Published:Updated:

தாலிபன்களின் கதை - 11 | தாமிரம், லித்தியம், பொருளாதார மண்டலம் - சீனாவுக்கு ஆப்கன் ஏன் முக்கியம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தாலிபன் | Taliban fighters patrol in Kabul, Afghanistan
தாலிபன் | Taliban fighters patrol in Kabul, Afghanistan ( AP )

ஆப்கனின் இன்னொரு வளம், லித்தியம். உலகிலேயே அதிக லித்தியம், ஆப்கன் மண்ணுக்கு அடியில்தான் புதைந்திருக்கிறது. மொபைல் போன்கள் முதல் மின்சாரக் கார்கள் வரை எல்லாமே லித்தியம் பேட்டரியில்தான் இயங்குகின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'தாலிபன்கள் இப்போது மாறிவிட்டார்கள்.' இதை அமெரிக்கா சொல்கிறது, பாகிஸ்தான் சொல்கிறது. தாலிபன்களேகூட சொல்கிறார்கள். உருமாறிய கொரோனா போல 'தாலிபன் 2.0' என பெயரும் வைத்துவிட்டார்கள். ''முன்பு போல அவர்கள் கொடூரமாக நடந்துகொள்ளவில்லை, கடுமையாக இல்லை. அவர்களுக்குப் பக்குவம் வந்திருக்கிறது'' என்று சர்வதேச ஊடகங்கள் எழுதுகின்றன. ஆனால், ஆப்கானிஸ்தானிலிருந்து ஆயிரக்கணக்கில் எல்லை தாண்டி வெளியேறும் அகதிகளும், காபூல் விமான நிலையத்தில் முட்டிமோதும் மக்களும், 'தாலிபன்கள் மாறவில்லை' என்பதை நிரூபிக்கிறார்கள்.

தாலிபன்கள் மாறாவிட்டாலும், ஆப்கானிஸ்தான் மாறியிருக்கிறது. 96-ம் ஆண்டு தாலிபன்கள் முதலில் கைப்பற்றியபோது, போரில் சிதைந்த கட்டடங்கள் மட்டுமே மிஞ்சியிருந்த தேசமாக அது இருந்தது. வீதிகளில் சைக்கிள்களும் பழைய மோட்டார் சைக்கிள்களும் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும்.

இந்த ஆகஸ்ட் 15-ம் தேதி தலைநகர் காபூலில் நுழைந்த தாலிபன் வீரர்கள், அங்கிருந்த வானுயர்ந்த கட்டடங்களையும் ஷாப்பிங் மால்களையும் பார்த்து வியந்து போனார்கள். இப்போது ஆப்கனில் நான்கு செல்போன் நிறுவனங்கள் சேவை தருகின்றன. தாலிபன் வீரர்களே விதவிதமான போன்கள் வைத்திருக்கிறார்கள். உற்சாகமாக செல்ஃபி எடுக்கிறார்கள். பல தனியார் சேனல்கள் வந்துவிட்டன. அவற்றில் பெண்களும் நிருபர்களாகப் பணிபுரிகிறார்கள். தாலிபன் செய்தி தொடர்பாளரையே ஒரு பெண் நிருபர் பேட்டி எடுத்தார்.

அமெரிக்காவில் தரையிறங்கிய ஆப்கானிஸ்தான் மக்கள்
அமெரிக்காவில் தரையிறங்கிய ஆப்கானிஸ்தான் மக்கள்
AP

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கின்படி, ஆப்கன் பள்ளிகளில் 80 லட்சம் குழந்தைகள் படித்தார்கள். இவர்களில் 30 லட்சம் பேர் பெண் குழந்தைகள். ஆப்கன் மக்கள்தொகையில் சரிபாதி பேர் 20 வயதுக்கும் கீழே இருப்பவர்கள். தாலிபன்கள் செல்வாக்கு பெறாத ஒரு சுதந்திரச் சூழலில் வாழ்ந்து பழகியவர்கள். அவர்களை துப்பாக்கி முனையில் அடிபணிய வைப்பது கடினம். அதனால்தான் பல இடங்களில் ஆப்கன் நாட்டுக் கொடியைக் கையில் ஏந்தி அவர்கள் தாலிபன்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்துகிறார்கள். துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானாலும், அவர்களின் எதிர்ப்பு ஜீவித்திருக்கிறது.

தாலிபன்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை; தேர்தல்களிலும் விருப்பம் இல்லை. 'இஸ்லாமிய சட்டப்படி ஆட்சி நடத்துவோம்' என்றுதான் அறிவித்திருக்கிறார்கள். இப்போதுதான் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி கைகுலுக்கியவர்கள், அந்தக் கைகளில் உடனடியாகக் குருதி படிவதை விரும்பவில்லை. அதனால், முன்னாள் அதிபர் ஹமித் கர்சாய், முக்கிய தலைவர்களான அப்துல்லா அப்துல்லா, குல்புதீன் ஹெக்மத்யார் ஆகியோரையும் தங்கள் அரசில் இணைப்பதற்கு பேசி வருகிறார்கள்.

