Published:Updated:

Euro Tunnel: மனிதர்கள் உருவாக்கிய ஐரோப்பாவின் அதிசயம்… யூரோ டனலின் வரலாறு தெரியுமா?

Euro Tunnel
Euro Tunnel ( AP )

1996-ம் ஆண்டில், அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் சிவில் இன்ஜினியர்ஸ் இந்தச் சுரங்கப்பாதையை நவீன உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக அடையாளப்படுத்தினர்.

Euro Tunnel… யுத்தத்தினாலும், பொருளாதார அரசியல் போட்டிகளினாலும், பல யுகங்களாக பிரிந்திருந்த இரு நாடுகளை இணைக்க எடுக்கப்பட்ட மிகப்பெரிய முயற்சியின் வெற்றியே இது. ஐஸ் ஏஜிற்குப் (Ice Age) பிறகு முதல் முறையாக பிரிட்டனையும் ஐரோப்பிய நிலப்பரப்பையும் இணைத்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த Euro Tunnel இன்று வெற்றிகரமாகத் தன் 27-வது வருடத்தை நிறைவு செய்கிறது.

The Channel Tunnel அல்லது Chunnel என்று அழைக்கப்படும் இந்த கடல்வழி சுரங்கப் பாதை இங்கிலாந்தின் ஃபோக்ஸ்டோனை 31 மைல் தொலைவில் உள்ள பிரான்சின் கோக்வெல்லஸுடன் இணைத்து, இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையிலான பயண நேரத்தை 35 நிமிடங்களுக்கு குறைத்தது. பிரஸல்ஸுக்கும், லண்டனுக்குமான தூரம் இரண்டு மணி நேரமாகவும், பாரிஸிலிருந்து லண்டன்வரை செல்லும் தூரம் 2 மணி 15 நிமிடங்களாகவும் குறைந்தன.

Euro Tunnel
Euro Tunnel
Michel Spingler—AP

ரயில்கள் ஒரு மணி நேரத்திற்கு 100 மைல் (160 கி.மீ) வேகத்தில் இந்த சுரங்கப்பாதை வழியாக பயணிக்க முடியும். இது தரைவழியில் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். சராசரியாக 150 அடி ஆழ நீரின் கீழ், 23 மைல் தூரத்திற்கு நீளும் இந்த ரயில் சுரங்கப்பாதை 1802-ம் ஆண்டிலிருந்து திட்டமிடப்பட்டு கடைசியாக 1994, மே 6-ம் தேதி கட்டிமுடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. நாளொன்றுக்கு சுமார் 50,000 பேர் இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்துகின்றனர். ஒரு வருடத்திற்கு 2 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இதில் பயணிக்கிறார்கள்.

இரண்டு சுரங்கப்பாதைகள், பராமரிப்பு மற்றும் அவசர காலங்களில் பயன்படுத்த ஒரு சிறிய சுரங்கப்பாதை என உண்மையில் அங்கே மூன்று சுரங்கங்கள் உள்ளன. இரண்டு ரயில் டனல்களில் ஒன்று வடக்கு நோக்கியும் மற்றது தெற்கு நோக்கியும் செல்கிறது. இந்த இரண்டு ரயில் சுரங்கங்களையும் கட்டுவதற்கு மில்லியன் டன் கணக்கான நிலம் அகழப்பட்டு சுமார் ஏழு மில்லியன் டன் குப்பைகள் அகற்றப்பட்டன. பதினைந்தாயிரம் பணியாளர்கள் பணியாற்றிய இந்தத் திட்டத்தில் துரதிஷ்டவசமாக பத்து பேர் உயிரிழந்தனர்.

இங்கிலீஷ் கால்வாய்!

ஆங்கில கால்வாய் அல்லது தி சேனல் என்று அழைக்கப்படும் அட்லான்டிக் பெருங்கடலின் ஒரு ஒடுங்கிய கடற்பரப்பானது, அட்லான்ட்டிக் பெருங்கடலை வட கடலுடன் இணைக்கும் ஒரு நீர்நிலை. உலகின் மிக நீளமான ஆழ்கடல் சுரங்கம் என்ற சாதனையை இன்றுவரை தக்கவைத்துள்ள English Channel மிகவும் பரபரப்பான கப்பல் போக்குவரத்து கால்வாய். ஒவ்வொரு நாளும் சுமார் 500 கப்பல்கள் இந்த கால்வாய்க்குள் வந்து போகின்றன.

Euro Tunnel/Channel Tunnel
Euro Tunnel/Channel Tunnel
Wikipedia

1700-களுக்கு முன்பு இந்த யூரோ சேனலுக்கு அதிகாரப்பூர்வ ஆங்கிலப் பெயர் இருக்கவில்லை. ப்ளீஸ்டோசீன் (Pleistocene) காலத்தில் இது ஒரு வறண்ட நிலமாக இருந்துள்ளது. 13,000 வருடங்களுக்கு முன்பு இறுதிப் பனிப்பாறை (ஐஸ் ஏஜ்) காலத்திலிருந்து பனி உருகத் தொடங்கியதன் விளைவாக ஐரோப்பாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையில் இருந்த ஒரே ஒரு இறுதி நிலத் தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது.

யூரோ டனலின் பின் நோக்கிய வரலாறு!

பிரெஞ்ச் மன்னன் நெப்போலியனின் ஆஸ்தான பொறியியலாளர் ஆல்பர்ட் மேத்யூ 1802-ம் ஆண்டில் ஆங்கில சேனலின் கீழ் முதல் சுரங்கப்பாதையைத் திட்டமிட்டார். காற்றோட்டம் மற்றும் புகைபோக்கிகள் கொண்ட ஒரு நிலத்தடி வழியை அலைகளுக்கு மேலே நீட்டிக்க நினைத்தார். 1880-ம் ஆண்டில், முதல் முயற்சியை கர்னல் பியூமண்ட் மேற்கொண்டார். அவர் இந்தத் திட்டத்தை கைவிடுவதற்கு முன்பு ஒரு மைல் தூரத்திற்கு மேல் ஒரு சுரங்கப்பாதையைத் தோன்டினார். அதன் பின் வெவ்வேறு முயற்சிகள் 20-ம் நூற்றாண்டுவரை தொடர்ந்தன.

இங்கிலீஷ் கால்வாயின் திறப்பு விழா!

1988 முதல் 1994-வரை 6 ஆண்டுகள் நடைபெற்ற கட்டுமானப் பணிகள் முடிவடையும்போது 18 பில்லியனைத் தொட்டது. இது அசல் மதிப்பீட்டின் இரு மடங்காகும். அதே போல திட்டமிட்டதை விட ஒரு வருடம் கழித்துத்தான் கட்டுமான வேலைகள் முடிவடைந்தன. இதுவரை உலகில் கட்டப்பட்ட உட்கட்டமைப்புகளில் அதிக செலவில் கட்டப்பட்டது என்ற பெருமையையும் இந்த யூரோ டனல் தன் வசம் வைத்திருக்கிறது. பிரிட்டிஷ் மகாராணி மற்றும் பிரெஞ்ச் ஜனாதிபதி மித்திரோண்ட், 1994 மே 6 அன்று அதிகாரப்பூர்வமாக சுரங்கப்பாதையைத் திறந்து வைத்தனர்.

இந்தச் சுரங்கப்பாதைக்குள் 1996, 2006, 2012 என மூன்று தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதில் மிகவும் மோசமானது நவம்பர் 18, 1996 அன்று நிகழ்ந்த விபத்து. இதன்போது சுரங்கத்தின் 500 மீட்டர் சேதமடைந்தது. ஆறு மாதங்களுக்கு இதில் சரக்குப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆயினும் இந்தச் சம்பவத்தில் யாரும் பெரிதாகக் காயமடையவில்லை. இதைத் தொடர்ந்து ஒரு தானியங்கி தீயணைப்பு அமைப்பு இப்போது அதற்குள்ளேயே நிறுவப்பட்டுள்ளது.

Euro Tunnel
Euro Tunnel
AP Photo/Michel Spingler, File

1996-ம் ஆண்டில், அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் சிவில் இன்ஜினியர்ஸ் இந்தச் சுரங்கப்பாதையை நவீன உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக அடையாளப்படுத்தினர். ஒலிம்பிக் டார்ச் 2012-ம் ஆண்டில் லண்டனின் ஹோஸ்ட் பகுதிக்குச் செல்லும் வழியில் இந்தச் சுரங்கப்பாதை வழியாகவே பயணித்தது.

உலகின் முக்கிய இரு வல்லரசுகளை இணைத்து, பொருளாதார, அரசியல் மேம்பாட்டுக்கு வழிவகுத்து, உலக வரைபடத்தில் ஐரோப்பாவின் வடிவத்தையே மாற்றியமைத்த யூரோ டனல் 20ம் நூற்றாண்டின் பொறியியல் துறையில் இன்றுவரை முறியடிக்கப்படாத ஒரு மிக பிரமாண்டமான சாதனை!
அடுத்த கட்டுரைக்கு