிக்கு காட்சிகள் திடீரென மாறின. தடுப்புகளுக்குப் பின்னால் இருந்த ராணுவம் பின்வாங்கியது. அதுவரை தண்ணீரைப் பீய்ச்சியடித்து கூட்டத்தைக் கலைத்த ராணுவ வீரர்கள், அதன்பின் போராட்டக்காரர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவினர். ஒரு போலீஸ்காரர் தன் ஹெல்மெட்டைத் தூக்கி எறிந்துவிட்டு போராட்டக்காரர்களுடன் சேர்ந்து முழக்கமிட்டார். ராணுவ அணிவரிசையில் இருந்த வீரர் ஒருவர், அங்கிருந்து விலகி மக்களுடன் இணைந்து நின்றார். இதெல்லாம் மக்களை உணர்ச்சிக் கொந்தளிப்பில் தள்ளின. அதே உணர்வுடன் அவர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு முன்னேறினர்.
ஜனாதிபதி மாளிகை வாசலில் காவல் புரிந்த வீரர்களால் அவர்களை இரண்டு மணி நேரம் மட்டுமே தடுத்து வைக்க முடிந்தது. அதற்குள் கோத்தபய பின்வாசல் வழியே வெளியேறியிருந்தார். இலங்கைக் கடற்படையின் கஜபாகு, சுதுவெல்ல ஆகிய இரண்டு கப்பல்களில் அவசரமாக சில பெட்டிகள் ஏற்றப்பட்டு அதில் சிலர் ஏறிய காட்சிகள் வெளியாகின. இதேபோல கட்டுநாயக விமான நிலையத்தை நோக்கி பாதுகாப்பு அணிவகுப்புடன் சில வாகனங்கள் சென்ற காட்சிகளும் வெளியாகின. கடற்படை பாதுகாப்புடன் எங்கோ ரகசிய இடத்துக்கு கோத்தபய குடும்பம் சென்றுவிட்டது. அதன்பின் ஜனாதிபதி மாளிகையின் கதவுகள் திறந்தன. உள்ளே நுழைந்த மக்கள் அங்கிருந்த கிச்சனுக்குச் சென்று சாப்பிட்டனர். படுக்கை அறையில் படுத்துப் பார்த்தனர். நீச்சல் குளத்தில் நீச்சலடித்தனர். பெரிய திரை டிவியில் கிரிக்கெட் பார்த்தனர். தரைக்கு அடியில் இருந்த ரகசிய அறைக்குப் போய் கோத்தபய ராஜபக்ஷேவைத் தேடினர். இலங்கை வரலாற்றிலேயே இதுவரை பார்க்காத காட்சிகள் இவை.

தங்களுடன் போராட்டத்தில் இணையவந்த முன்னாள் அமைச்சர் ஒருவரை மக்கள் கடுமையாகத் தாக்கினர். சனிக்கிழமை இரவு பிரதமர் ரணிலின் வீட்டையும் மக்கள் கூட்டம் கொளுத்தியது. எல்லா அரசியல்வாதிகள் மீதும் மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இந்நிலையில் இலங்கையின் அரசியல் எதிர்காலம் குழப்பமாக இருக்கிறது.
ராணுவமும் தன்னைக் கைவிட்ட நிலையில், ராஜினாமா செய்வதைத் தவிர கோத்தபய ராஜபக்ஷேவுக்கு வேறு வழியில்லை. அவர் ராஜினாமா செய்தால் அடுத்து பிரதமர் அந்தப் பொறுப்பை ஏற்கலாம். ஆனால், ரணிலையும் மக்கள் ஏற்கத் தயாராக இல்லை. அரசியல் சட்டப்படி சபாநாயகர் அல்லது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தற்காலிக அதிபராகலாம். அனைத்துக்கட்சிகளும் இணைந்த அரசு அமைக்கலாம் என்றால், அதற்கு ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. சஜித் பிரேமதாசா தலைமையிலான எதிர்க்கட்சிகள் இந்த எல்லா ஏற்பாடுகளுக்கும் முரண்டு பிடிப்பதால் நிலைமை சிக்கலாகிவருகிறது. இப்போது தேர்தல் நடத்துவதற்கு அரசிடம் பணமும் இல்லை.
இந்த அரசியல் நெருக்கடி தீராமல் பொருளாதாரப் பிரச்னைகள் தீராது என்பதே உண்மை. இத்தனைக் காலம் இலங்கைக்கு உதவிய சீனா, இனியும் கடன் தருவதற்குத் தயாராக இல்லை. இந்தியா மட்டுமே உதவி வருகிறது. அது போதுமானதாக இல்லை. ஐஎம்எஃப் நிறுவனத்திடம் இலங்கை உதவி கேட்கிறது. நிலையான அரசு இல்லாமல் போனால், அந்த உதவியும் கிடைக்காது. அது மக்கள் கோபத்தை இன்னும் அதிகமாக்கும்.

போரில் வெற்றியை பெற்றுத் தந்த ஹீரோக்களாக ராஜபக்ஷே குடும்பத்தை ஆராதித்த சிங்கள மக்கள், இன்று நம்பர் 1 வில்லன்களே அந்தக் குடும்பத்தினர்தான் என்பதை உணர்ந்துவிட்டனர்.