Published:Updated:

பருவநிலை நெருக்கடிக்கு எதிராக ஒன்றுகூடிய உலக மாணவர்கள்!

உலக மாணவர்கள் போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
உலக மாணவர்கள் போராட்டம்

செப்டம்பர் மாத அதிகாலைப் பொழுது, கொஞ்சம் மந்தமானதுதான். அந்த ஞாயிற்றுக்கிழமையும் அப்படித்தான் இருந்தது. ஆனால், அங்கு கூடி இருந்த 1,500 குழந்தைகளும் இளைஞர்களும் அப்படியிருக்க வில்லை.

ங்கள் எதிர்காலத்தின்மீது அக்கறையில்லாத அரசுக்கு பருவநிலை நெருக்கடியை எடுத்துக்கூறும் பதாகைகளோடும், தங்கள் பூமியைக் காக்க வேண்டும் என்ற உத்வேகத்தோடும் நின்றிருந்தார்கள்.

‘இது தீ விபத்தல்ல, தீவிரவாதம்’ - எரிந்துகொண்டிருக்கும் அமேசான் காடுகளைக் குறிக்கும் வரைபடத்தில் எழுதப்பட்ட வாசகத்தை ஏந்திய பதாகையோடு நின்றிருந்தார் பன்னிரண்டு வயது மாணவர். ‘‘எங்கள் எதிர்காலத்தை, அரசுகள் மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றன. நீங்கள் அதைக் கேட்பதாகத் தெரியவில்லை, அதனால்தான் நாங்களே களமிறங்கிவிட்டோம்’’ என்ற அந்த இளம் மாணவர்களின் மனம் எந்த அளவுக்குச் சீற்றம்கொண்டிருக்கிறது என்பதை அவர்களின் உணர்ச்சிமிக்க வார்த்தைகள் உணர்த்தின.

பருவநிலை நெருக்கடிக்கு எதிராக ஒன்றுகூடிய உலக மாணவர்கள்!

இது ஏதோ, சென்னையில் மட்டும் நடக்கும் சில நூறு பேரின் போராட்டம் எனக் கடந்துவிட முடியாது. உலக வரலாற்றிலேயே முதல் முறையாக, பூமியின் ஒட்டுமொத்த மாணவச் சமுதாயமும் ஒன்றுகூடி நடத்திய உலகப் போராட்டம். தங்கள் வாழ்வைச் சிதைத்துக் கொண்டிருக்கும் மூத்தவர்களின் செயல்களைக் கண்டித்து நடந்திருக்கிறது இந்தப் போராட்டம். இனி நம் எதிர்காலத்தை நாம்தான் காப்பாற்ற வேண்டும் என்று பள்ளிகளை, கல்லூரிகளை விட்டு வெளியேறி, தன் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள நடத்திய வாழ்வாதாரப் போராட்டம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

செப்டம்பர் 20-ம் தேதி, உலகம் முழுக்க உள்ள 163 நாடுகளில் 2,500 நிகழ்ச்சிகள் இதை முன்னிட்டு நடைபெற்றன. 350.org என்ற சர்வதேசச் சூழலியல் அமைப்பு வெளியிட்ட தரவுகளின் படி, சுமார் நான்கு மில்லியன் மக்கள் இந்தப் பருவநிலைப் போராட்டத் தில் பங்கெடுத்துள்ளனர். டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை உட்பட இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் இந்தப் பேரணிகள் நடந்தன. அதன் தொடர்ச்சிதான் செப்டம்பர் 22-ம் தேதி பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நடந்த பேரணியும். பிரான்ஸில் 40,000 பேர், உக்ரைனில் 2,600 பேர், தென்னாப்பிரிக்காவில் 5,000 பேர், துருக்கியில் 10,000 பேர், ஜப்பானில் 5,000 பேர், லண்டனில் 1,00,000 பேர், ஆஸ்திரேலியாவில் 3,30,000 பேர், நியூயார்க் நகரத்தில் 2,50,000 பேர், ஜெர்மனியில் 14,00,000 பேர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

உலகம் முழுக்க குழந்தைகளும் இளைஞர்களும் தங்கள் எதிர்காலத்தைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடினார்கள். அன்டார்டிக் கண்டத்திலும் இந்தப் போராட்டம் நடைபெற்றது. உலகின் மிகப்பெரிய பசுமை இல்ல வாயு வெளியீட்டாளரான சீனா, இதில் பங்கெடுக்காதது உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உடைந்த கையைக்கூடப் பொருட்படுத்தாமல், போராட்டக் களத்தில் வந்து நின்ற தன் மகனுக்குப் பக்கபலமாக நின்ற சூழலியல் ஆர்வலரான பேராசிரியர் தா.முருகவேளிடம் பேசியபோது, ‘‘பருவநிலை மாறுதல் பூமி முழுக்க நடந்துகொண்டிருக்கும் இந்தச் சமயத்திலும் சிலர் அதை உண்மையில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பருவநிலை மாற்றத்தின் விளைவுகளைச் சந்தித்துக்கொண்டிருக்கும் மாலத்தீவு மாதிரியான தீவுகளிடம் இதைச் சொல்ல முடியுமா? சென்னை மாதிரியான கடலோர நகரங்கள் இன்னும் என்னென்ன அபாயங்களைச் சந்திக்கப்போகின்றன என்று நினைத்தாலே அச்சமாகவுள்ளது. இதையெல்லாம் உதாரணமாக எடுத்துக் கொண்டு, அதற்கு என்ன செய்ய முடியும் என்றுதான் நாம் இப்போது சிந்திக்க வேண்டும்.

சிறிய பெண் தொடங்கிய ஓர் இயக்கம், இன்று உலகையே ஒன்றிணைத்திருக்கிறது. பெருநிறுவனங்கள் என்ன செய்கின்றன, சுற்றி என்ன நடக்கிறது என, மக்கள் இதுவரை கேள்வி எழுப்பாமலேயே இருந்துவிட்டனர். ஆனால், இந்தத் தலைமுறை அப்படிப்பட்டதல்ல. அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும்’’ என்று கூறினார்.

ஓராண்டுக்கு முன், கிரேடா துன்பெர்க் என்கிற 16 வயதுச் சிறுமி, தனி ஒருத்தியாக ஸ்வீடன் நாடாளுமன்ற வாசலில் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கிவைத்தார். அன்று, அவர் மட்டுமே நின்றார். இன்று, உலகமே அவருடன் நிற்கிறது. ‘நம் தாத்தா, பாட்டியைப்போல், நம் பெற்றோரைப்போல் நாமும் வாழ இந்தப் பூமி இல்லாமல்போய்விடுமோ!’ என்று இந்த உலகப் போராட்டத்துக்கு வித்திட்ட அந்தச் சிறுமிக்கு ஏற்பட்ட அச்சம், ஏன் அரசுகளுக்கு ஏற்படவில்லை? அவர்கள் இன்றளவும் பருவநிலை நெருக்கடியை ஒரு தீவிரப் பிரச்னையாக எடுத்துக்கொள்ளாததே உலக இளைஞர்கள் போராட்டக் களத்தில் இறங்கக் காரணம்.

பருவநிலை நெருக்கடிக்கு எதிராக ஒன்றுகூடிய உலக மாணவர்கள்!

செப்டம்பர் 20-ம் தேதி நியூயார்க் நகரத்தில், 2,50,000 மக்களுக்கு நடுவே பேசிய கிரேடா துன்பெர்க், ‘‘இது நெருக்கடிக் காலம். நம் வீடு தீப்பற்றி எரிகிறது. நாம் எல்லோரும்தான் இங்கு வாழ்கிறோம். இந்த நெருப்பு நம் அனைவரையுமே அழித்துவிடும். அதனால், ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பது எந்தப் பலனையும் தரப்போவதில்லை” என்றார்.

துன்பெர்க்கின் வார்த்தைகளை உணர்ந்த இளைஞர்களும் குழந்தைகளும், இன்று அவருடன் கைகோத்து நிற்கிறார்கள். இந்தப் பெரும்படையின் கோரிக்கையை ஏற்று பருவநிலை நெருக்கடியைச் சரிக்கட்ட உரிய நடவடிக்கைகளை உலக அரசுகள் அனைத்தும் எடுத்தே ஆகவேண்டும். இல்லையேல், இன்னும் அதிக வீரியமிக்கப் போராட்டங்களை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.