Published:Updated:

`8 நாள்களில் 1.6 மில்லியன் டாலர் லாபம்!’ - ஊழியர்களுக்குப் பகிர்ந்து கொடுத்து அசத்திய தொழிலதிபர்

தொழிலதிபர் லேரி கோனர்
தொழிலதிபர் லேரி கோனர்

கொரோனா ஊரடங்கு நேரத்திலும் தான் சம்பாதித்த 1.6 மில்லியன் டாலரை தன் நிறுவனத்தின் அனைத்துப் பணியாளர்களுக்கும் வழங்கியுள்ளார் தொழிலதிபர் லேரி கோனர்.

கொரோனோ நோய்த்தொற்றின் தாக்கத்தைப் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள், காய்கறிச் சந்தை மட்டுமல்ல பங்குச் சந்தைகளிலும் பெருமளவிலான இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது என்பதே நிதர்சனமான உண்மை. ஆனால், இந்தச் சிக்கலான சூழ்நிலையையும் தனது சிறப்பான செயல்பாட்டால் சாதகமாக மாற்றி, சுயநலமற்ற தொழில் தர்மத்தை நிலைநாட்டியுள்ள தொழிலதிபர்தான் லேரி கோனர். அப்படி அவர் என்ன செய்துவிட்டார் என்று கேட்கிறீர்களா?

கோனர் நிறுவனம்
கோனர் நிறுவனம்

நோய் தாக்கத்தால் பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டு தேக்க நிலையில் உள்ள இந்த நேரத்தில் 1.6 மில்லியன் டாலர் தொகையை 8 நாள்களில் ஈட்டியுள்ளார் கோனர். இந்தத் தொகையை ஒரு சராசரி அமெரிக்கர் சம்பாதிக்க கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! இந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருவதற்குள் அதை, தானே முறியடிக்கும் விதமாக மேலும் ஓர் ஆச்சர்யமான செயலையும் செய்துள்ளார் 'லேரி.'

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தை அடிப்படையாகக் கொண்ட நில கூட்டு வியாபார நிறுவனமான 'தி கோனர்' குழுமத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி' லேரி கோனர்', தனது நிறுவனத்தின் உயர்வுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் நிறுவன ஊழியர்கள், மேலாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஆகியோருக்கு பாராட்டுகளையும் மதிப்புகளையும் தெரிவிக்கும் பொருட்டு, நோய்த்தொற்று சம்பந்தமான `Zoom meeting' சந்திப்பில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வீடியோ
வீடியோ

கோனர் கூறியதாவது, "நான், நமது தொழில் தர்மம் சார்ந்த மிக முக்கிய மதிக்கத்தக்க கருத்தான `சரியானதை செய், மக்கள் மதிப்பளிப்பர் (Do the right thing and people count)' பற்றி சிந்திக்கத் தொடங்கிவிட்டேன், நான் இந்த 1.6 மில்லியன் டாலரை எடுத்து உங்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கிறேன். எனது பார்வையில், இதை நான் பரிசாகக் கருதவில்லை. ஏனெனில், இதை சம்பாதித்துக் கொடுத்தது நீங்கள்தான். கொரோனா தொற்றுநோய் பரவிக்கொண்டிருந்த நிலையிலும்கூட நிறுவனத்தின் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில் சமூக விலகலை மதித்து கடைப்பிடித்து, பராமரித்துக்கொண்டுதான் இருந்தீர்கள்.

இது மிகவும் சவாலான தருணம், நீங்கள் `ஹீரோக்களுக்கு குறைந்தவர்கள் அல்ல' என்பதை நிரூபித்த செயலாகும், இதன் காரணமாக ஈட்டிய பணம் உங்களைச் சேர வேண்டியதே மிகச் சரியானது'' எனக் கூறினார். இவ்வாறு அவர் கூறிய தருணத்தில் பணியாளர்கள் சிலரோ, தனக்குத் தானே சிரித்துக்கொண்டனர், சிலர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட ஆரம்பித்துவிட்டனர், இன்னும் சிலருக்கோ ஆச்சர்யத்தில் கருவிழி விரிந்துபோனது. பல பேரால் தான் கேட்டுக்கொண்டிருந்ததை நம்பவே முடியவில்லை. இந்த அனைத்து உணர்வு வெளிப்பாடுகளையும் வீடியோவாகப் பதிவு செய்து அந்த நிறுவனம் தனது யூடியூப் சேனலில் வெளியுட்டுள்ளது.

வருமான வரி போக 1.6 மில்லியன் டாலர் நிகரத் தொகையானது, பணியாளர்களின் நீண்டகால அனுபவம் மற்றும் பதவியின் அடிப்படையில் 2,000 முதல் 9,000 டாலர் வரை என்ற பல்வேறு அளவுகளில் பகிர்ந்து அளிக்கப்படும். இதைத் தவிர எதிர்பாராத குழந்தைகள் நல பாதுகாப்பு நிதியை வழங்குவதற்கும் ஒப்புக் கொண்டுள்ளதாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அமென்டா ப்ரௌன் கூறியுள்ளார். ``எங்கள் நிறுவனத்தின் கவனிப்பு எங்கள் மீது மட்டுமன்றி எங்கள் அனைவரின் குடும்பங்களின் மீதும் உள்ளது. இந்த, செயல்தான் எங்களைத் தொடர்ந்து பணிபுரிய ஊக்கமளிக்கிறது" என 13 ஆண்டுகளாகப் பணிபுரியும் மூத்த பராமரிப்பாளர் மற்றும் பங்குதாரரான மெமோ அல்பா கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு