Published:Updated:

தாலிபன்களின் கதை - 2 | பிரிட்டிஷ் ஆட்சி டு சோவியத் அதிகாரம்... ஆப்கன் நிம்மதியை இழந்த தருணம் எது?

தாலிபன்
தாலிபன்

ஆப்கன் இதுவரை தன் வரலாற்றில் கண்டதில் மிகச் சிறந்த ஆட்சியாளர் என்று தாவூத் கானைச் சொல்கிறார்கள். இவரது 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் நாடு பல முன்னேற்றங்களைக் கண்டது.

''ஆப்கன் அரசும் ராணுவமும் தாலிபன்களை எதிர்க்காதபோது, அமெரிக்கா ஏன் அவர்களை எதிர்க்க வேண்டும்? ஆப்கன் படைகளே தங்கள் நாட்டைக் காக்காதபோது, அப்படி ஒரு போரை நடத்த வேண்டிய அவசியம் அமெரிக்கப் படைகளுக்குக் கிடையாது. ஆப்கானிஸ்தானைக் கட்டமைக்கும் பணிக்காக அமெரிக்கப் படைகள் அங்கு செல்லவில்லை, அது எங்கள் வேலையும் இல்லை. அல்-கொய்தாவை முறியடிக்கவும், ஒசாமா பின் லேடனைப் பிடிக்கவுமே இந்தப் போர் நடைபெற்றது. எப்போது அமெரிக்கப் படைகளை வாபஸ் வாங்கியிருந்தாலும் இதுதான் நடந்திருக்கும். இன்னும் எத்தனை தலைமுறை அமெரிக்கப் பிள்ளைகளை ஆப்கன் உள்நாட்டுப் போருக்கு நாங்கள் அனுப்ப வேண்டும்? கடந்த காலத்தில் நடந்த தவறுகளை நான் தொடர விரும்பவில்லை.''
- ஆப்கன் தலைநகர் காபூல் தாலிபன்கள் வசமானதும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை உலக நாடுகள் பல விமர்சனம் செய்தன. அதற்கு அவர் இப்படி பதில் சொல்லியிருக்கிறார்.

உண்மையில் ஆப்கனில் எந்த அந்நியப் படைகளும் தாக்குப் பிடிக்க முடிந்ததில்லை. சதுரங்கப் பலகையில் காய்கள் வெட்டப்படும் வேகத்தில் ஆட்சிகள் மாறிவந்த தேசம் அது. பாஷ்துன் இன மக்கள் சரிபாதியாகவும், தாஜிக், உஸ்பெக், ஹசாரா உள்ளிட்ட இன மக்கள் மீதியாகவும் வாழும் கலவையான தேசம் ஆப்கன். கி.மு காலத்திலிருந்து சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங் காலம் வரை ஆப்கனின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் இந்திய மன்னர்களின் ஆளுகையில் இருந்தன. மீதிப் பகுதியை பழங்குடித் தலைவர்கள் மாறி மாறி ஆண்டனர்.

தளபதி வில்லியம் எல்பின்ஸ்டோன்
தளபதி வில்லியம் எல்பின்ஸ்டோன்
National Portrait Gallery London

இந்தியாவைப் பிடித்த பிரிட்டிஷ்காரர்கள், ரஷ்யப் பேரரசு ஆப்கனை அபகரித்துவிடும் என்று பயந்தார்கள். ரஷ்யாவை முந்திக்கொண்டு தாங்கள் அந்த நிலப்பரப்பைப் பிடிக்க நினைத்தார்கள். 1839-ம் ஆண்டின் இதேபோன்ற ஓர் ஆகஸ்ட் மாதத்தில், இதேபோல எந்த எதிர்ப்பும் இல்லாமல் காபூல் வீழ்ந்தது. ஒரு பொம்மை அரசரை நியமித்து பிரிட்டிஷ் படைகள் ஆட்சி செய்தன. மூன்றே ஆண்டுகள்... ஆப்கன் மக்கள் பெரும் கலகத்தில் இறங்கினர். வாட்டர்லூ போரில் நெப்போலியனை வீழ்த்திப் புகழ்பெற்ற தளபதி வில்லியம் எல்பின்ஸ்டோன் தலைமையிலான பிரிட்டிஷ் படைகள் காபூலிலிருந்து மிரண்டு வெளியேறின. வழியெங்கும் பழங்குடிகள் அவர்களைத் தாக்கிக் கொன்றனர். எல்பின்ஸ்டோன் கொல்லப்பட்டார். 16,500 பேர் கொண்ட அந்தப் படையில் சுமார் நூற்றுக்கும் குறைவானவர்களே உயிர் பிழைத்தனர்.

"அவர்களுக்கு இல்லாத அக்கறை எனக்கு எதற்கு?" - ஆப்கனைக் கை கழுவும் ஜோ பைடன்!

அவர்களில் பலரும் சிறைப்பட, ஒற்றை டாக்டர் மட்டுமே நீண்ட நாள்கள் கழித்து ஜலாலாபாத் நகரில் இருக்கும் பிரிட்டிஷ் படை முகாமுக்கு வந்தார். "காபூலில் இருந்து கிளம்பிய படைகள் எங்கே?" என அதிகாரிகள் கேட்டபோது, "நான் மட்டும்தான் அந்தப் படை" என்று அவர் பரிதாபமாகச் சொன்னார். பிரிட்டிஷ் பேரரசின் வரலாற்றில் மிக மோசமான தோல்வியாக இது கருதப்படுகிறது.

இதற்குப் பழிவாங்க அடுத்த ஆண்டே ஒரு பெரும் பிரிட்டிஷ் படை வந்தது. வழியெங்கும் எதிர்ப்பட்ட அத்தனை ஆப்கன் பழங்குடிகளையும் கொன்றபடி அது காபூல் சென்றடைந்தது. இப்படி தொடர்ச்சியாக மூன்று ஆப்கன் போர்களை நடத்திக் களைத்துப் போய் பிரிட்டிஷ் படைகள் அங்கிருந்து மூட்டை கட்டின.
மன்னர் அமானுல்லா கான்
மன்னர் அமானுல்லா கான்
Unknown author, Public domain, via Wikimedia Commons

ஆப்கனை சுதந்திர நாடாக முதலில் கட்டமைத்தவர், மன்னர் அமானுல்லா கான். 1919-ம் ஆண்டு இவர் ஆட்சிக்கு வந்தார். சர்வதேச சமூகத்துடன் ஆப்கன் இணைந்தது இந்தக் காலத்தில்தான். ஆரம்பக்கல்வியைக் கட்டாயம் ஆக்கியது, அடிமை முறையை ஒழித்தது என சீர்திருத்தங்கள் செய்தார். பெண் கல்வியை ஆதரித்ததும், இருபாலர் படிக்கும் பள்ளிகளைத் திறந்ததும் பல பழங்குடி மற்றும் மதத் தலைவர்களின் எதிர்ப்பை சம்பாதித்தன. உள்நாட்டுப் போர் வெடித்தது. அமானுல்லா கான் நாட்டை விட்டே தப்பி ஓட நேரிட்டது.

குழப்பம் சில ஆண்டுகள் நீடித்த நாட்டில், முகமது ஜாகிர் ஷா என்ற மன்னர் பதவிக்கு வந்தார். தன் உறவினர்களையே பிரதமர்களாக்கி இவர் நாட்டை ஆண்டார். சாலைகள், விமான நிலையங்கள் என நவீன வளர்ச்சிகள் இவர் காலத்தில்தான் வந்தன. இவர் வெளிநாடு சென்றிருந்த நேரத்தில், ராணுவத்தின் உதவியுடன் பிரதமர் தாவூத் கான் அரண்மனைக் கலகம் நடத்தி ஆட்சியைப் பிடித்தார். மன்னராட்சி முறை ஒழிந்ததாக அறிவித்து, ஆப்கனைக் குடியரசு தேசமாக்கினார். நாட்டின் முதல் அதிபராக அவரே பதவியேற்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆப்கன் இதுவரை தன் வரலாற்றில் கண்டதில் மிகச்சிறந்த ஆட்சியாளர் என்று தாவூத் கானைச் சொல்கிறார்கள். இவரது 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் நாடு பல முன்னேற்றங்களைக் கண்டது. ஆப்கன் அரச பரம்பரையில் தன்னை ஒரு கம்யூனிஸ்டாக அறிவித்துக்கொண்ட அரசியல்வாதி இவர்தான். சோவியத் ரஷ்யாவிலிருந்து ஆலோசகர்கள் வந்து இவருடன் இணைந்தார்கள். இவரின் அமைச்சரவையிலும் பல கம்யூனிஸ்ட்கள் சேர்ந்தார்கள் என்றாலும், ஒரேயடியாக இவர் ரஷ்யாவின் பக்கம் சாய்ந்துவிடவில்லை. ''அமெரிக்க சிகரெட்டை ரஷ்யத் தீப்பெட்டியால் பற்றவைத்துப் புகைக்கும்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்'' என்பது இவர் சொன்ன புகழ்பெற்ற வாசகம். இஸ்லாமிய நாடுகளுடன் ஒட்டி உறவாடி, எகிப்து போன்ற நாடுகளுடன் இவர் நல்லுறவு ஏற்படுத்திக்கொண்டது ரஷ்யாவுக்குப் பிடிக்கவில்லை. அமெரிக்காவின் பக்கம் ஆப்கன் சாய்ந்துவிடுமோ என ரஷ்யா கவலைப்பட்டது.

