Published:Updated:

தாலிபன்களின் கதை - 3: முல்லா முகமது ஒமர் எப்படி உருவானார், பாகிஸ்தான் எதற்காக ஆதரித்தது?!

1994-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காந்தஹாரில் வெறும் 50 பேருடன் தாலிபன் அமைப்பைத் தொடங்கினார் அவர். 'தாலிப்' என்ற அரபு வார்த்தைக்கு 'மாணவன்' என்று அர்த்தம். தாலிபன்கள் என்றால் 'மாணவர்கள்'.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிறந்த தேதி - தெரியாது, பிறந்த ஊர் - தெரியாது, எப்போது இறந்தார் - தெரியாது, எப்படி இறந்தார் - தெரியாது, எங்கே அடக்கம் செய்தார்கள் - தெரியாது.
தாலிபன் அமைப்பை உருவாக்கிய முல்லா முகமது ஒமரின் சுருக்கமான பயோடேட்டா இதுதான்.

ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகருக்கு அருகே ஒரு கிராமத்தில் பிறந்தவர் ஒமர். எந்த கிராமம், எப்போது என்பதில் குழப்பம் இருக்கிறது. எந்த அரசியல் தொடர்புகளும் இல்லாத வறுமையான குடும்பம். ஒமருக்கு 3 வயது இருக்கும்போது தந்தை இறந்துவிட்டார். உறவினர்கள் அவரை வளர்த்தார்கள். அவரது உறவினர் ஒருவர் மதரஸா ஒன்றில் போதகராக இருந்தார். அவரைப் பார்த்து மதக்கல்வியில் ஒமருக்கு ஈடுபாடு வந்தது. பாகிஸ்தானுக்குச் சென்று ஒரு மதரஸாவில் படித்தார். முடித்துவிட்டு காந்தஹார் வந்து ஒரு குடிசையில் மதரஸா ஒன்றைத் தொடங்கினார். அதன்பின் பாகிஸ்தானின் குவெட்டா மாகாணத்தில் ஒரு மதரஸாவில் பணிபுரிய அவருக்கு வாய்ப்பு வந்தது.

தாலிபன் தலைவர் முல்லா ஒமர்
தாலிபன் தலைவர் முல்லா ஒமர்

அந்த வேலையில் அவர் நிரந்தரமாக இருந்திருந்தால், ஒருவேளை தாலிபன் அமைப்பு உருவாகாமலே போயிருக்கலாம்.
ஆப்கனில் அது கொந்தளிப்பான காலகட்டம். மன்னராட்சியை ஒழித்துவிட்டு சோவியத் ரஷ்யா உதவியுடன் அங்கு அமைந்த புதிய அரசை பாகிஸ்தான் சந்தேகத்துடன் பார்த்தது. தங்கள் நாட்டுக்கும் கம்யூனிஸம் பரவிவிடுமோ என்று பயந்தார் பாகிஸ்தான் அதிபர் ஜியா உல் ஹக். சவுதி அரேபியாவிடம் உதவி கேட்டார். வளைகுடா நாடுகளுக்கும் கம்யூனிஸம் என்றால் அலர்ஜி.

சவுதி தாராளமாக நிதியுதவி செய்தது. ரஷ்யாவின் நிரந்தர எதிரியான அமெரிக்காவும் கைகோத்தது. அமெரிக்காவின் சி.ஐ.ஏ., சவுதியின் ஜி.ஐ.டி ஆகிய உளவு அமைப்புகள், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-யுடன் இணைந்தன. ஆப்கன் உள்நாட்டுப் போரால் அகதிகளாக வந்து பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்திருந்த இளைஞர்களை மதரஸாவில் சேர்த்து மதக்கல்வி போதித்தனர்.

பாகிஸ்தானின் எல்லையோர மாகாணங்களின் இளைஞர்களும் இவர்களுடன் சேர்ந்துகொண்டனர். பாகிஸ்தான் ராணுவம் அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்தது. ஆயுதங்களை சவூதியும் அமெரிக்காவும் கொடுத்தன. இன்னொரு பக்கம் ஈரானும் இதே வேலையைச் செய்தது.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்

இப்படிப் பயிற்சி பெற்று ஆப்கனில் நுழைந்து ரஷ்யப் படைகளுடன் போரிட்ட குழுக்களை முஜாகிதீன்கள் என்பார்கள். ஒவ்வொரு முஜாகிதீன் குழுவுக்கும் ஒரு தலைவர் இருப்பார். ஆப்கனின் ஏதாவது ஒரு பகுதி இவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். வறுமையே வாழ்க்கையாகிப் போன ஆப்கனில் முஜாகிதீன்கள் வளமாக இருந்தார்கள். எந்த நிமிடத்திலும் போரில் மரணம் நிச்சயம் என்றாலும், அதிகாரமும் வசதிகளும் அவர்களுக்குக் கிடைத்தன. அதனால் நிறைய இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு முஜாகிதீன் குழுக்களில் இணைந்தார்கள். மத அடிப்படைவாதமும் ராணுவ பயங்கரவாதமும் இணைந்த மனிதர்களாக இவர்கள் வளர்ந்தார்கள்.

குவெட்டாவில் பார்த்துக்கொண்டிருந்த மதரஸா வேலையை உதறிவிட்டு, இப்படி ஒரு முஜாகிதீன் குழுவில் இணைந்து போரிட்டார் முல்லா ஒமர். அபாரமான போர்த்திறமையும் துணிச்சலும் அவருக்கு இருந்ததாக தாலிபன்கள் சொல்கிறார்கள். வெகுதூரத்திலிருந்து குறிபார்த்து ரஷ்ய ராணுவ டாங்கிகளை சிதறடிப்பது அவரின் பலம். போர்க்களத்தில் நான்கு முறை தாக்குதல்களிலிருந்து நூலிழையில் உயிர் தப்பியிருக்கிறார் அவர். அப்படி ஒரு தாக்குதலில் அவரின் வலது கண் பார்வை பறிபோனது.

1989-ம் ஆண்டு சோவியத் படைகள் ஆப்கனிலிருந்து வெளியேறின. ஆப்கன் தலைவர்கள் பலரையும் இணைத்து இடைக்கால அரசு ஒன்றை உலக நாடுகள் உருவாக்கின. ஆனால், களத்தில் சோவியத் படைகளுடன் சண்டையிட்ட முஜாகிதீன்கள் இதை ஏற்கவில்லை. பஷ்துன், தாஜிக், உஸ்பெக் ஆகிய மூன்று இனங்களின் முஜாகிதீன்களும் தங்களுக்குள் மோதிக்கொண்டார்கள்.

தாலிபன் தலைவர்கள்
தாலிபன் தலைவர்கள்
நிஜார் முகமது

பாகிஸ்தான், சவுதி அரேபியா, ஈரான் நாடுகள் இந்தக் குழுக்களுக்கு ஆயுதங்களும் பணமும் கொடுத்து ஆப்கனில் அமைதி வராமல் பார்த்துக்கொண்டன. இவர்களின் மோதலில் தலைநகர் காபூலில் பாதி அழிந்தது. அரசு இல்லை, போலீஸ் இல்லை, நீதிமன்றம் இல்லை. முஜாகிதீன்கள் வைத்ததுதான் சட்டம். கொலைகள், கொள்ளைகள், மிரட்டிப் பணம் பறிப்பது, பாலியல் குற்றங்கள் என நிம்மதியைத் தொலைத்தனர் மக்கள்.

பல லட்சம் மக்கள் அகதிகளாக வெளிநாடுகளுக்குச் சென்றனர்.
முடிவில்லாமல் நீடித்த இந்தப் போரில் தன் கை ஓங்குவதற்கு என்ன வழி என்று பாகிஸ்தான் உளவுத்துறை யோசித்தது. எல்லா இனக்குழுக்களையும் இணைக்கும் வலுவான ஒரு தலைவர் தேவை என்பதை உணர்ந்தது. அவர்கள் தேர்வு செய்த நபர், முல்லா முகமது ஒமர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தாலிபன்களின் கதை - 2 | பிரிட்டிஷ் ஆட்சி டு சோவியத் அதிகாரம்... ஆப்கன் நிம்மதியை இழந்த தருணம் எது?

ஒல்லியான உருவம், ஆஜானுபாகுவாக ஆறரை அடி உயரம், அதிகம் பேசாத கூச்ச சுபாவம், தீவிர மத நம்பிக்கை, தேர்ந்த போர்த்திறன்... இதுதான் ஒமர். 1994-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காந்தஹாரில் வெறும் 50 பேருடன் தாலிபன் அமைப்பைத் தொடங்கினார் அவர். 'தாலிப்' என்ற அரபு வார்த்தைக்கு 'மாணவன்' என்று அர்த்தம். தாலிபன்கள் என்றால் 'மாணவர்கள்'.

தாலிபன்
தாலிபன்
Rahmat Gul

பஷ்துன், தாஜிக், உஸ்பெக் என ஆப்கனின் முக்கிய இனங்கள் மூன்றையும் 'இஸ்லாம்' என்ற ஒற்றை அடையாளத்தால் இணைத்தார் ஒமர். தாலிபன் படையில் இந்த மூன்று இனத்தினரும் இருந்தார்கள். மற்ற முஜாகிதீன் குழுக்களிலிருந்து இதுதான் அவர்களை வித்தியாசப்படுத்தியது. இஸ்லாமிய சட்டப்படியான அரசை ஆப்கனில் உருவாக்க வேண்டும் என்ற ஒமரின் முழக்கம் இவர்களை இணைத்தது.

பாகிஸ்தான் பயிற்சி அளித்து உருவாக்கிய 15 ஆயிரம் பேர் கொண்ட படையுடன் இவர்கள் ஆப்கனில் முன்னேறினர். பாகிஸ்தான் ராணுவத்தினரும் கூடப் போனார்கள். பாகிஸ்தான் விமானப் படை விமானங்கள் வான்வெளியிலிருந்து அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தன.

இதனால் எதிர்த்துப் போர் புரியவே பயந்து முஜாகிதீன்கள் சரணடைந்தார்கள். மூன்றே மாதங்களில் காந்தஹார் விழுந்தது. அது, தாலிபன்களின் முதல் வெற்றி. அடுத்தடுத்து பல மாகாணங்களை வென்று முன்னேறியது அந்தப் படை. தாங்கள் வென்ற இடங்களில் அரசு அதிகாரிகள் மற்றும் முஜாகிதீன்கள் செய்த ஊழலை ஒழித்து, மக்களுக்குப் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்தது தாலிபன் படை.

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லை
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லை
Jafar Khan

பல ஆண்டுகள் உள்நாட்டுப் போரில் நிம்மதி தொலைத்திருந்த ஆப்கன் மக்கள் தாலிபன்களை ஆரவாரத்துடன் வரவேற்றனர். பல ஊர்களில் முஜாகிதீன்களை அவர்களே தாலிபன்களிடம் பிடித்துக் கொடுத்தனர்.

அதே வேகத்தில் தலைநகரைப் பிடித்துவிடலாம் என காபூல் நோக்கி நகர்ந்தார்கள் தாலிபன்கள். அவர்களுக்கு ஒற்றைச் சவாலாக விளங்கினார் அகமது ஷா மசூத். ஆப்கன் இடைக்கால அரசின் பாதுகாப்பு அமைச்சர். காபூலுக்கு வடக்கே இருந்த பல மாகாணங்களில் செல்வாக்கு பெற்ற தலைவர் அவர். அரசு படைகளை ஒருங்கிணைத்து தாலிபன்களை தோற்கடித்தார் மசூத். அந்தப் போரில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலர் ஆப்கன் ராணுவத்திடம் பிடிபட்டனர். ஆப்கனில் நுழைந்து குழப்பம் விளைவிப்பதாக ஐ.நா சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் பாகிஸ்தானைக் கண்டித்தன.

அப்போது பாகிஸ்தான் ராணுவத் தளபதியாக இருந்தவர் பர்வேஸ் முஷாரப். பிற்காலத்தில் ராணுவப் புரட்சி நடத்தி பாகிஸ்தானை ஆட்சி செய்த அதே முஷாரப். அவர் சர்வதேச சமூகத்தின் கண்டனங்களை அலட்சியம் செய்துவிட்டு, பாகிஸ்தானிலிருந்து பல ஆயிரம் படை வீரர்களை அனுப்பினார். அவர்களின் உதவியுடன் 1996 செப்டம்பரில் காபூலை வீழ்த்தி ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்தனர் தாலிபன்கள்.
எண்ணெய்க் கொப்பரையிலிருந்து தப்பித்து எரியும் நெருப்பில் விழுகிறோம் என்ற விபரீதம் புரியாமல் காபூல் அவர்களை வரவேற்றது.

தாலிபன்களின் கதை நாளையும் தொடரும்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு