Published:Updated:

உக்ரைன் - தியாக தேசத்தின் வரலாறு - 2: ஜூடோ வீரர்; உளவாளி; அதிபர்! யார் இந்த விளாடிமிர் புதின்?

உக்ரைன்

பள்ளியில் படிக்கும்போதே அவருக்கு ரஷ்ய உளவு நிறுவனமான கே.ஜி.பி-யில் சேரும் ஆசை வந்துவிட்டது. நல்ல படிப்பாளியான புதின், சட்டம் படித்து நினைத்தது போலவே ரஷ்ய உளவுப்படையில் சேர்ந்தார்.

உக்ரைன் - தியாக தேசத்தின் வரலாறு - 2: ஜூடோ வீரர்; உளவாளி; அதிபர்! யார் இந்த விளாடிமிர் புதின்?

பள்ளியில் படிக்கும்போதே அவருக்கு ரஷ்ய உளவு நிறுவனமான கே.ஜி.பி-யில் சேரும் ஆசை வந்துவிட்டது. நல்ல படிப்பாளியான புதின், சட்டம் படித்து நினைத்தது போலவே ரஷ்ய உளவுப்படையில் சேர்ந்தார்.

Published:Updated:
உக்ரைன்
"சண்டைபோடுவது என்று முடிவாகிவிட்டால், முதலில் அடிப்பது நானாகத்தான் இருக்க வேண்டும். 13 வயதில் வீதிச்சண்டையில் கற்றுக்கொண்ட பாடம் இது!"
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்
தற்காப்புக் கலையான ஜூடோவில் பிளாக் பெல்ட் வாங்கியவர் புதின். நரியின் தந்திரமும் சிறுத்தையின் ஆக்ரோஷமும் அந்த விளையாட்டுக்குத் தேவை. அந்த இரண்டின் கலவையாக புதின் இப்போதும் இருக்கிறார்.
விளாடிமிர் புதின்
விளாடிமிர் புதின்
AP

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திடீரென முடிவெடுத்து உக்ரைனை இப்போது தாக்குகிறார். முன்பு இதே உக்ரைனைத் தாக்கி கிரீமியா பகுதியை ஆக்கிரமித்தார். ஜார்ஜியாவைத் தாக்கி அந்த நாட்டின் சில பகுதிகளை ரஷ்யாவுடன் சேர்த்துக்கொண்டார். செசன்யா பகுதியில் ரஷ்ய அரசுக்கு எதிராகப் போராடியவர்கள்மீது விமானத் தாக்குதல் நடத்தினார். புதினே அங்கு போர் விமானத்தில் பறந்து சென்றார். "எதிரி என் இடத்துக்கு வரும்வரை காத்திருப்பது போர்த்தந்திரம் அல்ல, அவர்கள் நினைக்காத நேரத்தில் திடீரென அவர்களின் இடத்துக்கே சென்று தாக்குவதுதான் என் ஸ்டைல்" என்று இதற்குக் காரணமும் சொன்னார் புதின்.

பலமான தலைவராக மட்டுமின்றி, வலிமையான மனிதராகவும் தன் இமேஜைப் பார்த்துப் பார்த்து செதுக்கியவர் புதின். அவருக்கு 70 வயது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். திடீரென ஜூடோ களத்தில் இருப்பார், ஒரு மோட்டார் பைக் ஓட்டியபடி பைக்கர்கள் திருவிழாவில் கலந்துகொள்வார், அழிந்துவரும் சைபீரிய புலிகளைப் பாதுகாப்பது மாதிரி போஸ் கொடுப்பார்.

விளாடிமிர் புதின்
விளாடிமிர் புதின்

புதினை எதிர்க்கும் ரஷ்யர்கள் ஒன்று, சிறையில் இருக்க வேண்டும்; அல்லது வெளிநாட்டுக்கு ஓடிவிட வேண்டும். அவருக்கு எதிராக நாடு முழுக்க போராட்டத்தை நடத்திய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நாவல்னி இப்போது சிறையில் இருக்கிறார். புதினின் யுனைடெட் ரஷ்யா கட்சியைத் 'திருடர்கள் மற்றும் மோசடிப் பேர்வழிகளின் கூடாரம்' என்று சொன்னார் நாவல்னி. "அவர் ஒரு கொலைகாரர்" என்று வர்ணிக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். இதுபோன்ற விமர்சனங்களுக்கு புதின் கவலைப்படுவதே இல்லை. தான் மனதில் என்ன நினைக்கிறோம் என்பதை வெளிப்படுத்தாத முகபாவம் அரிதாக சில தலைவர்களுக்கே வாய்க்கும். புதினுக்கு அது வாய்த்திருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஜனநாயக வழிமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரி என்று புதினைச் சொல்லலாம். அவரது பதவிக்காலத்தில் ஐந்து அமெரிக்க அதிபர்களை டீல் செய்துவிட்டார். அவர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், 23 ஆண்டுகளாக ரஷ்யாவின் அசைக்கமுடியாத அதிகார மையமாக புதின் இருக்கிறார். ஜோசப் ஸ்டாலினுக்குப் பிறகு நீண்ட காலம் ரஷ்யாவை ஆள்பவர் அவர்தான். `தொடர்ச்சியாக இரண்டு முறை மட்டுமே ஒருவர் அதிபராக இருக்க முடியும்' என்றிருந்த ரஷ்ய அரசியல் சட்டத்தையே திருத்திவிட்டார். வரும் 2036 வரை அவர்தான் ரஷ்ய அதிபர் என்று அவரின் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.

விளாடிமிர் புதின்
விளாடிமிர் புதின்

எளிய குடும்பத்தில் பிறந்து, இன்று உலகின் தலையெழுத்தையே தீர்மானிக்கும் மனிதராக மாறியிருப்பதைப் புதினே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். இன்றைய செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம் அன்று லெனின்கிரேடு நகராக இருந்தது. அங்கு மிடில் கிளாஸ் குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் இருந்தது புதின் குடும்பம். அப்பா ரஷ்ய கப்பல் படையில் வேலை பார்த்தார். அம்மா ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்தார். அந்தக் குடியிருப்பில் இருக்கும் முரட்டுப் பையன்கள், ஒல்லியான உடல்வாகு கொண்ட புதினை அவ்வப்போது வம்புக்கு இழுத்து தாக்குவார்கள். அவர்களை சமாளிப்பதற்காக ஜூடோ கற்றார் புதின். தன்னைவிட வலிமையானவர்களை சர்வசாதாரணமாக வீழ்த்துவது அந்த வயதிலேயே அவருக்குக் கைவந்துவிட்டது.

விளாடிமிர் புதின்
விளாடிமிர் புதின்

பள்ளியில் படிக்கும்போதே அவருக்கு ரஷ்ய உளவு நிறுவனமான கே.ஜி.பி-யில் சேரும் ஆசை வந்துவிட்டது. அந்த நாள்களில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு அமைப்புக்கு இணையாக உலகம் முழுக்க மிரட்சியை ஏற்படுத்தியிருந்தது கே.ஜி.பி. நல்ல படிப்பாளியான புதின், சட்டம் படித்து நினைத்தது போலவே ரஷ்ய உளவுப்படையில் சேர்ந்தார். ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியில் பிடிப்பு உள்ளவர்களே கே.ஜி.பி அமைப்பில் இணையமுடியும். புதின் கொள்கைப் பிடிப்பு உள்ளவராக இருந்தார் என்று அவரைப் பற்றிய ரகசிய ஆவணம் சொல்கிறது. அவர் வேலை பார்த்தது ஜெர்மனியில்! ரஷ்யாவுக்கு உளவு சொல்வதற்காக வெளிநாட்டினரைப் பிடிப்பதே அவரின் வேலை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

15 ஆண்டுகள் ரஷ்ய உளவு அமைப்பில் புதின் வேலை பார்த்தார். அந்த அனுபவத்தில் இப்போதும் அவர் உளவாளிகளையே நம்புகிறார். அவருக்கு நெருக்கமாக இருக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் பலரும் முன்னாள் உளவாளிகள்தான்.
விளாடிமிர் புதின் தன் பெற்றோர்களுடன்...
விளாடிமிர் புதின் தன் பெற்றோர்களுடன்...

சோவியத் யூனியன் உடைந்தபோது ரஷ்யாவுக்குத் தேர்தல் அறிமுகமானது. தேர்தல் மூலம் பதவிக்கு வரும் அரசியல்வாதிகளை ரகசியமாகக் கண்காணிக்க முடிவு செய்தது ரஷ்ய உளவு அமைப்பு. ஒவ்வொரு தலைவரிடமும் உளவு அதிகாரி ஒருவர் போய் உதவியாளராக சேர்ந்தார். அப்படி செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர மேயரிடம் போய்ச் சேர்ந்தார் புதின். அந்த நாளில்தான் புதினுக்கு அரசியல் ஆசை வந்தது. பல அரசியல் தலைவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர்களின் வழியாக அப்போதைய ரஷ்ய அதிபர் போரிஸ் யெல்ட்சினுக்குப் பழக்கமானார்.

விளாடிமிர் புதின்
விளாடிமிர் புதின்

மது போதைக்கு அடிமையாக இருந்த யெல்ட்சினின் நம்பிக்கையைப் பெறுவது புதினுக்கு சுலபமாக இருந்தது. யெல்ட்சின் அவரை ரஷ்ய அதிபரின் மாளிகையான கிரெம்ளினுக்கு அழைத்தார். சோவியத் கால உளவு அமைப்பான கே.ஜி.பி., இப்போது ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் என்று பெயர் மாறியிருந்தது. அதன் தலைவராக புதினை நியமித்தார் யெல்ட்சின். பெரும் அதிகாரம் கைக்கு வந்தாலும், புதினுக்கு அரசியல் செல்வாக்கே கனவாக இருந்தது. இரண்டாம் நிலைத் தலைவர்கள் எல்லோரைப் பற்றியும் அதிபர் யெல்ட்சினிடம் பற்ற வைத்துக்கொண்டே இருந்தார். அவர்கள் ஒவ்வொருவராக அமைச்சரவையிலிருந்து தூக்கியடிக்கப்பட்டார்கள். 1999-ம் ஆண்டு உடல்நிலையைக் காரணம் காட்டி யெல்ட்சின் பதவி விலகியபோது, அடுத்த அதிபராக புதினை அறிவித்தார். மாஸ்கோவிலேயே பலருக்கு அறிமுகம் இல்லாத ரகசிய உளவாளியாக இருந்த புதின், ஒரே நாளில் ரஷ்யாவின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் இடத்துக்கு வந்துவிட்டார். அன்று முதல் அந்த நாற்காலி அவருக்கே சொந்தம்.

வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் வாரிசாக வரும் ஒருவருக்கு, தங்கள் பழம்பெருமை குறித்த ஆதங்கம் இருக்கும் அல்லவா? ஒரு காலத்தில் சோவியத் யூனியனைப் பார்த்து உலகமே நடுங்கியது. ஆனால், நோஞ்சான் ஆகிப்போன ரஷ்யாவை பக்கத்து நாடுகள்கூட மதிப்பதில்லை. இது புதினை உறுத்தியது. உலக நாடுகளின் பஞ்சாயத்துக்களில் அதிரடியாகத் தலையிட்டு ரஷ்யாவின் வல்லமையை உறுதி செய்தார். பெட்ரோலுக்கும் இயற்கை எரிவாயுவுக்கும் ரஷ்யாவையே பல ஐரோப்பிய நாடுகள் நம்பியிருக்கின்றன. அதனால் அவரால் அசைக்க முடியாத தலைவராக உருவெடுக்க முடிந்தது. 'அமெரிக்காவின் தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கு புதின் சதி செய்தார்' என்று வாஷிங்டனில் குற்றச்சாட்டு எழும் அளவுக்கு வலிமை பெற்றிருக்கிறார் அவர்.

விளாடிமிர் புதின்
விளாடிமிர் புதின்

ரஷ்யாவை நவீனமாக மாற்றியவர் புதின். பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் மூலம் ரஷ்ய நடுத்தர வர்க்கத்துக்கு வசதியான வாழ்க்கை இப்போது கிடைத்திருக்கிறது. ரஷ்ய மக்களிடம் இன உணர்வைத் தூண்டிவிட்டு, அதில் குளிர்காய்கிறார். 'ரஷ்யாவை மீண்டும் வல்லரசு ஆக்கிவிட்டார்' என்று பழைய சோவியத் கால பெருசுகள் நினைக்கின்றன. இளைய தலைமுறையோ புதின் பரிவாரங்கள் செய்யும் ஊழல் குறித்துக் கவலைப்படுகிறது.

விளாடிமிர் புதின் தன் மனைவி லுட்மிலாவுடன்...
விளாடிமிர் புதின் தன் மனைவி லுட்மிலாவுடன்...

புதின் குடும்பம் பற்றி அவ்வளவாக செய்திகள் வெளியில் வருவதில்லை. விமானப் பணிப்பெண்ணாக இருந்த லுட்மிலா என்பவரை புதின் மணந்தார். அவர்களுக்கு மரியா, கேத்தரினா என்று இரண்டு மகள்கள். புதின் அதிபரானபோது அவர்கள் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார்கள். அப்பா அதிபரானதும் அவர்கள் கிரெம்ளின் மாளிகையில் இருந்தபடி படித்தார்கள். ஆசிரியர்கள் அங்கு வந்து அவர்களுக்குப் பாடம் எடுத்தார்கள்.

மரியா
மரியா

அதன்பின் வேறு பெயர்களில் அவர்கள் கல்லூரியில் சேர்க்கப்பட்டார்கள். அதிபரின் மகள் என அடையாளம் காட்டாமலே அவர்கள் கல்லூரி முடித்தார்கள். மூத்த மகள் மரியா இப்போது மருத்துவ ஆராய்ச்சியாளராக இருக்கிறார். ஹாலந்து நாட்டைச் சேர்ந்த ஜோரித் ஃபாசன் என்பவரைத் திருமணம் செய்திருக்கிறார் மரியா. அவர்களுக்கு ஒரே மகள். அந்த வகையில் புதின் தாத்தா ஆகிவிட்டார்.

இளைய மகள் கேத்தரினா கணித நிபுணர், நடனக் கலைஞர். ரஷ்யக் கோடீஸ்வரர் ஷமலோவ் என்பவரை அவர் திருமணம் செய்தார். ஆனால், ஐந்தே ஆண்டுகளில் விவாகரத்து ஆகிவிட்டது. உக்ரைன் மக்களுக்கு புதின் வில்லனாக இருக்கலாம், தன் மகள்களுக்கு அவர் பாசக்கார அப்பா.

கேத்தரினா
கேத்தரினா

புதினுக்கு இன்னொரு ரகசியப் பக்கமும் உண்டு. 2013-ம் ஆண்டு அவர் தன் மனைவியை விவாகரத்து செய்தார். இதற்குக் காரணம், அலினா கபேவா என்ற ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை. இருவருக்கும் ரகசிய உறவு இருப்பதாக 'மாஸ்கோவ்ஸ்கி கரஸ்பான்டென்ட்' என்ற பத்திரிகை எழுதியது. புதினின் கோபத்தால், கொஞ்ச காலத்தில் அந்தப் பத்திரிகையே மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படத்து.

அலினா கபேவாவுடன் புதின்
அலினா கபேவாவுடன் புதின்

ஸ்வெட்லேனா என்ற பணக்காரப் பெண்மணியுடன் புதின் ரகசியமாகக் குடும்பம் நடத்துவதாக ஒரு தகவலும் உண்டு. உளவாளியாக இருந்த காலத்திலிருந்தே இருவருக்கும் பழக்கம். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வசிக்கும் ஸ்வெட்லேனாவுக்கு 19 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அச்சு அசல் புதின் முக ஜாடை அவருக்கு! தன் தந்தையின் பெயர் 'விளாதிமிர்' என்று மட்டும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஸ்வெட்லேனா, புதின்
ஸ்வெட்லேனா, புதின்

ஒரு காலத்தில் ஐரோப்பாவில் இரண்டு பேரரசுகள் இருந்தன. அவற்றில் பிரிட்டிஷ் அரச வம்சம் இன்னமும் இருக்கிறது. ரஷ்யாவின் அரச வம்சம் அழிந்தாலும், தன்னை ரஷ்யாவின் மன்னராகவே புதின் கருதுகிறார்.

'ரஷ்யாவின் கிரீடத்தில் இருக்கும் மதிப்புமிக்க வைரம் உக்ரைன்' என்று அவர் சொல்கிறார். அதனால்தான் உக்ரைன் போரை நோக்கித் தள்ளப்பட்டிருக்கிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism