Published:Updated:

``எதையும் எதிர்த்து நிற்பார் ஜூலியன் அசாஞ்சே!'' -விக்கிலீக்ஸ் ஆசிரியர் கிறிஸ்டன் உறுதி

அவர்மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்தது அமெரிக்கா; விக்கிலீக்ஸ் தொடங்கப்பட்ட ஸ்வீடன் நாட்டில், அவர்மீது பாலியல் புகார்கள் எழுப்பப்பட்டன; அசாஞ்சே பிறந்த நாடான ஆஸ்திரேலியா அவருக்கு உதவ மறுத்தது; அமெரிக்காவிற்கு எதிரான ரஷ்ய உளவாளி எனக் குற்றம்சாட்டப்பட்டது.

ஜூலியன் அசாஞ்சே
ஜூலியன் அசாஞ்சே

ஜூலியன் அசாஞ்சே விக்கிலீக்ஸ் என்ற வலைதளத்தின் நிறுவனர். தகவல் வெளிப்படைத்தன்மையினைத் தன் வாழ்நாள் பணியாக வகுத்துக்கொண்டவர். உலக நாடுகள், முக்கியமாக அமெரிக்கா போன்ற பெரும்பலம் பொருந்திய நாடுகள், உலக மக்கள்மீது கட்டவிழ்த்துவிடும் கொடூரமான வன்முறை, போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், முறைகேடுகள், ஊழல் குற்றங்கள் போன்ற அரசின் பாதுகாக்கப்பட்ட ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு உலகத்தையே விக்கித்துப்போக வைத்தவர்.

விக்கிலீக்ஸின் ஜூலியன் அசாஞ்சே!
விக்கிலீக்ஸின் ஜூலியன் அசாஞ்சே!

ஈராக் வீதிகளில் அமெரிக்க விமானங்கள் நடத்திய கோர தாக்குதல்கள், போர்க்குற்றவாளிகளை அடைத்து வைக்கும் `குவாண்டனமோ பே' சிறைச்சாலை என இவர் வெளியிட்ட தகவல்கள் எல்லாம் அதிமுக்கியமானவை. அதிகார மையத்தின் உண்மை முகத்தைத் தோலுரிக்கும் ஒருவரை சும்மாவா விடுவார்கள்? மிக ரகசியமான ஆவணங்களை வெளியிட்டதைத் தொடர்ந்து அவர்மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்தது அமெரிக்கா; விக்கிலீக்ஸ் தொடங்கப்பட்ட ஸ்வீடன் நாட்டில், அவர்மீது பாலியல் புகார்கள் எழுப்பப்பட்டன; அசாஞ்சே பிறந்த நாடான ஆஸ்திரேலியா அவருக்கு உதவ மறுத்தது; அமெரிக்காவிற்கு எதிரான ரஷ்ய உளவாளி எனக் குற்றம்சாட்டப்பட்டது. ஈகுவடோர் நாடு மட்டும் அவருக்கு ஏழு ஆண்டுகள் புகலிடம் கொடுத்தது. ஆனால், அவருக்கு வழங்கிய பாதுகாப்பை திடீரென ஈகுவடோர் விலக்கிக்கொள்ள, கடந்த ஏப்ரல் மாதம் ஈகுவடோர் தூதரகத்திற்குள்ளே சென்று பிரிட்டன் போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

தென்கிழக்கு லண்டனில் HMP பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜூலியன் அசாஞ்சேவை, தன்னிடம் ஒப்படைக்கக் கோரி அமெரிக்கா பிரிட்டனுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஸ்வீடன் நாட்டில் அசாஞ்சே மீது தொடரப்பட்ட பாலியல் வழக்கு தற்போது ஒரு முடிவை எட்டியிருக்கிறது.

ஜூலியன் அசாஞ்சே
ஜூலியன் அசாஞ்சே

கடந்த 2010-ம் ஆண்டில், ஜூலியன் அசாஞ்சே மீது ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்கள், பாலியல் பலாத்காரம் மற்றும் அத்துமீறல் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதையடுத்து, ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் அசாஞ்சே மீது, ஸ்வீடன் நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்து உத்தரவிட்டது. ஆனால், ஸ்வீடன் தன்னை அமெரிக்காவிடம் ஒப்படைக்கக் கூடும் என்ற ஆபத்தை உணர்த்திருந்ததால் ஈகுவடோர் நாட்டில் தஞ்சமடைந்தார் அசாஞ்சே. இந்நிலையில், 2017-ம் ஆண்டு இந்த வழக்கைக் கைவிடுவதாக ஸ்வீடன் உயர்நீதிமன்றம் அறிவித்தது. அசாஞ்சே நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகி, விசாரணையில் பங்குபெறுவது சாத்தியமில்லாததால் இந்த வழக்கு கைவிடப்படுவதாகவும் 2020-ம் ஆண்டுக்கு முன்னர், ஜூலியன் அசாஞ்சே ஸ்வீடன் நாட்டில் கால்பதித்தால், இந்த வழக்கு மீண்டும் உயிர்பெறும் எனவும் ஸ்வீடன் அரசு அப்போதே தெரிவித்திருந்தது .

`என்ன நடந்தாலும் என் ஆன்மிகப் பணி தொடரும்!’- வெளிநாட்டுக்குத் தப்பிய நித்யானந்தா

அவர் பிரிட்டன் அரசால் கைது செய்யப்பட்டதும், ஸ்வீடன் நாட்டின் பொது வழக்குப் பிரிவின் துணை இயக்குநர் ஈவா மேரி பெர்சன் ``ஜூலியன் அசாஞ்சே மீதான பாலியல் வழக்கை மீண்டும் விசாரிக்க ஸ்வீடன் அரசு முடிவெடுத்துள்ளது. இந்த வழக்கில், அவர் குற்றம் செய்திருப்பதற்கான முகாந்திரங்கள் இருக்கின்றன” என்று கூற கடந்த மே மாதம் அவர் மீதான விசாரணைகள் மீண்டும் தொடங்கின.

இந்தநிலையில், அவர்மீதான பாலியல் வழக்கு விசாரணையை ரத்து செய்வதாக சமீபத்தில் அறிவித்திருக்கிறது ஸ்வீடன் அரசு. அவர்மீதான பாலியல் புகார் நடந்து பத்து ஆண்டுகள் ஆனதால், இந்த வழக்கின் சாட்சிகள் துல்லியமாக அந்த நிகழ்வுகளை நினைவில் வைத்திருக்க வாய்ப்பில்லை என்ற காரணம் கூறி, வலுவற்ற சாட்சிகள் உடைய வழக்கு எனும் அடிப்படையில் தற்போது இந்த வழக்கு கைவிடப்பட்டிருக்கிறது. அதே சமயம் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறது.

``ஸ்வீடன் அசாஞ்சே மீது இந்த விசாரணையைத் தொடங்குவதும் மூடுவதும் இது முதல் முறை அல்ல; மூன்றாவது முறை, மீண்டும் இந்த வழக்கின் விசாரணை வழக்கம்போல காரணமின்றி, புதிதாய் எந்த சாட்சியங்களின்றியும் தொடங்கப்படலாம். அதையும் அசாஞ்சே எதிர்த்து நிற்பார். ஆனால் நாம் இப்போது கவனம் செலுத்தவேண்டியது அமெரிக்கா செய்துவரும் மனித உரிமை மீறல்கள் மீது" என்று விக்கிலீக்ஸ் ஆசிரியர் கிறிஸ்டன் கூறியிருக்கிறார்.

Vikatan

இந்தப் பாலியல் தொந்தரவு குறித்த விவரமான புகார் அறிக்கையை வாசித்தால், இந்த வழக்கு பொய்யாகப் புனையப்பட்டது என்ற சந்தேகம் எழுப்பும் வகையிலேயே உள்ளது. ஜூலியன் அசாஞ்சே உலக அரசியலில் அதிகார வர்க்கத்தை எதிர்க்கும் முக்கியமான நபர். அவர் மீது அழுத்தம் கொடுப்பதற்காக பாலியல் புகார் ஓர் ஆயுதமாகப் பயன்படுகிறது என்பதே அவரைச் சார்ந்தோரின் வாதமாக இருக்கிறது. சர்வசாதாரணமாக இந்த வழக்கு கையாளப்பட்ட விதமும் குழப்பத்தை அதிகரிக்கிறது. எங்கோ சர்வதேச அளவில் மட்டும் இல்லது இந்தியாவிலேயே மிக உயர்ந்த பதவிகளில் இருப்போர் மீதெல்லாம் பாலியல் புகார்கள் அளிக்கப்பட்ட செய்திகள் இருக்கின்றன. பெண்கள் மீதான வன்முறையைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில், அந்தப் புகாரின் தன்மையையே சந்தேகிக்க வைக்கும் இத்தகைய தருணங்கள், பெண்களின் பாதுகாப்பு, கருத்து சுதந்திரம், ஜனநாயகம் எனப் பல்வேறு தளங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதே உண்மை.