தாவூத் கான் (இடமிருந்து இரண்டாம் நபர்)
தாவூத் கான் (இடமிருந்து இரண்டாம் நபர்)
ANBI, CC BY-SA 3.0 via Wikimedia Commons

ஆப்கன் மக்கள் ஜனநாயகக் கட்சி என்ற கட்சியை சோவியத் ஆட்சியாளர்கள் வளைத்தனர். ராணுவத்துடன் இந்தக் கட்சி இணைந்து கலகம் செய்து தாவூத் கானைக் கொன்றது. ஆப்கனை அது கம்யூனிச தேசமாக அறிவித்தது. ஒரே ஆண்டுக்குள் அந்தக் கட்சியில் குழப்பங்கள் வர, பல கொலைகள், ஆட்சிக்கவிழ்ப்பு சதிகள் நடந்தேறின. கம்யூனிச அரசைக் காப்பாற்றுவதற்காக சோவியத் படைகள் உள்ளே நுழைந்தன. அந்த நிமிடத்திலிருந்து ஆப்கன் மக்களின் நிம்மதி பறிபோனது.

1979-ம் ஆண்டு தொடங்கி சுமார் ஒன்பது ஆண்டுகள் சோவியத் படைகள் ஆப்கனில் இருந்தன. கிளர்ச்சியாளர்களை ஆறு மாதங்களில் அடக்கிவிட்டு ரஷ்யா திரும்பிவிடலாம் என்றுதான் அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அது நடக்கவில்லை. பல பகுதிகளிலும் பல்வேறு கெரில்லாக் குழுக்கள் கிளம்பின. அமெரிக்கா, பாகிஸ்தான், சவூதி அரேபியா என்று பல நாடுகள் அவர்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் கொடுத்து சோவியத் படைகளை எதிர்த்துப் போரிட வைத்தன. கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரஷ்ய வீரர்கள் ஆப்கனில் அப்போது இருந்தார்கள்.

யார் இந்த தாலிபன்கள், அமெரிக்கா ஏன் பின்வாங்கியது, ஆப்கானிஸ்தானில் நடப்பது என்ன? - 1
ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் பனிப்போர் உச்சக்கட்டத்தில் இருந்த காலம் அது. ஆப்கனில் அத்துமீறி நுழைந்த ரஷ்யப் படைகள் வெளியேற வேண்டும் என ஐ.நா சபை வரை அமெரிக்கா முறையிட்டது. ஆப்கன் விவகாரத்தால் 1980 மாஸ்கோ ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்கா புறக்கணித்தது. பதிலுக்கு 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளை ரஷ்யா புறக்கணித்தது.

வறண்ட நிலமும் மலைகளும் சூழ்ந்த ஆப்கன் கிராமப்புறங்களில் யார் எதிரி, எங்கேயிருந்து தாக்குகிறார் என்பது தெரியாமல் சோவியத் படைகள் போரிட்டுக் களைத்தன. ஒவ்வொரு இழப்பின்போதும் அப்பாவி ஆப்கன் மக்கள் பலிகடா ஆனார்கள். அந்தப் போரில் சுமார் 20 லட்சம் பேர் வரை இறந்திருக்கலாம் என்று கணக்குகள் சொல்கிறார்கள். பல லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்குத் தப்பி ஓடினார்கள்.

தாலிபன் கொடி
தாலிபன் கொடி
கடைசியில் ரஷ்யப் படைகள் அங்கிருந்து வெளியேறின. அந்தப் போரில் ஏற்பட்ட இழப்புகள், சோவியத் யூனியன் சிதறுவதற்கு ஒரு காரணமானது.

அந்த நாள்களில் சோவியத் படைகளை எதிர்த்துப் போரிட ஆப்கன் இளைஞர்களைக் கொண்ட ஒரு சிறிய குழுவை பாகிஸ்தான் உருவாக்கியது. பாகிஸ்தானில் இருக்கும் மதரஸாக்களில் அவர்கள் மதக்கல்வி பெறுகிறார்கள். அமெரிக்கா கொடுத்த ஆயுதங்களை வாங்கிக்கொண்டு, பாகிஸ்தான் ராணுவத்திடம் பயிற்சி பெறுகிறார்கள் அவர்கள். வாடகைக்கு எடுக்கப்பட்ட இரண்டு வாகனங்கள் மற்றும் சில மோட்டார் சைக்கிள்களுடன் ஆப்கானிஸ்தானில் நுழைகிறார்கள். எதிர்காலத்தில் தங்களைப் பற்றி உலகமே பேசும் என அப்போது அவர்களுக்குத் தெரியாது. தங்களுக்கே இவர்கள் விரைவில் தலைவலியாக மாறுவார்கள் என்பது, ஆயுதம் கொடுத்த அமெரிக்காவுக்கும் தெரியாது.

அவர்கள்... தாலிபன்கள்!

அடுத்த கட்டுரைக்கு