ஆட்சியைப் பிடித்திருக்கும் தாலிபன்களுக்கு ஒரே பிரச்னையாக இருப்பது பணம்தான். இவ்வளவு காலம் ஆப்கன் அரசுக்கு நிதியுதவி செய்துவந்த அமெரிக்கா, அதை நிறுத்திவிட்டது. அத்துடன், அமெரிக்காவில் இருந்த ஆப்கன் மத்திய வங்கியின் நிதியையும் முடக்கிவிட்டது. அதனால், பணம் இல்லாமல் தாலிபன்களின் அரசு தள்ளாடுகிறது.

ஆண்டுக்கு சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் கொண்ட உலகின் மிகப்பெரிய தீவிரவாத அமைப்பாக தாலிபன்கள் இருந்தனர். சவூதி அரேபியா, பாகிஸ்தான், ஈரான் என பல நாடுகள் மறைமுக நிதி தந்தன. அரபு செல்வந்தர்கள் இன்னொரு பக்கம் உதவிகளைக் குவித்தார்கள். ஆப்கன் வர்த்தக நிறுவனங்கள் பலவற்றிலிருந்து 'பாதுகாப்பு வரி' வசூலித்தார்கள். நிறைய பேரைக் கடத்தி, அவர்களை விடுதலை செய்வதற்கு பணம் வசூலிப்பதும் உண்டு. ஆப்கனில் செயல்பட்ட சுரங்க நிறுவனங்கள் பலவும் அரசுக்கும் வரி கட்டின; தாலிபன்களுக்கும் பணம் கொடுத்தன.

பாகிஸ்தானில் தற்போது பறக்கும் தாலிபன் ஆதரவு கொடி
பாகிஸ்தானில் தற்போது பறக்கும் தாலிபன் ஆதரவு கொடி

எல்லாவற்றையும்விட முக்கியமாக, போதைக்கடத்தலில் பெரும் பணம் வந்தது. உலகிலேயே அபின் அதிகம் பயிரிடும் தேசம், ஆப்கானிஸ்தான். உலகின் 85 சதவிகித அபின் இங்குதான் விளைகிறது. இதிலிருந்து ஹெராயின் போதைப் பொருள் தயாராகி உலகம் முழுக்கப் போகிறது. இதேபோல எபிட்ரின் போதைப்பொருள் தயாரிக்க உதவும் எபிட்ரா பயிரிடுவதும் இங்கு அதிகம். முல்லா ஒமர் ஆட்சியில் இருந்தபோது ஒருமுறை ஆப்கானிஸ்தானில் போதைச் செடிகள் பயிரிடுவதைத் தடை செய்தார். ஆனால், வருமானம் சுத்தமாக நின்று போனதும் தாலிபன்கள் இப்போது மனம் மாறிவிட்டனர். இப்போது ஒவ்வோர் ஆண்டும் ஆப்கனில் இவை பயிரிடப்படும் பரப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது. ''ஆப்கனிலிருந்து உலகம் முழுக்க போதைப் பொருட்கள் கடத்தப்படுவது அதிகமாகியுள்ளது'' என்று ஐ.நா போதைக் குற்றங்கள் அலுவலகம் கவலையுடன் குறிப்பிடுகிறது. தாலிபன்கள் இந்த போதைக் கடத்தலை இன்னும் அதிகமாக்கக்கூடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனால் தாலிபன்களுக்கு தனிப்பட்ட முறையில் வருமானம் வரலாம். ஆனால், ஆப்கன் அரசுக்கு வருமானம் கிடைக்காது. உலகின் எந்த நாடு இப்படித் தடுமாறினாலும், உடனே கைகொடுக்க ஒரு நாடு வரும். அது, சீனா. அவர்களின் உதவியில் உள்நோக்கம் இருக்கும். ஆப்கனில் தாலிபன்களை வைத்து பல லாபக் கணக்குகளைப் போடுகிறது சீனா.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே தாலிபன் தலைவர்களை சீனாவுக்கு அழைத்துப் பேசினார், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி. 'ஆப்கனின் பொருளாதார வளர்ச்சிக்கு சீனாவின் உதவி தேவை' என்று அப்போது தாலிபன் துணைத் தலைவர் அப்துல் கனி பராதர் சொன்னார்.

'தாலிபன்களின் அரசை அங்கீகரிக்கத் தயார்' என முதலில் சொன்ன நாடும் சீனாதான். இனிவரும் காலங்களில் சர்வதேச நாடுகளின் மிரட்டல்களை தாலிபன்கள் சந்திக்க நேரிடும். அப்போதெல்லாம் அவர்களுக்குப் பரிந்து பேச ஒரு வல்லரசு நாடு தேவை. சீனா அதைச் செய்யும் என தாலிபன்கள் நம்புகிறார்கள். வட கொரியா போன்ற முரட்டு தேசங்களை ஆதரிக்கும் சீனாவுக்கு, தாலிபன்களை ஆதரிப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை.

ஆப்கனைவிட்டு வெளியேறும் மக்கள்
ஆப்கனைவிட்டு வெளியேறும் மக்கள்
AP | U.S. Marine Corps

சீனாவுக்கு இதில் பல லாபங்கள். உலகின் இரண்டாவது பெரிய தாமிரச் சுரங்கம் ஆப்கானிஸ்தானில் இருக்கிறது. சுமார் நான்கு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தாமிரம் இங்கு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதை சீன நிறுவனம் ஒன்று குத்தகைக்கு எடுத்துள்ளது. அமெரிக்காவின் ஆதரவில் இதுவரை இருந்த ஆப்கன் அரசு இந்த சுரங்கத்துக்குத் தடைகள் போட்டு வந்தது. ஆனால், தாலிபன்கள் இனி சீனாவை சீராட்டுவார்கள்.

வளைகுடா நாடுகளில் இருப்பதைப் போலவே ஆப்கானிஸ்தானிலும் எண்ணெய் வளம் இருக்கிறது. மூன்று இடங்களில் எண்ணெய்க் கிணறு தோண்டுவதற்கான ஒப்பந்தமும் சீன தேசிய பெட்ரோலியக் கார்ப்பரேஷனுக்கே கிடைத்திருக்கிறது. பத்து ஆண்டுகளாக இங்கு எந்த வேலையையும் செய்யாமல் சீனா அமைதியாகக் காத்திருக்கிறது. தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததும் இந்த வேலையும் தொடங்கிவிடும்.

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு: ஐஎஸ் அமைப்பு யாருடையது, அவர்களுக்கும் தாலிபன்களும் சம்பந்தம் இல்லையா?

ஆப்கனின் இன்னொரு வளம், லித்தியம். உலகிலேயே அதிக லித்தியம், ஆப்கன் மண்ணுக்கு அடியில்தான் புதைந்திருக்கிறது. மொபைல் போன்கள் முதல் மின்சாரக் கார்கள் வரை எல்லாமே லித்தியம் பேட்டரியில்தான் இயங்குகின்றன. உலகத்துக்கே லித்தியம் பேட்டரிகளை சப்ளை செய்யும் தேசமாக சீனா இருக்கிறது. அது ஆப்கானிஸ்தானின் லித்திய சுரங்கங்கள் மீதும் கண் வைத்திருக்கிறது.

இதேபோல இரும்பு முதல் தங்கம் வரை எல்லாமே கணிசமாக ஆப்கனில் இருக்கின்றன. தொடர் போர்கள் காரணமாக எந்த நாடும் அங்கு போய் தைரியமாக சுரங்கம் தோண்ட ஆரம்பிக்கவில்லை. தாலிபன்களின் ஆட்சியில் இதையெல்லாம் செய்ய முடியும் என நம்பிக்கையுடன் அடியெடுத்து வைக்கிறது சீனா.

China & Afghanistan | Taliban co-founder Mullah Abdul Ghani Baradar, left, and Chinese Foreign Minister Wang Yi, Right
China & Afghanistan | Taliban co-founder Mullah Abdul Ghani Baradar, left, and Chinese Foreign Minister Wang Yi, Right
Li Ran | AP

இன்னொரு வகையிலும் சீனாவுக்கு ஆப்கன் முக்கியம். ஆப்கன் எல்லைக்கு அருகில் நெடுஞ்சாலை அமைத்து, சீனா - பாகிஸ்தான் பொருளாதார மண்டலம் என்ற திட்டத்தை ஏராளமான பணத்தைக் கொட்டி சீனா உருவாக்கி வைத்திருக்கிறது. சீனாவுக்கு அரபிக் கடலைத் தொடுவதற்கு இந்தப் பாதை முக்கியம். சீனாவின் தயாரிப்புகள் அனைத்தும் பாகிஸ்தானின் குவாடர் துறைமுகம் வழியாக ஐரோப்பாவுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் செல்வதற்கு இந்தப் பாதை முக்கியம்.

பாகிஸ்தானில் இந்தத் திட்டத்துக்கு பெரும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. சாலை போடும் சீன அதிகாரிகளைக் கடத்துவது, குண்டுவெடிப்பு நிகழ்த்துவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. தாலிபன்கள் உதவி செய்தால் இதெல்லாம் நின்றுவிடும் என்று நம்புகிறது சீனா.

பிரிட்டன், ரஷ்யா, அமெரிக்கா என பல வல்லரசுகள் ஆப்கன் மண்ணில் கால் பதித்த பிறகு தடுமாறிப் போயின. அந்த சோக வரலாறு சீனாவுக்கும் தொடருமா? அல்லது தாலிபன்களின் நேசத்துக்குரிய நண்பனாகி சீனா வலிமை பெறுமா?

இதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு